நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

11.10.12

21-ம் நூற்றாண்டில் காந்தி

சிந்தனைக் களம்

 வையக வரலாற்றில் தடம் பதித்த மகாத்மா காந்தியின் அறிவுரைகள் 21-ம் நூற்றாண்டில் எவ்வளவு தூரம் சரிப்பட்டு வரக்கூடும் என்பதை, இந்த காந்தி ஜெயந்தி வாரத்தில் வெறும் சடங்குக் கடனாகவேனும் நினைவுகூர்வது ஆத்மார்த்த எழுச்சிக்கு வழிகோலும்.

இந்திய மக்களின் வாழ்வில் பல முனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, மாற்றம் நிகழ்வித்தார் காந்திஜி. ஆகவேதான் அவரை நம் தேசப்பிதா என்று கருதுகிறோம். ஓர் சிறந்த தகப்பனார் போன்று அவர் நமக்கு வர்த்தமான ரீதியிலும் ஆன்மிக ரீதியிலும் பெருவளம் வாய்ந்த மரபுரிமைச் செல்வத்தை ஆஸ்தியாக விட்டுச் சென்றுள்ளார். ஆனால், நாமோ படிப்படியாக அந்தச் சொத்துகளை இழந்து தொய்ந்து தார்மிகம் குன்றி அல்லல்படுகிறோம்.

இன்றைய இந்தியாவும் உலகமும் காந்திஜியின் கனவுகளுக்கு முற்றிலும் மாறாக உழன்று வருகின்றன. வன்முறை, பயங்கரவாதம், ஊழல் மலிந்த அதிகார அரசியல், மனித மாண்பின் சீரழிவு ஆகியவை நம்மைச் சூழ்ந்து கோரத்தாண்டவம் ஆடுகின்றன. இதற்குக் காரணம் வேறு யாருமல்ல, நாமேதான்!

இன்றைய அவலங்களின் கோரப் பிடியினின்றும் விடுபட்டு சீரிய எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கு நாமேதான் நமக்கு உதவ வேண்டும்; வெளியார் யாருமல்ல. அதற்கு நாம் செய்யவேண்டியது என்ன? அண்ணல் காந்தி கற்பித்த மூலக்கோட்பாட்டுக் கூறுகளான அகிம்சை, அன்பு, தன்னம்பிக்கை, சமூக நல்லிணக்கம், வையகம் தழுவிய உயரிய சிந்தனை, அதேசமயம் உள்ளூர் மேம்பாட்டுக்கான செயலாற்றல் ஆகியவற்றை நமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும். மாற்றம் வேண்டுமாயின், நாம் முதலில் மாற வேண்டும்.

கை ராட்டையில் நூற்றல், கதர் அணிதல், எளிய வாழ்வு,  'மாட்டு வண்டிப் பொருளாதாரம்' என்று ஜவாஹர்லால் நேரு ஒரு சமயம் குத்திக்காட்டிய கிராமிய மேம்பாடு - இவையே காந்தியம் என்று தவறாக மட்டம் தட்டப்படுபவற்றை ஓரங்கட்டிவிட்டு, உண்மையில் காந்திய சிந்தனை என்ன என்பதைக் கவனிக்க வேண்டும்.

அவரது சிந்தனையின் சாராம்சம், மெய்ம்மை, அகிம்சை, சுயவிருப்பார்வுடன் ஒன்றுபட்டு ஒத்துழைப்பது, தரித்திர நாராயணர்களாம் ஏழை மக்களின் மேம்பாடு, ஆன்மிகம் இழைந்த அப்பழுக்கற்ற அரசியல், வீரார்ந்த தன்னம்பிக்கை ஆகியவையே காந்திஜி புகட்டிய அடிப்படைப் பாடங்களாகும்.

'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற உறுதிப்பாடுதான் மகோத்தமர் காந்தியை அரசியலில் ஈடுபடச் செய்தது. "சத்திய நாட்டம் கொண்ட எவராலும் எந்த வாழ்க்கைத் தளத்தினின்றும் தனித்திருக்க இயலாது'' என்று காந்திஜி தமது சுய சரிதையில் கூறியுள்ளார்.

"சத்தியமும் அகிம்சையும் பிணைந்த பாதையே அமைதிக்கான ராஜபாட்டை; அவ்வாறாயினும் அமைதியைக் காட்டிலும் மெய்ம்மையைக் கடைப்பிடிப்பதே அத்தியாவசியமானது'' என்று 1926 மே மாத வாக்கிலேயே காந்திஜி கருத்துத் தெரிவித்துள்ளார்.

காந்திஜியின் பொது வாழ்க்கை 54 ஆண்டு காலம் (1893 முதல் 1948 வரை) தொடர்ந்தது. மோட்டார் வாகனம் கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்து, அணுகுண்டு வீச்சு வரையிலான காலகட்டம் அது. முதல் உலக மகா யுத்தம் 1919-ல் முடிவுற்றது. ஆயினும் போர் சமாதான உடன்படிக்கையை அடுத்து, ஃபாஸிஸம், ஜெர்மானிய நாஸிஸம், ருஷ்ய கம்யூனிஸம் போன்ற வன்முறையும் ரத்த வெள்ளமும் தோய்ந்த தத்துவங்கள் தலையெடுக்கலாயின. 1939 செப்டம்பரில் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின்போது ரத்த ஆறு திரும்பவும் வெள்ளமாகப் பெருகி ஆகஸ்ட் 1945-ல் ஹிரோஷிமா, நாகசாகி ஜப்பானிய நகரங்களை அணுகுண்டு தாக்கியதில் பயங்கர தீப் பிழம்புகளாக உச்சகட்டம் எய்தியது.

வன்முறை வெறி இந்தியாவையும் பீடித்தது. 1946-47 ஆண்டுகளில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் ஏராளமான உயிர்ச்சேதமும் சொல்லொணாக் கொடுமைகளும் மலிந்தன.

வையகம் முழுவதும் வியாபித்த அந்த வன்முறை உன்மத்த காலப்பரப்பில் தனியொரு காந்திஜியின் தார்மிக நல்லறிவு செரிந்த அமுத அன்பு மொழி, வன்முறையில் ஒடுங்கிப்போன உலக மாந்தரின் கவனத்தைக் கவரத் தொடங்கிற்று.

தீவினைக்கு எதிராக வன்முறை அறவே தவிர்த்த அறநெறிப் போராட்டமாம் சத்தியாக்கிரகம் எனும் புதிய கருத்தும், நடைமுறைக்கு உகந்த நல்லிணக்கச் செயல்பாட்டு வழிமுறைகளும் உலக மக்களுக்குப் பண்டைய நற்போதனைகளை நினைவுபடுத்தின. "கோபதாபங்களையும் காழ்ப்புணர்வையும் முறியடிக்க, அதேபோன்ற ஆத்திரங்களாலும் வெறுப்புணர்வுகளாலும் வன்முறை வழியாக வெற்றிகொள்ள முடியாது. கண்களைப் பறித்ததற்குப் பதிலடியாக எதிரியின் கண்களைப் பறிப்பதுதான் ஒரே வழி என்றாகிவிடின், உலகம் பூராவும் அனைவருமே கண்ணிழந்த கபோதிகளாகிவிடுவார்கள்'' என்று எடுத்துரைத்தார் காந்தி மகான்.

மானிடரின் மனிதாபிமானப் பண்புகளைப் பேணி வளமூட்டுவதற்கு மனிதன் தனது வாழ்வின் அடிப்படை நியதிகளைப் பின்பற்றி ஒழுகுதல் வேண்டும். மெய்ம்மை, அன்பு இவையே மானிட தர்மத்தின் அடித்தள நியதிகளாம். ஆனால், அந்தோ, நவீன பெருந்தொழில் சார்ந்த இன்றைய உலகாயத சமூகத்தில் தனிநபர்களிடையேயும், நாடுகளிடையேயும் போட்டாபோட்டியிடும் சுயநலமும் இனவெறியும் பொருளாதார தளத்தில் அதிக லாபம் பெறும் மனப்பாங்கும், தன்நல நாட்டமும் மனித இயல்பு என்ற எண்ணம் பரவிப் படர்ந்துவிட்டது. அதுவே தார்மிக சீரழிவுக்கு வித்திட்டது. அதன் நேர் விளைவே இரு கோர உலக மகா யுத்தங்கள்.

மனித இயல்பு பற்றிய இத்தகைய இழிந்த நோக்கையும், தார்மிகச் சீரழிவையும் கண்ணுற்ற காந்திஜி மனம் நொந்து வெகுண்டெழுந்தார். நவநாகரிக, பெருந்தொழில் சார்ந்த சமுதாயம் ஆண்களையும் பெண்களையும் வெறும் ஜடப்பொருளாகவும் இயந்திரங்களாகவும் ஆக்கிவிட்டன என்று சாடினார்.

"மெஷினாக மாற்றப்பட்டுவிட்ட மனிதனை, அவனது மூலமுதலான மாண்புக்கு உயர்த்தி தார்மிகத்தில் இருத்துவதே எனது லட்சியம்; அவனிடம் / அவளிடம் ஒடுங்கியுள்ள தார்மிகப் பண்புகளைத் தட்டியெழுப்பி ஊக்குவிப்பது அத்தியாவசியம் என்று ஒரு சமயம் தொழிலதிபர் ஜி.டி. பிர்லாவிடம் சுருங்கக் கூறினார். "மனிதன் இயந்திரத்துக்கு அடிமை ஆகிவிடக் கூடாது, இயந்திரங்கள் அவனது / அவளது அடிமைகளாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புரட்சிகரமான தொழில்நுட்ப விகசிப்புகளோடு வன்முறை, பயங்கரவாதம், ஏழ்மை, அபாயகரமான அணுசக்திக் கழிவுகள், அரசியல் பித்தலாட்டங்கள் ஆகிய அவலங்களும் இழைந்துள்ள இந்த 21-ம் நூற்றாண்டில் அதி அவசர கதியில் இலக்கின்றி விழையும் மானிட வர்க்கத்துக்கு, "சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம்'' எனும் முப்பெறு அடித்தளங்கள்மீது எழுப்பப்பட்ட காந்தியத்தின் வாயிலாய் இன்றைய பிரச்னைகள் பலவற்றுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தீர்வு கண்டறிய முடியும்.

