நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

14.11.10

தமிழகத்தின் தலைமகன்




ராஜராஜ சோழன்

திருநட்சத்திரம்:
ஐப்பசி - சதயம் (நவ. 14 )


தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரை பதித்த மன்னர்களுள் தலையாயவர் முதலாம் ராஜராஜன் எனப்படும் ராஜராஜ சோழன். பிற்காலச் சோழர்களில் மாபெரும் சாதனைகளைப் படைத்த இவரது ஆட்சிக்காலம்:  பொதுயுகத்திற்குப் பின் (கி.பி)  985 முதல் 1012  வரை. இவரது ஆட்சிக் காலத்தில் ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம், சமயம்   ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்டது சோழப்பேரரசு.

சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் அருண்மொழிவர்மன்.  விஜயாலய சோழன் நிறுவிய சோழப் பேரரசு இவரது ஆட்சிக் காலத்தில் மகோன்னத நிலையை அடைந்தது. இவரது ஆட்சியின் இமாலய சாதனை தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் பெருவுடையார் கோயில். இவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழனும் கடல் கடந்து சோழப் பேரரசை நிலைநாட்டினார்.





ராஜராஜேஸ்வரம் என்னும் இந்த சிவன் கோயில், தென்இந்திய வரலாற்றின்  தலைசிறந்த சின்னமாகும். தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. ராஜராஜனின் ஆட்சியின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது. அண்மையில் இக்கோயில் அமைக்கப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டுவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.  

சோழர்கால நீர்ப்பாசன முறை, குடவோலையால் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை, ஆலயங்களில் திருமுறைத் தமிழ் ஓதல், நில அளவீடு-வரிவிதிப்பு   குறித்த தெளிவான வரையறைகள், வலிமையான போர்ப்படை ஆகியவையும், தஞ்சை பெரிய கோயில் போன்றே ஆச்சரியப்படத் தக்கவை. சைவ சமயம் இவரது காலத்தில் புத்தெழுச்சி பெற்றது. ஆயினும், வைணவம், புத்தம், சமண மதங்களை சமமாகப் பாவித்த மன்னர்  ராஜராஜன்.  

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன், பாலகுமாரனின் உடையார், சுஜாதாவின் காந்தளூர் வசந்தகுமாரன் கதை ஆகியவை, ராஜராஜனை மையமாகக் கொண்டு தமிழில் எழுந்த தற்காலத்திய புதினங்கள். முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம்  ராஜராஜனின் ஆலயம் குறித்து அரிய ஆராய்ச்சி நூலை (ராஜராஜேஸ்வரம்) எழுதி இருக்கிறார். 

தமிழகத்தின்  பொற்காலம் என்று ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தை சொல்லலாம். மொழி, கலை, இலக்கியம், வாழ்க்கைமுறை அனைத்தும் செழித்தோங்கிய அற்புதமான காலகட்டத்தை உறுதிப்படுத்திய மாமன்னர் ராஜராஜன் நினைவே நமக்கு பெருமிதம் தருகிறது. 

காண்க:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக