நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
மகளிர் திலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகளிர் திலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.3.14

வரலாற்றில் வாழும் வள்ளியம்மை

 -லா.சு.ரங்கராஜன்




 தில்லையாடி வள்ளியம்மை
(பிப்ரவரி 22, 1898 - பிப்ரவரி 22, 1914)

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நலனுக்காக பாரிஸ்டர் மோகன்தாஸ் காந்தி அந்நாட்டின் வெள்ளையர் அரசுக்கு எதிராக நடத்திய அகிம்சாபூர்வமான சத்தியாக்கிரகங்கள் மூன்று கட்டங்களாக நிகழ்ந்தன.
அவ்வறப் போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்தவர்கள் பற்பலர். ஆனாலும், இளம் வீராங்கனை வள்ளியம்மை போன்று அண்ணல் காந்தியின் உள்ளத்தை உருக்கியவர்கள் ஒரு சிலரே.

அரசு சட்ட விதிகளின்படி நடைபெற்ற திருமணங்கள் மற்றும் கிறிஸ்தவ திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்றம் மார்ச் 13, 1913 அன்று தீர்ப்பளித்தது. அதன்படி, இந்தியாவிலோ தென்னாப்பிரிக்காவிலோ இந்து, முஸ்லிம், பார்ஸி முறைப்படி நடந்தேறிய திருமணங்கள் ஏதும் சட்டப்படி செல்லாது என்றானது.

மற்ற அநீதிகளுடன் இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து இறுதிக்கட்ட சத்தியாக்கிரகம் முடுக்கிவிடப்பட்டது. அதில் பெண்களும் பங்கேற்க வேண்டுமென காந்திஜி கூறினார்.

அதன்படி, அக்டோபர் 1913 இறுதியில் ஜோஹன்னஸ்பர்க் நகரிலிருந்து நியூகாஸிலுக்கு புறப்பட்ட பெண்கள் பேரணியில், வள்ளியம்மையும் அவரது தாயாரும் சேர்ந்து கொண்டனர். பெண்கள் கைது செய்யப்படாததால் அந்த அணி சட்டவிரோதமாக டிரான்ஸ்வால் மாகாணத்தை நோக்கிச் சென்றது. அதன் எல்லையில் அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு டிசம்பர் 22, 1913 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூன்று மாத கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் படுமோசமான உணவு, கடுமையான வேலைகள், ஜெயில் துணிமணிகளை துவைத்தல், கட்டாந்தரையில் படுக்கை. அதனால் சிறையில் இருந்தபோதே வள்ளியம்மை நோய்வாய்ப்பட்டார். பின்னர், பாரிஸ்டர் காந்திக்கும் அரசு உள்விவகார மந்திரி ஜெனரல் ஸ்மட்ஸுக்கும் ஏற்பட்ட சமரச உடன்பாட்டிற்குப் பிறகு, தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே (பிப்ரவரி 11, 1914இல்) பெண் சத்தியாக்கிரகிகள் விடுவிக்கப்பட்டனர்.

வள்ளியம்மையின் தந்தை ஆர். முனிசாமி முதலியாரின் பூர்வீகம் பாண்டிச்சேரி. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக குடியேறிய சிலருள் இவரும் ஒருவர். பாரிஸ்டர் காந்தியின் சாத்வீக எதிர்ப்பு இயக்கங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்ததால் இவரால் 1913-இல் நடந்த இறுதிக்கட்டப் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை.

இவரது மனைவி ஜானகியம்மை அன்றைய தஞ்சை ஜில்லாவின் (இப்போது நாகை மாவட்டம்) தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்தவர். மகள் வள்ளியம்மை பிறந்தது (1898) வளர்ந்தது எல்லாமே தென்னாப்பிரிக்காவில் தான். அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி. 1913 போராட்டத்தின்போது அவருக்கு வயது பதினாறு.

சிறை சென்ற அன்றே வள்ளியம்மையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறைச்சாலையில் படுத்த படுக்கையாகவே இருந்தார். பிப்ரவரி 11, 1914 அன்று விடுதலையானபோது அவருக்கு கடும் டைபாய்டு காய்ச்சல். விடுதலையான இடத்திலேயே சில நாள்கள் தங்கி சிகிச்சை பெற
நேர்ந்தது.

அண்ணல் காந்தி, தமது ஆங்கிலேய நண்பர் போலக்குடன் அங்கு சென்று பார்த்தார். எலும்பும் தோலுமாக படுத்துக்கிடந்த அப்பெண்ணைக் காண காந்திஜிக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அவர்களுக்கிடையே நடந்த குறுகிய உரையாடலை காந்திஜி தமது சுயசரிதையில் இவ்வாறு பதிந்துள்ளார்:

"வள்ளியம்மா, நீ ஜெயிலுக்குப் போனதற்காக வருந்துகிறாயா?' என்று கேட்டேன்.

"வருத்தமா? இப்போது என்னைக் கைது செய்தாலும் திரும்பவும் ஜெயிலுக்குப் போகத் தயாராக இருக்கிறேன்' என்றாள் ஈனக்குரலில்.

"ஆனால் அப்படிப் போனால் உனக்கு மரணமும் நேரிடலாமே?' என்றேன்.

"அதனால் என்ன? தாய் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்ய யாரேனும் தயங்குவார்களா?' என்று பதிலிறுத்தினாள். 

அதற்குச் சில நாட்களுக்குப் பின் (பிப்ரவரி 22, 1914 அன்று) வள்ளியம்மை இறந்து போய்விட்டார்' 

(சுயசரிதம், அத்தியாயம் 40).

வள்ளியம்மையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாரிஸ்டர் காந்தி தமது  ‘இந்தியன் ஒபீனியன்' வார இதழில் (25-2-1914) வெளியிட்ட செய்தியில், "அவ்விளம் பெண்ணின் (வள்ளியம்மை) எதிர்பாரா திடீர் மரணம் ஓர் கடுந்துயர் நிகழ்வு. இந்தியாவின் மேதக்க உத்தம புத்திரியின் அகால மறைவு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டது. ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி எழுப்பாமல் அப்பெண் தனது கடமையைச் செய்தாள். மகளிர்க்குரிய மன உரம், பெருமிதம், சீரிய பண்பு ஆகியவற்றின் எடுத்துக்காட்டாகத் திகழும் அவளது நினைவை இந்திய சமூகத்தினர் அனைவரும் மனதில் பதிக்க வேண்டும். அவளது குடும்பத்தினர்க்கு எங்களது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டார். இவ்விரங்கல் செய்தியை அடுத்து வள்ளியம்மையின் வாழ்க்கைக் குறிப்பையும் காந்திஜி அவ்விதழில் வெளியிட்டார்.

காந்திஜியின் மூத்த சகோதரர் லக்ஷ்மிதாஸ் காந்தி மார்ச் 9, 1914 அன்று இந்தியாவில் காலமானார் என்ற செய்தி வந்தது. அதையொட்டி காந்திஜிக்கு தென்னாப்பிரிக்காவின் பல இடங்களிலிருந்து ஏராளமான அனுதாபத் தந்திகள் வந்து குவிந்தன.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காந்திஜி  ‘இந்தியன் ஒபீனியன்' (18-3-1914) இதழில் இவ்வாறு எழுதினார்: "மறைந்த என் தமையனார் தான் தந்தையின் ஸ்தானத்திலிருந்து எனக்கு வாழ்வளித்தார். நான் லண்டனில் பாரிஸ்டர் படிப்பதற்கு பண உதவி புரிந்தார். அவர் மறைவு எனக்கு உண்மையிலேயே பேரிழப்பு. அவ்வாறாயினும், வள்ளியம்மையின் அகால மரணம் என் தமையனின் மறைவைக் காட்டிலும் எனக்குப் பேரிடியான செய்தி என்றே தோன்றுகிறது..”

தில்லையாடி வள்ளியம்மையின் அஞ்சா நெஞ்சத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து தென்னாப்பிரிக்காவில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் காந்திஜி மனமுருகிப் பேசியுள்ளார். 

இந்தியாவுக்கு திரும்பவிருந்த காந்திஜிக்கும் கஸ்தூர்பாவுக்கும் ஜோஹன்னஸ்பர்க் நகரில் 1914 ஜூலை அன்று கூட்டப்பட்ட ஓர் மாபெரும் பிரிவுபசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் காந்திஜி உணர்ச்சி பொங்க, "இந்நகர், வள்ளியம்மாளை அர்ப்பணித்துப் பெருமை சேர்த்துள்ளது. ஓ, அந்த இளம் பெண்! நான் இப்போது பேசும்போது அவளது உருவம் என் கண்முன் நிற்கிறது. சத்தியத்துக்காக உயிர் நீத்தவள் அவள். தன்னம்பிக்கையே அவளது ஆயுதம். எனக்கிருக்கும் கல்வியறிவு அவளுக்கில்லைதான். சத்தியாக்கிரகம் என்பதன் தாத்பரியம்கூட அவளுக்குத் தெரிந்திருக்காது. சாத்விகப் போராட்டத்தினால் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு என்ன நன்மை ஏற்படும் என்பதையும் அவள் அறியாள். ஆயினும், தனது நாட்டு மக்களுக்காக அவள் உத்வேகத்துடன் சிறை சென்றாள். பின்னர் தன் உடல்நலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வெளியே வந்தாள். சில நாட்களில் இறந்து போனாள்...” என்று கூறினார்/
(‘இந்தியன் ஒபீனியன்' கோல்டன் நம்பர், 1914).

ஜோஹன்னஸ்பர்க்கில், ஜூலை 15, 1914 அன்று வள்ளியம்மைக்கும் நாகப்பனுக்கும் ஒரு நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டபோது பேசிய காந்திஜி, "வள்ளியம்மாவின் முகத்தைப் போன்று நாகப்பனின் முகம் எனக்கு அவ்வளவு தெளிவாக ஞாபகம் இல்லை (தென்னாப்பிரிக்க சாத்வீகப் போராட்டத்தில் சிறை சென்றவர்களில் நாகப்பனும் ஒருவர்; இளைஞன். கடுங்காவல் சிறைவாசத்தின்போது சரியான உணவும் கம்பளி உடையும் தராமல் சிறைக்காவலர்கள் அவரைத் திறந்த வெளியில் புல்வெட்டும் வேலை வாங்கியதால், நிமோனியாவால் பீடிக்கப்பட்டு ஜூலை 6, 1902 அன்று மரணமடைந்தார்). அவ்விருவரிடத்தும் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் மன உறுதியும், பொறுமையும், நாட்டுப் பற்றும், சாவுக்கும் அஞ்சாத மனத் திண்ணமும் இருந்தன. இவற்றைவிட ஒரு மனிதனுக்கு வேறு என்னதான் வேண்டும்?' என்று புகழஞ்சலி செலுத்தினார்.

வள்ளியம்மையின் உயிர்த் தியாகத்தைப் போற்றும் வகையில்  ‘வள்ளியம்மாள் மண்டபம்' ஒன்றை தென்னாப்பிரிக்க இந்தியர்கள் நிறுவினர்.

இதுகுறித்து தனது  ‘தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' என்ற நூலில் காந்திஜி எழுதியதாவது: "வள்ளியம்மா அவளுடைய சேவையைக் கொண்டு ஓர் ஆலயத்தையே நிர்மாணித்துக் கொண்டு விட்டாள். அவளது கீர்த்தி மிகு புனித உருவம் அநேகர் உள்ளங்களில் இன்றுகூடப் பதிந்து நிற்கும். இந்தியா வாழும்வரை தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக வரலாற்றில் வள்ளியம்மாளின் பெயரும் நிலைத்து நிற்கும்'.

ஆம்! அவர் மறைந்து நூறாண்டு கடந்த பின்பும் அது நிலைத்து நிற்கத்தான் செய்கிறது.

.

குறிப்பு: கட்டுரையாளர், காந்திய அறிஞர்.
இந்த ஆண்டு தில்லையாடி வள்ளியம்மையின் நூறாவது நினைவு ஆண்டு.

நன்றி: தினமணி (22.02.2014)

காண்க: தில்லையாடி வள்ளியம்மை (விக்கி)

இதையும் காண்க: காந்தியைக் காத்த தமிழ்ப்பெண் (தேசமே தெய்வம்)

 .

6.4.12

சக்கரவர்த்தியின் மனைவி


 அலர்மேலு மங்கம்மாள் (எ) திருமதி மங்கா ராஜாஜி
(1887 – 1916)


பெங்களூரில் இருந்து மெட்ராஸ் போகிற வழியில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் என்கிற ஊர் ஒன்று இருக்கிறது. இப்போதும் ரயிலில் பிரயாணம் செய்யும் போது இந்த ஊரில் சில வினாடிகள் ரயில் நின்று விட்டுச்  செல்லும் போது பார்க்கலாம். இந்த ஊருக்கு அருகே உள்ள லட்சுமிபுரம் என்கிற கிராமத்தில் பிறந்தவள் அவள். பெயர் அலர்மேலு மங்கம்மாள் (1887 – 1916). சுருக்கமாக அலமேலு என்றோ மங்கா என்றோ அழைப்பார்கள். பெயரும் ஊரும் லட்சுமிகரமாக இருந்தாலும் அவள் பிறந்த குடும்பம் என்னவோ ஏழைக் குடும்பம்.

ங்காவின் தந்தையார் திருமலை சம்பங்கி அய்யங்கார் ஊர் ஊராகச் சென்று ஹரி கதைகள் சொல்லுபவர். இப்படிப் பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மங்கா தான் ராஜாஜி என்று நாடே புகழும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்களின் மனைவி....

ராஜாஜியின் சகதர்மிணியும் அவரது நிழலுமான திருமதி மங்காவின் வாழ்க்கை குறித்த அறியப்படாத தகவல்களைக் கூறுகிறது தமிழ்  ஹிந்துவில் வெளியான இக்கட்டுரை.  



இதையும் காண்க:

ராஜாஜி 

.

22.2.12

அஹிம்சை மந்திரத்தின் அரும்பொருளானவர்



தில்லையாடி வள்ளியம்மை 
(நினைவு நாள்: பிப். 22 )
1915-ம் வருடம், ஏப்ரல் மாதம், 30-ம் தேதி. தரங்கம்பாடியிலிருந்து புறப்பட்ட இரண்டு மாட்டு வண்டிகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தில்லையாடியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. முதல் வண்டியில் மகாத்மா காந்தியும்,  அன்னை கஸ்தூரிபாயும் அமர்ந்திருக்கிறார்கள்.
வண்டிகள் தில்லையாடி எல்லையை மிதிக்கின்றன. உணர்ச்சியை வென்ற மகாத்மாவின் மனம் அப்பொழுது உணர்ச்சி வசப்படுகிறது. கண் கலங்குகிறார். வண்டியை விட்டு இறங்குகிறார். கீழே குனிகிறார். இரு கரங்களையும் குவித்து மண்ணை அள்ளி எடுக்கிறார். கண்களில் ஒற்றிக் கொள்கிறார்.
என்ன புண்ணியம் செய்து விட்டது அந்த மண்? அது சாதாரண மண் அல்ல; காந்திஜி தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உயிர் நீத்த வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய தியாகச் செம்மல்களைத் தந்த வீர மண் அது. தென்னாப்பிரிக்க அரசாங்கம் சத்தியாக்கிரகிகளுக்குக் கொடுத்த தொல்லைகள் பயங்கரமானவை. அந்தத் தொல்லைகளைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் லட்சியம் ஒன்றையே உயிராகக் கொண்டு சிறை சென்ற வீரப் பெண்மணி, தில்லையாடி வள்ளியம்மை.
போராட்டத்தில் ஈடுபட்டு, உடல் நலிவுற்று படுக்கையில் இருந்தார் அந்த வீரப் பெண்மணி. அப்பொழுது காந்திஜி கேட்டார்: ”வள்ளியம்மை! நீ சிறை சென்றதற்காக வருந்துகிறாயா?”
”வருத்தமா? இப்போது கூட இன்னொரு தடவை கைது செய்யப்பட்டால், நான் சிறைக்குச் செல்லத் தயார்” என்று வள்ளியம்மை பதில் அளித்தாள்.
”அதனால் நீ இறந்து போக நேர்ந்தால்?” என்று புன்முறுவலுடன் தொடர்ந்து கேட்டார் காந்திஜி.
”அதை நான் பொருட்படுத்த மாட்டேன். தாய்நாட்டிற்காக உயிரைக் கொடுக்க யார்தான் விரும்ப மாட்டார்கள்?” என்று கேட்டு காந்தியையே நெஞ்சுருக வைத்தாள் வள்ளியம்மை.
அதற்குப் பிறகு, வள்ளியம்மை சில நாட்கள் கூட உயிருடன் இருக்கவில்லை.
அவள் மரணத்தைப் பற்றி மகாத்மா கூறினார்: ”வள்ளியம்மையின் தொண்டு அழியாதது. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரக சரித்திரத்தில் வள்ளியம்மையின் பெயர் நீங்காத இடம் பெற்றிருக்கும்.”
நன்றி: ஆனந்த விகடன் / கூட்டாஞ்சோறு 


 காண்க:






19.11.11

பூ ஒன்று புயலானது!


ஜான்சி ராணி லட்சுமிபாய்

(பிறப்பு: நவ. 19)
“இந்தப் பூமி இறைவனுக்குச் சொந்தம்; இந்த நாடு சக்கரவர்த்திக்குச் சொந்தம்; இந்த ராஜ்யம் ராணி லட்சுமிபாயின் அதிகாரத்துக்கு உட்பட்டது” என்று பிரகடனம் செய்தார்கள் தேசிய வீரர்கள்.
தேசிய சிந்தனையால் எழுந்த சுதந்திரப் போராட்டமான 1857ல் புரட்சிக் கனல் தெறித்தது; பாரத மக்களின் வீர உணர்வு சிலிர்த்தது.
மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான வீர சாவர்க்கர் தனது எரிமலை (அ) முதலாவது இந்திய சுதந்திர யுத்தத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாயை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்:
“உண்மை சரித்திராசிரியர்களே! தேச பக்தர்களே! உங்களுடைய வீர சங்குகளை வானளாவ முழக்குங்கள்! ஏனெனில், மிகக் கீர்த்தி வாய்ந்த இரண்டு வீரர்கள் சரித்திர மேடைக்கு வருகின்றனர். அதிருப்தி, அமைதி-யின்மை என்னும் கருமேகங்களால் பரத கண்டம் முழுவ-தும் இருண்டு கிடந்த சமயத்-தில் இந்தியா முழுவதும் மங்காத நட்சத்திரங்களாக ஒளி வீசத் திகழ்ந்தவர்கள் அந்த இருவரும் தாம். அவர்கள் பாரத அன்னை-யின் ஆரத்தில் இணையற்றுப் பிரகாசிக்கும் ஆழி முத்துக்கள்; இந்தியாவிற்காகத் தங்கள் உயிர்களையும், அர்ப்பணம் செய்த உத்தமர்கள்.
சிவாஜி போன்ற வீர திலகங்களை உற்பத்தி செய்யும் இந்துஸ்தான் ஊற்று வற்றி விடவில்லை என்பதை உலகம் அறியக் காட்டியவர்கள். பரதக் கண்டத்தின் சரித்திரத்தில் கலங்கரை விளக்கமாக விளங்கும் சீலர்கள்; தர்ம யுத்தத்தில் வாள் ஏந்தி, தோல்வியிலும் பெருமை குன்றாத பாரத திலகங்கள்; இவர்கள் தாம் நானாசாஹிப் பேஷ்வாவும், வீர தீர ரமணியான ராணி லட்சுமி பாயும்.”
மக்களின் விருப்பத்தின்படி ஜான்சியின் சிம்மா-சனத்தை அலங்கரித்த லட்சுமிபாய் தனது 11 மாத கால ஆட்சியில் - ஆம், வெறும் 11 மாதம் தான் அரசாட்சியில் வீற்றிருந்த ஜான்சிராணி ஜனங்களின் மனங்கவர்ந்த ராணியாகவே விளங்கினாள்.
எல்லாத் துறைகளிலும் சிறந்த நிர்வாகிகளை நியமித்தாள். கடுமையான சட்டங்கள் மூலம் மக்களின் மனத்தில் அச்சத்தைப் போக்கினாள். கோயில்களுக்கான மானியங்கள் மீண்டும் வழங்கப்பட்டன. மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது குறைகளைப் போக்கினாள். மிகப்பெரிய நூலகத்தை கட்டிய ஜான்சிராணி, பல மொழிகளிலுள்ள நூல்களை மொழி-பெயர்க்க வழி செய்தாள். மொத்தத்தில் ஜான்சியை ஆண்ட மன்னர்களை விட - மங்கையர்க்கரசியாய் விளங்கினாள் லட்சுமிபாய்.
1858, பிப்ரவரி  22ஆம் தேதி, ஆங்கிலேய ஜெனரல் ஷியூ ரோஸின் வெள்ளைப்படைகள் ஜான்சியின் மீதான முற்றுகைப் போரை துவக்கின. வெறித்தாக்குத-லுடன் ஜான்சி கோட்டையின் மதில்களைச் சிதைக்க முயன்றார்கள்.
உயர்ந்த மலைப்பாதைகளுக்கு மேல் கருங்கற்களால் கட்டப்பட்ட 10 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட ஜான்சி கோட்டையை லட்சுமிபாய், மேலும் பலப்படுத்தி யுத்தத்திற்கான வசதிகளுடன் நிர்மாணித்திருந்தாள். காவல், பீரங்கி அறைகள் உட்பட.....
ஜான்சியின் படைபலம் குறைவு. எனினும் சுதந்திர வேட்கையுடன், வீறு கொண்டு ஆவேசத்துடன் ஜான்சி வீரர்கள் வெள்ளைச் சிப்பாய்களை எதிர்த்தனர்.
“மேரா  ஜான்சி நஹீன் டெங்கே!”
(என் ஜான்சியை நான் ஒருபோதும் விட்டுத் தர மாட்டேன்)
ஆங்கிலேயர்கள் ஆண்மையுள்ளவர்களாக இருந்தால் என் வாளுக்குப் பதில் சொல்லட்டும் என அறைகூவல் விடுத்தாள். படை முழுவதற்கும் பொறுப்-பேற்று, தலைமை வகித்து, தாக்குதல், வியூகங்கள் போன்றவற்றை மேற்பார்வையிட்டாள். ஒவ்வொரு வீரனிடமும் சென்று உற்சாகப்படுத்தினாள்; உத்வேகமூட்டினாள்.
இருபதே வயதான லட்சுமிபாய், ஆணுடை தரித்து, வளர்ப்பு மகன் தாமோதரனை முதுகில் வைத்துக் கட்டிக் கொண்டு குதிரையில் வீற்றிருந்து வீரச்சமர் புரிந்த அவள் ஆங்கிலேயருக்கு பெண்புலியாய் தென்பட்டாள்.
அவளது வாள் வீச்சில் பறங்கியர்களின் தலைகள் பனங்காய்களாய் பந்தாடப்பட்டன;  ஆவேசத்துடனும், ஆத்திரத்துடனும் தன்னை நெருங்கிய படைத்தளபதி பௌகரை தனது வாளால் வீழ்த்தினாள். மிரண்டு போய் நின்றனர் ஆங்கிலேயர்கள்.
தேசபக்தர்களின் பீரங்கிகள் வாயடைத்துப் போயின. முக்கியப் படைப்பிரிவு சிதறுண்டது. வெள்ளையர்கள், நான்கு புறமும் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.
அந்த நிலையிலும், லட்சுமிபாய் தம்முடன் இருந்த 20 குதிரை வீரர்களுடன், தோழிகளுடன் பகைவர்களைப் பிளந்து கொண்டு, மற்றொரு புறத்தில் இருந்த தம் சகாக்கள் இருக்கும் இடத்துக்குப் போய் சேர முயன்றார். தன் தோழி மந்தரையைக் கொன்ற ஆங்கிலச் சிப்பாயை ஒரு வீச்சில் வெட்டிச் சாய்த்தார். அதே சமயம் அவருடைய முகத்தில் ஒரு குண்டு பாய்ந்தது.
தம் இரு புறத்திலும் வந்து கொண்டிருந்த தோழிகளையும், ராமச்சந்திர ராவ், ரகுநாத சிங் முதலிய மெய்க் காவலர்களையும் நோக்கி, “யுத்த களத்தில் நான் வீழ்ந்தால், என் உடலை வெள்ளையர்கள் தீண்டாமல் பாதுகாக்க வேண்டியது உங்களுடைய கடமை. உங்களிடம் கடைசியாக, நான் எதிர்பார்க்கும் உதவியும் அதுதான்” என்றாள்.
தாம் பட்ட காயத்தையும் லட்சியம் செய்யாமல் பகைவர்களை வீழ்த்தியபடி முன்னேறிக் கொண்டிருக்கையில் வழியே ஒரு கால்வாய். துரதிருஷ்டவசமாய், புதிய குதிரையால் கால்வாயைத் தாண்ட முடியவில்லை. சூழ்ந்து கொண்டனர் ஆங்கிலேயர்கள்.
ஆங்கிலேயன் ஒருவன் தன் கத்தியால் வெட்டியதால், லட்சுமிபாயின் தலையின் வலதுபுறம் சிதைந்தது; ரத்தவெள்ளம். வலது கண் அதிர்ச்சியால் தெறித்தது. மற்றொருவன் மார்பில் வெட்ட மகாராணி, வீரமங்கை படுகாயம் அடைந்தாள். இருவரையும் ஒரே மூச்சில் வெட்டில் வீழ்த்தினாள்.
ராமச்சந்திர ராவும், மற்றவர்களும் ராணியைத் தாங்கி, அருகிலுள்ள கூரைக் குடிசைக்கு  கொண்டு சென்றனர். தண்ணீர் பருகச் செய்தனர். உடல் முழுவதும் ரத்தமயம். மெது-வாய் கண்ணைத் திறந்தார். வெள்ளையர்களின் தீண்டலுக்கு ஆளாகாத பெருமித உணர்வுடன் புன்முறுவல் செய்தாள். தம் சுவீகாரப் புதல்வரான தாமோதர ராவை அன்புடன் நோக்கினாள்; ஆண்டவனைப் பிரார்த்தித்தாள்; அழியாப் புகழுடம்பைப் பெற்றாள்.
வீர சாவர்க்கரின் வார்த்தைகள் இதுதான்:
“ஒரு பெண் - இருபத்து மூன்று வயது கூட நிரம்ப-வில்லை - ரோஜா புஷ்பம் போன்ற அழகு - மனத்தைக் கொள்ளை கொள்ளும் உயரிய குணங்கள் - பரிசுத்த வாழ்க்கை - இணையற்ற தைரியம் - உவமையற்ற போர்த்திறன் - இவை வேறு எவரிடத்தும், ஒருங்கு வாய்க்கப் பெற்றதில்லை. இவருடைய இதயத்தில் என்றும் அழியாத தேசபக்திச் சுடர் பிரகாசித்துக் கொண்டிருந்தது.”
அந்த தேசபக்திச் சுடர் இன்றும், என்றும் நம் பாரதியர்களின் வாழ்வில் தேசபக்திச் சுடரை ஏற்றிக் கொண்டிருக்கும் - வெளிச்சம் தரும் விளக்காக சுடர்விடும்.       

000000000000000000000000000000 

இங்கிலாந்து நூலகத்தில் ஜான்சி கடிதம்!
ஜான்சி ராணி, தனது கணவரது மறைவிற்குப் பிறகு எழுதிய கடிதம் ஒன்று இங்கிலாந்து நூலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதலாம் சுதந்திரப் போர் துவங்குவதற்கு முன்பாக, அதாவது 1857ஆம் ஆண்டு ஜான்சி பகுதியை ஆட்சி செய்த மன்னர் மரணம் அடைந்தார். மன்னருக்கு வாரிசு இல்லாததால் ஜான்சிப் பகுதியைக் கைப்பற்ற கிழக்கிந்திய கம்பெனியினர் முயற்சி செய்தனர். இதை அறிந்த லட்சுமிபாய் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனி-யின் கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபுவுக்கு பாரசீக மொழியில் எழுதிய கடிதம் தான் தற்போது இங்கிலாந்து நூலகத்தில் உள்ள ஆவண காப்பகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கணவனை இழந்த துயரத்துடன் லட்சுமிபாய் எழுதிய இந்தக் கடிதத்தில், “எனது கணவர் ஜான்சியை ஆட்சி செய்வதற்கு வசதியாக தாமோதர் ராவ் என்ற குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார். எனவே வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கருதி ஜான்சியை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
எனினும் இந்த சுவீகாரப் புத்திரனை வாரிசாக ஏற்றுக் கொள்ளாத டல்ஹவுசி பிரபு, ஜான்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டார். இதனால் வெள்ளையர்-களை எதிர்த்து ஜான்சிராணி 1857 ல் தனது படைகளை திரட்டி போரில் குதித்தார் என்பது வரலாறு.
வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய லிவின் பென்தாம் போரிங் என்பவர் சேகரித்த முக்கிய ஆவணங்களில் இந்த கடிதம் இருந்ததாக லண்டன் நூலக ஆராய்ச்சியாளர் தீபிகா அலாவத் தெரிவித்தார்.          
- ம.கொ.சி. ராஜேந்திரன்
காண்க:

5.11.11

நமது வேரைக் காட்டிய மாதரசி

 
அன்னிபெசன்ட் அம்மையார்  
(பிறப்பு: அக். 1 - மறைவு: செப். 20) 
 
‘இன்று உலகின் எந்தப் பகுதியை நோக்கினாலும் அங்கெல்லாம் தனியரசு காணவேண்டுமென்கிற தவிப்பும்  துடிப்பும் அதற்கான போராட்டங்களும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. எந்த நாடும், அது எவ்வளவு சிறிதானாலும் இன்னொருவரின் ஆதிக்கத்தின்கீழ் இருக்க விரும்பாமல், உள்ள உரம் பெற்று, தங்கள் நாட்டின் பரப்புக் குறைவையோ  பலத்தின் மெலிவையோ எண்ணி ஏங்கிக்கொண்டிராமல், உறுதியுடன் போராடி வெற்றியும் பெற்று வருகின்றன.

அப்படி அன்னியரின் ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப்போர் நடத்தி, வெற்றி கண்டு, உலகிற்கே வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது இந்தியத் திருநாடு.  நம்மைத் தொடர்ந்தே பற்பல நாடுகளும் தங்களைப் பிறரின் அதிகாரப் பிடியிலிருந்தும் அடிமைத்தளையிலிருந்தும் விடுவித்துக் கொண்டன  தொடர்ச்சியான கிளர்ச்சிகளால்!

இந்திய விடுதலைக்காகத் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்துகொண்ட, உழைப்பையும் உதிரத்தையும், ஏன் தங்களின் இன்னுயிரையும் ஈந்த வீரர்கள் எத்தனை எத்தனை பேர்!  இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டின் விடுதலைக்காகக் களமிறங்கிப் போராடியதில் வியப்பில்லை. அது அவர்களின் கடமை; தேவை; கட்டாயம்!  ஆனால் எங்கிருந்தோ அன்னிய மண்ணிலிருந்து இங்கே வந்து குடியேறி, சுதந்திரக் காற்றை சுவாசிக்க இயலாமல் அடிமை இருளில் அவதிப்பட்டுக் கிடந்த நமது மக்களை, ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவும், அவர்களின் குடைகவிழ்ந்து, கோல் சாய்ந்து, கொடியும் வீழ்ந்து, கோட்டை கொத்தளங்களை விட்டுத் தங்கள் குடிபடைகளோடு நாட்டைவிட்டு வெளியேறச் செய்த போராளிகளும் உண்டு.

அப்படி அயர்லாந்து நாட்டிலிருந்து இந்திய மக்களுக்குத் தொண்டு செய்ய வந்து, நமது நாட்டு விடுதலைக்கும், இந்தியப் பெண்களின் வீட்டு விடுதலைக்கும் துணைநின்ற மாதரசிகளில் ஒருவர்  அன்னிபெசன்ட் அம்மையார்!

அன்னி பிறந்தது லண்டனில், 1.10.1847  ல்! ‘‘நான் முக்கால் ஐரிஷ்காரி, கால்வாசி இங்கிலீஷ்காரி’’ என்பார்.  தாய் ஐரிஷ்;  தந்தையைப் பெற்ற பாட்டி ஐரிஷ். தந்தை இங்கிலீஷ்காரர். முன்னோர்களில் ஒருவர் மந்திரியாகவும், இன்னொருவர் லண்டன் மேயராகவும் இருந்திருக்கிறார்கள்.

ஏழைகளுக்குக் கட்டணமில்லாமல் வழக்காடி வந்த வக்கீல் ராபர்ட்ஸ், ‘‘ஏழைகளே வேலை செய்யும் தேனீக்கள். செல்வத்தை உற்பத்தி செய்கிறவர்கள். நியாயம் கோர அவர்களுக்கு உரிமை உண்டு. கருணையின்பேரில் தானம் தரவேண்டியதில்லை’’ என்று சொல்லிவந்த உபதேசம், இளம் வயதிலேயே அன்னியின் மனதில் ஆழப் பதிந்தது.

ஏழைகளுக்கு எவ்வழியிலேனும் தொண்டாற்றத் துடித்த அன்னியை, அவரது அழகில் மயங்கிய பிராஸ்பர்ட் பெசன்ட் என்ற பாதிரியார் காதலித்தார். பாதிரியின் மனைவியானால் அவர் துணையோடு எளியோர்க்கு சேவை செய்ய நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்கள். அன்னியும் அவரை மணக்கச் சம்மதித்தார்.

ஆனால், மணவாழ்க்கையோ அவரது சொந்த வாழ்க்கையிலும் சோகத்தை நிரப்பியது. அன்னிக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தார்கள்.  மகள், கக்குவான் என்கிற தொடர் இருமலால் துவண்டாள். எத்தனையோ மருத்துவங்கள் செய்தும் குழந்தைக்கு அந்த நோய் குணமானபாடில்லை. மகள்படும் அவதியைக் கண்டு அன்னி தினம் தினம் ரத்தக் கண்ணீர் வடித்தார்.

‘குழந்தை என்ன பாவம் செய்தது? ஏன் இந்தத் துன்பம்? கடவுள் இந்தக் கொடுமையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாரா? அப்படியானால் அவருக்குக் கருணை என்பதே இல்லையா? ஒருவேளை கடவுள் என்பதெல்லாம் நமது கற்பனைதானா? அப்படி ஒருவர் கிடையவே கிடையாதா?’ _ இப்படியெல்லாம் எண்ண அலைகள் அவர் இதயத்தில் ஆர்ப்பரித்தன. உள்ளம் கடவுள் சிந்தனையில் ஒருமுகப்பட மறுத்தது.

இந்தத் துன்பங்களோடு ஒருநாள் கணவனின் தூஷணையும் துணைசேர்ந்தது. விரக்தியும், வெறுப்பும் அன்னியை வாழ்க்கையின் விளிம்பிற்கே விரட்டின... உடம்பிலிருந்து உயிருக்கு விடுதலை... அது ஒன்றுதான் இந்த உலகியல் துன்பங்களிலிருந்து நிரந்தரமாக விடுபட ஒரேவழி என்கிற விபரீத முடிவிற்கு வந்தார் அன்னி! ஆம்... தற்கொலைக்குத் துணிந்தார்!

கொடிய தூக்க மருந்தான குளோரோஃபார்ம் சீசாவை எடுத்தார். அதை முகர்ந்து முழுதாக மூச்சை இரண்டுமுறை உள்ளிழுத்தால் போதும்... மீளாத் தூக்கம் தூக்கம்தான்...

சீசாவையும் திறந்துவிட்டார்... ஆனால் அவரது அந்தராத்மா இடித்துரைத்தது. ‘அன்னி! ஏனிந்த கோழைத்தனம்! உனது சொந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள நெஞ்சில் உரமற்ற நீயா, ஏழைகளின் துன்பத்தைத் துடைக்க ஆசைப்பட்டாய்? முடியுமா உன்னால்...?’ எள்ளலும் ஏகடியமுமாக அவரை ஏசியது அந்த மனக்குரல்.

சீசாவை வீசி எறிந்தார் வெளியே! வாழ்க்கைப் பாதையில் இனி தன் பயணத்தைப் பாதியில் நிறுத்துவதில்லை என்று உறுதிகொண்டார்.

ஆனாலும் இத்தனை நாள் கொண்டிருந்த இறை நம்பிக்கையின் மீது அவருக்கு சந்தேகம் மேலும் மேலும் வலுத்தது...  கிறிஸ்தவ மதத்தில் தனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையை புத்தகமாக எழுதினார். அச்சிட்டு வெளியிட்டார். ஆனால் அதில் தனது பெயரைப் போட்டுக்கொள்ளவில்லை.

புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லண்டன் நகர பாதிரியார்கள் பதறினர்... ‘யார் செய்த வேலை இது?’ என்று ஆளைத் தேடும் முயற்சியில் அலைந்தனர்.  இறுதியில் இது அன்னியின் கைங்கர்யம்தான் என்பதைக் கண்டுபிடித்தபோது, கணவரான பாதிரியார் வெகுண்டார். ‘‘வீட்டை விட்டு வெளியே போ’’ என்று அன்னியை விரட்டினார்...

தன் இரு குழந்தைகளோடு வெளியேறிய அன்னி, குடும்பம் நடத்தவும் குழந்தைகளை வளர்க்கவும் படாதபாடுபட்டார்.  கைப்பொருளை விற்றார். தையல் வேலை செய்தார்... சமையல்காரியாக இருந்தார்... ஒரு மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரிந்தார். அப்போது அவருக்கு வயது 26தான்.

பல புத்தகங்களை அவர் எழுதியும், அடிமை நாடுகளுக்கு இங்கிலாந்து அரசு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பேசியும் வந்த நாட்களில், ‘நேஷனல் ரீஃபார்மர்’ என்ற பத்திரிகையிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போதுதான் பிரம்மஞான சங்கத்தின் தலைவி பிளாவட்ஸ்கி அம்மையாரின் அறிமுகம் கிடைத்தது. அந்த சங்கத்தில் சேர்ந்து, பின்னாளில் அந்த இயக்கத்தின் தலைமைப்பொறுப்பையும் அன்னி ஏற்றார்.

1893  ல் அவர் இந்தியாவுக்கு முதன்முதலாக வந்தபோது, ‘‘புண்ணிய பூமிக்கு வந்தேன்’’ என்றார்.  கங்கையில் நீராடி, தனது ஐரோப்பிய உடையைத் துறந்துவிட்டு, அன்று முதல் புடவை உடுத்தலானார். ‘‘பழைய வேதத்தையும், இந்து மதக் கோட்பாடுகளையும் மீண்டும் இந்திய மக்கள் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா பழைய மகோன்னத நிலையை அடையும்’’ என்றார் இந்த ஐரோப்பியப் பெண்மணி.

அன்னி ஈடுபட்ட நான்கு துறைகள்: மதம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி,  சமூக சீர்திருத்தம்,  அரசியல்.

1898  ல் காசியில் அவர் துவக்கிய மத்திய ஹிந்து கல்லூரிக்கு காசி மன்னர் மனை வழங்கினார். 1904 ல் பெண்கள் பள்ளியைத் துவக்கினார். சென்னை அடையாறு உள்பட நாடெங்கும் பல ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பள்ளிகளை ஆரம்பித்தார்.

பிரம்மஞான சபையைச் சேர்ந்தவர்கள் (பிரம்மஞானிகள்), ‘ஜாதி வேறுபாடு பார்க்க மாட்டேன். பெண் குழந்தைக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன். பெண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கமாட்டேன். விதவை மறுமணத்தை ஆதரிப்பேன்’ ஆகிய விதிகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனைவிதித்தார்.

இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காமன்வெல்த்துக்குள் சுயாட்சி வேண்டும் என்று கிளர்ச்சி நடத்தினார். அதற்காக ‘ஹோம் ரூல் லீக்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி, தனது ஆங்கில நாளேடு ‘நியூ இந்தியா’வில் காரசாரமாக எழுதி வந்தார்.

இது ஆங்கிலேய அதிகாரிகளை ஆத்திரமூட்டியது. இதன் விளைவாக, ‘உதகையை விட்டு வெளியேறக் கூடாது’ என்று அன்னிக்கு உத்தரவிட்டார்கள் 1917 ல்!

அப்போதைய நீதிபதி மணி ஐயர், ‘‘இந்த அநீதியைக் கண்டிக்க உலகில் யாருமில்லையா?’’ என்று அமெரிக்க ஜனாதிபதி வில்சனுக்குக் கடிதம் எழுதினார்.

வில்சன், பிரிட்டன் பிரதம மந்திரியை இது சம்பந்தமாகக் கேட்க, அவர் அதிகாரிகளைக் கூப்பிட்டு, அன்னி மீதிருந்த தடை உத்தரவை நீக்க உத்தரவிட்டார்.

அடுத்த ஆண்டில் நடந்த கல்கத்தா காங்கிரசுக்கு அன்னிபெசன்ட் தான் தலைமை ஏற்றார்.

மகாத்மா காந்தியும் நேருவும் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கியபோது, அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு அன்னிபெசன்ட் காங்கிரசிலிருந்து வெளியேறினார். ‘பரிபூரண சுதந்திரம் என்பது மாயை!  கானல்நீர்!  பரஸ்பர ஒத்துழைப்பும் கூட்டுறவுமே நாட்டு வளர்ச்சிக்கு நல்லது’ என்றார். அவர் விருப்பம்போலவே இந்தியா இப்போதும் காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கிறது.

ஐம்பது ஆண்டுகள் இந்திய மக்களுக்காகவே உழைத்த அன்னிபெசன்ட், 20.9.1933 அன்று இயற்கை எய்தினார்.  ஒரு தீர்க்கதரிசியைப் போல அவர் சொல்லிய பல திட்டங்கள் இன்று அமலில் உள்ளதைக் காண்கிறோம்.

ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே இலவச உணவு அளித்து மருத்துவ வசதியும் செய்துதர வேண்டும். பசித்த குழந்தைகளுக்கு பாடம் மட்டும் சொல்லித்தருவது பயனற்றது. வயிற்றுக்கும் சோறிடல் வேண்டும்’ என்று வலியுறுத்தியது அவர்தான்.  ஆனால் அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்துத்தான் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

கிராமப் பஞ்சாயத்துகள் தோன்றி, பள்ளிகள், கிராமத் தொழிற்கூடங்கள், துப்புரவு, மருத்துவம், சிவில் துறைகளில் நீதி வழங்குவது போன்றவற்றை அவை நிர்வகிக்க வேண்டும் என்று அவர் அன்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தார். பின்னாளில் கிராமப் பஞ்சாயத்து போர்டுகள் தொடங்கப்பட்டன.

அன்னிபெசன்ட் மறைந்தபோது மகாத்மா காந்தி...

‘‘1888 க்குப் பிறகு, நான் லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது, மற்ற பலரைப்போல நானும் பிராட்லாவையும் அன்னிபெசன்ட்டையும் போற்றிப் புகழ்ந்தேன். அப்போது நான் யாருக்குமே தெரியாத சாதாரணப் பையன். பிளாவட்ஸ்கி, அன்னிபெசன்ட் ஆகியோரின் பக்கத்தில் நான் நிற்பதையே பெரும் பாக்கியமாகக் கருதியிருந்தேன்.  அவர் இந்தியா வந்து இந்திய மக்களின் இதயங்களில் இடம்பெற்றதும் அவரை அடிக்கடி சந்தித்து உரையாடினேன். எங்களுக்குள் அரசியல் வேற்றுமைகள் இருந்தபோதிலும்கூட அவரிடம் எனக்கிருந்த மரியாதை ஒருபோதும் குறைந்ததில்லை’’ என்றார்.

நன்றி: Erodeit.com
காண்க:

அன்னிபெசன்ட் அம்மையார் (விக்கி)

Annie  Besant 

Indian Home Rule Movement 

The Theosophical Network

Dr. Annie  Besant  (I Love India)

The Theosopical Society  - Adayar
.
Theosophical  Society 

 
 

13.10.11

பாரதியின் நிவேதனம்

 
சகோதரி நிவேதிதை
(மறைவு: அக். 13)
 
அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்
   கோயிலாய், அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம்
   பயிர்க்கு மழையாய், இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
   பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
   நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!

-மகாகவி பாரதி

குறிப்பு:  இன்று சகோதரி நினைவு நூற்றாண்டு துவங்குகிறது. 
                     அவரது மறைவு தினம்: 13.10.1911. 
காண்க:

ஆலிலை- மலர்மன்னன் (திண்ணை)

தேசபக்தியைக் கற்றுக் கொடுத்தவர்

.

11.10.11

நாடக மேடையில் ஒலித்த விடுதலைக்குரல்


கே.பி.சுந்தராம்பாள்

(பிறப்பு: அக். 11)



கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், அக்கிரம ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். அந்நியர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.


நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர். சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உணர்வையும் ஊட்டினார். 1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும்.

‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளி மைதானமாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்ட மைதானம், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.

கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.

 
காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடியோ பரமஏழை’ என பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. காந்தியடிகளைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்....

முழு கட்டுரையைக் காண்க:  ஆம்பல்

 

காண்க:


கே.பி.சுந்தராம்பாள் (விக்கி)

K.B.SUNDARAMBAL


கொடுமுடிக்குயில்  (கீற்று)

கே..பி.எஸ். (ஈகரை)

நாடக உலகின் ராணி (மாலைமலர்)

கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் (நட்பு)

கே.பி.எஸ்.சை மாற்றிய மகாத்மா சந்திப்பு (தினமலர்)

கருணாநிதி வசனத்தை  எதிர்த்த கே.பி.எஸ் (முருகன்.org)

கானக்குயில் (தமிழ்நாட்டு தியாகிகள்)

கே.பி.எஸ் பாடல்கள் (ஒலி)

24.9.11

தேசியக் கொடியை அறிமுகப்படுத்தியவர்


மேடம் காமா
(பிறப்பு: செப். 24)

நமக்கு சுதந்திரம் வாங்கித்தர தன் உயிர், உடல், பொருள் என்று எல்லாம் நம் தேசத்திற்கு அர்ப்பணித்து விட்டவர் பலர். இதில் ஒரு பார்சீயப் பெண்மணி மிகவும் வீர தீரத்துடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்டார் .அவர் பெயர் மேடம் காமா. அவர் குஜராத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தில் 24-9-1861ல் பிறந்தார். அவரது இயற்பெயர் மேடம் பிகாஜி ருஸ்தம் காமா.


1907ல் நடந்த ஒரு சம்பவம், இந்திய சோஷலிசக் கூட்டம் ஜெர்மனியில் ஸ்டூவர்ட் என்ற இடத்தில் நட்ந்து கொண்டிருந்தது. திடிரென்று ஒரு பெண்மணி கையில் நம் நாட்டு தேசியக் கொடியுடன் வீரமாக நடந்து அந்த இடத்தில் இந்தியத் தேசியக் கொடியைப் பறக்க விட்டார். முதல் தடவையாக ஒரு பெண் கலர் புடவைக் கட்டி இந்தியக் கலாசாரத்துடன் கூட்டத்திற்கு ந்டுவே முன்னேறி, "பாருங்கள் எல்லோரும், இதுதான் இந்தியத் தேசியக் கொடி, நமது சுதந்திரக் கொடி, இது பல இளைஞர்களின் தியாகத்தாலும் அவர்கள் சிந்திய இரத்த்தாலும் இசையப் பட்டிருக்கிறது, இதை வணங்குங்கள், இந்தக் கொடிக்கு கை கொடுங்கள்" என்று வீரத்துடன் வெற்றி நடை நடந்து பெருமையாக அதை நாட்டினார்

இந்தச் சம்பவம் இன்றும் பலர் நினைவுக்கு வரும். அவள் செயல் ஒரு பெரிய மகாராணி மிடுக்குடன் வந்து கொடியை ஏற்றி வீரத்துடன் மொழிந்தது போல் இருந்தது. அநதக் கொடி இப்போது இருக்கும் தேசியக் கொடியைப் போல் இல்லை, கொஞ்சம் மாறுபட்டிருந்தது.

மேலே பச்சை வர்ணம், கீழே சிவப்பு வர்ணம் நடுவே மஞ்சள் வர்ணம் இருந்தன. சிவப்புக் வலிமைக்கும், மஞ்சள் வெற்றிக்கும், பச்சை முன்னேற்றத்திற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலே எட்டுத் தாமரைகள் இருந்தன அவை எட்டு பிராந்தியங்களைக் குறித்தன. நடுவில் தேவ நாகரி எழுத்தில் 'வந்தே மாதரம்' என்று எழுதப்பட்டிருந்தது. தேசத்தாய்க்குத் தலை வண்ங்குகிறோம் என்ற பொருள். உள்ளே சூரியனும் சந்திரனும் வரையப்பட்டிருந்தன, அது ஹிந்து முஸ்லிம் நம்பிக்கையைக் குறித்தது. இந்தக் கொடி வீர சாவர்க்கரால் வடிவாக்கப்பட்டது இதற்கு பல சுதந்திர வீரர்களும் உதவினர்.

மேடம் காமா பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும் மிக எளிமையை நாடினார் அவர் திரு ருஸ்டம் காமா என்ற பெரிய சீமானை மணந்து கொண்டார் அவ்வளவு பெரிய பணக்காரக் குடும்பத்தில் இருந்தும் நிம்மதி இல்லாமல் தேச சேவைச் செய்ய முனைந்தார் அந்த நேரத்தில் பிளேக் என்ற கொடிய நோய் பல இடங்களில் பாதித்தது. இவர் அவர்களுக்கு உதவ முன்வந்து பின் தானும் மிகவும் உடல் நிலை மோசமாகி படுத்து விட்டார். பின் சற்று தேறியவுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுப்பட்டு தேசப்பற்று மிக்க பல புத்தகங்கள் வெளியிட்டார். தன்னிடமிருந்த பணம் எல்லாம் கொடுத்து உதவினார். ஆங்கிலேயருக்கு இவரால் மிகுந்த தலைவலி உண்டாயிற்று.

இவர் ஜெர்மனி போய் திரும்பி வருவதற்குள் ஆங்கிலேயர் அவரைக் கொல்ல முயற்சித்ததால் தப்பி ஓடி, பிரான்ஸ் வந்தார். அங்கிருந்தே இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் பாடு பட்டார். பல சுதந்திர வீரர்களுடன் சமபந்தம் வைத்துக் கொண்டு உதவினார். பின் இந்தியாவிற்கு வர முயன்றும் அனுமதி கிடைக்காததனால் அங்கேயே தன் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டி இருந்தது. வயது முதிர்ந்த பின் பாரதம் திரும்பினார். ஆனால் அதிக நாட்கள் இருக்க முடியவில்லை. 13 -8 1936ல் காலமானார்.

அவர் வீர தீரத்துடன் நாட்டிய கொடியைத்  இந்திலால் யாக்னிக் என்பவர் குஜரரத்திற்கு எடுத்து வந்தார். இப்போது அது பூனாவில் மராத்தா புத்தகாலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. அந்த வீரப் பெண்மணிக்குத் தலை வணங்குவணங்குவோம்!


காண்க:

விடுதலைப்போரில் ஒரு வீராங்கனை (ஈகரை)

Madom Bhikaiji Cama


நாடும் கொடியும் (லக்ஷ்மன் ஸ்ருதி)

சுதந்திரப்போராட்ட வீரர் (கூட்டாஞ்சோறு)

தேசியக்கொடியின் வரலாறு (ஒன் இந்தியா)

தீராத பக்கங்கள் (மாதவராஜ்)

2.8.11

ஆண்டவனை தமிழால் ஆண்டவள்


ஆண்டாள் நாச்சியார்  
திருநட்சத்திரம்: ஆடிப்பூரம்
(ஆடி -17;  ஆக. 2)


ஆடிப்பூர நன்னாளில் அவதரித்தாள் ஆண்டாள். பக்தியால், இறைவனை அடையலாம் என்பதை எடுத்துக்காட்ட, பொறுமையின் சின்னமான பூமாதேவி, ஆண்டாளாக இந்த பூமியில் அவதரித்து, வாழ்ந்து காட்டினாள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் முகுந்தபட்டர், பத்மவல்லி தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் தங்கள் ஊரிலுள்ள வடபத்ரசாயி (ஆண்டாள்) கோவிலில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கருடாழ்வாரின் அம்சமாக, ஐந்தாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, 'விஷ்ணு சித்தர்’ என்று பெயரிட்டனர். இவரும் பெருமாள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார். இவர் பெரியாழ்வார் என்று வைணவர்களால் போற்றப்படுகிறார்.  பெருமாளின் துணைவியான பூமாதேவி, இவருக்கு வளர்ப்பு மகளாக ஐந்து வயது குழந்தையாக துளசித்தோட்டம் ஒன்றில் அவதரித்தாள். அவளுக்கு, 'கோதை’ என்று பெயர் சூட்டப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் மூலவரான வடபத்ரசாயிக்கு, விஷ்ணு சித்தர் தினமும் மாலை கட்டி சூட்டுவார். அந்தப் பெருமாள் மீது ஆண்டாள் காதல் கொண்டாள். தன்னை அவரது மனைவியாகவே கருதி, அவருக்கு சூட்டும் மாலையை தன் கழுத்தில் போட்டு, அழகு பார்த்து, அனுப்பி விடுவாள். இதையறியாத விஷ்ணு சித்தர், பெருமாளுக்கு அதை அணிவித்து வந்தார். ஒருநாள், கூந்தல் முடி ஒன்று மாலையில் இருக்கவே, அதிர்ந்து போன ஆழ்வார், அது எவ்வாறு வந்தது என நோட்டமிட ஆரம்பித்தார். தன் மகளே அதைச்சூட்டி அனுப்புகிறாள் என்பதை அறிந்து, மகளைக் கடிந்து கொண்டார்.

மறுநாள் மாலையைக் கொண்டு சென்ற போது, அதை ஏற்க பெருமாள் மறுத்துவிட்டார். “கோதை சூடியதையே நான் சூடுவேன். மலரால் மட்டுமல்ல, மனதாலும் என்னை ஆண்டாள் உம் பெண்…’' என்று குரல் எழுந்தது. அன்று முதல் கோதைக்கு, 'ஆண்டாள்’ எனும் திருநாமம் ஏற்பட்டது. பின்னர், பெருமாளுடன் அவள் கலந்தாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ராஜகோபுரம், தமிழக அரசின் சின்னமாக உள்ளது. 11 நிலை, 11 கலசங்களுடன் இருக்கும் இதன் உயரம், 196 அடி. இக்கோபுரத்தை பற்றி கம்பர்,”திருக்கோபுரத்துக்கு இணை அம்பொன் மேரு சிகரம்…’ என, அழகான பொன்னிறமுடைய மேருமலை சிகரத்திற்கு ஒப்பாக பாடியுள்ளார்.

உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் நடைதிறப்பின் போது, பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டும், ஆண்டாள் பாடிய திருப்பாவையும் பாடப்படுகிறது. இதனால் ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூர், உலகெங்கும் பெருமை பெற்றதாக உள்ளது.

இந்தக் கோவிலில் நடை திறக்கும் போது, அர்ச்சகர்கள் முதலில், ஆண்டாளைப் பார்ப்பதில்லை. அவளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியைப் பார்க்கின்றனர். ஆண்டாள் கண்ணாடி பார்த்து, தன்னை அழகுபடுத்திக் கொள்வாளாம். அதனடிப்படையில், இவ்வாறு செய்வது ஐதீகம். அந்தக் கண்ணாடியை, 'தட்டொளி’ என்பர். பின்பு சன்னதியில் தீபம் ஏற்றப்படும். இந்தச் சடங்கைச் செய்யும்போது திரை போடப்பட்டிருக்கும். திரையை விலக்கியதும், பக்தர்கள் கண்ணில் முதலில் ஆண்டாள் படுவாள். பின்பே அர்ச்சகர்கள் ஆண்டாளைப் பார்ப்பர்.

ஆடிப்பூரத்தன்று, அவள் பெருமாளுடன் தேரில் பவனி வருவாள். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இதுவும் ஒன்று. பக்தியால், இறைவனையே துணைவனாக அடைந்த பெருமைக்குரியவள் தமிழுக்கு இறவாப்புகழுடைய திருப்பாவையை நல்கியவள் ஆண்டாள்.


காண்க:









ஆண்டாள்- ஓர் அறிமுகம் (தர்மா)












.