நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

17.5.11

பாரதத்தின் ஆன்மிக தூதுவர்


மகான் புத்தர் 
(புத்த ஜெயந்தி: மே 17) 

பாரதம் தந்த ஆன்மிக அருளாளர்களில் மகான் புத்தருக்கு தலையாய இடமுண்டு. பாரதத்தின் ஆன்மிகத் தத்துவங்களை உட்கிரகித்து புத்தர் ஏற்படுத்திய புத்த மதம், எல்லை கடந்து ஆசிய நாடுகள் பலவற்றில் பரவியது. இன்று உலகின் பெரிய மதங்களுள் ஒன்றாகத் திகழும் புத்த மதத்தின் நிறுவனரான புத்தர், பாரதத்தின் உலகளாவிய ஆன்மிக தூதுவர் என்று சொன்னால் மிகையாகாது.

புத்தர் புத்த மதத்தின் நிறுவனராக மட்டுமல்லாது, பாரதத்தின் வைதிக மதங்களில் நிலவிய மூட நம்பிக்கைகளைப் போக்கைய சீர்திருத்தவாதியாகவும் திகழ்கிறார். புத்தரின் தத்துவங்களுக்கு உலகளாவிய அஹிம்சைக் கோட்பாடுகளில் மிகுந்த செல்வாக்குண்டு.

பொது யுகத்திற்கு  முந்தைய 623  ம் ஆண்டில்,  நேபாளத்திலுள்ள (கபிலவஸ்து என்ற நாட்டில்) லும்பினி என்ற இடத்தில், சுச்சோதனர் என்ற மன்னருக்கும் மாயா என்ற அன்னைக்கும் மகனாகத் தோன்றினார் கௌதம சித்தார்த்தர். வைகாசி மாதம், முழுநிலவு நாளில் அவதரித்த அவர் பின்னாளில் மாபெரும் உலக ஞானியாவார் என்று ஜோதிடர்கள் கூறினர். ஆனால், நாட்டை ஆழ வேண்டிய தனது மகன் ஞானியாவதை விரும்பாத மன்னர் சுச்சோதனர், மகன் சித்தார்த்தனை உலக துயரங்கள் குறித்த எந்த தகவலும் அறியாத வண்ணம் தனி அரண்மனையில் பாதுகாப்பாக வளர்த்துவந்தார்.

தனது 16  வது வயதில் யசோதரையை மணந்தார் சித்தார்த்தர். இவர்களுக்கு பிறந்த மகன் பெயர் ராகுலன். உலக இன்பங்கள் அனைத்தும் காலடியில் கிடைத்தாலும் சித்தார்த்தரின் மனம் நிம்மதி அடையவில்லை. அரண்மனை சுகபோக வாழ்க்கை அவரை திசை திருப்பிவிடவில்லை. ஏதோ ஒரு இனம் தெரியாத காரணத்தால் அவர் தவித்தார். நாட்டின் அரசாட்சியில் அவர் மனம் ஆர்வம் கொள்ளவில்லை.

இந்நிலையில் ஒருநாள், அரண்மனையை  விட்டு உதவியாளருடன் தேரில் உலவப்போன சித்தார்த்தர் நான்கு காட்சிகளைக் கண்டார். ஊனமுற்ற மனிதன் ஒருவன் நடமாட முடியாமல் தவித்த காட்சி சித்தார்த்தரின் மனதை கவலை கொள்ளச் செய்தது. அடுத்து ஒரு நோயாளி வாழ்க்கையின் அல்லலை அவருக்கு நினைவு படுத்தினான். மூன்றாவதாக நாகுபேர் சுமந்து சென்ற பிணத்தையும் கண்டார் சித்தார்த்தர். பிணி, மூப்பு, மரணம் ஆகியவை மனிதன் சந்தித்தே  ஆக வேண்டியவை என்பதை சித்தார்த்தர் உணர்ந்தபோது, எந்தக் கவலையும் இன்றி சஞ்சாரம் செய்த துறவி ஒருவரையும் சித்தார்த்தர் கண்டார். அவர் மனம் தான் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு கட்டளை இட்டுவிட்டது.

எந்தக் காரணத்திற்காக தந்தையால் உலக கஷ்டம் தெரியாமல் வளர்க்கப்பட்டரோ, அதே காரணத்தை சித்தார்த்தர் தானே நேரடியாகக் கண்டுபிடித்துவிட்டார். அவர் மனம் அமைதி இழந்தது. மனிதனின் துயரத்திற்கு   பரிகாரம் என்ன? துன்பமற்ற வாழ்க்கை வாழ முடியாதா? வாழ்க்கையின் பொருளென்ன? போன்ற கேள்விகள் சித்தார்த்தரின் மனதில் எழுந்தன. அதன்  விளைவாக கட்டிய மனைவி, பெற்ற பிள்ளை, அரண்மனை சுகபோகம், ஆட்சி அதிகாரம் அனைத்தையும் துறந்து நள்ளிரவில் நாட்டைவிட்டு வெளியேறினார் சித்தார்த்தர்.

அதன் பிறகு ஆறு ஆண்டுகள் துறவியாக பல இடங்களுக்கு சென்றார். தன்னை கடுமையாக வருத்திக்கொண்டு ஞானம் தேட முயன்றார். ஆயினும் அவர் மனம் அந்த மகத்தான உண்மையை நெருங்கவில்லை. அதற்கான நேரம் கூடாமல் இருந்தது.  யோக நெறியில்  கடும் தவம்  புரிந்த சித்தார்த்தர் அதனால் உயர்ந்த  யோக நிலைகளை அடைந்தாலும், உலகின் துயரத்திற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு விடையின்றித் தவித்தார்.

தனது 35  வது வயதில், பிகாரின் கயா  என்ற இடத்தில் பொதி மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்த சித்தார்த்தர், ஒருவார காலத்தில் புதிய ஞானம் பெற்றார். ஆசியே துன்பத்திற்கெல்லாம் காரணம் என்ற பெருஞானத்தை அறிந்த சித்தார்த்தர், தன்னை 'ததாகதர்' என்று அறிவித்துக் கொண்டார். அதன் பொருள், எது உண்மையில் அதுவாக உள்ளதோ, அந்த நிலையை அடைந்தவர் என்பதாகும்.

தான் பெற்ற ஞானத்தை உலகிற்கு வழங்க ஐந்து சீடர்களுடன் சாரநாத் என்ற இடத்தில் தனது பணியைத் துவங்கினார் ததாகதர். அவரை புத்தர் என்று மக்கள் போற்றத் துவங்கினர். அதன் பொருள் ஞானம் அடைந்தவர் என்பதாகும். சாரநாத்தில் அவர் நிகழ்த்திய ஞான விளக்கம், 'தம்ம சக்கரப் பிரவர்த்தனம்' என்று அழைக்கப்படுகிறது. அன்று முதல் தனது 80  வது வயதில் குசினாரா என்ற இடத்தில் மரணிக்கும் வரை, நாடு முழுவதும் ஓயாமல் தனது கருத்துகளைப் பரப்பினார் புத்தர்.

புத்தர் ஒருபோதும் தன்னை கடவுள் என்றோ, கடவுளின் தூதர் என்றோ சொல்லிக் கொண்டதில்லை. தான் புத்த நிலையை (ஞான நிலையை) அடைந்த ஒரு சாதாரண மனிதன்; இந்நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய முடியும் என்பதே புத்தரின் போதனை. ஆசையே துயரங்களுக்கு எல்லாம் காரணம். ஆசையை விடுத்தால் மோட்சம் பெறலாம் என்பது புத்தரின் முக்கியமான அறிவுரை.

தனது போதனைகளைப் பரப்ப புத்த சங்கங்களை புத்தர் நிறுவினார். மிகக் குறுகிய காலத்தில் புத்த சங்கங்கள் நாடு முழுவதும் பரவின. பின்னாளில் புத்த மதமாக அவை நிலை கொண்டன.  புதுமையானதாகவும், எளிமையானதாகவும், சடங்குகள் அற்றதாகவும் இருந்த புத்தரின் போதனைகள் நாட்டு மக்களிடையே செல்வாக்கு பெற்றன. புத்தரின் சீடர்கள் பாரத எல்லை கடந்து சீனா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளுக்கு புத்த மதத்தைக் கொண்டுசென்றனர். பேரரசர் அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற மன்னர்கள் புத்த மதத்தை நேசித்தனர். அதன் விளைவாக நாடு முழுவதிலும் புத்தரின் போதனைகள் பரவின. புத்த சங்கங்களில் இளம் துறவியர் படை பெருகியது.

'புத்தம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி' என்பதே புத்த சங்கத்தின் முழக்கம். ஞானம் பெற வேண்டும்; அதனை மக்களுக்கு போதிக்க வேண்டும்; தர்மம் காக்க வேண்டும் என்பதே அதன் அடிப்படையான கருப்பொருள்.

போலியான சடங்குகளை புத்தர் கண்டித்தார். உயிர்க்கொலை புரியும் விளப்கு பலியிடல்களை புத்தர் தடுத்தார். வேத சமயத்தில் நிலவிய தவறான பழக்கங்களை மாற்றுமாறு அவர் அறைகூவல் விடுத்தார். வாழ்க்கைக்கடலைக் கடக்க, துறவறம் மட்டுமே போதுமானதல்ல என்றும் அவர் சொன்னார். தன்னைப் பின்பற்றும் துறவிகளுக்கு செம்மையான  துறவற  விதிகளை நிர்மாணித்தார். பின்னாளில் அவரது புத்த சங்க விதிகளும் போதனைகளும் தொகுக்கப்பட்டு 'திரிபிடகம்' என்ற புத்த சமய நூலாக உருவானது.

பின்னாளில் பகவான் புத்தராக அவர் வழிபடப்பட்டார். வழிபாட்டு சடங்குகளுக்கு எதிராக புதிய சமயத்தை நிறுவிய புத்தரையும் கடவுளாகவே வழிபடத் துவங்கினர் மக்கள். அவரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக போற்றினர் பக்தர்கள். அதன் விளைவாக, புத்த மதம் சனாதன மதத்தின் கிளையாக (இந்தியாவில் மட்டும்) உரு மாறியது. ஆயினும் பாரதம் கடந்த பகுதிகளில் அது தனது ஞானச் சிறகுகளை விரியவிட்டு தனி மதமாகவே இன்றும் தொடர்கிறது.

பாரதத்தின் கயா, சாரநாத், குசினாரா, காஞ்சிபுரம், நேபாளத்தின் லும்பினி ஆகியவை புத்த மதத்தினரின் புனிதத் தலங்கள். கயாவில் புத்தர் தவம் செய்த போதி மரம் இன்றும் உள்ளது. அதனை மிகப் புனிதமானதாக புத்த மதத்தினர் கருதி வணகுகின்றனர். புத்த மதத்தைப் பொருத்த அளவில், கௌதம புத்தர் புத்தர்களின் தொடர் அவதாரத்தில் 28  வது புத்தராவார். புத்த மதத்தின் இரு பெரும் பிரிவுகளாக ஹீனயானம், மஹாயானம்  ஆகியவை உள்ளன.

புத்தர் பாரதத்தால் ஆசியாவுக்கு வழங்கப்பட்ட ஞானஒளியாகப் போற்றப்படுகிறார். வன்முறையை வேரறுக்கும் அன்பும் அஹிம்சையும் புத்த மதத்தின் அடிநாதம் ஆகும். பாரதம் உலகிற்கு வழங்கிய மாபெரும் கொடை பௌத்த மதம். பாரதத்தின் ஞான வடிவை  புத்தர் மூலமாகவே உலகம் தரித்திருக்கிறது. 

-குழலேந்தி

காண்க:
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக