நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

21.8.16

புதிய கல்விக் கொள்கை மிக அவசியம்!


இன்றைய சூழலில் புதிய கல்விக் கொள்கை மிக அவசியம்
அண்ணா பல்கலைக்கழக 
முன்னாள் துணைவேந்தர்
ஏ.கலாநிதி திட்டவட்டம்


 
சென்னையில் நடந்த தேசிய கல்விக் கொள்கை -2016 குறித்த கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி பேசுகிறார்


சென்னை, ஆக. 20: இன்றைய சூழலில் புதிய கல்விக் கொள்கை மிக அவசியம் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி), வித்யா பாரதி, சம்ஸ்க்ருத பாரதி, காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி மையம், தேசிய சிந்தனைக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில், தேசிய கல்விக் கொள்கை -2016 குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் அண்ணா பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், காமன்வெல்த் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி மைய இயக்கு நருமான ஏ.கலாநிதி பேசியதாவது:

பண்டைய கல்விமுறையை ஒழித்தால்தான் இந்தியர்களை அடிமைகளாக்க முடியும் என்று கருதி, 1835-ம் ஆண்டு மெக்காலே வேறொரு கல்விக் கொள்கையை உருவாக்கினார். அதைத்தான் நாம், மாற்றியும் திருத்தியும் பின்பற்றி வருகிறோம். அதைக் கைவிட வேண்டிய நேரம் வந்துள்ளது.

இன்றைய சூழலில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியமானது. 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறலாம் என்பதை 5-ம் வகுப்பு வரை என்று மாற்றுவது நல்ல விஷயம். பொறியியல் கல்வி கற்பவர்களில் 87 சதவீதம் பேர்தான் வேலைக்கு செல்வதற்கு தகுதியான அளவுக்கு உள்ளனர். இதற்கு காரணம் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இல்லாததுதான். மாணவர்களுக்கு சிறந்த பண்பு நலன்களையும் கற்றுத்தர வேண்டும்.

-இவ்வாறு கலாநிதி கூறினார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன்:

இந்தியாவில் 35 கோடிக்கும் அதிகமானோர் படிக்கும் வயதில் உள்ளனர். எனவே, இந்தியாவுக்கு கல்வி என்பது மிக முக்கியமானது. பள்ளிக் கல்வி என்ற அஸ்திவாரம் சரியாக இருந்தால்தான் உயர்கல்வி தரமானதாக இருக்கும். ஆனால், நம் நாட்டில் பள்ளிக் கல்வி குறிப்பாக அரசுப் பள்ளிகள் கவலை அளிக்கும் வகையிலேயே செயல்படுகின்றன.

உலக அளவில் பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் தென்கொரியா, பின்லாந்து நாடுகளில் வகுப்பறைகள் டிஜிட்டல் மயமாகிவிட்டன. வை-பை இணையதள வசதி இல்லாத வகுப்பறைகளே இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில் அரசுப் பள்ளிகளில் நாற்காலிகள், தண்ணீர், கழிவறை, சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லை. கல்விக்காக அரசு அதிகமாக செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் கல்விக்காக செலவு செய்வது குறையும்.

நம் நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் உயர் கல்வியின் தரம் குறைகிறது. பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்பிக்கப்பட்டால்தான் தரமும், ஆராய்ச் சியும் அதிகரிக்கும். பல்கலைக்கழகங் கள் இல்லாவிட்டாலும் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரமாவது வழங்க வேண்டும்.

அரசுப் பள்ளிகள், பள்ளிக் கல்வி, கல்லூரி கல்வியில் இருக்கும் பல்வேறு குறைபாடுகள் தேசிய கல்விக் கொள் கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது 5-ம் வகுப்பாக குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மட்டுமே இருக்க நினைப்பவர்களுக்கு சமச்சீர் கல்வி இருக்கலாம், ஆனால், வெளிமாநிலங்கள், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டுமானால் சிபிஎஸ்இ போன்ற கல்வித் திட்டங்கள் வேண்டும்.

பின்லாந்து போன்ற நாடுகளில் கல்விக் கொள்கையில் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியுடன் கலந்து ஆலோசித்த பிறகே கல்விக் கொள்கையை உருவாக்குகிறார்கள். தரமான பள்ளிக் கல்வி, பல்கலைக்கழக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

ஐஐடி நுழைவுத் தேர்வு போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தமிழக மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கல்வி என்பது வெறும் படிப்பு, அறிவுக்காக மட்டுமாக இல்லாமல் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாணவர்களை தயார்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கேற்ற மாற்றங்களுடன் புதிய கல்விக் கொள்கை இருக்க வேண்டும்.

மூத்த பத்திரிகையாளர் மாலன்:


புதிய கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புகள் அரசியல் தளத்தில் இருந்துதான் வருகிறது. அறிவார்ந்த தளத்தில் இருந்து வரவில்லை. கேள்வியே கேட்காமல் கீழ்படியச் செய்வது புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். மாணவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கைக்கான நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால் போட்டி மனப்பான்மை குறைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையில், வேண்டுமென்றால் சமஸ்கிருதத்தை 3-வது மொழியாக கற்கலாம் என்று ஒரே ஒரு இடத்தில்தான் கூறப்பட்டுள்ளது. 10 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. அதை 50 லட்சம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

சென்னை விவேகானந்தா கல்லூரி தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் ஆர்.ராமசந்திரன்:

புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்தைத் திணிப்பதாக எல்லோரும் கூறுகின்றனர். சமஸ்கிருதம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பது தவறான கருத்து. சமஸ்கிருதத்தில் 5 சதவீதம் அளவுக்குதான் ஆன்மிகக் கருத்துகள் உள்ளன. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்தையும் படிக்கலாம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் முதல்வர் பிரேமா மகாதேவன்:

தரமான கல்வியின் மூலமே இந்தியா சிறந்த நாடாக மாற முடியும். மெக்காலே கல்விக் கொள்கையின் தொடர்ச்சியாகவே தற்போதைய கல்விக் கொள்கை உள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களைத் தேடிச் சென்ற காலம் மாறி, தற்போது மாணவர்களைத் தேடி ஆசிரியர்கள் செல்கின்றனர். இந்தக் கல்வி முறை நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை பற்றி பலரும் நிறை குறைகளைச் சொல்கின்றனர். அதில் எந்தக் குறையும் இல்லை. மனிதனை முழு மனிதனாக்கக் கூடிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் இயக்குநர் சதானந்தன், ஏபிவிபி துணைத் தலைவர் எஸ்.சுப்பையா, சாஸ்த்ரா பல்கலைக்கழக டீன் எஸ்.வைத்திய சுப்பிரமணியம், பேராசிரியர் பி.கனகசபாபதி உள்ளிட் டோரும் பேசினர். 

நன்றி: தி இந்து (21.08.2016)
.