ஆயினும், நினைத்த மாத்திரத்தில் பலன் தருவதற்குக் காந்தியம் புராண கால கற்பக விருட்சமோ காமதேனுவோ அல்ல!

சென்ற நூற்றாண்டில் காந்திஜி காட்டிய வழிமுறைகள் தற்காலச் சூழ்நிலையில் எவ்வாறு பயன்தரக்கூடியதாகப் பின்பற்றலாம் என்பதை நாமே தீர ஆராய்ந்து ஓர் இணக்கமான முடிவுக்கு வரவேண்டும்.

தனியார்களோ, குழுவினரோ, அரசாங்கமோ எவ்வளவு பெரிய செயல்முறை திட்டங்கள் தீட்டுகையிலும், மகாத்மா காந்தி தமது உயிர்த்தியாகத்துக்கு ஆறு மாதம் முன்பு விட்டுச்சென்ற பின்வரும் உரைகல் சோதனை போதனை வாசகத்தை நினைவில் நிறுத்துதல் மிக நன்று:

"நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்த பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா?

இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுய - ராஜ்யம் (சுயதேவைப்பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்'' (1947 ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் காந்திஜி ஆங்கிலத்தில் தம் கைப்பட எழுதிய குறிப்பு இது. ஆதாரம்: ""கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி'' நூல் 89, பக்கம் 125).

உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சிந்தனையாளர்களும் அரசியல் மேதைகளும் விவாதித்து வருகையில் காந்தியம் சார்ந்த செயல் நோக்கங்களையே பரிந்துரைக்க முற்படுகின்றனர். 'அரசியலில் ஆன்மிகம் இழைய வேண்டும். அதிகார அரசியல் பலத்தின் மீதான ஆசைக்குப் பதிலாக அன்பின் ஆற்றல் மீது பற்று பெருக வேண்டும்' என்பதே காந்திஜியின் எதிர்பார்ப்பு. மக்களின் நாகரிக நிலை எந்தக் குறிக்கோளை நோக்கித் திசை திரும்ப வேண்டும் என்பதை மகாத்மா காந்தி தன் வழியில் மேலோட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க பெருந்தலைவர் மார்டின் லூதர் கிங் பின்வருமாறு பதித்துள்ளார்: ""காந்திய சித்தாந்தத்தை மேன்மேலும் ஆழ்ந்து படிக்கையில் அன்பின் ஆற்றல் பற்றிய எனது ஐயப்பாடுகள் மெல்ல மெல்ல விலகின. "கிறித்தவக் கோட்பாடான பேரன்பை, காந்தியின் வழிமுறையிலான அகிம்சை வாயிலாய் நடைமுறைப்படுத்துவதே சுதந்திரத்திற்காக மல்லாடும் ஒடுக்கப்பட்ட மக்கள் கையாளக்கூடிய ஆற்றல்மிக்க ஒரே ஆயுதம்'' என்பதை தெள்ளத் தெளிய உணர்ந்தேன். ஏசுகிறிஸ்து கருத்தையும் செயல்நோக்கத்தையும் கற்பித்தார். காந்தி அதற்கான வழிமுறையை வகுத்தளித்தார்'' (-மார்டின் லூதர் கிங் எழுதிய ஸ்ட்ரெங்த் டு லவ் நூலிலிருந்து; (கால்லின்ஸ் பிரசுரம்).

"மனித வரலாற்றில் வருங்காலத்திய ஓர் புதிய சகாப்தத்தின் பிதாவாக காந்தி திகழக்கூடும்'' என்கிறார் இ. ஸ்டான்லி ஜோன்ஸ் எனும் அமெரிக்க கிறித்தவப் பிரசாரகர், "மகாத்மா காந்தி - ஆன் இண்டர்பிரிடேஷன்'' எனும் தமது நூலில்.

சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் என்றும், தெள்ளிய அறிவாற்றலின் புறவுரு என்றும் போற்றப்படும் விஞ்ஞானி ஐன்ஸ்டைன் பின்வருமாறு உறுதிபட எடுத்துரைத்துள்ள கருத்தையும் மனதிற் கொள்வோமாக: ''உலக நாடுகளின் தேசிய சுய நலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அடிப்படையில், உலகில் நிரந்தர அமைதி நிலவச்செய்வது எங்ஙனம் என்கிற நெடுநாள் பிரச்னையை ஆராயுங்கால், காந்தியின் நெறி வழிமுறையைப் பரந்த அளவில் பின்பற்றுவதுதான் ஒரே தீர்வு.'' (ஆதாரம்: 'ஐன்ஸ்டைன் ஆன் பீஸ்' - ஹெய்ன்ஸ் நார்டன் தொகுத்தளித்த நூல்).

-லா.சு.ரங்கராஜன்
நன்றி: தினமணி (04.10.2012)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக