நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
அரசியல் தலைவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் தலைவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.7.14

இப்படியும் இருந்தார்கள்...

 
கோபிநாத் பர்தோலாய் (06.06.1890 - 05.08.1950)

ஆகஸ்ட் 5, 1950. அப்போது பிரிக்கப்படாத அசாம் மாநில முதல்வர் கோபிநாத் பர்தோலாய் 60-ம் வயதில் திடீரென உயிர் நீத்தார். மாநில ஆளுநர் ஜயராம்தாஸ் தௌலத்ராம் துக்கம் விசாரிக்க அவரது வீட்டிற்குச் சென்றார்.

கட்டிட வேலைகள் பாதியிலேயே நிற்கின்ற வீடு. பர்தோலாய்க்கு ஐந்து மகள்கள். நான்கு மகன்கள். மூத்த இரு மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மீதமுள்ள மகள்களும் கடைசி மகனைத் தவிர மற்ற மகன்களும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்றுகொண்டிருந்தார்கள். கடைசி மகன் இனிமேல்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஒரு விதவைத் தங்கையும் மற்ற மூன்று சகோதரர்களும் ஒன்றாக வசிக்கும் கூட்டுக் குடும்பம். பர்தோலாய் இறக்கும்போது அவரிடம் எந்தவிதச் சேமிப்பும் இல்லை. துக்கம் விசாரிக்க வந்த ஆளுநர் மெதுவாகத் துக்கத்தில் ஆழ்ந்திருந்த சகோதரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட தகவல் இது. அவரது இறுதிச் சடங்குகளுக்குக்கூடப் போதிய பணம் இல்லாத நிலை.

2.2.13

மனித ஆன்ம உணர்வே சக்திவாய்ந்தது

-டாக்டர்  ராதாகிருஷ்ணன்


காந்திஜியின் பெயரை நாம் உதட்டில் கொண்டிருக்கிறோம், ஆனால் உள்ளத்தில் கொள்ளவில்லை. எந்தக் காரியத்திற்கும் அவர் பெயரைப் பயன்படுத்த நாம் தவறுவதில்லை. ஆனால் குறிப்பிட்ட நிலைமைகளில், சூழ்நிலையில், அவர் எப்படி நடந்திருப்பார் என்பது பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

  அவர் தம் நாட்டின் மீது மட்டும் பற்றுக் கொண்டிருக்கவில்லை. ஒட்டுமொத்த மனித இனத்திடமே அன்புகொண்டிருந்தார் என்பது தான் அவர் வாழ்வின் சிறப்பான அம்சம்.

  இருள் சூழ்ந்த உலகில், சத்தியம், அன்பு ஆகிய குறிக்கோள்களைப் போற்றி ஒளி வீசிய உயிர்ச் சோதியாய் அவர் விளங்கினார்.

 தம்மைச் சுற்றியிருந்த சூழ்நிலைச் சார்புகளை எதிர்த்து, தாம் வாழ்ந்த கால நிலையை எதிர்த்துப் போராடிய மனிதரை -அப்போராட்டத்தில் புண்பட்ட போதிலும் முறிந்து வீழ்ந்துவிடாமல், தோல்வியுற்ற போதிலும் தம் போராட்டத்தின் இறுதி நேர்மையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த வீரரை - காந்திஜியிடம் நாம் காண்கிறோம்.

  வருங்கால உலக மனித சமுதாயத்தின் முன்னோடி காந்திஜி. அவர் விஸ்வமானுஷ்யர்; உலகக் குடிமகனார்.   அவர் வாழ்க்கை, புதியதோர் உலகுக்கான போராட்டம். அவரது இலட்சியத்தின் அடிப்படை, தேசிய அரசு அன்று; அனைத்துலகுதான் அடிப்படை.

 எல்லா நாடுகளும் மனித சமுதாய நலன் என்ற அடிப்படையில் சிந்திக்க முன்வந்தால் ஒழிய, இன்று ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றங்கள் ஆபத்தாகவும் மனித முயற்சியின் விரயமாகவும் முடியும். உலகப் போரை நாம் தடுக்க விரும்பினால், நமக்கு உலக நாடுகளின் கூட்டுறவும் ஒத்துழைப்பும் தேவை.

 நம்மை எதிர்நோக்கி நிற்கும் புதிய உலகில் வாழ்வதற்கு, நாம் நம்மை ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும். பூகோள அமைப்பில் இன்று ஒற்றுமை உருவாகிவருகிறது. அறிவுத்துறையில் ஒருமித்த கருத்து வளர்ந்து வருகிறது.

 பொருளாதார கூட்டுறவு மூலமாக, மக்கள் அனைவருக்கும் உணவும் உடையும் குடியிருக்க இடமும் அளிக்க முடியும். ஆன்ம உறவையும், ஒருமையையும் நாம் மக்களிடையே பயன்படுத்த வேண்டும்.

 அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட சமுதாய அமைப்பை நம் நாட்டில் நிலைநாட்டி, அதன் மூலம் உலகுக்குத் தொண்டாற்ற முடியும் என்ற நம்பிக்கையில்தான் காந்திஜி நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார். போர் மூளாத ஓர் உலகை நிலைநாட்ட அவர் பாடுபட்டார்.  நம் நாட்டை அவர் சரியான பாதைக்கு அழைத்துச் சென்றார் என்பதற்கு, ஆயுதக்களைவு பற்றி ஐ.நா.வில் ஏகமனதாய் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சான்றாகும்.

  நம் இதயத்தில் உள்ள வெறிகளால்தான், நம்முடைய கண்மூடித்தனமான, கட்டுக்கடங்காத, கண்ணியமற்ற பேராசையினால்தான் போர்கள் மூளுகின்றன. நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளாகவே போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

 குருக்ஷேத்திரம் நம் அகத்தில் உள்ளது. உலகைக் காக்கும் அன்புநெறி, அதை அழிக்கும் பகைமைப் பாதை ஆகிய இந்த இரண்டில் ஒன்றை நாம் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.  இந்தப் போராட்டத்தில், நாம் நம்முடைய முயற்சியால் நம்மைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, நம் செயல்களால் பிறரையும் காக்க வேண்டும்.

 உபவாசம், வழிபாடு, நோன்புகள் ஆகியவற்றைக் கடைப்பிடித்து சத்தியத்தை வழிபடுவோர் பெறும் இணையற்ற தூய்மையையும் வலிமையையும் காந்திஜி பெற்றார்.  மனித சமுதாயத்தின் ஆன்ம வளர்ச்சிப் பரிணாமத்தில் காந்திஜி மிக முக்கியதொரு இடத்தைப் பெற்றுள்ளார்.

  இரட்சிப்பு பெற்றவர்களுக்குக் கிடைக்கும் லட்சிய பூமி பற்றி, சத்யசோதனையின் இறுதிக் குறிக்கோள் பற்றி அவர் பேசுகிறார். அப்பூமியில் அடிவைக்க நம்முள் சிலருக்கு வாய்ப்பில்லாது போகலாம்; ஆயினும், அதை எய்த, நாம் உழைத்துப் பாடுபட வேண்டும். தொலைவில் இருந்தாவது அதைப் போற்றி வணங்க வேண்டும்.

 காந்திஜியை நாம் எண்ணும்போதெல்லாம், சக்திமிக்க குண்டைக் காட்டிலும் மனித ஆன்ம உணர்வே அதிக சக்தி வாய்ந்தது என்ற உண்மையை நாம் நினைவில் போற்றுவோமாக!

மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிக்கானீர் நகரில் 1959 அக்டோபர் 31-ஆம் தேதி, காந்தி சிலையைத் திறந்து வைத்து நிகழ்த்திய உரையின் தமிழாக்கம் இது.

பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள 'டாக்டர் இராதாகிருஷ்ணன் பேருரை (தமிழாக்கம்: கா. திரவியம்) தொகுதி-2'இல் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.

நன்றி: தினமணி (01.02.2013)

26.6.12

எமர்ஜென்சி தின நினைவுகள்!

சிந்தனைக்களம்
இரா.செழியன்

இந்த ஆண்டு ஜூன் மாத நாளேட்டைப் பார்த்ததும் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் என் நினைவுக்கு வந்தது. 1975 ஜூன் 25-26 நள்ளிரவில்தான், உள்நாட்டு நெருக்கடிகால அறிவிப்பு அப்பொழுதைய பிரதமர் இந்திரா காந்தியால் வெளியிடப்பட்டது. அது ஜனநாயக அடிப்படையில் நம்பிக்கை உள்ள எந்த இந்தியனாலும் ஏற்றுக் கொள்ளமுடியாத - வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எவராலும் இன்னமும் முழுமையாக ஆராயப்படாத, சுதந்திர இந்தியாவில் அதற்கு முன் ஏற்பட்டிராத இருண்ட கால ஆட்சியின் ஆரம்பம்.

அடிப்படை மனித உரிமைகளுக்கான ஜனநாயகம் - தூய்மையான பொதுவாழ்வு நேர்மையான அரசாங்கம், சுயநலமற்ற தனி வாழ்வு ஆகியவை மகாத்மா காந்தி - ஜவாஹர்லால் நேரு காலத்திய காங்கிரஸ் இயக்கத்தின் இன்றியமையாத நடைமுறைக் கோட்பாடுகளாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் அந்தக் கோட்பாடுகள் இந்திய அரசியலில் மறக்கப்பட்டுவிட்டன அல்லது மறைந்துவிட்டன,

1966 ஜனவரியில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டில் இறந்ததும் காங்கிரஸ் தலைவர் காமராஜரின் பெரு முயற்சியால் இந்திரா காந்தி பிரதமராக ஆக்கப்பட்டார். 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் இந்திரா காந்தி பிரதமராக ஆனார்.

1969-இல் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சீவ ரெட்டி நிறுத்தப்பட்டார். ஆயினும், கட்சி முடிவை ஏற்றுக் கொள்ளாமல் பிரதமர் இந்திரா காந்தி, வி.வி.கிரியை ஆதரித்து ""அவரவர் மனசாட்சிப்படி உறுப்பினர்கள் வாக்களிக்கலாம்'' என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்து சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடித்தார். இவ்வளவுக்கும் சஞ்சீவ ரெட்டி பெயரை முன்மொழிந்தவரே இந்திரா காந்திதான் என்பதுதான் வேடிக்கை.

அதன்பின் 1969 ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரு அமைப்புகள் உருவாயின. 'கரீபி ஹட்டாவ்' (ஏழ்மையை விரட்டுவோம்) என்ற கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதியை வைத்து, 1971 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற இந்திரா காந்தி மீண்டும் ஆட்சி அமைத்தார். 1971 டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தான் ஆதிக்கத்தை எதிர்த்து கிழக்கு வங்காளத்தில் மக்கள் ஆதரவில் பிரமாண்டமான எழுச்சி ஏற்பட்டது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பங்களாதேஷ் சுதந்திர நாடாக ஆனது. அதனால் இந்திரா காந்தியின் தனிப்பட்ட பெருமையும் ஆட்சி அதிகாரமும் மேலும் பலமடைந்தன.

அதிகார பலம் மிகவும் அதிகமானால்,  அது தலைக்கேறி எதேச்சதிகாரம் தலையெடுக்கும் என்பார்கள். ஏழ்மை விரட்டப்படுவதற்குப் பதிலாக, ஏழை மக்கள் விரட்டப்பட்டனர். விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், பஞ்சம் - பட்டினி, ஊழல் -ஊதாரித்தனம் - ஆட்சியின் அடக்குமுறை ஆகியவை ஏழை மக்களை வாட்டி வதைத்தன.

இந்திரா காந்தியின் அதிகாரத்தைவிட அதிகமான அளவுக்கு எதற்கும் துணிந்த இளவரசர் சஞ்சய் காந்தியின் ஆதிக்கம் சட்டம் - அரசாங்கம் - நீதி ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டு கொடிகட்டிப் பறந்து அதற்கு முன் இந்தியா காணாத தனிப்பட்ட ஒரு எதேச்சதிகார ஆட்சியாக மாறியது.

சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் செயலற்று இருந்த நிலைமையில், இந்தியாவின் நற்காலமாக, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு, ஈடு இணையற்ற போராட்ட வீரர், தன்னலமற்ற தியாகி, தூய்மையான மாமனிதர் என்று மகாத்மா காந்தியாரால் பாராட்டப்பட்ட ஜெயப்பிரகாசர் - அதுவரை அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தவர் - இந்திரா காந்தியின் அலங்கோல ஆட்சியையும், ஊழல் கடலில் மிதந்துகொண்டிருந்த அதிகார கும்பலையும் எதிர்த்து நிற்க, மக்கள் கவனத்தையும், மக்கள் சக்தியையும் திரட்டினார்.

மக்களையும் எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட ஜெயப்பிரகாசர் (ஜே.பி.) எதிர்த்தரப்பு அணியை அமைத்தார். அதில் மூத்த அரசியல் தலைவர்களான ஆச்சார்ய கிருபளானி, மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா, சரண்சிங், என்.ஜி.கோரே, எஸ்.எம். ஜோஷி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, மது லிமாயி, வாஜ்பாயி, அத்வானி போன்ற பலர் இருந்தனர். அந்த அணியில் என்னையும் ஜே.பி. சேர்த்து அவ்வப்பொழுது முக்கிய பொறுப்புகளைத் தந்தார்.

பொதுமக்களின் அவல நிலைமைகளை நாட்டுக்கும் நாடாளுமன்றத்துக்கும் உணர்த்தும் வகையில் 1975 மே 6, தில்லி மாநகரில் செங்கோட்டையிலிருந்து நாடாளுமன்றம் வரை ஒரு மாபெரும் பேரணியை ஜெயப்பிரகாசர் தலைமையேற்று நடத்தினார்.

அரசாங்கம் போட்ட பல்வேறு தடைகளையும் மீறி, ஐந்து லட்சம் மக்கள் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆட்சியின் அரசியல் - பொருளாதார -சமுதாயச் சீர்குலைவுகளைச் சுட்டிக்காட்டி, மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை நிலைநாட்டும் கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் ஒரு மனுவைத் தந்தார் ஜே.பி.

இந்தியாவில் ஜே.பி. எங்கு சென்றாலும் அங்கெல்லாம் மக்களின் வரவேற்பும் எழுச்சியும் வேகமாக வளர்ந்தன. அலைமோதும் மக்கள் கூட்டம் ஆட்சியாளர்களை ஆட்டி வைத்தது.

எதிர்பாராத வகையில், 1975 ஜூன் 25 -ல் இந்திரா காந்தியின் ஆர்ப்பாட்டத்தை அடக்கிடும் வகையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தந்தது. 1971 பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சட்ட விதிமுறைகளுக்கு விரோதமாக இந்திரா காந்தி செய்த பல்வேறு செயல்பாடுகளை விவரமாகத் தொகுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை சாந்திபூஷண் நடத்தினார்.

நான்கு ஆண்டுகள் ஆமை நடைபோட்ட அந்த வழக்கில், 1975 ஜூன் 12-ம் தேதியன்று, நீதிபதி ஜக் மோகன் லால் சின்ஹா, சட்டவிரோதமான செயல்பாடுகளை மேற்கொண்டதால் இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். அத்துடன் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் அவர் நிற்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அலகாபாத் தேர்தல் முடிவு இந்திரா காந்திக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் பேரிடியாக வந்தது. "பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்' என்பதையொட்டி, அதே ஜூன் 12-ம் நாளன்று குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன, அவற்றில், இந்திரா காங்கிரஸ் தோல்வி அடைந்ததுடன், எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அங்கு கிடைத்தது.

இருப்பினும் அதிகார பலத்தையே நம்பி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆளவந்தார்களுக்கு எதையும் எப்படியும் சமாளித்து விடலாம் என்ற பிடிவாதம் ஏற்பட்டுவிடும். 'இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா' என்ற முழக்கத்துடன், இந்திரா காந்திதான் பிரதம மந்திரியாகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஆரவாரத்துடன் ஆர்ப்பாட்டங்களை காங்கிரஸ் தலைவர்கள் நடத்தினார்கள்.

நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்த 1975 ஜூன் 25-ம் தேதி மாலை தில்லி ராம்லீலா மைதானத்தில் ஜே.பி. தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

1975 ஜூன் 25-ஆம் தேதி காலை பத்து மணிக்கு ஜே.பி. இருக்குமிடத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நான் சென்றபொழுது அங்கு மொரார்ஜி தேசாய், சரண்சிங், அசோக் மேத்தா, பிலு மோடி மேலும் சிலர் இருந்தனர். வாஜ்பாய், அத்வானி ஆகியோர் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்துக்காக பெங்களூர் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அலகாபாத் தீர்ப்பின்படி இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதிலும் கண்டனக் கூட்டங்களை ஜூன் மாத இறுதி சனி-ஞாயிறு நாட்களில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதிலும் பயன் இல்லை என்றால், ஓர் ஒத்துழையாமைப் போராட்டத்தை நடத்தத் தயாராக வேண்டும் என்று ஜே.பி. கருதினார்.

கடைசியில் கூட்டம் கலையும்பொழுது அசோக் மேத்தா, மாலையில் கூட்டத்துக்குப் போகும்பொழுது செழியனை நான் அழைத்து வருகிறேன் என்றார். அருகிலிருந்த ஜே.பி. இடைமறித்து, "வேண்டாம், செழியனுக்கு நான் ஒரு வேலை வைத்திருக்கிறேன். அலகாபாத் தீர்மானத்தை இன்று இரவு செழியன் படித்துப் பார்த்து குறிப்புகளுடன் வந்தால், நாளை காலை நாம் ஒரு இறுதியான முடிவை எடுக்கலாம்'' என்றார்.

இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தந்த தீர்ப்பு ஐநூறு பக்கங்கள் இருக்கும். இரவு சாப்பிட்டுவிட்டு அந்தத் தீர்ப்பைப் படிக்க ஆரம்பித்தேன். நேரம் போனதே தெரியவில்லை.

இரவு 3-30 மணி அளவில் என்னிடம் பிலு மோடி பேசினார். ஜே.பி., மொரார்ஜி கைது செய்யப்பட்டனர் என்றார். எந்தக் குற்றங்களுக்காக என்று நான் கேட்டேன். பேச ஆரம்பித்த பிலு மோடி சற்று நிதானித்துக் கொண்டு "என் வீட்டருகில் ஒரு வேன் - போலீஸ் வேன்தான். எனக்கும் அழைப்பு வந்துவிட்டது, குட்பை'' என்று டெலிபோனை வைத்தார்.

எதற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை. அந்த நிலைமையில் திகைப்பூட்டும் வகையில் என் வீட்டின் வெளியில் ஒரு கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தால் நெருங்கிய நண்பர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி நின்று கொண்டிருந்தார். மிகவும் அவசரமாக "ஜே.பி. மற்றும் பலர் கைது செய்யப்படுகின்றனர். உனக்கும் அரஸ்ட் வாரண்ட் வரலாம். உடனே கிளம்பு'' என்றார். என் மனைவி பிரேமா எழுந்து வந்தாள். கட்டிய வேட்டி போட்டிருந்த சட்டையுடன், என் உதவியாளர் அன்புமணியையும் அழைத்துக்கொண்டு நான் புறப்பட்டேன்.

காரில் போகும்பொழுது சோம்நாத் சொன்னார்: இரவு 12 மணிக்கு எமர்ஜென்சி ஆர்டர் போடப்பட்டுள்ளது. 3.30 மணிக்கு ஜே.பி. கைது செய்யப்பட்டார், மேலும் நாடெங்கும் ஆயிரக்கணக்கில் கைது ஆகின்றனர். முழுவிவரங்கள் காலையில்தான் தெரியும் என்றார்.

அப்பொழுது நள்ளிரவுக்குப் பிறகு மணி 3.45. அவருடைய நண்பர் வீட்டுக்கு சோம்நாத் எங்களை அழைத்துச் சென்றார்.

விடிந்ததும் - ஜூன் 26-ம் தேதி காலையில் முதலாவதாகக் கிடைத்த செய்தி:

அன்றாடம் வெளிவரும் செய்தித்தாள்கள் எதுவும் கிடைக்காது என்பதுதான். இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்கள், அவைகளை அச்சிட முடியாதபடி, முதல் நாள் இரவில் அவைகளுக்கான மின்சாரத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாம். இந்த மாபெரும் காரியத்துக்கு உத்தரவிட்டவர் சஞ்சய் காந்தி என்று பிறகு தெரியவந்தது.




பிறகு இரவுதான் போடப்பட்ட உள்நாட்டு நெருக்கடி கால அறிவிப்பின் விவரங்கள் கிடைத்தன. 1971 டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷ் போரையொட்டி வெளிநாட்டு நெருக்கடி காரணத்தினால் போடப்பட்ட ஒரு பிரகடனம் - அது அமலில் இருக்கும் பொழுதே அதற்கு மேல் உள்நாட்டு விவகாரத்துக்கான மற்றொரு நெருக்கடி உத்தரவு போடப்பட்டுள்ளது. ஒரே காலத்தில் இரண்டு நெருக்கடி உத்தரவுகள். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.

என் உதவியாளர் அன்புமணி எம்.பி. என்ற முறையில் எனக்குத் தரப்பட்டிருந்த பிஷாம்பர்தாஸ் மார்க், 12 நம்பர் வீட்டுக்குச் சென்று விசாரித்து வந்தார்.

ஜூன் 25 இரவில் 4 மணிக்குமேல் ஒரு போலீஸ் அதிகாரி வந்து கதவைத் தட்டினாராம். என் மனைவி பிரேமா கதவைத் திறந்தாள். வீட்டுக்கு முன்னால் பத்து காவல்காரர்கள் தாங்கிய ஒரு போலீஸ் வேன் இருந்ததாம். பிறகு தெரிந்த விஷயம் அதேபோல் வீட்டுக்குப் பின்னாலும் காவல்காரர்கள் அடங்கிய மற்றொரு வேன் நிறுத்தப்பட்டிருந்தது என்று. நான் தப்பி ஓடிவிடாமல் கைது செய்யத்தான் அத்துணை ஏற்பாடுகள்.

போலீஸ் அதிகாரி கையிலிருந்த அரஸ்ட் வாரண்டைக் காட்டி, எம்.பி. செரியனைக் கைது செய்ய வந்திருக்கிறோம் என்றார்.

பிரேமா: செரியன் என்று யாரும் இங்கு இல்லையே!''

""இது பிஷாம்பர்தாஸ் 12 நம்பர் வீடுதானே?''

""ஆமாம். ஆனால் செரியன் என்று யாரும் இங்கு இல்லை.''

போலீஸ் அதிகாரி போய் பங்களா முன்னுள்ள பெயர்ப் பலகையைப் பார்த்தாராம். திரும்ப வந்து வாரண்ட் சரியாக எழுதவில்லை என்று பையிலிருந்து மற்றொரு காகிதத்தை எடுத்து. ஆங்கிலத்தில் திருத்தமாக என் பெயரை எழுதி ""சரி எங்கே அவர்?'' என்று அதட்டிக் கேட்டாராம்.

கைது செய்யப்படுபவர் பெயர் எழுதாமல், மாஜிஸ்ட்ரேட் தமது கையெழுத்தைத் தாராளமாகப் பல அரஸ்ட் வாரண்ட்களில் போட்டுத் தந்திருந்தார்.. யாரை வேண்டுமென்றாலும், எப்பொழுது வேண்டும் என்றாலும் ஆட்சியில் இருந்த நெருக்கடி கால அதிகாரிகள் உத்தரவிட, சுலபமாகத் தேவைப்பட்டவர்களை போலீஸôர் கைது செய்துவிடலாம்.

மீண்டும் கேட்டபொழுது பிரேமா சொன்னது, "எம்.பி. சென்னைக்குப் போய்விட்டார்'' என்று.

போலீஸ் அதிகாரி வீட்டிற்குள் புகுந்து ஒவ்வொரு அறையாகப் பார்த்தாராம். யாரும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த பழனி என்ற நாய் நிரம்பக் குரைத்ததாம். போலீஸ் அதிகாரிக்குக் கோபம் அதிகமாகிவிட்டது.

கடைசியாகத் தன் தொப்பியைப் போட்டுக்கொண்டு, மீசையை முறுக்கிவிட்டு போலீஸ் அதிகாரி எச்சரித்தாராம்: இருக்கட்டும் இன்று இந்த எம்.பி. சிக்கவில்லை. நாளை மாலைக்குள் அவரை நீங்கள் திகார் சிறையில்தான் பார்க்கவேண்டும்.

அன்றைக்கு சோம்நாத் சட்டர்ஜியின் சாமர்த்தியத்தால், நான் தப்பினேன். மறைவாக இருந்த நான் மறுநாள் இரவு விமானத்தில் சென்னை சேர்ந்தேன்.

அரசமைப்புச் சட்டப்படி நெருக்கடி கால உத்தரவுக்கு அது வெளியிடப்பட்ட ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற்றாக வேண்டும். அதன்படி 1975 ஜூன் 25 போடப்பட்ட உத்தரவை அங்கீகரிக்க ஜூலை 21 நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அழைக்கப்பட்டது. என்னைக் கைது செய்வதற்கான தில்லி போலீசாரின் உத்தரவு இருப்பதால், நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள நான் தில்லி சென்றால், என்னை அங்கு கைது செய்துவிடக்கூடும் என்ற நிலைமை இருந்தது.

அதையும் மீறி, நான் ஜூலை 20-ம் தேதி இரவு தில்லி சென்று என் வீட்டுக்குச் செல்லாமல் ஒரு சாதாரண ஓட்டலில் தங்கி மறுநாள் காலை 8 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் என் அடையாளச் சீட்டைக் காண்பித்து நுழைந்து, அங்குள்ள நூல் நிலையத்தில் காத்திருந்தேன்.

11 மணிக்கு மக்கள் சபைக்குள் நான் சென்று என் இடத்தில் அமர்ந்தேன். நெருக்கடிநிலை உத்தரவைக் கண்டித்து கடுமையாக ஒரு மணி நேரம் பேசி விட்டு, மறுபடியும் மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு, அன்று இரவே சென்னை திரும்பிவிட்டேன்.

அப்பொழுது இருந்த கடுமையான சென்சார் முறையில் எனது பேச்சுபற்றி எதுவும் இந்திய செய்தித்தாள்களில் வெளியிடப்படவில்லை. ஆனால், வெளிநாட்டுப் பத்திரிகைகளில் சிறப்பாக அது வெளியிடப்பட்டதுடன் அதைப் பாராட்டி பிரபல செய்தியாளர்கள் எழுதியதாகவும் எனக்குத் தகவல் வந்தது.

எதிர்ப்பு அடங்கிவிட்டதாக ஒருவகை நினைப்பு அரசாங்கத்துக்கு இருந்தது என்றும் என்னைக் கைது செய்தால் வெளிநாட்டுப் பத்திரிகைகள் அதற்கு அதிகமான பாராட்டுதலைத் தரக்கூடும் என்றும் அரசாங்கம் என்னைக் கைது செய்யாமல்விட்டது என்று அப்பொழுது அமைச்சராக இருந்த ஒருவர் நெருக்கடி காலம் தீர்ந்ததும் என்னிடம் சொன்னார்.

1977 மார்ச் பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி உள்பட இந்திரா காங்கிரஸ் கட்சியினர் தோற்கடிக்கப்பட்டதும், மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா ஆட்சி அமைந்ததும், பதவி ஆசையில் இந்திரா காந்தியுடன் இணைந்த ஜனதா எம்.பி.க்கள் மக்களாட்சியைக் கவிழ்த்ததும், பலரும் அறிந்த நிகழ்ச்சிகளாகும்.

அதேசமயம் தனிப்பட்டவர்க்கு ஏற்பட்ட நீதிபூர்வமான நெருக்கடியை நாட்டுக்கு ஒரு நெருக்கடியாக மாற்றி, மக்களை அடக்கியாண்ட எதேச்சாதிகாரம், அதையொட்டி எழுந்த ஜெயப்பிரகாசரின் போராட்டம், மக்கள் தந்த பேராதரவின் வெற்றி ஆகியவைகளும் இந்திய அரசியல் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.

மக்களை அடக்கி எதேச்சாதிகாரம் இடையிடையே வெற்றிபெறலாம், ஆனால், எழுச்சிபெற்ற மக்கள் மீண்டும் வெற்றிபெறுவார்கள் என்பது உலக வரலாற்றில் காணப்படும் உண்மையாகும்.

1975 ஜூன்  25-ம் தேதி நள்ளிரவில் போடப்பட்ட நெருக்கடி காலம் 1977 மார்ச் 21 வரை நீடித்தது.

37 ஆண்டுகள் கழித்து இப்பொழுது இவற்றை நான் எழுதுவதற்குக் காரணம் எனக்குப் போடப்பட்ட போலீஸ் உத்தரவுகளைவிட நான் பட்ட சோதனைகளைவிட, அபாயங்களைவிட, அதிகமான அளவுக்குப் பல்வேறு அநீதிகள், கொடுமைகளைப் பல்லாயிரக்கணக்கானவர்கள் உறுதியுடன், நெருக்கடி காலத்தின் கோரதாண்டவத்தை எதிர்த்து நின்றிருக்கிறார்கள்.

1975-77 நெருக்கடி காலத்தில் அரசாங்கம் இழைத்த அநீதிகளை விரிவாக ஆராய்ந்த நீதிபதி ஜே.சி.ஷா விசாரணைக் குழு தந்த அறிக்கையில், இந்தியா முழுமையிலும் உள்ள மாநிலங்கள் - சிறைச்சாலைகள் - நீதிமன்றங்கள் ஆகியவைகளிடமிருந்து திரட்டப்பட்ட விவரங்களின்படி, விசாரணை எதுவுமின்றி சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடந்தவர்களின் எண்ணிக்கை 1,10,806.

அவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன், இந்த ஜூன் 25-ஆம் தேதி நினைவு நாளன்று. அவர்களில் மறைந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அஞ்சலி. வாழ்பவர்களுக்கு என் வாழ்த்துகள்!

'தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்' என்பதற்கு அவசரநிலைச் சட்டத்தையும், நெருக்கடி நிலையையும் மீறி வெகுண்டெழுந்த மக்களின் விடுதலை உணர்வும், மக்களாட்சியும், தனிநபர் சுதந்திரமும் நிலைநாட்டப்பட்ட சம்பவமும் மறக்கவே முடியாத நினைவுகள். எத்தனையோ சீர்கேடுகளுக்கு இடையிலும், இந்தியாவின் வருங்காலம் பற்றிய நம்பிக்கை முற்றிலுமாக அழிந்துவிடாமல் இருப்பதற்கு ஜே.பி. இயக்கத்தின் வெற்றிதான் காரணம்.

நெருக்கடி காலத்தில் செய்தியாளர்களின் குரல்வளைகளை அடக்கிக் கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் போட்டது. ஆனால், அவற்றை எதிர்த்துப் பத்திரிகையாளர்கள் சிலர் தலை நிமிர்ந்து நின்றனர். அதில் முதன்மையான இடத்தில் ராம்நாத் கோயங்கா இருந்தார்; எக்ஸ்பிரஸ்- தினமணி இதழ்கள் இருந்தன.

அப்படி இன்றும் தனித்து நிலை நிற்கும் தினமணி இதழில் இதை எழுதும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.


 நன்றி: தினமணி (26.06.2012)

காண்க: The Emergency (India)

.

 
.

25.6.12

நெகிழச் செய்யும் தாயின் கடிதம்

டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி
(பலிதானம்: ஜூன் 23)

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியே என்று நிலைநாட்ட காஷ்மீர் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார், பாரதீய ஜனசங்கத்தின் நிறுவனர் ஷியாம  பிரசாத் முகர்ஜி. முரய்டார் காவலில் வைக்கப்பட்ட அவர், அங்கு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உயிர்த் தியாகத்தால் தான் காஷ்மீர் இன்றும் இந்தியாவின் பகுதியாக நீடிக்கிறது.

டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் தாயார் திருமதி ஜோக்மயா தேவி அவர்கள் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தை ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டும்.   பிரதம மந்திரி நேரு அவர்களுக்கு, டாக்டர் எஸ்.பி. முகர்ஜியின் தாய் திருமதி ஜோக்மயா தேவி அவர்கள்  எழுதிய கடிதத்தின் விவரம் இதோ:

------------------------------------------------------

77, ஆஷுதோஷ் முகர்ஜி சாலை,
கல்கத்தா,
1953, ஜூலை, 4.

அன்பான திரு. நேருவுக்கு,

30, ஜுன் தேதியிடப்பட்ட உங்கள் கடிதம், எனக்கு திரு. பிதான் சந்திர ராய் மூலமாக ஜூலை 2ஆம் தேதி கிடைத்தது. உங்கள் அனுதாபச் செய்திக்கும் அனுதாபத்திற்கும் நன்றி.

என் அன்பு மகன் இறந்ததற்கு இந்த தேசமே துக்கம் அனுஷ்டிக்கிறது. அவர் ஒரு தியாகியாக இறந்துள்ளார். அவரது தாயான எனக்குள்ள துயரம் மிகவும் ஆழமானது. வெளிப்படுத்தப்பட முடியாத அளவு புனிதமானது. எனக்கு ஆறுதல் தேடுவதற்காக இதை நான் உங்களுக்கு எழுதவில்லை. ஆனால், உங்களிடம் நான் வலியுறுத்திக் கேட்பது நீதியைத்தான்.

என் மகன் சிறை வைக்கப்பட்டிருந்தபோது இறந்திருக்கிறார்  - அதுவும் நீதி மன்றத்தில் எந்த வழக்கும் தொடரப்படாமல் சிறை வைக்கப்பட்டபோது – உங்கள் கடிதத்தில் நீங்கள் காஷ்மீர் அரசு தான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தது என்று கூற முற்பட்டுள்ளீர்கள். உங்களின் இந்தக் கூற்று, உங்களுக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் உறுதி அளிப்புகளின் அடிப்படையில் இருக்கலாம். ஆனால், யார் மீது வழக்குத் தொடரப்பட வேண்டுமோ அவர்களிடமிருந்து வந்த தகவல்களுக்கு எப்படி மதிப்பளிக்க முடியும் என்பதுதான் என்னுடைய கேள்வி. என் மகன் சிறை வைக்கப்பட்டிருந்தபோது காஷ்மீர் சென்றிருந்ததாகக் கூறியுள்ளீர்கள். அவர் மீது நீங்கள் கொண்டிருந்த நேசத்தைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். அப்படியானால், அவரைச் சிறையில் சென்று சந்தித்து, அவரது ஆரோக்கியம் மற்றும் சிறையில் அவருடைய சவுகரிய ஏற்பாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விடாமல் உங்களைத் தடுத்தது எது?

அவரது மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்துள்ளது. அவர் இங்கே சிறை வைக்கப்பட்ட பிறகு அவரது தாயான எனக்கு காஷ்மீர் அரசிடமிருந்து வந்த முதல் தகவலே அவர் மரணச் செய்திதான். அதுவும் இரண்டு மணி நேரம் கழித்தே வந்தது என்பது மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்று தோன்றவில்லையா? அதுவும் மர்மமான, கொடுமையான முறையில் அந்தத் தகவல் எனக்கு வழங்கப்பட்டது! தான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாக என் மகன் அனுப்பிய தந்தி அவரது மரணச் செய்திக்குப் பிறகுதான் இங்கே வந்து சேர்ந்தது. என் மகன் கைது செய்யப்பட்டதிலிருந்தே அவர் சரியாக நடத்தப்படவில்லை என்றும் அவர் பலமுறை தொடர்ந்து பல காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார் என்றும் எனக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளது. எனக்கோ என் குடும்பத்தாருக்கோ அவரைப் பற்றிய தகவல்கள் ஏன் அளிக்கப்படவில்லை என்று நான் காஷ்மீர் அரசிடம் அல்லது உங்களிடம் கேட்கிறேன்.

அவர் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகுகூட, அவர்கள் அந்தத் தகவலை உடனடியாக எங்களுக்கோ அல்லது டாக்டர் பிதான் சந்திர ராய்க்கோ தெரிவிக்க வேண்டும் என்பது அவசியமாக அவர்களுக்குத் தோன்றவில்லை. காஷ்மீர் அரசு ஷ்யாம் பிரசாதின் உடல் நிலை குறித்த முந்தைய மருத்துவ வரலாறு பற்றியோ அவருக்குத் தேவைப்படும் சிகிச்சை ஏற்பாடுகள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றியோ சிறிதுகூட அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதை ஒரு எச்சரிக்கையாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் விளைவுதான் இந்தக் கொடுமை. ஜூன் 22ஆம் தேதியன்று அவர், “மூழ்குவதைப் போன்ற உணர்வு” ஏற்படுவதாக கூறியதை என்னால் நிரூபிக்க முடியும். இதற்கு அரசு என்ன செய்தது? மருத்துவ உதவியும் அளிப்பதில் அளவுகடந்த தாமதம், மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சட்டத்துக்குப் புறம்பான மோசமான விதம், அவருடன் சிறை வைக்கப்பட்ட இரண்டு சகாக்களைக்கூட அவருடைய அருகில் இருக்க அனுமதிக்காத கொடுமை, இவை அனைத்துமே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மோசமான, இரக்கமற்ற நடத்தைக்கான உதாரணங்கள்.

ஷ்யாம் பிரசாத்தின் கடிதங்களிலிருந்து தான் நன்றாக இருக்கிறேன் என்று அவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய பொறுக்கி எடுக்கப்பட்ட சில வரிகளைக் கொண்டு தகவல் அளித்துவிட்டதால், அரசாங்கமும் அதன் மருத்துவர்களும் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது. அப்படிப்பட்ட வரிகளின் மதிப்புதான் என்ன? தனக்கு நெருக்கமான, நேசத்துக்குரியவர்களை விட்டு வெகு தொலைவில் சிறையில் இருக்கும் ஒருவர் – அதுவும் என் மகன் – தன் துயரங்களைக் கடிதம் மூலம் வெளிப்படுத்துவாரா, அல்லது தன் சொந்த ஆரோக்கியப் பிரச்சினையைக் கண்டறிவாரா? அரசாங்கத்தின் பொறுப்பு மகத்தானது மற்றும் தீவிரமானது.

அவர்கள் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டிய தங்கள் கடமைகளை முற்றிலுமாகப் புறக்கணித்து, தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டார்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். சிறையில் அவருக்கு அளிக்கப்பட்ட சவுகரியங்களையும் வசதிகளையும் பற்றி நீங்கள் கூறினீர்கள். அது விசாரித்து அறியப்பட வேண்டியவை. குடும்பத்தினரிடம் எளிதாகக் கடிதத் தொடர்பு கொள்வதைக்கூட அனுமதிக்கும் நாகரிகம் இல்லாததுதான் காஷ்மீர் அரசு. கடிதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன, மற்றும் சில மர்மமான முறையில் காணாமல் போய்விட்டன.

நோய்வாய்ப்பட்டிருக்கும் அவரது மகள் மற்றும் என்னைப் பற்றிய செய்திகளுக்கு அவர் ஏங்கித் தவித்தது அவரது கடிதங்களில் வெளிப்பட்டது. ஜுன் 24ஆம் தேதி, ஒரு பாக்கெட்டில் காஷ்மீர் அரசு அனுப்பிவைத்த 15ஆம் தேதியிடப்பட்ட அவரது கடிதங்கள் எங்களுக்கு 27ஆம் தேதி ஜூன் இறுதிவாக்கில், அதாவது அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்ட பிறகு கிடைத்தன என்பதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமா? அந்த பாக்கெட்டில் இங்கே நானும் மற்றவர்களும் ஷ்யாம் பிராசத்துக்கு எழுதி அனுப்பிய கடிதங்களும் இருந்தன. இவை ஜுன் 11 மற்றும் 16ஆம் தேதிகளிலேயே ஸ்ரீநகருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன, ஆனால் ஷ்யாம் பிரசாத்துக்கு அளிக்கப்படவில்லை. இது மனரீதியான சித்திரவதைக்கு ஒப்பானது. அவர் மீண்டும் மீண்டும் நடைபயிற்சி மேற்கொள்ளத் தேவையான இடத்தைக் கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். இட வசதி இல்லாமல் பெரும் உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால், தொடர்ந்து இது அவருக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதை உடல் ரீதியான சித்திரவதை இல்லையா?

'“அவர் எந்தச் சிறையிலும் அடைத்து வைக்கப்படவில்லை, பிரபல தால் ஏரி அருகில் ஒரு தனியார் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளார்” என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதைக் குறித்து நான் ஆச்சரியமும் அவமானமும் அடைகிறேன். மிகச் சிறிய வளாகம் உள்ள மிகச் சிறிய ஒரு மாளிகையில், மிகத் தீவிரமாக இரவும் பகலும் ஆயுதம் ஏந்திய காவலர்களால் கண்காணிக்கப்பட்டுவந்தார். இதுதான் அவர் இருந்த நிலை. தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு கைதி சந்தோஷமாகவா இருப்பார்? இப்படிப்பட்ட தவறான பிரசாரத்தைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிறேன். அவருக்கு எந்த வகையான மருத்துவ சிகிச்சை மற்றும் உதவி அளிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. எனக்குக் கிடைத்த அதிகாரபூர்வமான தகவல்கள் அனைத்துமே முன்னுக்குப் பின் முரணானது. இது மிகவும் மோசமான, அப்பட்டமான கவனக் குறைவு என்பதுதான் மிகவும் பிரபலமான மருத்துவர்கள் இந்தத் தகவல்களின் அடிப்படையில் தெரிவித்த கருத்து. இந்த விஷயம் குறித்து, முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை தேவை.

நான் இங்கே என் பிரியமான மகனின் மரணம் குறித்துப் புலம்பவில்லை. சுதந்திர இந்தியவின் ஓர் துணிவுமிக்க மகன், வழக்கு, விசாரணை எதுவும் இன்றி காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மிகவும் சோகமான, மர்மமான முறையில் மரணத்தைச் சந்தித்திருக்கிறார். மகத்தான பேரிழப்பில் உள்ள ஒரு தாய், சுதந்திரமான மற்றும் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு முற்றிலும் பாரபட்சமற்ற, பகிரங்கமான விசாரணை தாமதம் இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்கிறேன். இறந்து விட்ட ஒருவரின் உயிரை எதனாலும் திருப்பிக்கொண்டு வர இயலாது என்று எனக்குத் தெரியும். ஆனால், நமது சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியில் அதுவும் உங்கள் அரசாங்கத்தால் அரங்கேற்றப்பட்ட இந்த மாபெரும் சோக நிகழ்ச்சிக்கான உண்மையான காரணங்களை அறிந்துகொண்டு, அதன் நியாய, அநியாயங்களைத் தாங்களாகவே தீர்மானம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

ஒரு தவறை எங்காவது, யாராவது செய்துவிட்டால்  - அவர் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்து உடையவராக இருந்தாலும் சரி - சட்டம் அதன் கடமையைச் செய்ய, அனுமதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களும் எச்சரிக்கையாக இருப்பார்கள். எனக்கு ஏற்பட்ட சோகம் இனி எந்தத் தாய்க்கும் ஏற்பட்டு கண்ணீர் சிந்தும் நிலை ஏற்படக் கூடாது.

உங்கள் மூலமாக எனக்கு எதாவது சேவை தேவைப்பட்டால் தயங்காமல் அதை வெளிப்படுத்தலாம் என்று நல்ல உள்ளத்தோடு தெரிவித்துள்ளீர்கள். இதோ என் சார்பிலும் இந்தியாவில் உள்ள அன்னையர்கள் சார்பாகவும் உங்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். உண்மை வெளிச்சத்திற்கு வர அனுமதிக்கும் துணிவை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும்.

இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன், ஒரு முக்கியமான உண்மையைக் கூற விரும்புகிறேன். ஷ்யாமா பிரசாத்தின் டைரியையும் அவர் கையால் எழுதிய விஷயங்களையும் அவருடைய மற்ற உடமைகளுடன் சேர்த்து காஷ்மீர் அரசாங்கம் எனக்கு அனுப்பிவைக்கவில்லை. பக்க்ஷி குலாம் முகம்மது மற்றும் என் மூத்த மகன் ராம்பிரசாத் ஆகியோருக்கு இடையேயான கடிதங்களின் நகல்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் அரசாங்கத்திடமிருந்து இந்த டைரி மற்றும் கையெழுத்துப் பிரதிகளை மீட்டுத் தந்தால் நான் ஆழ்ந்த நன்றி பாராட்டுவேன். இவை அவர்களிடம்தான் இருக்கும்.

என் நல்லாசிகளுடன்.


துயரத்துடன்
உங்கள் உண்மையான,

ஜோக்மயா தேவி
 
------------------------------------------------------

காண்க:

SALUTATIONS TO A GREAT MARTYR! (by L.K.Advani)

Syama Prasad Mookerjee

http://shyamaprasad.org/  






 






18.6.12

மகத்தான மாமனிதர்

பி. கக்கன்
(பிறந்த தினம்: ஜூன் 18)

மதுரை
மாவட்டம், தும்பைப்பட்டி எனும் சிற்றூரில் பூசாரி கக்கன் - பெரும்பி அம்மாள் தம்பதிக்கு 1909 ஜூன் 18ம் நாள் கக்கன் பிறந்தார்.

கோயில் பூசாரியாகவும், அரசு துப்புரவு தொழிலாளியாகவும் பணியாற்றிய தந்தையார், தன் மகனை லட்சியவாதியாக வளர்த்தார். தந்தையின் விருப்பப்படியே எஸ்.எஸ்.எல்.சி. தேறி, ஆசிரியர் பயிற்சியை முடித்து, சேரிப்பகுதிகளில் இரவுப் பாடசாலைகளை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.

அரிஜன சேவா சங்கத்தின் தலைவர் வைத்தியநாத அய்யரும் கக்கன்ஜியும் சமுதாயப் பணியிலும், தேசப்பணியிலும் இணைந்தே செயல்பட்டனர். 1939 ஆகஸ்ட் 8இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஹரிஜன சமுதாயத்தினர் நுழைய வைத்தியநாத அய்யர் தலைமையில், கக்கன்ஜியும் போராடினார். பவண மீனாட்சி கோயிலிலும், கேரள ஆலயங்களிலும் கக்கன்ஜியினால் ஹரிஜன மக்கள் ஆண்டவனை தரிசிக்க முடிந்தது.

மக்களில் ஒருவராய்...

சென்னை அரசு பொது மருத்துவமனை. ஒரு முதியவரான நோயாளி மருத்துவமனையில் சேர்வதற்காகச் சென்றார். அவருக்கான வார்டில் படுக்கைகள் நிரம்பி வழிந்ததால், மருத்துவமனை ஊழியர் தரையில் பாய் விரித்து படுக்கச் சொன்னார். ஒருநாள், ‘முதலமைச்சர் வருகிறார் எழுந்து உட்காருங்கள்’ என்று ஊழியர்கள் சொன்னபோதும், அந்த முதிய நோயாளியின் உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தது.

முதலமைச்சர் எம்.ஜி. ராமசந்திரன் மருத்துவமனையை பார்வையிட்டுக் கொண்டே வந்தார். அந்த முதிய நோயாளியை கடந்து சென்றவர், சட்டென்று திரும்பி அருகில் அமர்ந்து, அவரின் முகத்தையே கூர்ந்து நோக்கினார். அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் முதியவரை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினார். முதியவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்தச் செய்தார். அந்த முதியவர்தான் கக்கன். இந்த செய்தி கேட்ட தமிழகமே நெகிழ்ந்தது.

தியாகத் தழும்பு

கர்மவீரர் காமராஜரின் நேரடிச் சீடரான கக்கன்ஜி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் போராடியதால் சிறை சென்றார். சிறையில் கக்கன்ஜியை கம்பத்தில் கட்டி,  குருதி கொட்ட தடியாலடித்த போதும், ''காந்தியார் வாழ்க", ''காமராஜர் வாழ்க"
என்றே முழக்கமிட்டார். கக்கன்ஜி மண்ணோடு மறையும் வரை அந்த வீரத்தழும்புகள் அவரது தியாகத்தை கூறிக்கொண்டிருந்தன.

எளிமையின் சிகரம்

தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி இழந்தது. கக்கன்ஜி அமைச்சருக்காக அளிக்கப்பட்டிருந்த அறையில் கோப்புகளையும், அவருடைய பதவிக்காக கொடுக்கப்பட்டிருந்த வாகனமான காரையும் ஒப்படைத்துவிட்டு வெறுங்கையுடன் வெளியேறினார்.

தலைமைச் செயலகத்திற்கு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து, மாநகரப் பேருந்தில் சாதாரண பொதுமக்களில் ஒருவராய் பயணித்தார். எளிமைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த தியாகி கக்கன்ஜி 1981 டிசம்பர் 28ம் நாள் மறைந்தார்.

நன்றி: விஜயபாரதம்

காண்க: தியாகத் திருவிளக்கு 



29.2.12

மாமனிதர் மொரார்ஜி


 மொரார்ஜி தேசாய் 
(பிறப்பு: பிப். 29)  
 
பிப்ரவரி 29. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அபூர்வமான நாள். அந்த நாள் மாமனிதர் மொரார்ஜி தேசாயின் பிறந்த நாள் எனும்போது அந்நாளுக்கான முக்கியத்துவமும் மரியாதையும் இன்னும் கூடி விடுகிறது.

இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா'வையும், அதற்கு இணையான பாகிஸ்தானின் 'நிஷான்--பாகிஸ்தான்' என்ற விருதையும் பெற்ற ஒரே பாகிஸ்தானியர் கான் அப்துல் கபார்கான் என்றால், அவ்விரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே இந்தியர் மொரார்ஜி தேசாய்.

115 ஆண்டுகளுக்கு முன்பு, 1896-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் நாள் இன்றைய குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் இருக்கும் பதேலி என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். அவருடைய தந்தை ரங்கோட்ஜி தேசாய் பவநகரில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். தாய் வஜியா பென் மிகச்சிறந்த குடும்பத்தலைவி. தன்னுடைய தந்தை இறந்தபோது தேசாய் சொன்னார், "அவரிடமிருந்து நான் எந்தச் சொத்தையும் பெறவில்லை. கடமை உணர்வையும், சமய நம்பிக்கையையும், எல்லாச் சூழ்நிலைகளையும் சமமாகப் பாவிக்கும் மனப்பக்குவத்தையும் பெற்றுக்கொண்டேன். நான் பெற்றுக்கொண்டவை உண்மையில் விலைமதிக்க முடியாதவை ஆகும்''. 

1911-ம் ஆண்டு அவர் மாணவராக இருந்தபோதே, அவருடைய தந்தை மரணமடைந்த மூன்றாவது நாளில், சுராஜ்பென் என்ற பெண்ணோடு அவருக்குத் திருமணம் நடைபெற்றது

பல்சாரில் இருந்த பாய் அவாபாய் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த அவர், மும்பை வில்சன் கல்லூரியில் பி.எஸ்சி. பயின்று, 1916-ம் ஆண்டு பட்டம் பெற்றார். 1918-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற அவர், 12 ஆண்டுகள் மும்பை மாகாணத்தில் மாவட்டத் துணை ஆட்சியராகப் பணிபுரிந்தார். பின்னர் 1930-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் விடுதலைப் போரால் ஈர்க்கப்பட்டு, சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபடுவதற்காகத் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தார்.

1931-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகப் பணியாற்றத் தொடங்கிய அவர், குஜராத் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் செயலராக உயர்ந்து, 1937-ம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார்

 இதற்கிடையே சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டதற்காக 1932 முதல் 1934 வரை 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். 1935-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிச்சேரிக்குச் சென்று ஸ்ரீஅரவிந்தரைச் சந்தித்த பிறகு, திருவண்ணாமலையில் ரமண மகரிஷியின் முன்பு தன்னுள் முழுமையான அமைதியை உணர்ந்தார்

1935-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசு சட்டத்தின் அடிப்படையில், 1937-ம் ஆண்டு நடைபெற்ற மாகாணத் தேர்தல்களில் போட்டியிட காங்கிரஸ் தீர்மானித்ததால், மும்பை மாகாணத்தில் பி.ஜி. கெர் தலைமையில் முதல் காங்கிரஸ் அரசாங்கம் அமைந்தது. அதில் மொரார்ஜி தேசாய் வருவாய், விவசாயம், வனம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

அக்காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டது. மாகாண அரசாங்கங்களைக் கலந்தாலோசிக்காமலேயே ஆங்கிலேய அரசாங்கம் இந்தியத் துருப்புகளை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தத் தொடங்கியது. அம்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1939-ம் ஆண்டு மாகாண காங்கிரஸ் அரசுகள் பதவி விலகியபோது, மொரார்ஜி தேசாயும் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அச்சூழ்நிலையில் குஜராத் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் செயலராக மீண்டும் பொறுப்பேற்ற அவர் 1946-ம் ஆண்டு வரை அப்பதவி வகித்தார். குஜராத் வித்யாபீடத்தின் வேந்தராகவும் அவர் விளங்கினார்

அண்ணல் காந்தியின் அகிம்சைப் போராட்டத்தில் ஆர்வத்தோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் பங்கேற்ற அவர், பலமுறை சிறை சென்றார். "செய் அல்லது செத்துமடி' என்ற மகாத்மாவின் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு, 1942-ம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டார். அதன் காரணமாகக் கைது செய்யப்பட்ட அவர் 1945-ம் ஆண்டுதான் விடுதலை ஆனார்.

1946-ம் ஆண்டு நடைபெற்ற மாகாண தேர்தல்களுக்குப் பிறகு மீண்டும் பி.ஜி. கெர் தலைமையிலான அரசாங்கம் அமைந்தபோது, தேசாய் அதில் உள்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1952-ம் ஆண்டு புல்சார் தொகுதியில் போட்டியிட்டு வென்று பம்பாய் மாகாண முதலமைச்சர் ஆனார்.

1956 வரை அப்பதவியில் இருந்த அவர் பின்னர் ஜவாஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1956, நவம்பர் 14 முதல் மத்திய அரசில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1958 மார்ச் 22 முதல் இந்தியாவின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். நிதி அமைச்சராகப் பத்து நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பித்த பெருமைக்குரியவர் அவர்.

மூத்த தலைவர்கள் எல்லாம் ஆட்சிப்பணியைத் துறந்து கட்சிப்பணிக்குச் செல்ல வேண்டும் என்ற காமராஜரின் திட்டத்தை ஏற்று 1963-ம் ஆண்டு அவர் பதவி விலகினார். 1964-ம் ஆண்டு பண்டித நேருவின் மரணத்தால் இந்திய அரசியலில் ஒரு மாபெரும் வெற்றிடம் ஏற்பட்டது. இனி இந்தியாவை வழிநடத்தப் போகிறவர் யார்? அடுத்த இந்தியப் பிரதமர் யார் என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுந்தன.

அச்சூழ்நிலையில் மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவிக்குப் போட்டியிட விரும்பினார். ஆனால், இந்திய தேசியக் காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் காமராஜர், லால்பகதூர் சாஸ்திரியை அப்பதவிக்கு முன்னிறுத்த விரும்பினார். தலைவர் காமராஜரின் அறிவுரையை ஏற்று மொரார்ஜி தேசாய் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு, பிரதமர் பதவியை லால்பகதூர் சாஸ்திரிக்கு விட்டுக் கொடுத்தார். சாஸ்திரியின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தக் குழுவுக்குத் தலைவராக மொரார்ஜி தேசாய் பொறுப்பேற்றார்.

1966-ம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி மரணமடைந்தபோது, பண்டித நேருவின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதே சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டது. அடுத்த இந்தியப் பிரதமர் யார் என்ற போட்டியில் மொரார்ஜி தேசாய் மீண்டும் முன் நின்றார். இம்முறை அவர் உறுதியாக இருந்தார். போட்டியிலிருந்து விலகத் தயாராக இல்லை

ஆயினும், ஜனநாயக முறைப்படி நடந்த உள்கட்சித் தேர்தலில், பெருந்தலைவர் காமராஜரின் ஆதரவு பெற்ற இந்திரா காந்தி 355 வாக்குகள் பெற, முதுபெரும் காங்கிரஸ் தலைவரான மொரார்ஜி 169 வாக்குகள் மட்டுமே பெற்று தோற்றுப்போனார். தோல்வியால் துவண்டுவிடவில்லை அவர். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார்.

இந்திரா காந்தியின் அழைப்பை ஏற்று, 1967-ம் ஆண்டு முதல் இந்தியாவின் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால், 1969-ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான நீலம் சஞ்சீவரெட்டியைத் தோற்கடிக்க பிரதமர் இந்திரா காந்தி முனைந்ததோடு, தேசாயிடமிருந்து நிதித்துறையையும் பறித்துக் கொண்டதால், மொரார்ஜி தேசாய் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

இந்திரா காந்தியின் நடவடிக்கைகளால் 1969-ம் ஆண்டு இந்திய தேசியக் காங்கிரஸ் பிளவுபட்டபோது, இந்திரா காந்திக்கு எதிராக ஸ்தாபன காங்கிரஸில் இணைந்தார். இந்திரா காந்தியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

1975-ம் ஆண்டு இந்திரா காந்தி குஜராத் மாநில சட்டசபையைக் கலைத்ததால், மொரார்ஜி தேசாய் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். அதன் விளைவாக, அவ்வாண்டு ஜூன் மாதம் குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜனதா முன்னணி அறுதிப் பெரும்பான்மைபெற்று பாபுபாய் படேல் முதல்வரானார்.

1975 ஜூன் 12 அன்று, அலகாபாத் நீதிமன்றம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்த பிறகு, மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தினார். ஆனால், இந்திரா காந்தி பதவி விலகவில்லை, இந்தத் தேசத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். அடிப்படை உரிமைகள் முடக்கி வைக்கப்பட்டு, அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பத்திரிகைச் சுதந்திரம் பறிபோனது

பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் 1975-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மொரார்ஜி தேசாய், 1977-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்

சிறையிலிருந்து வெளிவந்த தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கினர். பின்னர் ஏற்பட்ட ஜனதா புரட்சியின் விளைவாக, மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 542 இடங்களில் 330 இடங்களைக் கைப்பற்றி ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றது

1977-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி, 81 வயதான மொரார்ஜி தேசாய் இந்தியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றார். பதவி ஏற்றவுடன் அவசரநிலைக்காலக் கொடுமைகளை நீக்கி, ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அடிப்படை உரிமைகள், பத்திரிகைச் சுதந்திரம், அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை மீட்டெடுத்தார். 44-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட ஊறுகளைக் களைந்தார்.

மாநில சட்டசபைகளும், மத்திய நாடாளுமன்றமும் கொண்டுவரும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதுதானா என ஆய்வு செய்யும், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டன.

'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது' என்ற அண்ணல் காந்தியின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு கிராமங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சிறுதொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நிலவரியைக் குறைத்தல் மற்றும் பெருமளவில் மானியம் அளித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் விவசாய முன்னேற்றம் வேகப்படுத்தப்பட்டது.

ஏழை விவசாயிகளின் வாழ்வில் பெரிதும் அக்கறை கொண்டிருந்த அவர், வேலைவாய்ப்பற்ற கிராமப்புற மக்களுக்காக, வேலைக்கு உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம், கிராமங்களில் சாலைகளை அமைத்தல், பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அது மட்டுமன்றி, 'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற தேசியக் கவி பாரதியின் வார்த்தைகளை உண்மையாக்கிக் காட்டியவரும் அவரே. ஏனென்றால், ஒவ்வோர் உணவு விடுதிகளும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
அதை ஏற்றுக்கொண்ட உணவு விடுதிகளுக்கு மட்டுமே உரிமம் அளிக்கப்பட்டது. அந்த 'ஜனதா சாப்பாடு' ஏழைகளின் பசியைப் போக்கி அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது

இரண்டு ஆண்டுகள், மிகச்சரியாகச் சொல்வதெனில் 857 நாள்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், அவருடைய ஆட்சிக்காலம் கடும் பஞ்சங்களையும், இயற்கைச் சீற்றங்கள் பலவற்றைவும் எதிர்கொள்ள வேண்டியிருந்தபோதிலும் மக்கள் எந்த வகையிலும் இன்னல் அனுபவிக்காவண்ணம் மிகச்சிறப்பான, நிர்வாகத் திறமை மிகுந்த, ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான ஆட்சியை மக்களுக்குத் தந்தார்.

சர்வதேச அளவிலே பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் உயர்ந்தபோதிலும், தனது திறமையான நிர்வாகத்தால் விலைவாசியைப் பெரிதும் கட்டுக்குள் வைத்திருந்தார். ரேஷன் பொருள்கள் மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கச் செய்தார்.

அதன் மூலம் உற்பத்திப் பொருள்கள் அநியாய விலைக்கு விற்கப்படுவதையும், அப்பாவி மக்கள் ஏமாறுவதையும் தடுத்தார். உற்பத்திப் பொருள்களின் மீது அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி.) குறிக்கப்பட வேண்டும் என்பதை அறிமுகப்படுத்தி அதைக் கட்டாயமாக்கினார்.

இன்றைக்கு ஒரு மாநிலத்துக்குள்ளேயே விவசாயப் பொருள்களை ஓரிடத்தில் இருந்து, வேறொரு இடத்துக்குக் கொண்டுசெல்ல முடியாத நிலை நிலவுகிறது. ஆனால், மொரார்ஜி தேசாய் இந்தியா முழுமைக்கும் ஒரே வேளாண்மைப் பிராந்தியமாக அறிவித்து விவசாயிகளின் விளைபொருள்கள் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வகை செய்தார். அதன் மூலம் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வழி ஏற்படுத்தினார்

உள்நாட்டில் மட்டுமன்றி, அயலுறவுக் கொள்கையிலும் அவர் தூய்மையைக் கடைப்பிடித்தார். அவர் தூய அணி சேராக் கொள்கையை அறிவித்து அதைச் செயல்படுத்தினார். அமெரிக்காவுடனும், சோவியத் ரஷியாவுடனும் சம மட்டத்திலான உறவுகளைப் பராமரித்தார்.

பாகிஸ்தானின் 'ஜியாஉல் ஹக்' உடன் நேசக்கரம் நீட்டி அந்நாட்டுடன் நல்லுறவைப் பராமரித்தார். சீனாவுடன் ராஜதந்திர உறவுகளை மறு சீரமைத்து பலப்படுத்திக் கொண்டார். அமைதிக்காகக்கூட அவர் அணு ஆயுதம் வெடிக்க விரும்பவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அண்ணல் காந்தியின் அப்பழுக்கற்ற தொண்டரான அவர், இந்திய தேச மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்துக் கொடுத்ததே அவர் செய்த மாபெரும் சாதனையாகும்.

ஜனசங்கத்தினர், ஜனதா கட்சியிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் ஒரே சமயத்தில் அங்கம் வகித்ததால் எழுந்த இரட்டை உறுப்பினர் பிரச்னையாலும், சரண்சிங் ஜனதா கூட்டணியிலிருந்து விலகியதாலும், 1979-ம் ஆண்டு ஜூலை 15-ம் நாள் மொரார்ஜி தேசாய் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார்.

தனது 83-வது வயதில் பிரதமர் பதவியிலிருந்து மட்டுமன்றி, அரசியலில் இருந்தும் அவர் ஓய்வுபெற்றார். அதன் பின்னர், மும்பை மாநகரத்தில் வாழ்ந்த அவர், 10 ஏப்ரல் 1995-ம் ஆண்டு தனது 99-வது வயதில் இப்பூவுலகை விட்டு மறைந்தார்.

பொது வாழ்வில் நல்ல பல விழுமியங்களையும், அஞ்சாத நேர்மைத் துணிவையும், கொள்கை உறுதியையும்  கொண்டிருந்த அவர், அடிக்கடி சொல்லும் வார்த்தை "ஒருவர் தன் வாழ்வில் உண்மைக்கும், தனது நம்பிக்கைக்கும் விரோதமில்லாமல் செயல்பட வேண்டும்' என்பதே. அவ்வார்த்தைகளுக்கு அவரே மிகச்சிறந்த உதாரணம்.


- நா.சேதுராமன்
வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர்,
பெரியார் கலைக்கல்லூரி, கடலூர்

நன்றி: தினமணி (29.02.2012)

.