நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

2.10.11

காந்தியம்: கற்றுத் தருவதும் கற்றுக் கொள்வதும்.


சமீபகாலமாக உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு போராட்டங்கள் பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. சில- அரசாங்கங்களை எதிர்த்து... சில- அரசின் சீர்திருத்தங்களை எதிர்த்து... சில- நிறுவனங்களின் புதிய திட்டங்களை எதிர்த்து...

இப்படி பல கோணங்களில் மக்கள் தங்களது எதிர்ப்புகளை காட்டுவதற்காக போராட்டங்களை மேற்கொள்கின்றனர்.

ஆப்ரிக்கா நாடுகளில் - சோமாலியா, எதியோப்பியாவில், தங்களது நாட்டுக்குள்ளேயே உள்ள பழங்குடி ராணுவக் குழுக்களின் மோதல்கள்... அதனால் கடும் பஞ்சம்... லட்சக் கணக்கில் மக்கள் தவிப்பு, அகதிகள் முகாம்களில் தஞ்சம் புகுகிறார்கள். தங்களது கைகளில் அதிகாரம் இருக்க தங்கள் நாடு மக்களையே கொன்றும் குவிக்கும் பழங்குடி மக்கள் தலைவர்களின் ஆணவப் போக்கு.

ஐரோப்பா நாடுகளில் - கிரீஸ், இத்தாலி நாடுகளில் சீர்திருத்தங்கள் என்ற பெயரால் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவுகளை எதிர்த்து மக்களின் தெருப் போராட்டங்கள். அரசு நடத்தும் அரசியல் தலைவர்களின் அராஜகப் போக்கு.

அரேபிய நாடுகளில், ஏமன், சிரியா, லிபியா, நாடுகளில் நடைபெறும் சர்வதிகார ஆட்சிகளை எதிர்த்து, மக்களின் ஜனநாயக உரிமை வேண்டிய போராட்டங்கள், பல தலைமுறைகளாக ஆட்சியிலமர்ந்து கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப அதிகாரப் போக்கு.

அமெரிக்காவில்....சில வங்கிகளின் நடைமுறை தோல்விகளாலும், பொருளாதாரச் சிக்கல்களினால் ஏற்பட்ட சரிவுகளினாலும் அமெரிக்கர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கிய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான அரசின் கொள்கைளின் தோல்விகள்.. அமெரிக்காவில் ஏமாற்றுக்குள்ளான எஜமானப் போக்கு.

ஆசியாவில் - சீனாவில் பொருளாதார முன்னேற்றம் வியப்பூட்டும் வகையில் அமைந்தாலும், மக்களின் தனிமனித வாழ்க்கை சுதந்திரத்தில் அச்சம் நிலவிய வாழ்வு, நாடுகளிடையே மேலாண்மை செலுத்த பிரிவினைவாதத்தைத் தூண்டும் செயல்பாடு, கபளீகரம் செய்ய முனையும் கயமைத்தனம். நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டும் பேரில் ஆயுதங்கள் தந்துதவி அங்கே பயங்கரவாதத்தை வளர்க்கும் போக்கிரித்தனமான போக்கு.

உலகெங்குமுள்ள கண்டங்களிலெல்லாம் ஏதோ ஒரு வடிவத்தில், ஏதோ ஒரு விதத்தில் போராட்டங்கள் நடப்பது போல, இந்தியாவிலும் போராட்டங்கள் நடைபெறத்தான் செய்கின்றன. குறிப்பாக பாபா ராம்தேவ், அண்ணா ஹசாரே போன்றோரின் போராட்டங்கள் இந்தியாவிலுள்ள படித்தவர்களின் மத்தியில் - குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மிகப் பெரும் சக்தியான இளைஞர் கூட்டம்- அரசியல்வாதிகளால், அவர்களது ஊழல்களால் நாடு பின்னடைவதை சகிக்க முடியாத ஒரு மிகப் பெரியக் கூட்டம்-  அண்ணா ஹசாரே தலைமையில் கூடியதைக் காண முடிந்தது.

இந்தியாவில்- " அதர்மம் தலைதூக்கும்போது, தர்மம் அழிக்கப்படும் போது தர்மத்தினைக் காக்கவும், அதர்மத்தை அழிக்கவும் இறைவன் அவதாரமெடுப்பான்" என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அவதாரமாக - வடிவமாக அண்ணா ஹசாரேயை மக்கள் பார்த்தனர். அவர் பின்னால் திரண்டனர்.

" அண்ணா ஹசாரேயின் போராட்டங்கள் வெற்றி; அரசாங்கம் அடிபணிந்தது" என்பதல்ல நமது பார்வை. அண்ணா ஹசாரேயின் சிந்தனைக்கு வலுவூட்டியது எது? வேராக இருந்து நீரூற்றியது எது?

இந்தப் பின்னணியைப் பார்த்தோமானால்...

அண்ணல் காந்தியடிகளின் தனிமனித ஒழுக்கமும், சத்தியத்தின் மீதும் ஒழுக்கத்தின் மீதும் அவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும்தான் அவரது வெற்றிக்கு அடிகோலின. ஹசாரே தனது போராட்டங்களுக்கு ஆயுதங்களாக சத்தியத்தையும், தனிமனித ஒழுக்கத்தையும் வலியுறுத்தினார், வாழும் உதாரணமாக மாறினார்.

ஆம் இன்றைய உலகம் எங்கும் வாழும் மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் இருந்திட காந்தியம் கற்றுத் தரும் பாடம் இதுதான். காந்தியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் கற்றுக்கொள்ளும் பாடமும் இதுதான்.

-ம.கொ.சி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக