மெய்ப்பொருள் நாயனார்
திருநட்சத்திரம்:
கார்த்திகை- 14 -உத்திரம் (நவ. 30)
மலையமாநாட்டின் தலைநகரம் திருக்கோவிலூர். இங்கிருந்து ஆட்சி செய்தவர் சிவநெறிச் செல்வர் மெய்ப்பொருளார். திருநீறு பூசியவர்களை சிவனாகவே கருதி வழிபடுவதும் விருந்தோம்புவதும் தன் கடமையெனக் கொண்டிருந்தார், மெய்ப்பொருளார். இவரால் வெல்லப்பட்ட முத்தநாதன் என்ற அண்டைநாட்டு குறுநில மன்னன், மெய்ப்பொருளார் மீது வெஞ்சினம் கொண்டிருந்தான். அவரை போரில் வெல்ல முடியாது என்றுணர்ந்த முத்தநாதன், சதிச்செயலில் மெய்ப்பொருளாரைக் கொல்லத் தீர்மானித்தான்.
அதற்கென சிவனடியார் வேடம் போட்டு, மெய்ப்பொருளார் அரண்மனை வந்தான் முத்தநாதன். அப்போது மெய்ப்பொருளார் அந்தப்புரத்தில் துயில் கொண்டிருந்தார். அவருக்கு துணையாக மெய்க்காவலன் தத்தன் என்பவன் இருந்தான். சிவவேடம் பூண்டிருந்ததால் அனைத்துத் தடைகளையும் தாண்டி பள்ளியறை வந்த முத்தநாதனை தத்தன் தடுத்தான். ஆனால், 'அரசற்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான், வஞ்சமனத்தான்.
சிவனடியாரைக் கண்டதும், துயில் நீங்கிய மெய்ப்பொருளார், அரசியை அனுப்பிவிட்டு, சிவ உபதேசம் கேட்கத் தயாரானார். வஞ்ச நெஞ்சன் முத்தநாதனுக்கு உயரிய ஆசனம் அளித்து, சிவாகமம் கூறுவதாகக் கூறிய முத்தநாதனை நம்பி, கண்மூடி கீழமர்ந்து, வாய்பொத்தி உபதேசம் கேட்டார்.
இதனை எதிர்பார்த்திருந்த முத்தன், தனது பையில் மறைத்து வைத்திருந்த குறுவாளால் மெய்ப்பொருளாரைக் குத்தினான். அவர் குருதி வழிய நிலத்தில் வீழ்ந்தார். மன்னரின் ஓலம் கேட்டு உள்ளே வந்த தத்தன், நிகழ்ந்துள்ள கொடூரத்தைக் கண்டு, வாளுடன் பாய்ந்தான். ஆனால், மெய்ப்பொருளார் தத்தனை தடுத்துவிட்டார். 'அப்போது அவர் சொன்ன வாசகம்: 'தத்தா நமர்' என்பதாகும். அங்கு, தன்னைக் குத்திய வஞ்சநெஞ்சனையும் சிவனாகவே பாவித்து வணங்கிக் கொண்டிருந்தார் மெய்ப்பொருளார்.
'சிவ வேடம் பூண்டவர் நமது எதிரியானாலும், அவர் சிவனே ஆவார். அவருக்கு எந்தத் தீங்கும் செய்தல் கூடாது. இங்கு நடந்த எந்த விஷயமும் வெளியில் தெரியும் முன்னர், சிவனடியாரை நகருக்கு வெளியே கொண்டுசென்று பாதுகாப்பாக அனுப்பிவிட்டு வா' என்று தனது மெய்க்காவலர் தத்தனைப் பணித்தார், மெய்ப்பொருளார். அதன்படி தத்தனும் முத்தநாதனை பாதுகாப்பாக அழைத்துக் சென்றான்.
செய்தியறிந்து முத்தனைத் தாக்கக் குழுமிய நாட்டு மக்களை 'அரசனின் ஆணை'யை எடுத்தியம்பி, சாந்தப்படுத்திய தத்தன், முத்தநாதனை எந்த பாதிப்பும் இன்றி அவனது நாட்டுக்கே அனுப்பி வைத்தான். அவன் திரும்பிவரும் வரையில் உயிரை தக்கவைத்திருந்த மெய்ப்பொருளார், தன்னைக் குத்தியவர் நாடு நீங்கப்பெற்றது தெரிய வந்ததும், அரசுரிமையை முறைப்படி அளித்துவிட்டு, ''இன்று எனக்கு அய்யன் செய்தது யார் செய்ய வல்லார்?'' என்று கசிந்துருகி, ''திருநீற்று நெறியைக் காப்பீர்'' என்று ஆணையிட்டு மறைந்தார்.
சிவ வேடமிட்டவர் என்றபோதும் அவரையும் சிவனாகவே கருதி வணங்கிய மெய்ப்பொருளார், நாயன்மார்களில் ஒருவராக உயர்ந்தார். திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் மெய்ப்பொருளாருக்கு தனி சன்னதி உள்ளது. பகைவர்க்கும் அருளிய பண்பாளர் என்று சரித்திரத்தில் இடம்பெற்ற மெய்ப்பொருளார் வாழ்க்கை, நமக்கு என்றும் நல்வழிகாட்டியாகத் திகழும்.
காண்க:
மெய்ப்பொருள் நாயனார் (விக்கி)
தினகரன் சைவ மஞ்சரி
Meypporul Nayanaar
மெய்ப்பொருள் நாயனார் புராணம்
தாராசுர சிற்பக் காட்சிகள்
மெய்ப்பொருளார் புராணம் (தமிழ்வு)
பெரியபுராணச் சொற்பொழிவு (வீடியோ)
மெய்ப்பொருளாருக்கு கோயில் (தினமலர்)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக