நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

18.6.11

தியாகத் திருவிளக்கு

பி.கக்கன்

(பிறப்பு: ஜூன் 18) 

ஒரு மக்கள் பிரதிநிதி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் பி.கக்கன். தாழ்த்தப்பட்ட  சமுதாயத்தில் பிறந்த கக்கன், அக்காலத்தில் நிலவிய தீண்டாமையை தனது தனித்த ஆளுமையால் வென்றவர். நாடாளுமன்ற உறுப்பினர், சட்டசபை உறுப்பினர், அமைச்சர், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிகள் அவரைத் தேடி வந்தன. ஆயினும் அவரது பொதுவாழ்க்கை மிகவும் எளிமையானதாக இருந்தது.  பொதுவாழ்வில் உச்சத்தில் இருந்தபோதும், தனக்கென  எந்த சொத்தும்   சேர்த்துக் கொள்ளாத  தகைமையாளராக அவர் வாழ்ந்து மறைந்தார்

கக்கன் ஜூன் 18, 1908 ல்,  மதராஸ் ராசதானியாக தமிழகம் இருந்தபொழுது  மதுரை மாவட்ட, மேலூர் தாலுகாவிலுள்ள  தும்பைபட்டி  கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பிற்காக  திருமங்கலம் வந்து அங்கே ஓர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்.

கக்கன் தனது இளவயதிலேயே சுதந்திரப்  போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே காங்கிரஸ்  இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது.  தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக, ராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினை கொண்டு வந்ததன் விளைவாக, தலித்துக்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைய தடை செய்யப்பட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் தலித்துக்கள் மற்றும் சாணார்களுடன்  (1939, ஜூலை 8)  மதுரை கோயிலினுள் நுழைந்தார். மதுரை வைத்தியநாத அய்யர் தலைமையில் நடந்த இப்போராட்டம், தீண்டாமைக்கு எதிராக மாபெரும் வெற்றி பெற்றது. ஹரிஜன மக்களும் ஆலயங்களில் நுழைய உரிமை பெற்றனர்.

நாட்டு விடுதலைப் போரிலும் கக்கன் தீவிரமாக ஈடுபட்டார்.  வெள்ளையனே  வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற கக்கன், அலிப்பூர் சிறையில்  அடைக்கப்பட்டார். 1946 ல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று  1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார். கக்கன் இந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகவும்  1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்.

காமராஜர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார். அவர் காங்கிரஸ் தலைவராக இருந்த காலகட்டமே காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் இல்லாத காலகட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. கக்கன் தலைவராக இருந்த காலகட்டத்தில் நடந்த தேர்தலில் தான் தமிழக காங்கிரஸ் 155  சட்டசபைத் தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது.

1957 ல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), ஹரிஜன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப். 13, 1957 ல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப். 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக். 3, 1963. அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 ல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார் .

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக  ஹரிஜன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள் மதராஸ் மாகாணத்தில் துவக்கப்பட்டன. இவரின் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999  ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் மேலூர் (தெற்கு) தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார். இத்தேர்தல் தோல்விக்குப் பின் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.

கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார்.மகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்றி நடப்பவர். பெரியார் ஈ.வே.ராமசாமி சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான ராமரின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டணத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார். அந்நாளில் பெரியாரை கண்டித்து பேசுவதே பிரச்னையை ஏற்படுத்துவதாக இருந்தபோதும், அச்சமின்றி, தனது அரசுக் கடமையை அவர் நிறைவேற்றினார். அதற்காக பெரியாரை கைது செய்யவும் அவர் தயங்கவில்லை. ஹரிஜனங்களை ஹிந்துவிரோதமாக மாற்ற அரசியல் சூழ்சிகள் நடந்துவரும் சூழலில், கக்கன் தெளிவான நிலையை எடுத்து, தனது சமுதாயத்திற்கு வழிகாட்டினார்.

அமைச்சராக இருந்தபோது பேருந்துக்குக் காத்திருந்து பயணித்தவர் கக்கன். தனது இறுதிக்காலத்தில், படுக்கைகூட இல்லாமல், மதுரை அரசு பொது மருத்துவமனையில் தரையில் படுத்திருந்தவர் கக்கன். அவரது எளிமை, நேர்மைக்கு இதுவே சான்றுகள். சிறு கிராமத்தின் வார்டு உறுப்பினர்கூட படாடோபமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் திரியும் இக்காலகட்டத்தில், கக்கன் போன்றவர்களின் வாழ்க்கையை நாம் நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.

பொதுவாழ்வின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த கக்கன், 1981,  டிச. 23 ல் மண்ணுலகைவிட்டு மறைந்தார்.   பொது வாழ்க்கையில்  உள்ளோருக்கும்,   சமூக சீர்திருத்தவாதிகளுக்கும்,  கக்கன் அரிய முன்னுதாரணம். பதவி என்பது மக்கள் பயனுற வாழவே என்பதை வாழ்ந்து காட்டி மறைந்த பெருந்தகையை இந்நாளில் நினைவுகூர்வோம்.


காண்க:

பி.கக்கன் (விக்கி)

P.KAKKAN

மகத்தான தியாகி (ஈகரை)

வைத்தியநாத அய்யர் பற்றி கக்கன்


காந்தியும் காமராஜரும் கலந்த கலவை

கக்கன் (நக்ஷத்திரா)

.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக