நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

16.10.11

நிலைத்து நிற்கும் கட்டபொம்மன் பெருமை


வீரபாண்டிய கட்டபொம்மன்
(பலிதானம்: அக். 16)

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட 'குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது.

தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம்.

கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799, அக்டோபர் 16ம் தேதியன்று, கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

`Divide and Rule' என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.

ஆனால், சுதந்திரம் அடைந்த பின்னும், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகிறது என்பதை மறுக்க முடியுமா?

என்ன வேறுபாடு?  முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது?

- வெங்கட சேது (வெப் துனியா)

காண்க:

வெள்ளையரை மிரட்டிய வீரச் சிங்கம்

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக