நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

16.4.11

அஹிம்சை தத்துவத்தின் பிதாமகர்


மகாவீரர்

(இன்று மகாவீர் ஜெயந்தி- ஏப். 16)

பாரதப் பண்பாட்டு வளர்ச்சியிலும் மலர்ச்சியிலும் சமண சமயத்திற்கு பெரும் பங்குண்டு. கொல்லாமை, அஹிம்சை, வாய்மை உள்ளிட்ட பாரதத்திற்கே உரித்தான குணநலன்களை சமயம் வாயிலாக மக்களிடம் பதிவு செய்தவர்கள் சமணர்களே. சமண சமயத்தை பரப்ப உதித்தவர்கள் 'தீர்த்தங்கரர்கள்' எனப்படுகின்றனர். அதன் 24 வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர்.

இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்றவிடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சித்திரை மாதம், வளர்பிறை பதின்மூன்றாம் நாள் அன்று பிறந்தார்.

அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே அரசருக்கும் அரசாட்சிக்கும் செல்வம் மற்றும் பிற வளங்களை பெருக்கியதாக நம்பப்படுகிறது; காட்டாக அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி. எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய 'வர்த்தமானன்' என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசி திரிசாலாவும், மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், கருவுற்றிருக்கையில் 14  சுப கனவுகளைக் கண்டதாகவும் கூறப்படுகிறது.

சமண சமய நம்பிக்கைகளின்படி, பிறப்பினையடுத்து தேவலோக அரசன் இந்திரன் ஓர் எதிர்கால தீர்த்தங்கரருக்கு உரித்தான பால் அபிஷேகம் உள்ளிட்ட சடங்குகளைச் செய்வித்து அன்னையிடம் கொடுத்ததான்.
உலகெங்கும் உள்ள சமணர்கள் (ஜைனர்கள்)அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தி எனக் கொண்டாடுகின்றனர்.

சித்தார்த்தனின் மகனாக இளவரசனாக வாழ்ந்தார் வர்த்தமானன். இருப்பினும் அச்சிறுவயதிலும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். தியானத்திலும் தன்னறிவதிலும் கூடுதல் நாட்டமுடையவராக விளங்கினார். மெதுவாக உலக சிற்றின்பங்களிலிருந்து விலகி சமண சமய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.

தமது முப்பதாவது வயதில் அரசாட்சி மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டார். துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மீகத்தேடலில் ஈடுபட்டார். பிற உயிரினங்களுக்கு, மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள், மதிப்பளித்தார்.அவற்றிற்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார்.இவ்வாண்டுகளில் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவரது பொறுமையும் வீரமுமே அவர் மகாவீரர் என அழைக்கப்பட காரணமாயிற்று. இந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக கைவல்ய ஞானம் கிடைக்கப்பெற்றார்.

மகாவீரர் தமது எஞ்சிய நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே தாமறிந்த ஆன்மீக விடுதலையின் வரையற்ற உண்மையை பரப்பத் துவங்கினார். வெறும் கால்களில் துணிகள் எதுவுமன்றி கடுமையான காலநிலைகளில் பயணம் செய்த அவரின் பேச்சைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் பரவியது.

தமது 72 வது வயதில் பாவபுரி என்னுமிடத்தில், தீபாவளியின் கடைசி நாளன்று நிர்வாணம் (சமணர்கள் மோட்சம் அடைவதை இவ்வாறு கூறுவார்) எய்தினார். அவர் பேறு பெற்ற இந்நாளை சமணர்கள் கொண்டாடுகிறார்கள்.

அவர் கி.மு 599 முதல் 527 வரை வாழ்ந்ததாக ஜைனர்கள் நம்பினாலும் சில வரலாற்றாசிரியர்கள் கி.மு 549- 477 காலத்தவராக கருதுகிறார்கள்.

மகாவீரரின் போதனைகள்:

மகாவீரரின் மெய்யியலில் முதன்மையாக எட்டு கொள்கைகள் உள்ளன: மூன்று- கருத்துமயமானவை மற்றும் ஐந்து- நெறிவழிப்பட்டவை. இவற்றின் குறிக்கோள் வாழ்வின் தரத்தை உயர்த்துவதேயாகும்.

இந்த தனிப்பட்ட எட்டு கொள்கைகளும் குறிக்கோளை நோக்கிய ஓர்மையும் நெறிவழிப்பட்ட வாழ்வின்மூலம் ஆன்மீக வளமை பெற்றிடும் வழியையும் காட்டுவனவாக உள்ளன.

அவரது கருத்தியலில் மூன்று கொள்கைகள் உள்ளன. அவை: அநேகாந்தவடா, சியாத்வடா மற்றும் கர்மா. 

ஐந்து நெறிவழிகளாவன: அகிம்சை,சத்தியம்,அஸ்தேயம், பிரமச்சரியம், அபாரிகிருகம்.

மகாவீரர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும் அது தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக கர்மா எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது என்றும் கூறுகிறார்.

கர்மாவின் மாயையால் ஒருவர் தற்காலிக மற்றும் மெய்போன்ற இன்பங்களிலும் பொருள் சேர்க்கையிலும் கவரப்படுகிறான். இவற்றின் தேடலில் அவனுக்கு சுயநலமுள்ள வன்முறை எண்ணங்களும் செயல்களும் கோபம், வெறுப்பு, பொறாமை மற்றும் பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன. இவற்றால் அவனது கர்மா பளு கூடுதலாகிறது.

இதிலிருந்து விடுபட, மகாவீரர் நன்னம்பிக்கை (சம்யக்-தர்சனம்),  நல்லறிவு  (சம்யக்-ஞானம்), மற்றும் நன்னடத்தை (சம்யக்-சரித்திரம்') ஆகிய மூன்று மணிகள் தேவை  என்று வலியுறுத்தினார்.

நன்னடத்தைக்கு துணைநிற்க ஜைன மதத்தில் ஐந்து உறுதிமொழிகள் எடுக்க வேண்டும்:
  • வன்முறை தவிர்த்தல் (அகிம்சை) - எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காதிருத்தல்.
  • வாய்மை (சத்தியம்) - தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல்;
  • திருடாமை (அஸ்தேயம்) - தனக்கு கொடுக்கப்படாதது எதையும் எடுத்துக் கொள்ளாதிருத்தல்;
  • பாலுறவு துறவு (பிரமச்சரியம்) - பாலுணர்வு இன்பம் துய்க்காதிருத்தல்;
  • உரிமை மறுத்தல்/பற்றற்றிருத்தல் (அபாரிகிருகம்) - மக்கள்,இடங்கள் மற்றும் பொருளியலில் பற்று அற்று இருத்தல்.

மகாவீரர், ஆண்களும் பெண்களும் ஆன்மீக நோக்கில் சரிசமனானவர்கள் என்றும் இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியுமென்றும் கூறினார். அவரை அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்கள் உட்பட பின்பற்றினர்.  வருணாசிரம முறையை விலக்கி புதிய நான்கு நிலைகளை உருவாக்கினார்; ஆண்துறவி (சாது), பெண்துறவி (சாத்வி), பொதுமகன் (ஷ்ராவிக்)  மற்றும் பொதுமகள் (ஷ்ராவிக்). இதனை சதுர்வித ஜைன சங் என்று அழைக்கலாயினர்.

சமண சமயம் மகாவீரரின் காலத்திற்கு முன்னரும் கடைபிடிக்கப்பட்டது. மகாவீரரின் போதனைகள் அவரது முன்னோரின் போதனைகளை பின்பற்றியதே. எனவே மகாவீரர் ஓர் நிகழ் மதத்தின் சீர்திருத்தவாதியே தவிர புதிய சமயத்தை உருவாக்கியவர் அல்லர். இவரது குருவான பரசுவந்த் தீர்த்தங்கரரின் வழிகளைப் பின்பற்றியவர்.ஆயினும் தமது காலத்திற்கேற்ப சமண மத கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார்.

உண்மையில் மகாவீரர், பாரத்ததின் தொன்மையான சனாதன  மதத்தின் சீர்திருத்தவாதியே ஆவார். பின்னாளில், அவரையும் சிலையாக்கி வழிபடும் முறை ஏற்பட்டது. மகாத்மா காந்தி சமணர்களின் அடிப்படைக் கொள்கையான அஹிமசையை அரசியல் போராட்ட ஆயுதமாக மாற்றியபோது தான் அதன் மாபெரும் சக்தி உலகிற்கு தெரிந்தது.

பாரதம் என்ற தேசத்தின் அடியாழத்தில் பாயும் நீரோட்டங்களில் சமணர் சமயமும் அவர்கள் வழங்கிய ஞானமும் முக்கியமானவை. மகாவீரர் அந்த நதிப்பெருக்கில் மாபெரும் அலைகளை ஏற்படுத்திய மகத்தான ஞானி ஆவார்.

நன்றி: விக்கி  பீடியா களஞ்சியம்

காண்க:

மகாவீரர் (விக்கி)

சமண சமயம்

தீர்த்தங்கரர்கள்

JAIN WORLD.COM

தமிழ்ச் சமணம்

மானுடம் வளர்த்த மகாவீரர் (தன்னம்பிக்கை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக