நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
ஆன்றோர் வாழ்வில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்றோர் வாழ்வில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.2.15

கண்ணனைத் துதிபாடியவர்

-ஜி.கிருஷ்ணமூர்த்தி

 

சுவாமி நாராயண தீர்த்தர்


 (ஆராதனை நாள்: மாசிமாத சுக்ல அஷ்டமி)
(பிப். 26)

நாமசங்கீர்த்தன வைபவங்களில் இசைக்கப்படும் பாடல்கள் அனைத்தும் பல பெரியோர்களால் இயற்றப்பட்டவை. சங்கீத மும்மூர்த்திகள், தமிழ் மும்மணிகள், ராமதாசர், புரந்தரதாசர், அன்னமய்யா, கபீர்தாசர், மீராபாய் முதலிய இசைமகான்களின் பாடல்களை மனமுருகிப் பாடும்போது பாடுபவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ஆனந்தத்தையும் மனநிறைவையும் தருபவை. 

இத்தகைய பாகவத பெரியோர்களின் வரிசையில் ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர் இயற்றிய ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கணி பாடல்கள் நாமசங்கீர்த்தனங்களிலும் மேடைக்கச்சேரிகளிலும் தவறாமல் இடம்பெறுகின்றன.

20.5.14

திருநாவுக்கரசர் காட்டும் வாழ்வியல் நெறி


- முனைவர் மா.சற்குணம்

 
தமிழ்நாட்டு வரலாற்றில் பல்வேறு காலங்களில் மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் நெறிகளை தம் வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்வாலும் உணர்த்திச் சென்ற சான்றோர் சிலருள், சமயக்குரவர் நால்வருள் ஒருவராகிய திருநாவுக்கரசரும் ஒருவர்..

மனம் என்பது ஒரு நிலையில் நிற்காமல் எப்போதும் அலைபாய்ந்துகொண்டே இருக்கக் கூடியது. செய்தற்கு அரியவற்றையெல்லாம்கூட செய்து விடலாம். ஆனால் மனத்தை அடக்கிச் சும்மாயிருக்கும் திறம் அரிது என்கிறார் தாயுமானவர். இறையுணர்வு வாய்க்கப் பெற்றவர்கள்  தம் மனத்தை அடக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.

தனிமனிதர் ஒவ்வொருவரும் இறைநம்பிக்கையில் ஆகட்டும், வேறு வாழ்வியல் நடைமுறைகளில் ஆகட்டும் மன உறுதி உடையவர்களாகத் திகழ்தல் வேண்டும் அப்போதுதான் இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் இரண்டையும் சரிசமமாகப் பார்க்கும் பழக்கம் ஏற்படும்

உலகியல் இன்பங்களிலும், ஆசைகளிலும் செல்லும் மனத்தை அவற்றின்பால் செல்லாமல் அடக்குதல் என்பது வேறு, மனத்தை ஏதோ ஒன்றன்பால் உறுதியாக வைத்துக் கொள்ளுதல் என்பது வேறு.      மனவுறுதி உடையவர்கள் இயற்கையாகவோ, அன்றிச் செயற்கையாகவோ துன்பங்கள் வருகிறபோது அவற்றைத் துணிச்சலுடன் எதிர்கொள்கின்றனர். இதனை மருள்நீக்கியார், 

மண்பாதலம் புக்கு மால்கடல் மூடி மற்றே ழுலகும்
விண்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே

என நான்காம் திருமுறையில் நவில்கிறார்.

சூலைநோய்க்கு ஆட்பட்டு தமக்கையாரால் தம் சமய வாழ்வில் மாற்றத்திற்கு உள்ளான நிலையில் இருந்த திருநாவுக்கரசரை, பல்லவ  அரசர் அழைத்த போதும், மனவுறுதி உடையவராய்
           
நாமார்க்கும் குடியல்லோம்,நமனையஞ்சோம்
நரகத்தில்  இடர்ப்படோம் நடலை யல்லோம்

எனத் துணிச்சலாகத் தம் கருத்தினை வெளிப்படுத்துகிறார்..

எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் முன்பாகவே, இதனை நாம் செய்ய வேண்டுமா, செய்ய இயலுமா என நன்கு யோசித்துத் தொடங்க வேண்டும். செய்யத் தொடங்கியபின் யோசிப்பதோ, தளர்ச்சியுறுவதோ கூடாது.  

அந்தவகையில் திருநாவுக்கரசர் திருக்கயிலாயம் சென்று காண்பதற்காகப் புறப்பட்டுச் செல்கிறார். கால்நடையாகவே வழியில் உள்ள திருத்தலங்களை வணங்கியவாறு காளத்திக்குச் செல்கிறார். பின்பு அங்கிருந்து பயணித்து ஒருவாறு கயிலாயத்தின் அடிப்பகுதியை அடைந்தார். இறைவன் இருக்குமிட்த்தைக் கால்களால் நடக்கவொண்ணாதென்று தம் கைகளால் ஊர்ந்தும், மார்பினால் தவழ்ந்தும் செல்கிறார். உடல் முழுவதும் புண்ணானபோதும் தம்சிந்தை சிறிதும் கலங்காமல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.  

அப்போது முதிய அந்தண வடிவத்துடன் இறைவன் அவர் எதிரில் தோன்றி கயிலையைச் சென்று காண்பது அரிது என்கிறார். அதற்கு நெஞ்சுறுதி தளராத நாவுக்கரசர்,

ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்        

என விடைபகர்ந்தார். தளராத நெஞ்சுறுதியுடன் அவர் இருப்பதைக் கண்ட இறைவன் மகிழ்ந்து, அவரை அங்கிருந்த குளத்து நீரில் மூழ்கச் செய்து, பின் திருவைஆற்றில் காட்சி கொடுத்து அருளினார்

எத்தகு நிலையிலும் முன்வைத்த காலைப் பின்வாங்காமல்  தாம் ஈடுபடும் செயல்களில்  நெஞ்சுறுதியோடு செயல்படுவோர் அவற்றில் வாகை சூடுவர் என்பதைத் திருநாவுக்கரசர் காட்டும் வாழ்வியல் நெறியாகக் கொள்ளலாம்.


குறிப்பு: முனைவர் திரு. மா.சற்குணம் மயிலம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். பல நூல்களை எழுதியுள்ளார்.
 .

2.2.13

மனித ஆன்ம உணர்வே சக்திவாய்ந்தது

-டாக்டர்  ராதாகிருஷ்ணன்


காந்திஜியின் பெயரை நாம் உதட்டில் கொண்டிருக்கிறோம், ஆனால் உள்ளத்தில் கொள்ளவில்லை. எந்தக் காரியத்திற்கும் அவர் பெயரைப் பயன்படுத்த நாம் தவறுவதில்லை. ஆனால் குறிப்பிட்ட நிலைமைகளில், சூழ்நிலையில், அவர் எப்படி நடந்திருப்பார் என்பது பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

  அவர் தம் நாட்டின் மீது மட்டும் பற்றுக் கொண்டிருக்கவில்லை. ஒட்டுமொத்த மனித இனத்திடமே அன்புகொண்டிருந்தார் என்பது தான் அவர் வாழ்வின் சிறப்பான அம்சம்.

  இருள் சூழ்ந்த உலகில், சத்தியம், அன்பு ஆகிய குறிக்கோள்களைப் போற்றி ஒளி வீசிய உயிர்ச் சோதியாய் அவர் விளங்கினார்.

 தம்மைச் சுற்றியிருந்த சூழ்நிலைச் சார்புகளை எதிர்த்து, தாம் வாழ்ந்த கால நிலையை எதிர்த்துப் போராடிய மனிதரை -அப்போராட்டத்தில் புண்பட்ட போதிலும் முறிந்து வீழ்ந்துவிடாமல், தோல்வியுற்ற போதிலும் தம் போராட்டத்தின் இறுதி நேர்மையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த வீரரை - காந்திஜியிடம் நாம் காண்கிறோம்.

  வருங்கால உலக மனித சமுதாயத்தின் முன்னோடி காந்திஜி. அவர் விஸ்வமானுஷ்யர்; உலகக் குடிமகனார்.   அவர் வாழ்க்கை, புதியதோர் உலகுக்கான போராட்டம். அவரது இலட்சியத்தின் அடிப்படை, தேசிய அரசு அன்று; அனைத்துலகுதான் அடிப்படை.

 எல்லா நாடுகளும் மனித சமுதாய நலன் என்ற அடிப்படையில் சிந்திக்க முன்வந்தால் ஒழிய, இன்று ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றங்கள் ஆபத்தாகவும் மனித முயற்சியின் விரயமாகவும் முடியும். உலகப் போரை நாம் தடுக்க விரும்பினால், நமக்கு உலக நாடுகளின் கூட்டுறவும் ஒத்துழைப்பும் தேவை.

 நம்மை எதிர்நோக்கி நிற்கும் புதிய உலகில் வாழ்வதற்கு, நாம் நம்மை ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும். பூகோள அமைப்பில் இன்று ஒற்றுமை உருவாகிவருகிறது. அறிவுத்துறையில் ஒருமித்த கருத்து வளர்ந்து வருகிறது.

 பொருளாதார கூட்டுறவு மூலமாக, மக்கள் அனைவருக்கும் உணவும் உடையும் குடியிருக்க இடமும் அளிக்க முடியும். ஆன்ம உறவையும், ஒருமையையும் நாம் மக்களிடையே பயன்படுத்த வேண்டும்.

 அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட சமுதாய அமைப்பை நம் நாட்டில் நிலைநாட்டி, அதன் மூலம் உலகுக்குத் தொண்டாற்ற முடியும் என்ற நம்பிக்கையில்தான் காந்திஜி நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார். போர் மூளாத ஓர் உலகை நிலைநாட்ட அவர் பாடுபட்டார்.  நம் நாட்டை அவர் சரியான பாதைக்கு அழைத்துச் சென்றார் என்பதற்கு, ஆயுதக்களைவு பற்றி ஐ.நா.வில் ஏகமனதாய் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சான்றாகும்.

  நம் இதயத்தில் உள்ள வெறிகளால்தான், நம்முடைய கண்மூடித்தனமான, கட்டுக்கடங்காத, கண்ணியமற்ற பேராசையினால்தான் போர்கள் மூளுகின்றன. நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளாகவே போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

 குருக்ஷேத்திரம் நம் அகத்தில் உள்ளது. உலகைக் காக்கும் அன்புநெறி, அதை அழிக்கும் பகைமைப் பாதை ஆகிய இந்த இரண்டில் ஒன்றை நாம் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.  இந்தப் போராட்டத்தில், நாம் நம்முடைய முயற்சியால் நம்மைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, நம் செயல்களால் பிறரையும் காக்க வேண்டும்.

 உபவாசம், வழிபாடு, நோன்புகள் ஆகியவற்றைக் கடைப்பிடித்து சத்தியத்தை வழிபடுவோர் பெறும் இணையற்ற தூய்மையையும் வலிமையையும் காந்திஜி பெற்றார்.  மனித சமுதாயத்தின் ஆன்ம வளர்ச்சிப் பரிணாமத்தில் காந்திஜி மிக முக்கியதொரு இடத்தைப் பெற்றுள்ளார்.

  இரட்சிப்பு பெற்றவர்களுக்குக் கிடைக்கும் லட்சிய பூமி பற்றி, சத்யசோதனையின் இறுதிக் குறிக்கோள் பற்றி அவர் பேசுகிறார். அப்பூமியில் அடிவைக்க நம்முள் சிலருக்கு வாய்ப்பில்லாது போகலாம்; ஆயினும், அதை எய்த, நாம் உழைத்துப் பாடுபட வேண்டும். தொலைவில் இருந்தாவது அதைப் போற்றி வணங்க வேண்டும்.

 காந்திஜியை நாம் எண்ணும்போதெல்லாம், சக்திமிக்க குண்டைக் காட்டிலும் மனித ஆன்ம உணர்வே அதிக சக்தி வாய்ந்தது என்ற உண்மையை நாம் நினைவில் போற்றுவோமாக!

மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிக்கானீர் நகரில் 1959 அக்டோபர் 31-ஆம் தேதி, காந்தி சிலையைத் திறந்து வைத்து நிகழ்த்திய உரையின் தமிழாக்கம் இது.

பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள 'டாக்டர் இராதாகிருஷ்ணன் பேருரை (தமிழாக்கம்: கா. திரவியம்) தொகுதி-2'இல் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.

நன்றி: தினமணி (01.02.2013)

25.12.12

ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்


'சுவாமி விவேகானந்தர்- 150' ஆண்டு விழாவுக்காக, 
இன்று சங்கல்பம் மேற்கொள்வோம்!


 நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஆற்றல் ஒரு பாறைக்கு உண்டா? உண்டு என்று நிரூபித்திருக்கிறார் ஒரு வீரத்துறவி. அதுவும் அந்தப் பாறை, நமது தமிழகத்தில் உள்ள பாறை என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.

தேசத்தின் தென்கோடியில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள ஒரு சிறு பாறைத்தீவு இன்று நாட்டின் கௌரவச் சின்னமாகக் காட்சி தருகிறது. அங்கிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைத் தரிசிக்க நாடு  முழுவதிலுமிருந்து- ஏன் உலகம் முழுவதிலுமிருந்து- மக்கள் வந்து செல்கிறார்கள். அந்தப் பாறையில் அப்படி என்ன விசேஷம்?

இதைத் தெரிந்துகொள்ள 120 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்துக்கு பயணம் செய்ய வேண்டும்.

1892, டிசம்பர் 24-ஆம் தேதி, காவியுடை உடுத்த சந்நியாசி ஒருவர் கடல் நடுவே இருந்த இந்தப் பாறைக்குச் செல்ல உதவுமாறு அங்கிருந்த மீனவர்களை வேண்டினார். ஆனால் மீனவர்கள் யாரும் உதவவில்லை. அதனால் இளம் சந்நியாசி சலிப்படையவில்லை; கடலில் குதித்து நீத்தியே அந்தப் பாறையை அடைந்தார். அங்கு டிச. 24, 25, 26 ஆகிய தேதிகளில், மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி தவத்தில் ஆழ்ந்தார்.

அந்தத் தவத்தின் இறுதியில், அவருக்குள் ஒரு புதிய ஞான ஒளி உதித்தது. புத்தருக்கு போதிமரம் போல, அந்த இளம் துறவிக்கு ஞானம் வாய்த்தது அந்தப் பாறையில். அவர்தான் பின்னாளில் ‘சுவாமி விவேகானந்தர்’ என்ற நாமகரணத்துடன் உலகையே தனது அறிவாலும் பேச்சாலும் வென்றவர்.

அவரது பெருமையை நினைவுகூரும் விதமாக பிரமாண்டமாக அங்கு நினைவாலயம் எழும்பி இருக்கிறது. அதன் நிழலில் விவேகானந்த கேந்திரம் என்ற அமைப்பு பல சேவைகளை ஆர்ப்பாட்டமின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பாறை மகத்தான பாறையானதன் பின்னணியில் அந்த இளம் துறவியின் மாபெரும் தவ வாழ்க்கை புதைந்திருக்கிறது.

வரும் ஆண்டு, சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த தின ஆண்டு. இந்த ஆண்டிலேயே இதற்கான கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. 1863, ஜனவரி 12-ஆம் தேதி புவனேஸ்வரி அம்மையாரின் கருவறையில் உதித்த நரேந்திரன் என்ற அந்த பாலன், அடிமைப்பட்டிருந்த தேசம் மீது படர்ந்திருந்த சாம்பலையும் சோம்பலையும் போக்க வந்த துறவியாக மலர்ந்தது நமது தேசத்தின் பெரும் பேறு.

நாடு விடுதலைக்காக தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த அந்தக் காலகட்டத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடராக, ஆன்மிக ஒளிவிளக்காக உதித்த சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள் பல தலைவர்களை உருவாக்கின. அவர் வாழ்ந்த காலம் மிகவும் குறுகியது; ஆனால் தான் மறைவதற்குள், பல நூறு ஆண்டுகளில் சாதிக்க வேண்டியதை 39 ஆண்டுகளில் சாதித்துத் திரும்பினார்.

அவருக்கு அந்த உத்வேகத்தை அளித்தது எது? குமரிமுனையில் அவர் தவம் செய்த பாறையில் அவருக்கு ஞான ஒளி கிடைக்கக் காரணமானது எது?

1888-ஆம் ஆண்டு துவங்கி 1893 வரை நாட்டின் பல பகுதிகளிலும் அவர் நிகழ்த்திய ‘பரிவ்ராஜக’ சுற்றுப்பயணமே அந்த ஞானத்துக்குக் காரணம். நடந்தும், வண்டியிலும், ரயிலிலும் பல்லாயிரம் மைல்களைக் கடந்து தேசத்தை வலம் வந்தபோது, அவர் எண்ணற்ற மக்களைச் சந்தித்தார்; அவர்களது இன்ப துன்பங்களை நேரில் கண்டார்.

இடையே 1892, டிசம்பரில் குமரிமுனை வந்தார். அங்கு குமரிமுனை பாறையில் அவர் செய்த தவம் என்பது, மேற்படி பயணத்தில் பெற்ற அனுபவங்களை அசை போடுவதாகவே அமைந்தது. அப்போதுதான் நமது நாட்டின் வீழ்ச்சிக்கும் சீரழிவுக்கும் காரணம் புரிந்தது. அது மட்டுமல்ல, அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திட்டமும் மனதில் உதித்தது.

இதை அவரே தனது உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“குமரி முனையில், தென்கோடி முனையில் உள்ள பாறையில் தான் எனக்கு அந்த யோசனை உதித்தது. நம்மிடையே எண்ணற்ற துறவிகள் இருக்கின்றனர். அவர்கள் பல உபதேசங்களைச் செய்கின்றனர். இருந்தும் அனைத்தும் வீணாகின்றன. அப்போதுதான் எனது குருதேவரின் உபதேசம் நினைவில் வந்தது. பசியால் துடிப்பவனுக்கு மத போதனை தேவையில்லை என்பதுதான் அது. நாடு என்ற முறையில் நாம் நமது தனித்தன்மையை இழந்திருக்கிறோம். அதுவே இந்தியாவின் குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். நாம் மக்களை இணைத்தாக வேண்டும்”

இதுவே அந்தத் துறவி கண்டறிந்த உண்மை. நாட்டை உள்ளன்போடு வலம் வந்ததன் விளைவாகத் திரண்ட ஞானம் அது. அங்கிருந்து தான், அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில் வெற்றிக்கொடி நாட்டும் வேகத்துடன் அந்தப் புயல் கிளம்பிச் சென்றது. பின்னர் நடந்ததை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.

இதுவே ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படும் பாறையின் வெற்றிக்கதை. நாட்டையும் மக்களையும் நம்மாலும் நேசிக்க முடிந்தால், கல்லும் கனியும்;  வெற்றுப் பாறையும் புனிதமாகும். சக மனிதனை நேசிக்கும் அன்பே மதத்தின் ஆணிவேர் என்பது புலப்பட்டுவிட்டால், நாம் அனைவரும் அந்த வீரத்துறவி கனவு கண்ட வீரர்களாக மாற முடியும்.

ஒரு மகத்தான சரித்திரத்தின் 120 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், விவேகானந்தரின் 150- ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ உள்ள நிலையில், அவரது அறைகூவலை கடலலைகளுக்கு நிகராக ஒலித்தபடி இருக்கிறது அந்தப் பாறை. அது உங்கள் காதுகளுக்குக் கேட்கிறதா?
 
 நன்றி: தினமணி (24.12.2012)


11.10.12

21-ம் நூற்றாண்டில் காந்தி

சிந்தனைக் களம்

 வையக வரலாற்றில் தடம் பதித்த மகாத்மா காந்தியின் அறிவுரைகள் 21-ம் நூற்றாண்டில் எவ்வளவு தூரம் சரிப்பட்டு வரக்கூடும் என்பதை, இந்த காந்தி ஜெயந்தி வாரத்தில் வெறும் சடங்குக் கடனாகவேனும் நினைவுகூர்வது ஆத்மார்த்த எழுச்சிக்கு வழிகோலும்.

இந்திய மக்களின் வாழ்வில் பல முனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, மாற்றம் நிகழ்வித்தார் காந்திஜி. ஆகவேதான் அவரை நம் தேசப்பிதா என்று கருதுகிறோம். ஓர் சிறந்த தகப்பனார் போன்று அவர் நமக்கு வர்த்தமான ரீதியிலும் ஆன்மிக ரீதியிலும் பெருவளம் வாய்ந்த மரபுரிமைச் செல்வத்தை ஆஸ்தியாக விட்டுச் சென்றுள்ளார். ஆனால், நாமோ படிப்படியாக அந்தச் சொத்துகளை இழந்து தொய்ந்து தார்மிகம் குன்றி அல்லல்படுகிறோம்.

இன்றைய இந்தியாவும் உலகமும் காந்திஜியின் கனவுகளுக்கு முற்றிலும் மாறாக உழன்று வருகின்றன. வன்முறை, பயங்கரவாதம், ஊழல் மலிந்த அதிகார அரசியல், மனித மாண்பின் சீரழிவு ஆகியவை நம்மைச் சூழ்ந்து கோரத்தாண்டவம் ஆடுகின்றன. இதற்குக் காரணம் வேறு யாருமல்ல, நாமேதான்!

இன்றைய அவலங்களின் கோரப் பிடியினின்றும் விடுபட்டு சீரிய எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கு நாமேதான் நமக்கு உதவ வேண்டும்; வெளியார் யாருமல்ல. அதற்கு நாம் செய்யவேண்டியது என்ன? அண்ணல் காந்தி கற்பித்த மூலக்கோட்பாட்டுக் கூறுகளான அகிம்சை, அன்பு, தன்னம்பிக்கை, சமூக நல்லிணக்கம், வையகம் தழுவிய உயரிய சிந்தனை, அதேசமயம் உள்ளூர் மேம்பாட்டுக்கான செயலாற்றல் ஆகியவற்றை நமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும். மாற்றம் வேண்டுமாயின், நாம் முதலில் மாற வேண்டும்.

கை ராட்டையில் நூற்றல், கதர் அணிதல், எளிய வாழ்வு,  'மாட்டு வண்டிப் பொருளாதாரம்' என்று ஜவாஹர்லால் நேரு ஒரு சமயம் குத்திக்காட்டிய கிராமிய மேம்பாடு - இவையே காந்தியம் என்று தவறாக மட்டம் தட்டப்படுபவற்றை ஓரங்கட்டிவிட்டு, உண்மையில் காந்திய சிந்தனை என்ன என்பதைக் கவனிக்க வேண்டும்.

அவரது சிந்தனையின் சாராம்சம், மெய்ம்மை, அகிம்சை, சுயவிருப்பார்வுடன் ஒன்றுபட்டு ஒத்துழைப்பது, தரித்திர நாராயணர்களாம் ஏழை மக்களின் மேம்பாடு, ஆன்மிகம் இழைந்த அப்பழுக்கற்ற அரசியல், வீரார்ந்த தன்னம்பிக்கை ஆகியவையே காந்திஜி புகட்டிய அடிப்படைப் பாடங்களாகும்.

'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற உறுதிப்பாடுதான் மகோத்தமர் காந்தியை அரசியலில் ஈடுபடச் செய்தது. "சத்திய நாட்டம் கொண்ட எவராலும் எந்த வாழ்க்கைத் தளத்தினின்றும் தனித்திருக்க இயலாது'' என்று காந்திஜி தமது சுய சரிதையில் கூறியுள்ளார்.

"சத்தியமும் அகிம்சையும் பிணைந்த பாதையே அமைதிக்கான ராஜபாட்டை; அவ்வாறாயினும் அமைதியைக் காட்டிலும் மெய்ம்மையைக் கடைப்பிடிப்பதே அத்தியாவசியமானது'' என்று 1926 மே மாத வாக்கிலேயே காந்திஜி கருத்துத் தெரிவித்துள்ளார்.

காந்திஜியின் பொது வாழ்க்கை 54 ஆண்டு காலம் (1893 முதல் 1948 வரை) தொடர்ந்தது. மோட்டார் வாகனம் கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்து, அணுகுண்டு வீச்சு வரையிலான காலகட்டம் அது. முதல் உலக மகா யுத்தம் 1919-ல் முடிவுற்றது. ஆயினும் போர் சமாதான உடன்படிக்கையை அடுத்து, ஃபாஸிஸம், ஜெர்மானிய நாஸிஸம், ருஷ்ய கம்யூனிஸம் போன்ற வன்முறையும் ரத்த வெள்ளமும் தோய்ந்த தத்துவங்கள் தலையெடுக்கலாயின. 1939 செப்டம்பரில் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின்போது ரத்த ஆறு திரும்பவும் வெள்ளமாகப் பெருகி ஆகஸ்ட் 1945-ல் ஹிரோஷிமா, நாகசாகி ஜப்பானிய நகரங்களை அணுகுண்டு தாக்கியதில் பயங்கர தீப் பிழம்புகளாக உச்சகட்டம் எய்தியது.

வன்முறை வெறி இந்தியாவையும் பீடித்தது. 1946-47 ஆண்டுகளில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் ஏராளமான உயிர்ச்சேதமும் சொல்லொணாக் கொடுமைகளும் மலிந்தன.

வையகம் முழுவதும் வியாபித்த அந்த வன்முறை உன்மத்த காலப்பரப்பில் தனியொரு காந்திஜியின் தார்மிக நல்லறிவு செரிந்த அமுத அன்பு மொழி, வன்முறையில் ஒடுங்கிப்போன உலக மாந்தரின் கவனத்தைக் கவரத் தொடங்கிற்று.

தீவினைக்கு எதிராக வன்முறை அறவே தவிர்த்த அறநெறிப் போராட்டமாம் சத்தியாக்கிரகம் எனும் புதிய கருத்தும், நடைமுறைக்கு உகந்த நல்லிணக்கச் செயல்பாட்டு வழிமுறைகளும் உலக மக்களுக்குப் பண்டைய நற்போதனைகளை நினைவுபடுத்தின. "கோபதாபங்களையும் காழ்ப்புணர்வையும் முறியடிக்க, அதேபோன்ற ஆத்திரங்களாலும் வெறுப்புணர்வுகளாலும் வன்முறை வழியாக வெற்றிகொள்ள முடியாது. கண்களைப் பறித்ததற்குப் பதிலடியாக எதிரியின் கண்களைப் பறிப்பதுதான் ஒரே வழி என்றாகிவிடின், உலகம் பூராவும் அனைவருமே கண்ணிழந்த கபோதிகளாகிவிடுவார்கள்'' என்று எடுத்துரைத்தார் காந்தி மகான்.

மானிடரின் மனிதாபிமானப் பண்புகளைப் பேணி வளமூட்டுவதற்கு மனிதன் தனது வாழ்வின் அடிப்படை நியதிகளைப் பின்பற்றி ஒழுகுதல் வேண்டும். மெய்ம்மை, அன்பு இவையே மானிட தர்மத்தின் அடித்தள நியதிகளாம். ஆனால், அந்தோ, நவீன பெருந்தொழில் சார்ந்த இன்றைய உலகாயத சமூகத்தில் தனிநபர்களிடையேயும், நாடுகளிடையேயும் போட்டாபோட்டியிடும் சுயநலமும் இனவெறியும் பொருளாதார தளத்தில் அதிக லாபம் பெறும் மனப்பாங்கும், தன்நல நாட்டமும் மனித இயல்பு என்ற எண்ணம் பரவிப் படர்ந்துவிட்டது. அதுவே தார்மிக சீரழிவுக்கு வித்திட்டது. அதன் நேர் விளைவே இரு கோர உலக மகா யுத்தங்கள்.

மனித இயல்பு பற்றிய இத்தகைய இழிந்த நோக்கையும், தார்மிகச் சீரழிவையும் கண்ணுற்ற காந்திஜி மனம் நொந்து வெகுண்டெழுந்தார். நவநாகரிக, பெருந்தொழில் சார்ந்த சமுதாயம் ஆண்களையும் பெண்களையும் வெறும் ஜடப்பொருளாகவும் இயந்திரங்களாகவும் ஆக்கிவிட்டன என்று சாடினார்.

"மெஷினாக மாற்றப்பட்டுவிட்ட மனிதனை, அவனது மூலமுதலான மாண்புக்கு உயர்த்தி தார்மிகத்தில் இருத்துவதே எனது லட்சியம்; அவனிடம் / அவளிடம் ஒடுங்கியுள்ள தார்மிகப் பண்புகளைத் தட்டியெழுப்பி ஊக்குவிப்பது அத்தியாவசியம் என்று ஒரு சமயம் தொழிலதிபர் ஜி.டி. பிர்லாவிடம் சுருங்கக் கூறினார். "மனிதன் இயந்திரத்துக்கு அடிமை ஆகிவிடக் கூடாது, இயந்திரங்கள் அவனது / அவளது அடிமைகளாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புரட்சிகரமான தொழில்நுட்ப விகசிப்புகளோடு வன்முறை, பயங்கரவாதம், ஏழ்மை, அபாயகரமான அணுசக்திக் கழிவுகள், அரசியல் பித்தலாட்டங்கள் ஆகிய அவலங்களும் இழைந்துள்ள இந்த 21-ம் நூற்றாண்டில் அதி அவசர கதியில் இலக்கின்றி விழையும் மானிட வர்க்கத்துக்கு, "சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம்'' எனும் முப்பெறு அடித்தளங்கள்மீது எழுப்பப்பட்ட காந்தியத்தின் வாயிலாய் இன்றைய பிரச்னைகள் பலவற்றுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தீர்வு கண்டறிய முடியும்.

ஆயினும், நினைத்த மாத்திரத்தில் பலன் தருவதற்குக் காந்தியம் புராண கால கற்பக விருட்சமோ காமதேனுவோ அல்ல!

சென்ற நூற்றாண்டில் காந்திஜி காட்டிய வழிமுறைகள் தற்காலச் சூழ்நிலையில் எவ்வாறு பயன்தரக்கூடியதாகப் பின்பற்றலாம் என்பதை நாமே தீர ஆராய்ந்து ஓர் இணக்கமான முடிவுக்கு வரவேண்டும்.

தனியார்களோ, குழுவினரோ, அரசாங்கமோ எவ்வளவு பெரிய செயல்முறை திட்டங்கள் தீட்டுகையிலும், மகாத்மா காந்தி தமது உயிர்த்தியாகத்துக்கு ஆறு மாதம் முன்பு விட்டுச்சென்ற பின்வரும் உரைகல் சோதனை போதனை வாசகத்தை நினைவில் நிறுத்துதல் மிக நன்று:

"நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்த பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா?

இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுய - ராஜ்யம் (சுயதேவைப்பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்'' (1947 ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் காந்திஜி ஆங்கிலத்தில் தம் கைப்பட எழுதிய குறிப்பு இது. ஆதாரம்: ""கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி'' நூல் 89, பக்கம் 125).

உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சிந்தனையாளர்களும் அரசியல் மேதைகளும் விவாதித்து வருகையில் காந்தியம் சார்ந்த செயல் நோக்கங்களையே பரிந்துரைக்க முற்படுகின்றனர். 'அரசியலில் ஆன்மிகம் இழைய வேண்டும். அதிகார அரசியல் பலத்தின் மீதான ஆசைக்குப் பதிலாக அன்பின் ஆற்றல் மீது பற்று பெருக வேண்டும்' என்பதே காந்திஜியின் எதிர்பார்ப்பு. மக்களின் நாகரிக நிலை எந்தக் குறிக்கோளை நோக்கித் திசை திரும்ப வேண்டும் என்பதை மகாத்மா காந்தி தன் வழியில் மேலோட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க பெருந்தலைவர் மார்டின் லூதர் கிங் பின்வருமாறு பதித்துள்ளார்: ""காந்திய சித்தாந்தத்தை மேன்மேலும் ஆழ்ந்து படிக்கையில் அன்பின் ஆற்றல் பற்றிய எனது ஐயப்பாடுகள் மெல்ல மெல்ல விலகின. "கிறித்தவக் கோட்பாடான பேரன்பை, காந்தியின் வழிமுறையிலான அகிம்சை வாயிலாய் நடைமுறைப்படுத்துவதே சுதந்திரத்திற்காக மல்லாடும் ஒடுக்கப்பட்ட மக்கள் கையாளக்கூடிய ஆற்றல்மிக்க ஒரே ஆயுதம்'' என்பதை தெள்ளத் தெளிய உணர்ந்தேன். ஏசுகிறிஸ்து கருத்தையும் செயல்நோக்கத்தையும் கற்பித்தார். காந்தி அதற்கான வழிமுறையை வகுத்தளித்தார்'' (-மார்டின் லூதர் கிங் எழுதிய ஸ்ட்ரெங்த் டு லவ் நூலிலிருந்து; (கால்லின்ஸ் பிரசுரம்).

"மனித வரலாற்றில் வருங்காலத்திய ஓர் புதிய சகாப்தத்தின் பிதாவாக காந்தி திகழக்கூடும்'' என்கிறார் இ. ஸ்டான்லி ஜோன்ஸ் எனும் அமெரிக்க கிறித்தவப் பிரசாரகர், "மகாத்மா காந்தி - ஆன் இண்டர்பிரிடேஷன்'' எனும் தமது நூலில்.

சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் என்றும், தெள்ளிய அறிவாற்றலின் புறவுரு என்றும் போற்றப்படும் விஞ்ஞானி ஐன்ஸ்டைன் பின்வருமாறு உறுதிபட எடுத்துரைத்துள்ள கருத்தையும் மனதிற் கொள்வோமாக: ''உலக நாடுகளின் தேசிய சுய நலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அடிப்படையில், உலகில் நிரந்தர அமைதி நிலவச்செய்வது எங்ஙனம் என்கிற நெடுநாள் பிரச்னையை ஆராயுங்கால், காந்தியின் நெறி வழிமுறையைப் பரந்த அளவில் பின்பற்றுவதுதான் ஒரே தீர்வு.'' (ஆதாரம்: 'ஐன்ஸ்டைன் ஆன் பீஸ்' - ஹெய்ன்ஸ் நார்டன் தொகுத்தளித்த நூல்).

-லா.சு.ரங்கராஜன்
நன்றி: தினமணி (04.10.2012)
.

2.10.12

வாய்மையே வெல்லும்!




*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும்

*உண்மை என்பது சுய ஆதாரம் கொண்டது. அதை மூடியிருக்கும் அறியாமை என்ற மூடியை விலக்கி விட்டால், உண்மை பளீரெனப் பிரகாசிக்கும்.

*நீ மேற்கொள்ளும் செயல் உண்மையானதாக இருந்தால் அது எந்த காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

*எத்தகைய ஆதரவுப் பிரசாரம் நடந்தாலும், பொய்மை எப்போதும் உண்மையாகாது. அதுபோல, பிறர் கவனிக்கவில்லை என்றாலும் உண்மை எந்த நேரத்திலும் பொய்மையாகாது.

*உண்மை பொய்மையைக் கொல்கிறது. அன்பு கோபத்தை வெல்கிறது. தன்னை வருத்துதல் வன்முறையை அறுக்கிறது. இந்த உயரிய கொள்கைகள் துறவிகளுக்கானதல்ல; நமக்கானது

-மகாத்மா காந்தி 

(இன்று காந்தி ஜெயந்தி)

13.7.12

வெற்றிக்கு வழி

சுவாமி சிவானந்தர்
(ஐம்பதாம் ஆண்டு நினைவுநாள்: ஜூலை 14)

இந்த உலகம் ஒரு வித்தியாசமான உலகம். இந்த மனமும் அதேபோல விசித்திரமானது. நெருங்கிய நண்பர்களிடையே கூட அவ்வப்போது சிறு சிறு வேற்றுமையும் மனக்கசப்பும் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் அபிப்பிராய பேதம் எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போல ஆகிவிடும். பல்வேறு மனங்களோடு பழகும்போது நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் அனுசரணையும், பெருந்தன்மையும், புரிந்துகொள்ளக் கூடியதுமான இருதயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் படிப்பினையைக் கொண்டு மிகவும் ஜாக்கிரதையாக உங்களைத் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்.

-சுவாமி சிவானந்தர்

காண்க:

தெய்வீக வாழ்க்கையை உபதேசித்தவர்

27.4.12

வழிகாட்டிய வரதன்!

 ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி: ஏப். 27

.

மகான் ஸ்ரீராமானுஜர். 1017, சித்திரை 13ஆம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். காந்திமதியம்மாள் - கேசவசோமாயாஜியாண்டானின் திருக்குமாரர் இவர்.

 கேசவ சோமயாஜியார், ராமானுஜனுக்கு உபநயனம் செய்வித்தார். காஞ்சிக்கு அருகே திருப்புட்குழியில் யாதவப்ரகாசரிடம் ராமானுஜரும் அவரின் சித்தி மகன் கோவிந்தனும் கல்வி பயின்றனர். ஒருமுறை, யாதவப்ரகாசர் வேத அர்த்தத்திற்கு முரண்பட்ட விளக்கம் கூற, தன் அழகான வாதங்களால், அவரை மடக்கினார் ராமானுஜர். அதனால், யாதவப்ரகாசருக்கு தலைக்குனிவு ஏற்பட்டது. ராமானுஜர் மீது பகைமை ஏற்பட்டு, அவரைக் கொல்ல திட்டம் தீட்டினார்.

 வட தேச யாத்திரையாக யாதவப்ரகாசரும் அவரது சீடர்களும் ராமானுஜருடன் காசியை அடைந்தனர். அங்கே கங்கைக் கரையில் ராமானுஜர் இறங்கினார். அப்போது, கோவிந்தர் குருவின் திட்டத்தை ராமானுஜரிடம் கூறினார். அதுகேட்ட ராமானுஜர் குருவிடமிருந்து தப்பினார். கோவிந்தர், தன் குருவிடம் மிக்க வருத்தம் தோய்ந்தவாறு ராமானுஜன் காட்டில் கொல்லப்பட்டதாகக் கூறினார்.

 ராமானுஜர் நெடுந்தொலைவு நடந்தார். அந்தி சாயும் நேரம். இருள் கவ்வியது. வழி தெரியவில்லை. அப்போது, ஒரு வேடனும் அவனது மனைவியும் அந்த வழியில் செல்வதைக் கண்ட ராமானுஜர், "எங்குச் செல்கிறீர்கள்?' என்று கேட்டார். அவர்களும், காஞ்சிபுரம் செல்வதாக பதில் கூறினர். நள்ளிரவு, மூவரும் ஒரு மரத்தடியில் உறங்கினர். நடந்த களைப்பினால் நீர் வேட்கை ராமானுஜருக்கு ஏற்பட்டது. நீர் தருமாறு அவர் வேண்ட, வேடனும் நீரளித்து வேட்கையைத் தணித்தார்.

 பொழுது புலர்ந்தது. காஞ்சி எல்லைக்கு அருகில் தான் இருப்பதை உணர்ந்தார் ராமானுஜர். ஆனால் வேடனையும் அவனது மனைவியையும் காணவில்லை. தான் இருப்பது சாலைக்கிணறு என்பதையும், வழிதெரியாது தவித்த தன்னை அழைத்து வந்த வேடர் மக்கள் வரதராஜனும், பெருந்தேவித் தாயாருமே என்பதையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் மல்கினார். அன்று முதல் வரதராஜப் பெருமானுக்கு சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார் ஸ்ரீராமானுஜர்.


- பிள்ளைலோகம் திருவேங்கடாசாரியார் 
நன்றி: வெள்ளிமணி - தினமணி (27 .04 .2012)


காண்க: ஸ்ரீ ராமானுஜர் (விக்கி)


  .

26.4.12

குருவிடம் கேட்ட வரம்!


 ஸ்ரீ சங்கர ஜெயந்தி: ஏப். 26 



கங்கைக் கரையில் பிரம்ம நிஷ்டையில் இருந்தார் ஸ்ரீசங்கர பகவத் பாதர். திடீரென அவரது தியானம் கலைந்தது. கண்களைத் திறந்து பார்த்தால், எதிரே ஒருவர் நின்றுகொண்டிருந்தார். பார்த்ததும் அவருக்குத் தெரிந்தது, அவர்தான் கெளட பாதர் என்பது.

உடனே ஆசனத்தில் இருந்து எழுந்தார். அவர் பாதம் பணிந்து அவரைப் போற்றி ஒரு துதியைச் சொன்னார்.

"சிவந்த மேனி கொண்டவர். தமது இடக்கையில், கவிழ்த்த வெண்தாமரை மொட்டுப் போன்று தோன்றும் கமண்டலத்தையும், வலக்கையில் கருவண்டுகள் போன்ற ருத்ராட்சத்தால் ஆன ஜெப மாலையையும் வைத்திருக்கிறார். வலக்கை கட்டை விரலால் ருத்ராட்சத்தை உருட்டிக் கொண்டிருக்கிறார். இது, கருவண்டுகள் அவரது கைகளாகிய தாமரை மலரைச் சூழ்ந்து கொண்டிருப்பதுபோல தோன்றுகிறது'' என்று கூறித் துதித்தார்.

கெளட பாதர், ஸ்ரீசங்கரரின் குருவான கோவிந்த பகவத்பாதருக்கும் குருவானவர். இருவரும் நல்ல ஞானம் பெற்றவர்கள். இருப்பினும், குரு-சிஷ்யன் என்ற முறையில், கௌட பாதர் சங்கரரிடம், "காமம் போன்ற விரோதிகளைக் களைந்தீர்களா, சாதனா சந்துஷ்டியை உணர்ந்தீர்களா, அஷ்டாங்க யோக சித்தி பெற்றீர்களா?'' என்றெல்லாம் கேள்விகளைக் கேட்கிறார்.

அதற்கு சங்கரர் அடக்கத்துடன், "வியாஸமுனியின் புதல்வரான சுகாசாரியரிடம் உபதேசம் பெற்ற உங்களது பாத தரிசனம் எனக்குக் கிடைத்ததே பெரும் பேறு. உங்களை ஒரு முறை தரிசித்தாலேயே வாய் பேச இயலாதவன் பேசவும், மூடன் அறிவாளியாகவும், பாவம் செய்தவன் தனது பாவங்கள் கழுவப் பெற்று தூயவனாகவும் ஆகிடுவர். எனவே உங்கள் தரிசனம் மூலம் இவை எல்லாவற்றையும் சிறிது காலத்தில் நான் அடைந்திடுவேன்'' என்று கூறி வணங்கினார்.

இந்த பதிலைக் கேட்ட கௌடபாதர் மிகவும் மகிழ்ந்து, ""உன் உயர்ந்த குணம், உனது பேச்சு மற்றும் பணிவின் மூலம் தெரிகிறது. உயர்ந்த விளக்கவுரைகளைச் செய்தும், நான் எழுதிய மாண்டூக்ய உபநிஷத விளக்கத்தை எளிமைப்படுத்தியதற்கும் உனக்கு ஆசி வழங்குகிறேன், ஏதேனும் வரம் கேள்'' என்றார்.

அதற்கு ஸ்ரீசங்கரர், "கலியுகம் மட்டுமல்லாது மற்ற மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்த பாக்யத்தை இன்று உங்கள் தரிசனத்தால் பெற்றேன். இதைவிடச் சிறந்ததாக நான் அடையவேண்டியது ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் வேண்டுவது ஒன்றுதான். அது, என் சித்தம் எப்போதும் பிரம்மத்திலேயே நிலைத்திருக்க அருள வேண்டும்'' என்றார்.

-ராமண்ணா 
நன்றி: வெள்ளிமணி - தினமணி (20.04.2012)
.
.

25.2.12

பாரதத்தின் ஆன்மிக ஜோதி!


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 

(பிறப்பு: பிப்.  20)

சமீப காலத்தில் இந்தியாவில் தோன்றிய சமய மறுமலர்ச்சியில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் (1836 - 1886) ஆன்மிக சிந்தனையும், நீதிக் குட்டிக்கதைகள் வாயிலாக அவர் அளித்த அறிவுரைகளின் தாக்கமும் மகத்தானவை.

உண்மையான இந்துவின் நோக்கைப் போல, ""அனைத்து மதங்களும் ஒரே மரத்தின் வெவ்வேறு கிளைகள் போன்றவை. ஆன்மிக சாம்ராஜ்யத்தில் தனித்த வேறுபாடுகளுக்கு இடமுண்டு'' என்றார். இக்கருத்துக்களை அவர் வெறும் புத்திபூர்வமான போதனைகளாக வழங்கவில்லை. அவை அனுபவ பூர்வமானவை.

ஹத யோகம், பரவசநிலை, நிர்விகல்ப சமாதி போன்ற கடும் ஆன்ம சாதனைகளுக்கு தம்மை உட்படுத்திக்கொண்டது மட்டுமின்றி, சுஃபி இஸ்லாமிய ஞானியரின் யோக சாதனா முறைகளையும் மேற்கொண்டார். பண்டைய கிறித்துவ தியான வழிபாட்டில் ஆழ்ந்து அமிழ்ந்து தேவ தூதனின் பிரகாசம் கண்டார். உச்ச உயர் இறையுணர்வு ஒன்றேயன்றி வேறல்ல என விளக்கினார்.

"இந்தியாவைப் பொறுத்தவரை சமூக சீர்திருத்தமும், சமூகத்தில் புரையோடிவிட்ட தப்பெண்ணங்களையும் மூடப் பழக்க வழக்கங்களையும் களைந்தெறிவது அவசியம்தான். ஆயினும் வெறும் சீர்திருத்தங்கள் மட்டும் போதாது; சமயம் சார்ந்த ஆன்மிக உணர்வு பெருக்கெடுத்தால்தான் சமூகம் தூய்மை பெறும். ஆண்களும் பெண்களும் தார்மிக -ஆன்மிக ரீதியில் வளம் பெற முடியும். அந்நிலையில் தீமைகள் பல தாமாகவே விலகும்'' என்பதே ராமகிருஷ்ணரின் அடிப்படை அறிவுரை.

அம்மகானின் சீடர் சுவாமி விவேகானந்தரும் இதையேதான் அடிக்கடி வலியுறுத்தி, தமது இந்தியப் புனருத்தாரண திட்டங்கள் யாவற்றிலும் செயல்படுத்த விழைந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சீடர்களுக்கு அருளிய வாக்குகளை, பதில்களை,  தெள்ளிய ஆன்மிக செல்வத்தை அமுதமொழிகளில் உபமான - உபமேய நீதிக்கதைகள் மூலம் பொழிந்த வண்ணமிருந்தார்.

திட்டமிட்ட நீண்ட சொற்பொழிவு ஏதும் ஆற்றியதில்லை. அறநூல்கள் எழுதவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு படிப்பறிவு கிடையாது. தமது தெள்ளிய, எளிய போதனைகளுக்கான சமாச்சாரங்களை, அனைவரும் அறிந்த புராணக் கதைகள், உப கதைகள், மரபு வழி புனைவுகள்,கிராமியப் பழமொழிகள் ஆகியவற்றிலிருந்து எடுத்து, புதிய மெருகூட்டித் தமக்கே உரித்தான எளிய பாணியில் விளக்கம் அளித்தார். தலைமுறை தலைமுறையாக வழக்கிலுள்ள இறைமை சார்ந்த ஆய்வுரைகளின் பொழிப்பாகச் சுருக்கி, குட்டி நீதிக் கதைகளாக வார்த்தெடுத்து வாரி வழங்கலானார்.

தாம் முன்பு கடைபிடித்த கடும் சாதனா முறைகளை அவர் தமது சீடர்களுக்கு சிபாரிசு செய்யவில்லை. குடும்பஸ்தனான ஒரு சீடர், ஒரு சமயம், சன்னியாசம் மேற்கொள்ள விரும்பியபோது, ஸ்ரீராமகிருஷ்ணர் அன்பே உருவாய்ப் பகர்ந்தார்: "உலகைத் துறப்பதால் உமக்கென்ன லாபம்? குடும்ப வாழ்க்கை கற்கோட்டை போன்றது. அக்கோட்டைக்குள் பத்திரமாக இருந்துகொண்டு உமது எதிரிகளாம் தீமைகளை எதிர்த்துப் போராடலாம். தாக்குப் பிடிக்கலாம். வெளியே வந்தாலோ எதிரிகள் உம்மை சுலபமாகச் சூழ்ந்துகொள்வார்கள். வீழ்த்துவார்கள். கடவுள் மீதான உமது நாட்டம் முக்கால்வாசியாவது நிரம்பிய பிறகு வேண்டுமானால் நீர் துறவு பற்றி யோசிக்கலாம்'' என்றார்.

வேறொரு தருணம் "வெளி உலகை முற்றிலும் துறப்பதற்கு அவசியம் என்ன? உலகாயதப் பற்றை மட்டும் துறந்து தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமலும் வாழ்க்கை நடத்தலாமே?'' என்று அறிவுறுத்தினார்."

நான் எப்போது விடுதலை பெற்று ஆன்ம சாட்சாத்காரம் பெறுவேன்?'' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "நீர் எப்போதும் ஆன்ம சொரூபியாகத்தான் உள்ளாய். மாயா வினோதம்தான் உமது அகக்கண்ணை மறைக்கிறது. இந்தக் கதை தெரியுமா? ஒரு சிங்கம் தனது குட்டியை ஈன்றுவிட்டு இறந்துவிட்டது.  தாயை இழந்த சிங்கக்குட்டி தனது உண்மையான சொரூபத்தை அறியாமல் ஆட்டு மந்தைகளோடு சேர்ந்து புல் மேய்ந்து ஓர் ஆடு போல் வாழ்ந்து வந்தது. மிருகங்களைக் கண்டு மிரண்டு ஓடுகிற ஆடுகளோடு சேர்ந்து பயந்து தானும் ஓடிக்கொண்டிருந்தது. அதன் பரிதாப நிலையை மற்றொரு சிங்கம் கவனித்தது. சிங்கக் குட்டியைப் பிடித்து ஒரு நீரோடைக்கு இழுத்துச் சென்று தண்ணீரில் அதன் உருவத்தைப் பார்க்கச் செய்தது. அதன் வாயில் சிறிது மாமிசத் துண்டைத் திணித்தது. "புல்லைத் தின்னும் ஓர் அற்ப ஆடு அல்ல நீ; என்னைப் போன்ற ஒரு சிங்கம்' என உணர வைத்தது. கர்ஜித்துத் துள்ளிக் குதித்தது சிங்கக்குட்டி. தான் சிங்கம் என உணர்ந்ததும் புல் மேய்தல், பயந்தோடுதல் போன்ற பொய்யான மனப் பிராந்திகள் சட்டென மறைந்து போயின. அதுபோல, நீர் உமது யதார்த்த சொரூபத்தை உணர்ந்ததும், பொய்யான ஆசைகள், புலன் உணர்வுகள் படுத்தும் பாடுகள் யாவும் விடுபட்டுப்போம்'' - இவ்வாறு உவமைக் கதையுடன் விளக்கினார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

"இறையுணர்வில் ஒன்றிட சமய வழிபாடுகள், சடங்குகள், ஆசார அனுஷ்டானங்கள் அவசியம் தானா? அவை யாவும் அரிசியின் உமி போன்றவை தானே?'' என்ற வினாவுக்கு விடையளிக்கையில், "ஆம்! ஆனால் உமி இல்லையேல் வயலில் நெல் விளையாது. நீ உண்பது அரிசி. விதைப்பதோ உமியோடு இழைந்த நெல்'' என்று புன்னகைத்தார் பகவான் ராமகிருஷ்ணர். தொடர்ந்து, "பலாப்பழத்தை அறுத்துப் பிசினை விலக்கிப் பலாச்சுளை எடுப்பதற்காகக் கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டியுள்ளது. முட்புதர்கள் நிறைந்த தரையில் நடக்கச் செருப்பு அணிகிறோம். அதே போன்று, அரசியல் அல்லது சமூக சேவைகளைத் தொடங்குவதற்கு முன்பாகக் கடவுளை ஆன்மார்த்தமாகக் கண் கசிந்து, நேசித்து, அவனைச் சரணடைந்த பின் காரியத்தை மேற்கொண்டால்தான் சுயநலமின்றி, லஞ்ச லாவண்யங்களை அறவே தவிர்த்து சீரிய தொண்டு புரிய முடியும்'' என்றருளினார்.

தமது குருநாதரைப் பற்றி சுவாமி விவேகானந்தர் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் பதித்துள்ளது போல், "ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் எந்தப் புதுமையான உண்மையையும் போதிக்கவில்லை; எதையும் மறுக்கவோ, அழிக்கவோ அல்லது நிறைவு செய்யவே அவர் தோன்றவில்லை. பழமை நீதிகளை புதுமெருகுப் பொலிவுடன் எளிய சொற்களில் எடுத்துரைத்துப் புரிய வைத்தார். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் பாரதத்தின் பண்டைய சமய சித்தாந்தங்களின் புறவடிவப் பிழம்பாகப் பிரகாசித்தார்''.


- லா.சு.ரங்கராஜன் 

நன்றி: தினமணி -  வெள்ளிமணி (24.02.2012 )

குறிப்பு: ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 175 வது ஜெயந்தி உற்சவம் அவரது பக்தர்களால், பிப். 22 முதல் பிப். 26 வரை, சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

காண்க: 

 
.