நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
கர்நாடக இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கர்நாடக இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11.10.11

நாடக மேடையில் ஒலித்த விடுதலைக்குரல்


கே.பி.சுந்தராம்பாள்

(பிறப்பு: அக். 11)



கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், அக்கிரம ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். அந்நியர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.


நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர். சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உணர்வையும் ஊட்டினார். 1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும்.

‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளி மைதானமாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்ட மைதானம், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.

கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.

 
காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடியோ பரமஏழை’ என பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. காந்தியடிகளைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்....

முழு கட்டுரையைக் காண்க:  ஆம்பல்

 

காண்க:


கே.பி.சுந்தராம்பாள் (விக்கி)

K.B.SUNDARAMBAL


கொடுமுடிக்குயில்  (கீற்று)

கே..பி.எஸ். (ஈகரை)

நாடக உலகின் ராணி (மாலைமலர்)

கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் (நட்பு)

கே.பி.எஸ்.சை மாற்றிய மகாத்மா சந்திப்பு (தினமலர்)

கருணாநிதி வசனத்தை  எதிர்த்த கே.பி.எஸ் (முருகன்.org)

கானக்குயில் (தமிழ்நாட்டு தியாகிகள்)

கே.பி.எஸ் பாடல்கள் (ஒலி)

24.1.11

இசையால் ராமனுடன் கலந்தவர்

 தியாகராஜ சுவாமிகள் 
ஆராதனை நாள்: ஜன. 24 


இசைக்கலையில் உச்சநிலையாக கர்நாடக சங்கீதம் விளங்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் மூலம் இறைவழிபாட்டில் சிறப்புத் தன்மையை ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர்,  புரந்தரதாசர், மீராபாய், கபீர்தாஸ், குருநானக் போன்ற மகான்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களை நாதயோகிகள் என்பார்கள். இவர்களுள் முதன்மையானவர் என போற்றப்படுபவர் சங்கீத ஜோதி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். 

1759 முதல் 1847 வரை உள்ள 88 ஆண்டுகளை தியாகராஜ சாகாப்தம் என்று அழைப்பது பொருத்தமானதாக இருக்கும். திருவாரூரில் ராமபிரும்மம் என்பவருக்கும், சாந்தாதேவியாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் தியாகராஜர். இவர்கள் மூலகநாடு திரைலிங்க தெலுங்கு பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். இவருக்கு ஜப்யேசன், ராமநாதன் என்ற சகோதரர்கள் இருந்தனர்.  இவரது தந்தை சிவ, விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு, திவ்யநாத பஜனை செய்துவந்தார். 

திருவாரூரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தியாகராஜர் தனது ஆரம்பக்கல்வியை பயின்றார். பிறகு பெற்றோருடன் திருவையாறு சென்றுவிட்டார். 8ம் வயதில் உபநயனம் செய்வித்தபோது, காயத்ரியுடன், ராமதாரக மந்திரத்தையும் தன் தந்தையிடம் உபதேசம் பெற்றார். தன் தந்தை வைத்திருந்த ராமவிக்ரகத்திற்கு அன்றுமுதல் பூஜை செய்ய ஆரம்பித்தார். ராமகிருஷ்ணானந்தரிடம் உபதேசம் பெற்ற ராம சடாட்சரி மந்திரத்தை லட்சக்கணக்கில் ஜபம் செய்தார். இவரது தந்தையார் பரமபாகவதர். சங்கீதம் அவரது ரத்தத்தில் ஊறி இருந்தது. சிறு வயதிலேயே தியாகராஜரும் இசைத்திறமை கொண்டவராக விளங்கினார். இனிமையான குரலும் கைகொடுத்தது. தன் தாயாரிடம் ராமதாசர் மற்றும் புரந்தரதாசரின் கீர்த்தனைகளை கற்றார். 

திருவையாற்றில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார். வால்மீகி ராமாயணத்தை படிக்கப்படிக்க, ராமபக்தியில் மூழ்கி, ராம சைதன்யர் ஆனார். ஜோதிடமும் கற்றார்.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி சங்கீதத்தில் ஈடுபாடு உள்ளவர். அவரது அரசசபை வித்வானான ஸொண்டி வெங்கட ரமணய்யாவிடம் தியாகராஜர் சங்கீதம் கற்றார். அரசசபையில் பல பாட்டுக்களை பாடி பாராட்டு பெற்றார். அவர் பாடிய முதல் பாட்டு நமோ நமோ ராகவாய அதிசம் என்பதாகும். 

தியாகராஜர் தினமும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ராம நாமம் சொல்லி 38ம் வயதிற்குள் 96 கோடி ராம ஜபம் உருவேற்றினார். தனது 38ம் வயதின் கடைசி நாளில் உள்ளம் உருகி ஸ்ரீ ராமனை பாடும்போது கதவு தட்டிய சப்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது ராம லட்சுமணர்கள் விஸ்வாமித்திரர் நடத்திய யாகத்திற்கு செல்வது போன்ற காட்சியை கண்டார். அப்போது பாடியதுதான் 'ஏல நீ தயராது' என்று புகழ் பெற்ற பாடல். 

தியாகராஜர் முதலில் பார்வதி அம்மையாரை மணந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதால் அவரது தங்கையான கமலாம்பாள் என்ற உத்தமியை மணந்தார். இவர்களுக்கு சீதாலட்சுமி என்ற பெண் பிறந்தார். தியாகராஜரின் தந்தை இறக்கும் தருவாயில் மகனை அருகில் அழைத்து, ஸ்ரீ ராமமூத்தியை எப்போதும் பாடு என்று கட்டளையிட்டார். தந்தை இறந்தபிறகு தியாகராஜரின் சகோதரர்களுக்கு தம்பியின் பாட்டும் பக்தியும் பைத்தியக்காதரத்தனமாக தோன்றவே, அவரை ஊர் கோடியில் இருந்த கூரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் சொத்துக்களை அவர்களே எடுத்துக் கொண்டனர். 

தியாகராஜர் தனது தந்தை பூஜை செய்த ராம விக்ரகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த சிறிய வீட்டில் ராமனை கொலுவிருக்கச் செய்தார். சதா ராம நாமமும், ராம கானமுமாகவே வாழ்ந்து வந்தார். தினமும் உஞ்சவிருத்தி  செய்து, அதில் வரும் வருமானத்தைக்கொண்டு ஜீவித்து வந்தார். பல சீடர்கள் அவரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டனர். யாரிடமும் எதுவும் அவர் பெற்றுக்கொண்டதில்லை. தனது சீடர்களுடன் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்களைக் கொண்டாடுவார். ஒரு சமயம் ஒரு சிஷ்யன் தவறு செய்த போது, அவனை கோபித்துக்கொண்டார். ஆனால் அவரது மனைவியோ கோபத்தினால் ஏற்படும் தீமையை எடுத்துக்கூறி சாந்தப்படுத்தினார். அப்போது தன் தவறை உணர்ந்து அவர் பாடிய பாட்டு தான் 'சாந்தமுலேக சவுக்கியமுலேது' (சாந்தம் இல்லாமல் சவுக்கியம் இல்லை).

முதலில் ராமனை மட்டுமே பாடி வந்த தியாகராஜர், சிவபக்தையான அவரது மனைவியின் அறிவுரையை ஏற்று, மற்ற தெய்வங்களைப்பற்றியும் பாடலானார். சம்போ மஹாதேவ, சிவேபாஹிமாம் என்ற பாடல்கள் அதற்கு உதாரணமாகும். தியாகராஜரின் மகிமையும், கானச்சிறப்பும் நாடெங்கும் பரவியது. பலர் அவரை புகழ்ந்தாலும், பொறாமைக்காரர்களான அவரது சகோதரர்களுக்கு, அவர் புகழும், பெருமையும் பெறுவது சங்கடத்தைக் கொடுத்தது. மூத்த சகோதரர் ஜப்சேயன் அவர் எழுதிய பாட்டு புத்தகங்களை தீயிட்டு கொளுத்தி விட்டார். ஏராளமான கீர்த்தனைகள் அதனால் மறைந்துவிட்டன.  அவரது வீட்டிற்குள் புகுந்து ராம விக்ரகத்தை திருடிக்கொண்டு போய் காவிரியில் போட்டுவிட்டார். ராம விக்ரகத்தை காணாமல் தியாகராஜர் திகைத்து உள்ளம் உருகி அற்புதமான கீர்த்தனங்களால், ஸ்ரீ ராமனிடமே தன் வருத்தத்தை முறையிட்டார். 'அநியாய முஸேயகுரா ரானிது ராது' என்ற பாடல் அப்போது பாடப்பட்டது. அன்ன பானம் இல்லாமல் உறங்காமல் துடித்தார். 

ஒருநாள் கனவில் ஸ்ரீராமன் தோன்றி ஆற்று மணலில் தான் புதைந்திருக்கும் இடத்தை சொல்லி மறைந்தார். விக்ரகம் கிடைத்த ஆனந்தத்தில், தொரிகிதிவோ (நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) ரகுவீர, ரணதீர என்ற பாடல்களால் ராமனை ஆராதித்தார். சரபோஜி மன்னர் தன்னை புகழ்ந்து பாட வேண்டும் என நிறைய பணத்துடன் ஒரு அதிகாரியை அனுப்பினார். அரசரின் அழைப்பை நிராகரித்து இறைவனைத் தவிர வேறு யாரையும் பாடமாட்டேன் என சொல்லி அவர்பாடிய சிறப்பான பாடல்தான் 'நிதிசால சுகமா ? ராமுனி சந்நிதி ஸேவசுகமா?' என்பதாகும். பிறகு சரபோஜி மன்னர் மாறுவேடத்தில் வந்து மற்றவர்களுடன் அமர்ந்து அவரது பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். திருவிதாங்கூர் மன்னரான சுவாதி திருநாள் மகாராஜா தியாகராஜரை அழைத்ததும் செல்ல மறுத்து விட்டார். 

பின்பு தியாகராஜர் திருப்பதி, காஞ்சி, மதுரை ஆகிய சேத்திரங்களுக்கு சென்று பாடினார். திருப்பதியில் திரை போட்டு மறைந்திருந்த பெருமாளைப்பற்றி ஒரு பெண்ணின் கணவனை கீர்த்தனை பாடி உயிர்பெறச் செய்தார். மனைவி இறந்தவுடன் பற்றற்ற துறவியாக வாழ்ந்த தியாகராஜர் (1857) பகுளபஞ்சமி தினத்தன்று பஜனை பாட்டுகளை கேட்டுக்கொண்டே நாதஜோதியாக மாறி இறைவனுடன் கலந்தார். அவர் சொல்லியபடி 60 ஆண்டுகள் கழித்து அவரது கீர்த்தனைகள் புகழ்பெற்றன. 

1925ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர் தியாகராஜருக்காக  திருவையாற்றில் கட்டிய சமாதியில் இன்றும் தியாகராஜ ஆராதனை ஒரு தூய கலைவிழாவாக சிறப்புடன் நடக்கிறது. இசையின் நோக்கம் பக்தியை வளர்க்கவே என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் சத்குரு தியாகராஜ சுவாமிகள். இந்த ஆண்டு 164  வது ஆராதனை நடக்கிறது. 

காண்க:
தியாகராஜர் (விக்கி)
தியாகராஜர் (தினமலர் )
தியாகராஜ சுவாமிகள் வரலாறு (பாரதி பயிலகம்)

















15.11.10

இறைவனையே தன்னிடம் அழைத்தவர்



பக்த கனகதாசர்
கனகதாசர் ஜெயந்தி:
ஐப்பசி 29 (நவ. 15 )


கண்ணபிரானை முழுமுதற் கடவுளாக கொண்டு, தமிழகத்தில் பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடி பத மலர் போற்றி பரவசமடைந்துள்ளனர். அதுபோல் சிவபிரானையும் போற்றி, புகழ்ந்து வழிபட வழிகாட்டிய மகான்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். அதுபோல் குரும்பர் குலக்  கோமான் கனகதாசரும் தலைசிறந்த இறையடியவராக இன்றளவும் போற்றப்படுகிறார்.

இவர்,  400 ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவின்   துங்கபத்திர நதிக்கரையும் ஆணைகெந்தி சமஸ்தானத்தைச்  சார்ந்த சிற்றரசர் பீரேகவுடா- பத்தியம்மையார் தம்பதிக்கு திருப்பதி வெங்கடேசப்பெருமாள் அருளால் காகிநிலை எனும் ஊரில் அவதரித்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் திம்மப்பன். அவர் பிறந்த பின் பொன், பொருள், தனம், தான்யம் பெருமளவில் சேர்ந்தபடியால் அவர் கனகன் (தங்கம்) என்று செல்லப்பெயரில் அழைக்கப்பட்டார்.

அவர் ஐந்து வயதில் தந்தையை இழந்தார். 16ம் வயதில் ஆணைகெந்தி அரசருடைய பிரபுவாய் பங்காபுரத்து அரசரானார். கனகன் தெய்வாம்சமாகப்  பிறந்தவராதலால் தர்மம் செய்து மக்களை தன் பிள்ளைகளைப் போல் பாவித்தார். அவருக்கு கனகப்பதுரை, கனகப்பநாயக்கர் என்ற பெயரும் வழங்கப்பட்டது.

அவர் நெடுங்காலம் அரசராக இருந்து சுகபோகங்களிலும் மூழ்கியும் இருந்தார். ஒருநாள் இரவில் வெங்கடேச பெருமாள் அடியவர் உருவில் வந்து நிலையற்ற போகங்களைத்   தவிர்த்து நிலையான பக்தி மேலிட ஆணையிட்டார். அதனால், அரசபோகத்தை தொடர்ந்து பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டு துறவு நிலையில் உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்குள் வழிபட நுழைந்தார்.

அவரை கோவிலுக்குள் செல்லவிடாமல் தவிர்த்து சிலரால் வெளியே தள்ளப்பட்டார்.  அப்போது கோவில் பிரகாரத்தின் பின்புறமாக வந்து ஒரு பாடலைப் பாடினார். கோவில் சுற்றுச்சுவர் இடிந்து இறைவன் ஒரு பக்கம் திரும்பி காட்சி அளித்தார். அதனை கண்ட அனைவரும், இவரைப் போற்றிப் புகழ்ந்தனர். அதுமுதல் இவரது புகழ் நாடெங்கும் பரவியது. சுவர் இடிந்த இன்றளவும் 'கனகன் திட்டிவாசல்', 'கனக கிண்டி' என அழைக்கப்படுகிறது.

அவர் தமிழகத்தில் வாழ்ந்த பட்டிணத்தாரை போல் ஞானியாகவும், பக்திப் பாடல்கள் பலவும் பாடியுள்ளார். பள்ளிப் பாடங்களிலும் ஆன்மீகத்  துறையிலும் இப்பாடல்கள இடம் பெற்றுள்ளன. அவர் பாடல்களை அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து, ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.  அவரது   பாடலிலேயே, தான் ஒரு சாரணமான குரும்பா எனக் கூறும் பாடல்களும் சில உண்டு. காளிதாசர் போன்று குரும்பா இனத்துக்கு பெருமையளிக்கும் இச்சான்றோர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். 

கர்நாடக இசைக் கீர்த்தனைகளை வழங்கிய முன்னோடிகளில் கனகதாசர் முக்கியமானவர். இறைவனுக்கு முன் ஜாதி வேற்றுமைகள் நில்லாது என்பதையும் இவரது வாழ்விலிருந்து காண்கிறோம்.

நன்றி: தினமலர்

--------------------------
காண்க:
Kanagadasa 
யமதவம்  புரிந்த ஞானி (தமிழ் ஹிந்து)
தாசர் வாழ்வில்
சித்திரக்கதை (ராமகிருஷ்ண விஜயம்)
கவி பாடிய கன்னட நந்தனார் - ஜடாயு