நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

10.7.11

பல்லாண்டு பாடிய பட்டர்பிரான்

 
பெரியாழ்வார்
திருநட்சத்திரம்: ஆனி - 25 - சுவாதி
(ஜூலை 10)
 
திருமால் அடியார்களான ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்கு தனிச் சிறப்பு உண்டு. திருவரங்கனை பெரிய பெருமாள் என்றும், திருவரங்கத்தை பெரிய கோயில் என்றும் (காஞ்சி வரதர் கோயிலுக்கும் பெரிய கோயில் என்ற பெயருண்டு), ஜடாயு மஹாராஜாவுக்கு பெரிய உடையார் என்றும், மணவாள மாமுனிகளுக்கு பெரிய ஜீயர் என்றும் புகழுண்டு. அதேபோல் விஷ்ணு சித்தரான பட்டர்பிரானுக்கும் 'பெரியாழ்வார்' என்ற பெருமை உண்டு.
சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த மூலவரான நரஸிம்மம் பெரிய பெரிய பெருமாள் என்றும், அதே சுவாதியில் அவதரித்த கருடன் பெரிய திருவடி என்றும் போற்றப்படுகிறார்கள். அதே ஆனி மாதம், சுவாதியில் அவதரித்த பட்டர்பிரான் கருடனின் அம்சமாக வணங்கப்படுவதோடு, "பெரியாழ்வார்' என்றும் வைணவத்தால் புகழ்ந்துரைக்கப்படுகிறார்.
பெரியாழ்வாருக்கு மகளாய் அவதரித்த ஆண்டாள், அரங்கனை மணந்து, ஆழ்வாருக்கு 'திருமாலின் மாமனார்'' என்ற அங்கீகாரத்தைக் கொடுத்தாள்.
ஆண்டாளை திருமாலின் திருக்கதைகளை சொல்லியே வளர்த்தார் பெரியாழ்வார். அதனால் ஆண்டாளுக்கு, ஆயவனான அரங்கன் மீது ஆசை ஏற்பட்டு, அது காதலாக மாறி, அவனைக் கரம்பிடிக்கும் பாக்கியமும் பெற்றாள். ஆண்டாள், விஷ்ணு சித்தரை ஒரு தகப்பனாக மட்டும் பார்க்காமல் தன் குருவாகவும் ஏற்றுக் கொண்டதால் ஆண்டாளுக்கு குருவருளோடு திருவருளும் கிட்டியது.
நாராயணனின் பெருமையை கூடல் மாநகர மன்னன் அமைத்திருந்த வித்வத் சபையில் நிரூபித்தார் பெரியாழ்வார். பாண்டியன் அமைத்த பொற்கிழி ஆழ்வாரின் திருவடியில் விழுந்தது. மன்னனுக்கோ மிக்க மகிழ்ச்சி. தன் சந்தேகம் தீர்த்த அந்தப் பெரியவரை "பட்டர்பிரான்' என்று கௌரவப்படுத்தி ராஜாங்க மரியாதைகளுடன் அவரை யானை மீது அமரச் செய்து நகர் முழுக்க ஊர்வலம் வரச் செய்தான். அப்போது மேலும் ஓர் பேரதிசயம் நடந்தது. வானவெளியில் திருமால் கருடன் மீது ஏறி வந்து ஆழ்வாருக்குக் காட்சி தந்தான்.
"பறவை ஏறு பரமபுருடா நீ என்னைக் கைக் கொண்டபின் பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதமாகிவிடுமே'' என்று தன் பொருட்டு கருடாரூடனாக காட்சியளித்த திருமாலின் அற்புதத்தைக் கண்டு மகிழ்ந்த ஆழ்வாரின் மனத்தில் ஒரு பயம் ஏற்பட்டது. பார் புகழ் பரந்தாமனின் இந்தக் காட்சியைக் காணும் உலகத்தோரால் கண்திருஷ்டி படுமே என்று கவலைப்பட்டார். உடனே வாழ்த்து சொல்லி 'பல்லாண்டு' பாட ஆரம்பித்துவிட்டார். அவனுக்கு மட்டுமா பல்லாண்டு? அவன் திருமார்பினில் திகழும் திருமகளுக்கும், திருவாழியாழ்வானுக்கும், சங்காழ்வானுக்கும் பல்லாண்டு பாடினார்.
பெருமானுக்குப் பல்லாண்டு பாட தனக்கு எத்தகைய தகுதி உள்ளது என்பதை அவர் யோசிக்கவில்லை. பகவான் மீதிருந்த பரிவு ஆழ்வாரை பாட வைத்தது. இதனால்தான் பெரிய ஜீயர் மணவாள மாமுனிகள் அவரை "பொங்கும் பரிவாலே பட்டர் பிரான் பெற்றார் பெரியாழ்வார் என்னும் பெயர்'' என்று குறிப்பிடுகிறார்.
விஷ்ணுவின் மற்ற அவதாரங்களைவிட பெரியாழ்வாருக்கு கிருஷ்ணாவதாரத்தின் மீது ஈடுபாடு அதிகம். கிருஷ்ணனின் பால்ய லீலைகளைப் பாடியவர், தன்னை யசோதையாக பாவனை செய்து கொண்டு, அவனுக்கு நீராட்டல், பூச்சூட்டல், காப்பிடல் என்று திருவாய்மொழிகளை அருளிச் செய்துள்ளார்.
பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டும் பெரியாழ்வார் திருமொழியும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் மின்னும் ரத்தினங்கள். இனிய வைணவத் தமிழ்ப் பாக்களால் இறைவனையே மயக்கிய பெரியாழ்வாரை நாமும்
இந்த  ஆனி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் பதம் பணிவோம்!  பரமனின் அருள் பெறுவோம்!
 
-மாடபூசி ஆழ்வான்
நன்றி: தினமணி (வெள்ளிமணி)
 
காண்க: 
பெரியாழ்வார் (தெய்வத்தமிழ்) 
பெரியாழ்வார் (விக்கி)
PERIYALVAR
ஆண்டாள்
பெரியாழ்வார் (தினமலர்)
நான்காயிரம்  அமுதத் திரட்டு
பெரியாழ்வார் (பாலஹனுமான்)  
பெரியாழ்வார் வாழ்வில் (திரிசக்தி)
பெரியாழ்வார் திருமொழி (தமிழ்க் களஞ்சியம்)
திருப்பல்லாண்டு (தமிழ்க் களஞ்சியம்)
4000 திவ்யப் பிரபந்தங்கள்
அப்போதைக்கு இப்போதே (வீடியோ)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக