நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

4.3.11

நமது நோக்கம்''எந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில் கடந்தகாலம் குறித்த பெருமிதம், நிகழ்காலம் குறித்த வேதனை, எதிர்காலம் குறித்த பொற்கனவுகள் நிறைந்துள்ளதோ, அந்த தேசம் தான் முன்னேற்றமடையும்'' என்று கூறுவார் மகரிஷி அரவிந்தர். தனது வாழ்வையே நாட்டு விடுதலைக்காக அர்ப்பணம் செய்த அந்த மகான் சொன்னது இன்றும் அசரீரியாக ஒலிக்கிறது.

நமது நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது. ஆனால், நாம் சுகம் பெற்றுவிட்டோமா? எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான நிலையை நமது மக்கள் அடைந்துவிட்டார்களா? ''இரவில் வாங்கினோம் சுதந்திரம், அதனால் தான் இன்னும் விடியவே இல்லை'' என்று வெதும்பும் நிலையில் தானே நமது நாடு இன்னமும் தத்தளிக்கிறது?

'அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே' என்று உலக மக்களை அறைகூவி அழைத்த சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட பாரதத்தை நாம் சமைத்திருக்கிறோமா? 'எனது வாழ்வே எனது செய்தி' என்று சொன்ன மகாத்மா காந்தியின் இந்தியாவை நாம் அமைத்திருக்கிறோமா?

நாடு அந்நியனிடமிருந்து விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும், நாட்டைக் குலைக்கும் பிரிவினைவாதமும், நடுங்கச் செய்யும் பயங்கரவாதமும், நாசம் விளைக்கும் உட்பகையும், நலியச் செய்யும் ஏழ்மையும், பஞ்சமும் நோயும் அதன் காரணம் அறியாத அறியாமையும், நாட்டை அச்சுறுத்துகின்றன. மேலைக் கலாச்சார மோகத்தில் நமது இளைய தலைமுறை தடுமாறுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறம்; வேலை செய்ய ஆளில்லாமல் அழியும் விவசாயம் மறுபுறம்!

நாட்டைப் பற்றிக் கவலையின்றி ஊழலில் ஈடுபடும் அதிகார வர்க்கம்; நாட்டை யாருக்கும் விற்க அஞ்சாத சுயநல அரசியல் வியாபாரிகள்; நாணயம் இழந்த தனவந்தர்கள்; நாட்டைக் கூறுபோடும் ஜாதி, மத, மொழி, இன அடிப்படையிலான இயக்கங்கள்; அவர்களுக்கு சோறு போடும் அயல்நாட்டு பிணைப்புகள்; எதையும் கண்டுகொள்ளாத அரசாங்கங்கள்... வாழவே கதியற்றுத் தவிக்கும் அபலைகளுக்கு இதை எல்லாம் சிந்திக்க ஏது நேரம்?

இந்தச் சீரழிவிற்குக் காரணம் என்ன? நமது முன்னோரின் பெருமைகளும், நமது பழமையான பாரம்பரியமும், விடுதலைக்கு நாம் கொடுத்த விலையும் ,  நமது மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய சமுதாயக் கடமையும் பள்ளியில் கற்பிக்கப்படுவதில்லை. அதுதான் நமது வீழ்ச்சிக்குக் காரணம்.

''...முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்...''


- என்று நூறு ஆண்டுகளுக்கு முன் அடிமைப்பட்ட தாயகத்தில் மகாகவி பாரதி பாடிய அதே நிலை இன்றும் தொடர்வதுதான் நமது தாழ்வின் அடிப்படைக் காரணம். நோய் தெரிந்துவிட்டது. இதற்கு மருந்தென்ன?

எல்லாவற்றுக்கும் அரசையே சார்ந்திருக்கும் அற்ப எண்ணம் மாற வேண்டும் என்று கருதும் நாம், தாழ்வு நோய்க்கான மருந்தை சமுதாயத்திற்கு நம்மால் இயன்ற அளவில் புகட்டுவோம் என்ற எண்ணத்தில் தான் இந்த வலைப்பூ இயங்குகிறது. லட்சிய தீபங்களாக ஒளிவீசும் நமது ஆன்றோரும் சான்றோரும் நமக்கு என்றும் வழி காட்டுவார்கள் என்ற நம்பிக்கையே நம் ஆதாரம். இந்த வலைப்பூ இயன்ற வரை அவர்களை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும்.

நாடு நலிவுற்றிருக்கிறதே என்று புலம்பிக்கொண்டு சோர்ந்திருப்பதைவிட, அனுமன் தேடிச் சென்ற சஞ்சீவினி மூலிகை மலை போல நம்மிடமுள்ள அவதார புருஷர்களை நினைவுபடுத்துவோம். நல்ல விதைகளை இதயங்களில் விதைப்போம்; நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் ஒருநாள்.


.

.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

என்னுடைய நோக்கமும் இதுதான், ஆனால் இன்றைய இழிநிலைக்கு முக்கிய காரணம் நமது கல்வித்திட்டம் இந்த கல்வித்திட்டம் நமது நாட்டை அடிமைப்படுத்துவதற்காக ஏற்ப்படுத்தப்பட்டது. ஆதாலால் எங்களதுபணி அனைத்து பள்ளிகளுக்கு சென்று நமது தேசத்தின் பெருமையையும், நமது கலாச்சாரத்தின் தொன்மையையும், நாம் நமது தேசத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையையும், பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது என்று தீர்மானித்துள்ளோம்.

தங்களை தொடர்புக் கொள்ள விரும்புகிறேன் நான் சென்னையை சேர்ந்தவன்

ஜெயவேல்
9543780710

கருத்துரையிடுக