நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
பக்தப் பேரொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்தப் பேரொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.7.12

வெற்றிக்கு வழி

சுவாமி சிவானந்தர்
(ஐம்பதாம் ஆண்டு நினைவுநாள்: ஜூலை 14)

இந்த உலகம் ஒரு வித்தியாசமான உலகம். இந்த மனமும் அதேபோல விசித்திரமானது. நெருங்கிய நண்பர்களிடையே கூட அவ்வப்போது சிறு சிறு வேற்றுமையும் மனக்கசப்பும் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் அபிப்பிராய பேதம் எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போல ஆகிவிடும். பல்வேறு மனங்களோடு பழகும்போது நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் அனுசரணையும், பெருந்தன்மையும், புரிந்துகொள்ளக் கூடியதுமான இருதயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் படிப்பினையைக் கொண்டு மிகவும் ஜாக்கிரதையாக உங்களைத் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்.

-சுவாமி சிவானந்தர்

காண்க:

தெய்வீக வாழ்க்கையை உபதேசித்தவர்

25.2.12

பாரதத்தின் ஆன்மிக ஜோதி!


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 

(பிறப்பு: பிப்.  20)

சமீப காலத்தில் இந்தியாவில் தோன்றிய சமய மறுமலர்ச்சியில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் (1836 - 1886) ஆன்மிக சிந்தனையும், நீதிக் குட்டிக்கதைகள் வாயிலாக அவர் அளித்த அறிவுரைகளின் தாக்கமும் மகத்தானவை.

உண்மையான இந்துவின் நோக்கைப் போல, ""அனைத்து மதங்களும் ஒரே மரத்தின் வெவ்வேறு கிளைகள் போன்றவை. ஆன்மிக சாம்ராஜ்யத்தில் தனித்த வேறுபாடுகளுக்கு இடமுண்டு'' என்றார். இக்கருத்துக்களை அவர் வெறும் புத்திபூர்வமான போதனைகளாக வழங்கவில்லை. அவை அனுபவ பூர்வமானவை.

ஹத யோகம், பரவசநிலை, நிர்விகல்ப சமாதி போன்ற கடும் ஆன்ம சாதனைகளுக்கு தம்மை உட்படுத்திக்கொண்டது மட்டுமின்றி, சுஃபி இஸ்லாமிய ஞானியரின் யோக சாதனா முறைகளையும் மேற்கொண்டார். பண்டைய கிறித்துவ தியான வழிபாட்டில் ஆழ்ந்து அமிழ்ந்து தேவ தூதனின் பிரகாசம் கண்டார். உச்ச உயர் இறையுணர்வு ஒன்றேயன்றி வேறல்ல என விளக்கினார்.

"இந்தியாவைப் பொறுத்தவரை சமூக சீர்திருத்தமும், சமூகத்தில் புரையோடிவிட்ட தப்பெண்ணங்களையும் மூடப் பழக்க வழக்கங்களையும் களைந்தெறிவது அவசியம்தான். ஆயினும் வெறும் சீர்திருத்தங்கள் மட்டும் போதாது; சமயம் சார்ந்த ஆன்மிக உணர்வு பெருக்கெடுத்தால்தான் சமூகம் தூய்மை பெறும். ஆண்களும் பெண்களும் தார்மிக -ஆன்மிக ரீதியில் வளம் பெற முடியும். அந்நிலையில் தீமைகள் பல தாமாகவே விலகும்'' என்பதே ராமகிருஷ்ணரின் அடிப்படை அறிவுரை.

அம்மகானின் சீடர் சுவாமி விவேகானந்தரும் இதையேதான் அடிக்கடி வலியுறுத்தி, தமது இந்தியப் புனருத்தாரண திட்டங்கள் யாவற்றிலும் செயல்படுத்த விழைந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சீடர்களுக்கு அருளிய வாக்குகளை, பதில்களை,  தெள்ளிய ஆன்மிக செல்வத்தை அமுதமொழிகளில் உபமான - உபமேய நீதிக்கதைகள் மூலம் பொழிந்த வண்ணமிருந்தார்.

திட்டமிட்ட நீண்ட சொற்பொழிவு ஏதும் ஆற்றியதில்லை. அறநூல்கள் எழுதவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு படிப்பறிவு கிடையாது. தமது தெள்ளிய, எளிய போதனைகளுக்கான சமாச்சாரங்களை, அனைவரும் அறிந்த புராணக் கதைகள், உப கதைகள், மரபு வழி புனைவுகள்,கிராமியப் பழமொழிகள் ஆகியவற்றிலிருந்து எடுத்து, புதிய மெருகூட்டித் தமக்கே உரித்தான எளிய பாணியில் விளக்கம் அளித்தார். தலைமுறை தலைமுறையாக வழக்கிலுள்ள இறைமை சார்ந்த ஆய்வுரைகளின் பொழிப்பாகச் சுருக்கி, குட்டி நீதிக் கதைகளாக வார்த்தெடுத்து வாரி வழங்கலானார்.

தாம் முன்பு கடைபிடித்த கடும் சாதனா முறைகளை அவர் தமது சீடர்களுக்கு சிபாரிசு செய்யவில்லை. குடும்பஸ்தனான ஒரு சீடர், ஒரு சமயம், சன்னியாசம் மேற்கொள்ள விரும்பியபோது, ஸ்ரீராமகிருஷ்ணர் அன்பே உருவாய்ப் பகர்ந்தார்: "உலகைத் துறப்பதால் உமக்கென்ன லாபம்? குடும்ப வாழ்க்கை கற்கோட்டை போன்றது. அக்கோட்டைக்குள் பத்திரமாக இருந்துகொண்டு உமது எதிரிகளாம் தீமைகளை எதிர்த்துப் போராடலாம். தாக்குப் பிடிக்கலாம். வெளியே வந்தாலோ எதிரிகள் உம்மை சுலபமாகச் சூழ்ந்துகொள்வார்கள். வீழ்த்துவார்கள். கடவுள் மீதான உமது நாட்டம் முக்கால்வாசியாவது நிரம்பிய பிறகு வேண்டுமானால் நீர் துறவு பற்றி யோசிக்கலாம்'' என்றார்.

வேறொரு தருணம் "வெளி உலகை முற்றிலும் துறப்பதற்கு அவசியம் என்ன? உலகாயதப் பற்றை மட்டும் துறந்து தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமலும் வாழ்க்கை நடத்தலாமே?'' என்று அறிவுறுத்தினார்."

நான் எப்போது விடுதலை பெற்று ஆன்ம சாட்சாத்காரம் பெறுவேன்?'' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "நீர் எப்போதும் ஆன்ம சொரூபியாகத்தான் உள்ளாய். மாயா வினோதம்தான் உமது அகக்கண்ணை மறைக்கிறது. இந்தக் கதை தெரியுமா? ஒரு சிங்கம் தனது குட்டியை ஈன்றுவிட்டு இறந்துவிட்டது.  தாயை இழந்த சிங்கக்குட்டி தனது உண்மையான சொரூபத்தை அறியாமல் ஆட்டு மந்தைகளோடு சேர்ந்து புல் மேய்ந்து ஓர் ஆடு போல் வாழ்ந்து வந்தது. மிருகங்களைக் கண்டு மிரண்டு ஓடுகிற ஆடுகளோடு சேர்ந்து பயந்து தானும் ஓடிக்கொண்டிருந்தது. அதன் பரிதாப நிலையை மற்றொரு சிங்கம் கவனித்தது. சிங்கக் குட்டியைப் பிடித்து ஒரு நீரோடைக்கு இழுத்துச் சென்று தண்ணீரில் அதன் உருவத்தைப் பார்க்கச் செய்தது. அதன் வாயில் சிறிது மாமிசத் துண்டைத் திணித்தது. "புல்லைத் தின்னும் ஓர் அற்ப ஆடு அல்ல நீ; என்னைப் போன்ற ஒரு சிங்கம்' என உணர வைத்தது. கர்ஜித்துத் துள்ளிக் குதித்தது சிங்கக்குட்டி. தான் சிங்கம் என உணர்ந்ததும் புல் மேய்தல், பயந்தோடுதல் போன்ற பொய்யான மனப் பிராந்திகள் சட்டென மறைந்து போயின. அதுபோல, நீர் உமது யதார்த்த சொரூபத்தை உணர்ந்ததும், பொய்யான ஆசைகள், புலன் உணர்வுகள் படுத்தும் பாடுகள் யாவும் விடுபட்டுப்போம்'' - இவ்வாறு உவமைக் கதையுடன் விளக்கினார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

"இறையுணர்வில் ஒன்றிட சமய வழிபாடுகள், சடங்குகள், ஆசார அனுஷ்டானங்கள் அவசியம் தானா? அவை யாவும் அரிசியின் உமி போன்றவை தானே?'' என்ற வினாவுக்கு விடையளிக்கையில், "ஆம்! ஆனால் உமி இல்லையேல் வயலில் நெல் விளையாது. நீ உண்பது அரிசி. விதைப்பதோ உமியோடு இழைந்த நெல்'' என்று புன்னகைத்தார் பகவான் ராமகிருஷ்ணர். தொடர்ந்து, "பலாப்பழத்தை அறுத்துப் பிசினை விலக்கிப் பலாச்சுளை எடுப்பதற்காகக் கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டியுள்ளது. முட்புதர்கள் நிறைந்த தரையில் நடக்கச் செருப்பு அணிகிறோம். அதே போன்று, அரசியல் அல்லது சமூக சேவைகளைத் தொடங்குவதற்கு முன்பாகக் கடவுளை ஆன்மார்த்தமாகக் கண் கசிந்து, நேசித்து, அவனைச் சரணடைந்த பின் காரியத்தை மேற்கொண்டால்தான் சுயநலமின்றி, லஞ்ச லாவண்யங்களை அறவே தவிர்த்து சீரிய தொண்டு புரிய முடியும்'' என்றருளினார்.

தமது குருநாதரைப் பற்றி சுவாமி விவேகானந்தர் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் பதித்துள்ளது போல், "ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் எந்தப் புதுமையான உண்மையையும் போதிக்கவில்லை; எதையும் மறுக்கவோ, அழிக்கவோ அல்லது நிறைவு செய்யவே அவர் தோன்றவில்லை. பழமை நீதிகளை புதுமெருகுப் பொலிவுடன் எளிய சொற்களில் எடுத்துரைத்துப் புரிய வைத்தார். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் பாரதத்தின் பண்டைய சமய சித்தாந்தங்களின் புறவடிவப் பிழம்பாகப் பிரகாசித்தார்''.


- லா.சு.ரங்கராஜன் 

நன்றி: தினமணி -  வெள்ளிமணி (24.02.2012 )

குறிப்பு: ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 175 வது ஜெயந்தி உற்சவம் அவரது பக்தர்களால், பிப். 22 முதல் பிப். 26 வரை, சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

காண்க: 

 
.


1.12.11

திருவண்ணாமலை வந்த காசி மகான்


யோகி ராம்சுரத்குமார்

(பிறப்பு: கார்த்திகை 15 )
(டிச. 1 )
‘கடவுளின் குழந்தை’ எனப் போற்றப்பட்டவர் யோகி ராம்சுரத்குமார். வடநாட்டில் பிறந்திருந்தாலும் திருவண்ணாமலையையே இறுதிவரை தனது வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்தவர். ஒருவரைப் பார்த்ததுமே அவர் எப்படிப்பட்டவர், அவரது ஆன்மா எத்தகைய தன்மை உடையது, அவரது அருள் நோக்கம் எவ்வாறு உள்ளது என எல்லாவற்றையுமே யாருமே கூறாமல் உணரும் திறன் பெற்ற மகா யோகி. பலரது கர்மவினைகளைத் தாம் ஏற்று அவர்களது ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவியவர்.

ஒரு முறை தெ.பொ.மீ. என அன்பர்களால் அழைக்கப்படும் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் யோகியாரைப் பார்க்க வந்திருந்தார். மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான தெ.பொ.மீ., அமெரிக்காவின் புகழ்பெற்ற மகரிஷி மகேஷ் யோகியின் மாணவர். அவரிடமிருந்து பல யோக முறைகளையும், ரகசிய தியான முறைகளையும் கற்றறிந்தவர். அளவற்ற ஆன்மீக நாட்டமுடையவர். தன் மாணவரான தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் மூலம் தெ.பொ.மீ.க்கு யோகி ராம்சுரத்குமாரின் தரிசனம் கிட்டியது. தெ.பொ.மீயைக் கண்டதுமே அவர் ஓர் உயர்ந்த ஆத்மா என்பதையும், தத்துவ அறிஞர் என்பதையும் உணர்ந்து கொண்ட யோகியார், அவரது இரு கைகளையும் அன்புடன் பிடித்துக் கொண்டு நலம் விசாரித்தார். அது முதல் அடிக்கடி யோகியாரைப் பார்க்க வந்து செல்லத் தொடங்கினார் தெ.பொ.மீ.

தெ.பொ.மீ. சில காலம் மூல வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அதனால் அதிகக் காரம், புளிப்பு உள்ள உணவுகளை அவர் உண்ணக் கூடாது என்பது மருத்துவர்களின் கட்டளையாக இருந்தது. ஒருமுறை அவர் யோகியாருடன் உணவு உட்கொள்ள நேரிட்டது. அது அதிகக் காரம் கொண்டதாக இருந்ததால் தெ.போ.மீயின் உறவினர்கள் அதனை அவர் உட்கொள்ளக் கூடாது என்றும், அது அவர் உடம்புக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தடுத்தனர். ஆனால் யோகியாரோ அதனை உண்ணுமாறும், தெ.பொ.மீ.யின் உடல்நலம் கெடாது என்றும் உறுதியளித்தார். குருநாதரின் சொல்லை மீற முடியாத தெ.பொ.மீ. காரம் மிகுந்த அந்த இட்லிகளை வழக்கத்தைவிட மிக அதிகமாகவே உண்டார். ஆனால் அன்று அவருக்கு வயிற்று வலி எதுவும் ஏற்படவில்லை.

அன்று மட்டும் அல்ல. அது முதல் என்றுமே அவருக்கு அந்த நோய் ஏற்படவில்லை. பகவானின் அருளால் முற்றிலும் நோய் நீங்கப் பெற்ற தெ.பொ.மீ., பகவானின் உன்னத ஆற்றலை உணர்ந்து அவரைத் தொழுதார். அவர்மீது அழகான பல பாடல்களைப் பாமாலையாகச் சூடினார்.

தெ.பொ.மீ. குருவை முழுமையாக சரணடைந்தார். தம் நோய் நீங்கப் பெற்றார்.  குருவருளின்றித் திருவருள் இல்லை அல்லவா?

 

11.10.11

நமது பண்பாட்டின் ஊற்றுமுகம்


வால்மீகி முனிவர்
(வால்மீகி ஜெயந்தி: புரட்டாசி- 24-பௌர்ணமி)
(அக். 11)
அன்பில் கட்டுண்ட அன்றில் பறவைகளின் துயரத்தைக் கண்டு மனமுருகிய வால்மீகி என்கிற மகரிஷியின், மகா கவிஞனின் வாக்கிலிருந்து மானிட குலத்தின் ஆதிகாவியம் நம் மண்ணில் உதித்தது.  பின்னர் அந்த தெய்வீகக் கவிதை நம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், பல்வேறு மகா கவிகளாலும், மக்களாலும் பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் பாடப் பட்டுள்ளது.
”இந்தியாவில் ஏராளமான வேறுபட்ட மொழிகள் பேசப் படுகின்றன. ஆனால் எல்லாருக்கும் புரியக் கூடிய இரண்டு மொழிகள் உண்டு – அவை ராமாயணமும், மகாபாரதமும் ஆகும்” என்று கன்னட இலக்கிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஒரு கட்டுரையில் சொல்வார். எவ்வளவு உண்மையான விஷயம்!  கவிச்சக்கரவர்த்தி கம்பன்  தமிழ் மொழியில் தனது  மகோன்னத பேரிலக்கியமான கம்பராமாயணத்தை இயற்றினான், ஆனால் அதற்கு வெகுகாலம் முன்பே தமிழகத்தில் ராமகாதை வேரூன்றியிருந்தது. பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது.
மலையாளத்தில் துஞ்சத்து எழுத்தச்சனும், அஸ்ஸாமிய மொழியில் மாதவ கந்தாலியும், வங்க மொழியில் கிருத்திவாசரும் எழுதிய ராமாயண காவியங்களும்,  தெலுங்கின் மொல்ல ராமாயணம், கன்னட தொரவே ராமாயணம் ஆகியவையும் இவ்வகையிலானவை.  பண்டிதர்களின் சம்ஸ்கிருத மொழியை விடுத்து, பொதுமக்களின் “அவதீ” மொழியில் பக்திரசம் ததும்பும் ராமசரிதமானஸ் என்ற காவியத்தை துளசிதாசர் எழுதினார்; அதற்குப் பின்னர் தான் இந்தப் பேச்சுமொழி வளர்ச்சி பெற்று, இன்று நாம் கச்சிதமான வடிவில் காணும் ஹிந்தி மொழியாயிற்று.
கம்பராமாயணத்தின்  பாயிரப் பாடல் ஒன்று மொழிகளை இணைக்கும் இராமகாதையின் இந்தப் பாங்கினை அழகாகக் கூறுகிறது -
வடகலை, தென்கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே
(வடகலை – சம்ஸ்கிருதம், தென்கலை – தமிழ், வடுகு – தெலுங்கு, பாடை – பாஷை, அடைவுடன் – பக்தியுடன்)
இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது. அயோத்தியையும், ராமேஸ்வரத்தையும், இலங்கையையும், கங்கையையும், கோதாவரியையும் உணர்வுபூர்வமாக இணைக்கும் சரடு ராமாயணத்தில் உள்ளது.  இந்தியப் பண்பாட்டின் அடிநாதமான குரல் என்று சொல்லத் தக்க ஒன்று இருக்குமானால் அது ராமாயணம் தான்.
இன்றைய இந்தியாவிற்கு வெளியே, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா என்று ஆசியக் கண்டம் முழுவதும் ராமகாதை பரவியுள்ளது. ராமகாதை பரவிய ஒவ்வொரு பகுதியிலும்  வாழும் கலாசாரத்தின் குறியீடாகவும், எண்ணற்ற பழம்பெரும் கலை வடிவங்களின் அங்கமாகவும் உள்ளது. அது மட்டுமல்ல, வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் அற நூலாகவும், வழிபாட்டுக்குரிய புனித நூலாகவும் உள்ளது.
நூற்றாண்டுகளாக ஆபிரகாமிய மதங்கள் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த போதிலும், இந்து, பௌத்த மத அடையாளங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் ஒரேயடியாக மறைந்து விட்ட போதும், இன்னும் ராமாயணம் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது என்பது சிலிர்ப்பூட்டும் விஷயம்!
- ஜடாயு
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
 காண்க:

16.8.11

அவதார புருஷர்


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
(மறைவு: ஆக. 16)
 
விவேகானந்தர் உட்பட பல சாதுக்களின் குருவாகவும், மெய்யறிவு பெற்ற ஞானியாகவும் விளங்கியவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் தட்சிணேசுவரத்தில் உள்ள காளி கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த காலம். அப்போது அவ்வாலயத்தின் நிர்வாகியாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு இருந்து வந்தார். அவர், பரமஹம்சரைக் கடவுள் அவதாரமாகவே கருதி வணங்கி வந்தார்.

ஒரு நாள் ராமகிருஷ்ணர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் தன் அறையில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே பரமஹம்சரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. நம்பமுடியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் மதுர்பாபு. ஆம், அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். மறுகோடிக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. பகவான் ராமகிருஷ்ணர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார். மதுர்பாபு அளவிலா ஆச்சரியம் அடைந்தார். தான் பார்ப்பது உண்மைதானா அல்லது கனவா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. அறைக்கு வெளியே வந்து மீண்டும் உற்றுப் பார்த்தார். அங்கே சிவனும் சக்தியும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தனர். பகவான் ராமகிருஷ்ணர் அங்கே சிவசக்தி சொரூபமாய்க் காட்சி அளித்தார்.

சற்று நேரம் கழித்து ராமகிருஷ்ணர் அறைக்குத் திரும்பியவுடன் தான் கண்ட காட்சியைப் பற்றி எடுத்துரைத்தார் மதுர்பாபு. குருதேவர் அதனை ‘ஆம்’ என்று ஒப்புக்கொள்ளவுமில்லை. ‘இல்லை’ என்று மறுக்கவுமில்லை. ‘எனக்கு ஏதும் தெரியாது!, எல்லாம் பகவான் செயல்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். தான் கண்ட உண்மையைப் பலரிடமும் கூறி ஆச்சர்யப்பட்டார் மதுர்பாபு.

‘ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்தவன் எவனோ, அவனே ராமகிருஷ்ணனாக வந்திருக்கிறான்!’ என்று விவேகானந்தருக்குத் தமது அவதார ரகசியத்தை வெளியிட்ட மகா புருஷர் அல்லவா அவர்.
 
 

20.7.11

இறைவனுக்கு நிவேதனம்

   
அன்னை சாரதா தேவி

(நினைவு: ஜூலை 20) 

எதைச்  சாப்பிட்டாலும்  முதலில்  அதை  கடவுளுக்கு  நிவேதனம்  செய்தல் வேண்டும்.   கடவுளுக்கு  அர்ப்பணம்  செய்யாத  எதையும்  உண்ணக் கூடாது.    நீ உண்ணும் உணவின் இயல்பைப் பொறுத்தே உன் இயல்பு அமைகிறது.  இறைவனுக்குப்  படைத்த உணவு,  உனது உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது. அதனால் நீ பலம் வாய்ந்தவனாக ஆவாய். மனம் தூய்மையானால், உனது அன்பும் நிர்மலமாகும்.

- அன்னை சாரதா தேவி

ஆதாரம்:   அன்னை சாரதா தேவி வாழ்வும் வாக்கும் (பக். 147)
                   ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு  


காண்க:

.

14.7.11

தெய்வீக வாழ்க்கையை உபதேசித்தவர்


சுவாமி சிவானந்தர்

(மறைவு: ஆனி 29)

(ஜூலை 14)

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து, அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம் ! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால், மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல!

மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில், அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால், இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடவில்லை. வாழ்வில், நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே, தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை, மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர்தான் சிவானந்த சரஸ்வதி.

திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடை எனும் ஊரில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த வேம்பு ஐயருக்கு, 1877ம் வருடம், செப். 8-ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. குப்புஸ்வாமி என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்த்து வந்தார், வேம்பு ஐயர். எட்டயபுரம் ராஜா உயர்நிலைப்பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி, கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.

1903-ஆம் வருடம், மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினான். பிறகு, திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, 1905ம் வருடம், தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். இந்தக் கால கட்டத்தில், அவரின் தந்தை இறந்துபோனார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே, 1913ம் வருடம், மருத்துவப் பணி செய்து சம்பாதிக்கலாம் என மலேசியா சென்றார் குப்புஸ்வாமி.  வறுமை காரணமாக வேலையில் சேர்ந்தாலும், எளியோரின் துயர் போக்கும் பணியாகவே மருத்துவத் துறையைப் பார்த்தார் அவர்.  ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து, மருத்துவமனை ஒன்றை நிர்வாகித்தார். பயனுள்ள மருத்துவ நூல்களையும் எழுதி வெளியிட்டார்.

இவரின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, லண்டனில் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ராயல் ஏஷியாடிக் கழகம் முதலான புகழ்மிக்க சங்கங்கள், அவரை உறுப்பினராக நியமித்துக் கௌரவித்தன. உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு, மக்களின் மன ஆரோக்கியம், ஆன்ம பலம் குறித்த சிந்தனை எழுந்தது. யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கினார்.

1923ம் வருடம், இந்தியா திரும்பி,  காசி,  நாசிக்,  பண்டரிபுரம்,  ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது,  கிடைத்த இடத்தில் உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை நடத்தியவர்,  ரிஷிகேஷ் தலத்தில்,  சுவாமி விஸ்வானந்த சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று, 1924-ம் வருடம் ஜூன் 1ம் தேதி,  'சுவாமி சிவானந்த சரஸ்வதி' எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.

அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய, அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு, 1927ம் வருடம், கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி, ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு, தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை, ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

வட யாத்திரையை முடித்தவர், ராமேஸ்வரம், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தார். பிறகு, மீண்டும் ரிஷிகேஷ் வந்தவர், 1934-ம் வருடம், மார்ச் மாதம், உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில், ஆனந்தக் குடிசை எனும் பொருள்படும் ஆனந்தக் குடிர் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு, மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள், புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 'தெய்வீக வாழ்க்கை சங்கம்' எனும் (THE DEVINE LIFE SOCIETY) மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது.

சுவாமி சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள்,  பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு,  உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை, மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி, பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார். 

சுவாமிகள்,  ''தன்னை அறிந்துகொண்டு  விடுதலை பெறு,  நல்லதைச் செய், அதை உடனே செய்'' எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சுவாமி சிவானந்த சரஸ்வதி,  1963ம் வருடம், ஜூலை 14-ம் தேதி (ஆனி 29)  , கங்கைக் கரையில்,  இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

நன்றி: தினமலர்

காண்க:

THE DEVINE LIFE SOCIETY

சிவானந்தர் (விக்கி)

Swami Sivananda Saraswati 
.
இயற்கை மருத்துவம்

நெல்லையின் இமயஜோதி

.

24.4.11

சேவையால் இறைவனைக் காட்டியவர்


ஸ்ரீ சத்ய பாபா

மறைவு: ஏப். 24

ஷீரடி  சத்ய சாய்பாபாவின் மறு அவதாரமாக வணங்கப்படுபவரும், மானுட சேவையால் இறைவனைக் காட்டியவருமான பகவான் சத்ய சாய்பாபா, புட்டபர்த்தியில் இன்று (ஏப். 24) இறைவனடி சேர்ந்தார். 

ஆந்திரப் பிரதேச மாநிலம், புட்டபர்த்தியில், பெத்தவெங்கமராஜு ரத்னாகரம்-  ஈச்வரம்மா தம்பதியினரின் எட்டாவது குழந்தையாக,  1926 ,  நவம்பர் 23  ல்  அவதரித்தார்,  பாபா. இயற்பெயர்: சத்யநாராயண ராஜு.

சிறு வயதிலேயே தனது அருளிச் செயல்களால் தனது அவதார மகிமையை வெளிப்படுத்திய சத்யநாராயண ராஜு, தான் ஷீரடியில் வாழ்ந்து மறைந்த பாபாவின் மறுபிறப்பே  என்று அறிவித்தார். பிறகு தனது 14  வது வயதில் (1940) சன்யாசம் பூண்டார். தனது சித்து விளையாட்டுகளால் பக்தர்களின் கவனத்தை ஈர்த்த பாபா, சத்ய சாய்பாபா என்று பெயர் பெற்றார். பாபா சிறந்த கவிஞராகவும் இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

வெறும் கைகளில் விபூதி,  கற்கண்டு,  குங்குமம், லிங்கம்,  ஸ்படிக மாலை,   மோதிரம் போன்றவற்றை  வரவழைத்து பக்தர்களுக்கு அளிப்பதன் மூலமாக பாபாவின் அற்புதங்கள் பரவின. அவரது புகழ் பரவப் பரவ,  பக்தர்கள் வட்டம் பெருகியது. பக்தர்களின் நோய்களைப் போக்கியது, குறைகளைக் களைந்தது உள்ளிட்ட அற்புதங்களால் அவரை கடவுள் அவதாரமாகவே சாயி பக்தர்கள் கொண்டாடத் துவங்கினர். 1944  ல் புட்டபர்த்தியில் சாயி பக்தர்கள் அவருக்கு கோயில் எழுப்பினர். பாபாவின்  தலைமையகமான  பிரசாந்தி நிலையம் 1948  ல் கட்டப்பட்டு 1950 ல் நிறைவடைந்தது. அந்த இடம் நூறு ஏக்கர் பரப்பளவில் சாயி பக்தர்களின் தலைமையகமாக விளங்கி வருகிறது.

தேசம் முழுவதும் தீர்த்தாடனம் செய்த பாபா, உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று ஆன்மிகத்தை பரப்பினார். ஆன்மிக உபதேசங்கள் மட்டுமல்லாது, பக்தர்கள் கொடுத்த காணிக்கை மூலமாக மக்கள் சேவையிலும் பாபா ஈடுபட்டார். அதன்மூலமாக அரசு செய்ய இயலாத உள்கட்டமைப்பு வசதிகளையும் கூட பல பகுதிகளில் செய்து கொடுத்தார். பாபாவால் மேன்மையுற்ற அவரது பக்தர்கள் தாமாக முன்வந்து பல சேவைப்பணிகளைத் துவங்கினர்.

அன்பே சிவம் என்பதே பாபாவின் பிரதான கொள்கை. மானுட சேவையே இறைவனை அடையும் மார்க்கம் என்று அவர் உபதேசித்தார். இன்று பாபாவும்  அவரது  பக்தகோடிகளும்   பலநூறு சேவைப்பணிகளை ஆரவாரமின்றி நடத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் 137  நாடுகளில்,   கோடிக் கணக்கான பக்தர்கள் உள்ளனர். 114  நாடுகளில் சத்யசாயி சேவை நிறுவனம் இயங்குகிறது. 

உலகெங்கும் இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போதெல்லாம் சாயி பக்தர்கள்  துயர்  துடைப்புப் பணிகளில் முன்னிற்கின்றனர். தன் மீதான பக்தியை மானுட சேவைக்கான வாய்ப்பாக உருமாற்றியவர் சாய்பாபா.

கல்வி, மருத்துவம், சேவை, சமூக மறுமலர்ச்சி, ஆன்மிகம், வளர்ச்சி பணிகள்  என்று பாபாவின் சேவைப்பணிகள் விரிந்து பரந்தவை. கீழ் ஆந்திராவின் அனந்தப்பூர், வடக்கு- கிழக்கு கோதாவரி மாவட்டங்களிலுள்ள  500 க்கு    மேற்பட்ட கிராமங்களுக்கும் (1996 - எல் அண்ட் டி திட்டம்) , தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கும் (2004 - தெலுங்கு கங்கை திட்டம்)  குடிநீர் வழங்கும்   பிரமாண்ட  திட்டங்களை நிறைவேற்றியது பாபாவின் சாதனையாகப் போற்றப்படுகிறது. புட்டபர்த்தியிலுள்ள பாபா நிறுவிய அதிநவீன மருத்துமனை ஏழை மக்களின் உயிர் காக்கும் மையமாகத் திகழ்கிறது.  அரிய அறுவை சிகிச்சைகள்  இங்கு இலவசமாக அளிக்கப்படுகின்றன.

பாபாவின் அருள்மொழிகள் எண்ணற்ற மொழிகளில் பலநூறு தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அத்வைதமே பாபாவின் அடிப்படி ஆன்மிகம் ஆகும்.  அனைத்து மதங்களும்   இறைவனை அடைபவையே என்பதும் பாபாவின் அருள்மொழி.

சத்யசாயி சேவா சமிதியின் இலச்சினையில் உலக மதங்கள் அனைத்தின் சின்னமும் இடம் பெற்றுள்ளன. ''அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய்; எல்லோருக்கும் உதவு; யாரையும் வெறுக்காதே'' - இதுவே பகவான் சத்ய சாய்பாபாவின் தாரக மந்திரம்.

அனைத்து அரசியல் தலைவர்களும் சாய்பாபாவின் அருளாசி வேண்டி புட்டபர்த்தி படை எடுத்தனர். உலகப் புகழ் பெற்ற தலைவர்களும் பிரபலங்களும் அவர் காலடியில் கண்ணீர் மல்க தவம் கிடந்தனர். ஆனால் அவரோ, ஏழை மக்களின் நல்வாழ்விற்கான சேவைப்பணிகளில்  தனது பக்தர்களை  அமைதியாக ஈடுபடுத்தியவாறு கர்மயோகியாக வாழ்ந்தார்.

எனினும் மானிட  அவதாரத்திற்கே உரித்த  இறுதிநாள் பாபாவிற்கும் வந்துவிட்டது. உடல்நலக் குறைவால் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த பகவான் சத்ய சாய்பாபா, இன்று (2011, ஏப். 24) காலப்பெருவெளியில்   ஐக்கியமானார்.

இன்று நம்முடன் சத்ய சாய்பாபா உயிருடன் இல்லை. ஆயினும் அவர் அருளிய பொன்மொழிகள் நமக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும். அவரது சேவைப்பணிகள் உலகம் உள்ளவரை மானுட உயர்வுக்கு உதவும். அவரது வாழ்வு என்றும் நமக்கு உந்துசக்தியாக இருந்து நம்மை ஊக்குவிக்கும். பாபாவின் சித்து ஆற்றல் அவரது பக்தர்களுக்கு மன தைரியத்தையும், இழப்பிலிருந்து முன்னேறும் ஆற்றலையும் அளிக்கட்டும்.

பாபாவின் ஆன்மா எல்லையற்ற பரம்பொருளில் ஒன்றட்டும். அவரது அருளாசி உலகை வழிநடத்த தேசிய சிந்தனைக் கழகம் பிரார்த்திக்கிறது.

-குழலேந்தி

காண்க:




.

18.2.11

விவேகானந்தரின் குரு


ஸ்ரீ  ராமகிருஷ்ண பரமஹம்சர்

பிறப்பு: பிப். 18

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பிப். 18, 1836 - ஆக. 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் கதாதர் சாட்டர்ஜி 19ம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனை துளிகள்

ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை.

இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையனுபூதி பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழ வேண்டும். உலக வாழ்க்கையில் இருப்பவர்கள் பலவிதமான கடமைகளால், ஆசைகளால், சூழப்பட்டிருக்கிறார்கள்; அதிலும் சாதனையின் ஆரம்ப காலத்தில் இருப்பவர்கள் பலவிதமான தடைகளைச் சந்திக்க
வேண்டியவர்களாகிறார்கள். அதனால் அவர்களின் கவனம் சிதறுகிறது

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை ஒன்று

குரு ஒருவரை, அவருடைய சிஷ்யன் கேட்டான், "குருவே, இறைவனைக் காணும் வழியை எனக்குச் சொல்லுங்கள்", என்று.

அவரும், "என்னுடன் வா, காட்டுகிறேன்", என்று கூறி, அந்த சிஷ்யனை அருகிலிருந்த ஒரு ஏரிக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் தண்ணீரில் இறங்கினர். திடீரென்று, குருவானவர், சிஷ்யனின்
தலையைப் பிடித்துத் தண்ணீருக்குள் அமிழ்த்தினார். சில நிமிடங்கள் கழித்துதான் அவனை விடுவித்தார். மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சிஷ்யன், ஒருவழியாக விடுபட்டு எழுந்து நின்றான்.

"எப்படி இருந்தது?", என்று குரு கேட்டார்.

"என்னால் மூச்சே விட முடியவில்லை. தவித்துப் போய் விட்டேன். செத்து விடுவேன் என்றே நினைத்தேன்", என்றான் சிஷ்யன்.

"இதைப் போலவே சுவாசத்தை இழந்தாற்போல இறைவனுக்காக எப்போது தவிக்கிறாயோ, அப்போது அவனைக் காண்பாய்", என்றார், குரு.


காண்க:


கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னோடி



ஸ்ரீ சைதன்ய 
மகா பிரபு

பிறப்பு: பிப். 18 

1486 ஆம் ஆண்டு,  மாசி மாத பௌர்ணமி தினத்தில் (பிப். 18 ) மேற்கு வங்காளத்தில் உள்ள நவதீப் என்ற இடத்தில் சைதன்ய மகாபிரபு பிறந்தார். ஆன்மீகவாதியான ஜகன்நாத் மிஸ்ரா - சாக் ஷி தேவிக்கு மகனாக பிறந்தார் . சைதன்யாவின் முதல் சகோதரர் விஸ்வரூப் சன்யாசம் வாங்கிக் கொண்டார் . சைதன்ய மகாபிரபு குழந்தைப் பருவத்தில் விச்வாம்பர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . அவரை மக்கள் செல்லமாக நிமாய் என்றும் அழைத்தார்கள் .

குழந்தைப் பருவத்தில் அவர் படிப்பில் மிகவும் புத்திசாலியாக இருந்தார். அவர் 12 வது வயதில் சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றார் . அப்போது தான் அவருடைய தந்தை மரணம் அடைந்தார். அதன் பிறகு அவர் பண்டித் வல்லபாசாராவிடம் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக் கொண்டார் . அந்தச் சமயத்தில் தன்னுடைய குருவின் மகளான லக்ஷ்மியை மணந்து கொண்டார் . சைதன்ய மகாபிரபு தன்னுடையவயிற்றுப் பிழைப்பிற்காக ஒரு சம்ஸ்கிருத பாடசாலையைத் தொடங்கினார் . அந்தப் பாடசாலை நாளடைவில் வளர்ச்சி பெற்றதால் சைதன்யா அந்தப் பாடசாலை மீது முழு கவனத்தை செலுத்தினார் . குடும்பத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளாததால் அவருடைய மனைவி லக்ஷ்மி திடீரென்று மரணமடைந்தார் .

தன்னுடைய அன்னையின் வற்புறுத்தலால் மீண்டும் சைதன்யா விஷ்ணுப்ரியா என்பவரை மணந்து கொண்டார் . ஒரு சமயம் சைதன்யா காயா சென்ற போது மாபெரும் தபஸ்வியைசந்தித்தார். அவரிடமிருந்து மந்திரங்களைக் கற்று கொண்டார் . இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது சைதன்யாவிடம் மாற்றங்கள் தோன்றின . அவர் நீண்ட நேரம் தியானம் செய்யத் தொடங்கினார் .

சைதன்யா அனுதினமும் கிருஷ்ண பரமாத்மாவை நினைத்து, அவர்மீது மோகம் கொண்டு பக்தி கானங்கள் பாடினார் . 1510 ஆம் ஆண்டில் சைதன்யா சந்நியாசம் எடுத்துக் கொண்டார் . பதினெட்டு வருடங்களுக்கு சைதன்யா ஜகன்நாத்பூரியில் தஞ்சமடைந்தார் . ஒரு நாள் ஜகன்நாதர் சின்ன மூர்த்தியை அரவணைத்துக் கொண்டிருந்த போது அவருடைய ஆத்மா பிரிந்து , அந்தச் சின்ன மூர்த்தியோடு கலந்தது .

ராதா - கிருஷ்ண மீது பல பாடல்களை இயற்றிய சைதன்ய மகாபிரபு என்றும் நம்முடைய நினைவில் இருந்துகொண்டே இருக்கிறார்.


காண்க:

17.1.11

கடவுளுக்கு கண் தந்தவர்


கண்ணப்ப நாயனார்

திரு நட்சத்திரம்:
தை - 3 - மிருகசீரிஷம்
(ஜன. 17)

திண்ணன் எனும் வேடன் காளஹஸ்தி மலைக்காடுகளில் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு நாள் வேட்டையாடச் சென்றபோது ஒரு சிவலிங்கத்தைக் கண்டான்.  முன் ஜென்ம புண்ணிய வசத்தால் அந்த லிங்கத் திருமேனியின் மீது ஆறாக் காதல் கொண்டான். தன் வாயில் முகந்து வந்த நீரால் அவருக்கு அபிஷேகம்  செய்து, வாசனையற்ற காட்டுப் பூக்களால் அலங்கரித்து, தான் வேட்டையாடிய இறைச்சியை நிவேதித்து வந்தான். 

அவனை சோதிக்க எண்ணிய ஈசன் தன்  வலக்கண்ணிலிருந்து ரத்தத்தை வழியச் செய்ய, அதைக் கண்டு பதைத்த திண்ணன் தன் வலக்கண்ணை பெயர்த்து அந்த லிங்கத் திருமேனியில் வைத்தான்.  ஈசன் தன் இடக் கண்ணிலிருந்து ரத்தம் வரவழைக்க திண்ணன் அடையாளத்திற்காக தன் காலை லிங்கத்தின் கண் இருக்கும் இடத்தில் வைத்து தன் இடது  கண்ணைப் பெயர்க்க முற்பட்டபோது ஈசன், ‘நில்லு கண்ணப்ப’ என மும்முறை கூறி ஆட்கொண்டார். அவரே கண்ணப்ப நாயனார் ஆனார். 


இறைவனுக்கு வேடனும் ஒன்றுதான், உயர்  குலத்தவனும் ஒன்றுதான். இறைவனுக்கு வேடன் சமர்ப்பித்த இறைச்சியும் ஒன்றுதான், மடப்பள்ளியில் சமைத்த அன்னமும் ஒன்றுதான். இதனையே கண்ணப்ப நாயனார் சரிதம் காட்டுகிறது. உள்ளன்பால் இறைவனை உணர்ந்து பக்தி செலுத்துபவர்களுக்கு இறைவன் மிக நெருக்கமாகி விடுகிறான் என்பதும் கண்ணப்பர் காட்டும் உண்மை.

 நன்றி: தினகரன்.

காண்க:
கண்ணப்ப நாயனார் (விக்கி)
கண்ணப்ப நாயனார் புராணம்
திருத்தொண்டர் புராணம்
பெரியபுராணச் சொற்பொழிவு
கண்ணப்பர் (தமிழ்வு)
KANNAPPA NAYANAR
பெரிய புராணம் (திண்ணை)
உடுப்பூர்: கண்ணப்பர் அவதாரத் தலம்
கண்ணப்பர் (ஹோலி இந்தியா)
திருக்காளத்தி
காலனி அணிந்த பக்தன்
.

15.11.10

இறைவனையே தன்னிடம் அழைத்தவர்



பக்த கனகதாசர்
கனகதாசர் ஜெயந்தி:
ஐப்பசி 29 (நவ. 15 )


கண்ணபிரானை முழுமுதற் கடவுளாக கொண்டு, தமிழகத்தில் பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடி பத மலர் போற்றி பரவசமடைந்துள்ளனர். அதுபோல் சிவபிரானையும் போற்றி, புகழ்ந்து வழிபட வழிகாட்டிய மகான்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். அதுபோல் குரும்பர் குலக்  கோமான் கனகதாசரும் தலைசிறந்த இறையடியவராக இன்றளவும் போற்றப்படுகிறார்.

இவர்,  400 ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவின்   துங்கபத்திர நதிக்கரையும் ஆணைகெந்தி சமஸ்தானத்தைச்  சார்ந்த சிற்றரசர் பீரேகவுடா- பத்தியம்மையார் தம்பதிக்கு திருப்பதி வெங்கடேசப்பெருமாள் அருளால் காகிநிலை எனும் ஊரில் அவதரித்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் திம்மப்பன். அவர் பிறந்த பின் பொன், பொருள், தனம், தான்யம் பெருமளவில் சேர்ந்தபடியால் அவர் கனகன் (தங்கம்) என்று செல்லப்பெயரில் அழைக்கப்பட்டார்.

அவர் ஐந்து வயதில் தந்தையை இழந்தார். 16ம் வயதில் ஆணைகெந்தி அரசருடைய பிரபுவாய் பங்காபுரத்து அரசரானார். கனகன் தெய்வாம்சமாகப்  பிறந்தவராதலால் தர்மம் செய்து மக்களை தன் பிள்ளைகளைப் போல் பாவித்தார். அவருக்கு கனகப்பதுரை, கனகப்பநாயக்கர் என்ற பெயரும் வழங்கப்பட்டது.

அவர் நெடுங்காலம் அரசராக இருந்து சுகபோகங்களிலும் மூழ்கியும் இருந்தார். ஒருநாள் இரவில் வெங்கடேச பெருமாள் அடியவர் உருவில் வந்து நிலையற்ற போகங்களைத்   தவிர்த்து நிலையான பக்தி மேலிட ஆணையிட்டார். அதனால், அரசபோகத்தை தொடர்ந்து பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டு துறவு நிலையில் உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்குள் வழிபட நுழைந்தார்.

அவரை கோவிலுக்குள் செல்லவிடாமல் தவிர்த்து சிலரால் வெளியே தள்ளப்பட்டார்.  அப்போது கோவில் பிரகாரத்தின் பின்புறமாக வந்து ஒரு பாடலைப் பாடினார். கோவில் சுற்றுச்சுவர் இடிந்து இறைவன் ஒரு பக்கம் திரும்பி காட்சி அளித்தார். அதனை கண்ட அனைவரும், இவரைப் போற்றிப் புகழ்ந்தனர். அதுமுதல் இவரது புகழ் நாடெங்கும் பரவியது. சுவர் இடிந்த இன்றளவும் 'கனகன் திட்டிவாசல்', 'கனக கிண்டி' என அழைக்கப்படுகிறது.

அவர் தமிழகத்தில் வாழ்ந்த பட்டிணத்தாரை போல் ஞானியாகவும், பக்திப் பாடல்கள் பலவும் பாடியுள்ளார். பள்ளிப் பாடங்களிலும் ஆன்மீகத்  துறையிலும் இப்பாடல்கள இடம் பெற்றுள்ளன. அவர் பாடல்களை அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து, ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.  அவரது   பாடலிலேயே, தான் ஒரு சாரணமான குரும்பா எனக் கூறும் பாடல்களும் சில உண்டு. காளிதாசர் போன்று குரும்பா இனத்துக்கு பெருமையளிக்கும் இச்சான்றோர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். 

கர்நாடக இசைக் கீர்த்தனைகளை வழங்கிய முன்னோடிகளில் கனகதாசர் முக்கியமானவர். இறைவனுக்கு முன் ஜாதி வேற்றுமைகள் நில்லாது என்பதையும் இவரது வாழ்விலிருந்து காண்கிறோம்.

நன்றி: தினமலர்

--------------------------
காண்க:
Kanagadasa 
யமதவம்  புரிந்த ஞானி (தமிழ் ஹிந்து)
தாசர் வாழ்வில்
சித்திரக்கதை (ராமகிருஷ்ண விஜயம்)
கவி பாடிய கன்னட நந்தனார் - ஜடாயு