நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

4.1.11

அதிரடியான அதிசய விஞ்ஞானி

ஜி.டி.நாயுடு
நினைவு: ஜன. 4

தமிழகத்தின் தொழில்நகரான கோவை தந்த அதிசய விஞ்ஞானி ஜி.துரைசாமி  நாயுடு. கோவை மாவட்டம்,  கலங்கல்  என்னும் கிராமத்தில் 1893, மார்ச் 23 ல் பிறந்தவர் ஜி.டி.நாயுடு. இவரது தந்தை கோபால் நாயுடு. சிறு வயதில் படிப்பில் நாட்டம் கொள்ளாத துரைசாமி, எதிலும் ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டிருந்தார். அதன் விளைவாக பல அதிசயங்களை நிகழ்த்தினார்.

கோவையில் முதல் தனியார் பேருந்து இயக்கம், புதிய தொழிற்சாலைகள் நிறுவுதல், புதிய கண்டுபிடிப்புகள், என பலவற்றில் முத்திரை பதித்த துரைசாமி நாயுடுவின் சாதனைகள் அனைத்தும், கோவையில் பிரசிடென்சி ஹாலில் இன்றும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

யாருக்கும் அடிபணியாத குணம், அரசின் கட்டுப்பாடுகளை எதிர்க்கும் வேகம், எதிலும் தணியாத விடாமுயற்சி ஆகியவற்றுக்காக ஜி.டி.நாயுடு மறக்க முடியாத அதிரடி மனிதராக சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளார். ஆயினும் அவரது அறிவியல் சாதனைகள் உரிய அங்கீகாரம் பெறாமல் போனது நமது நாட்டின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

திராவிடர் கழக நிறுவனர் பெரியார் .வே.ராமசாமி, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் குருஜி கோல்வல்கர் ஆகிய இரு துருவங்களுடனும் ஒரே சமயத்தில் நட்பு பாராட்டியவர் இவராகத் தான் இருக்க முடியும்.

ஜெர்மனியில்  நடைபெற்ற பொருட்காட்சியில் இவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு  உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது
இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.
அதற்கு அவர் கூறிய  காரணம்:  ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’
மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவை எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.
நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.
எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.
அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.
''கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்'’ என்று மனம் திறந்து பாராட்டி இருக்கிறார், பாரதத்தின் தலைசிறந்த விஞ்ஞானியான சர்சி. வி. ராமன்.

இவர் தனது 81 வது வயதில் (4.1.1974) மறைந்தார். இவர் உருவாக்கிய தொழில் நிறுவனங்கள் இன்றும் பலருக்கு வாழ்வளிக்கின்றன.

காண்க:

G.D.Naidu Museum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக