நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

22.2.12

அஹிம்சை மந்திரத்தின் அரும்பொருளானவர்



தில்லையாடி வள்ளியம்மை 
(நினைவு நாள்: பிப். 22 )
1915-ம் வருடம், ஏப்ரல் மாதம், 30-ம் தேதி. தரங்கம்பாடியிலிருந்து புறப்பட்ட இரண்டு மாட்டு வண்டிகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தில்லையாடியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. முதல் வண்டியில் மகாத்மா காந்தியும்,  அன்னை கஸ்தூரிபாயும் அமர்ந்திருக்கிறார்கள்.
வண்டிகள் தில்லையாடி எல்லையை மிதிக்கின்றன. உணர்ச்சியை வென்ற மகாத்மாவின் மனம் அப்பொழுது உணர்ச்சி வசப்படுகிறது. கண் கலங்குகிறார். வண்டியை விட்டு இறங்குகிறார். கீழே குனிகிறார். இரு கரங்களையும் குவித்து மண்ணை அள்ளி எடுக்கிறார். கண்களில் ஒற்றிக் கொள்கிறார்.
என்ன புண்ணியம் செய்து விட்டது அந்த மண்? அது சாதாரண மண் அல்ல; காந்திஜி தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உயிர் நீத்த வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய தியாகச் செம்மல்களைத் தந்த வீர மண் அது. தென்னாப்பிரிக்க அரசாங்கம் சத்தியாக்கிரகிகளுக்குக் கொடுத்த தொல்லைகள் பயங்கரமானவை. அந்தத் தொல்லைகளைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் லட்சியம் ஒன்றையே உயிராகக் கொண்டு சிறை சென்ற வீரப் பெண்மணி, தில்லையாடி வள்ளியம்மை.
போராட்டத்தில் ஈடுபட்டு, உடல் நலிவுற்று படுக்கையில் இருந்தார் அந்த வீரப் பெண்மணி. அப்பொழுது காந்திஜி கேட்டார்: ”வள்ளியம்மை! நீ சிறை சென்றதற்காக வருந்துகிறாயா?”
”வருத்தமா? இப்போது கூட இன்னொரு தடவை கைது செய்யப்பட்டால், நான் சிறைக்குச் செல்லத் தயார்” என்று வள்ளியம்மை பதில் அளித்தாள்.
”அதனால் நீ இறந்து போக நேர்ந்தால்?” என்று புன்முறுவலுடன் தொடர்ந்து கேட்டார் காந்திஜி.
”அதை நான் பொருட்படுத்த மாட்டேன். தாய்நாட்டிற்காக உயிரைக் கொடுக்க யார்தான் விரும்ப மாட்டார்கள்?” என்று கேட்டு காந்தியையே நெஞ்சுருக வைத்தாள் வள்ளியம்மை.
அதற்குப் பிறகு, வள்ளியம்மை சில நாட்கள் கூட உயிருடன் இருக்கவில்லை.
அவள் மரணத்தைப் பற்றி மகாத்மா கூறினார்: ”வள்ளியம்மையின் தொண்டு அழியாதது. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரக சரித்திரத்தில் வள்ளியம்மையின் பெயர் நீங்காத இடம் பெற்றிருக்கும்.”
நன்றி: ஆனந்த விகடன் / கூட்டாஞ்சோறு 


 காண்க:






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக