நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

31.3.11

சமணர் கண் திறந்தவர்



தண்டியடிகள் நாயனார்

திருநட்சத்திரம்:
பங்குனி மாதம் - 17 - சதயம்
(மார்ச் 31)

சோழநாட்டிலுள்ள  திருவாரூரில் பிறந்தவர் தண்டியடிகள். இவர் பிறவிக் குருடர். அகக்கண்ணிலே ஆண்டவனை தொழுதுவந்தார். தினமும் திருவாரூர் கோயிலை வலம் வருவார். ஐந்தெழுத்து மந்திரத்தை மறவாது ஓதுவார்.

திருக்கோயிலுக்கு சொந்தமான குளம் ஒன்று இருந்தது. அதன் நான்கு பக்கங்களிலும் சமண மடங்கள் நிறைய காணப்பட்டன. எனவே, திருக்குளம் ஆக்கிரமிப்பால் சுருங்கியும் பராமரிப்பு இன்றியும் காணப்பட்டது.

தண்டியடிகள் திருக்குளத்தை விரிவுபடுத்தி, சுத்தப்படுத்த விரும்பினார். திருக்குளத்தின் நடுவிலே ஒரு கம்பை நட்டார். மற்றொரு கம்பை குளத்தின் கரையிலே நாட்டினார். இரண்டு கம்புகளுக்கும் இடையில் கயிறு கட்டினார். கயிற்றைத் தடவிக் கொண்டே குளத்திற்குள்  இறங்கி மண்ணைத் தோண்டுவார், அதைக் கூடையிலே சுமந்து வந்து கரையில் கொட்டுவார்.

தண்டியடிகளின் செயலைக் கண்ட சமணர்கள்  பொறாமை கொண்டனர். எனவே அவர்கள் தண்டியடிகளிடம் சென்று, நீங்கள் மண்ணைத் தோண்டுவதால் அவற்றிலுள்ள சிறு பூச்சி, புழு போன்ற உயிரினங்கள் இறக்கும். எனவே, அவற்றை துன்புறுத்த வேண்டாம் என்று கூறினார்கள்.  அதற்கு  அடிகள் ''அறிவு கெட்டவர்களே! இது சிவத்தொண்டு. இதன் பெருமை உங்களுக்குத் தெரியாது'' என்று கூறி உழவாரப் பணியைத் தொடர்ந்தார்.

இதைக் கண்ட சமணர்கள் கோபமடைந்து ''நாங்கள் சொன்னதும் அறிவுரையே. அதைக் கேட்கமாட்டாய் போலிருக்கிறதே! உனக்கு செவியும் இல்லையோ?'' என்றனர். உடனே அடிகளோ, ''சிவனடியை அன்றி பிறிதொன்றை என் கண் பாராது. அந்த விஷயம் உங்களுக்குப் புரியாது. புற உலகம் காண, நான் கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?'' என பதிலுக்கு கேட்டார்.

''நீ உன் தெய்வ வலிமையால் கண்பெற்றால். நாங்கள் இந்த ஊரை விட்டே போய்விடுகிறோம்'' என்ற சமணர்கள் தண்டியடிகள் வைத்திருந்த மண்வெட்டிகள், நட்டுவைத்த கம்புகள், கயிறு ஆகியவற்றையும் பிடுங்கி கொண்டு சென்றனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த தண்டியடிகள். திருக்கோயிலை அடைந்து இறைவனிடம் முறையிட்டார். அன்று இரவு, தண்டியடிகள் கனவில் சிவபெருமான் தோன்றி, அன்பனே, கவலைப்படாதே. உன்னுடைய கண்கள் காணவும், சமணர்களுடைய கண்கள் குருடாகவும் அருள் செய்வோம் என்றார்.

அதே சமயம், அந்த நாட்டு மன்னனின் கனவிலே தோன்றி, தண்டி என்பவன் என்னுடைய குளத்தை சீரமைக்கிறான். சமணர்கள் அதற்கு இடையூறு செய்கிறார்கள். எனவே நீ அவனிடம் சென்று அவனது விருப்பத்தை பூர்த்தி செய்வாயாக என்றார்.

பொழுது விடிந்தது. மன்னன் தண்டியடிகள் இருக்கும் இடத்தை அடைந்தான். தான் கண்ட கனவை அவரிடம் கூறினான். தண்டியடிகளும், தான் மேற்கொண்ட வேலையையும் அதற்கு சமணர்கள் செய்த தொந்தரவுகளையும் மன்னனிடம் விவரித்தார்.

மன்னன் சமணர்களை விசாரணைக்கு அழைத்தான். அவர்களோ, தண்டி கண்பார்வை பெற்றால் தாங்கள் இந்த ஊரைவிட்டு போவதாக உறுதி கூறினார்கள். உடனே, தண்டியடிகள் குளக்கரைக்குச் சென்றார். மன்னனும் உடன் சென்றான். மன்னன் கரையிலே நின்று கொண்டு, தண்டியடிகளை நோக்கி, சிவநேயரே, சிவனருளால் கண்பார்வை பெறுதலை காட்டுக என்றான்.

தண்டியடிகளும் சிவபெருமானை மனமுருக பிரார்த்தித்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிக்கொண்டே குளத்தினுள் மூழ்கினார். கண்பார்வை பெற்று எழுந்தார். சமணர்களோ, கண்பார்வை இழந்து தடுமாறினர். அந்த காட்சியைக் கண்ட மன்னன், சமணர்களை ஊரைவிட்டு வெளியேற்றினான். தண்டியடிகள் விருப்பப்படி திருக்குளத்தை சீரமைத்தான்.

தண்டியடிகள் வழக்கம்போல சிவத்தொண்டு செய்து இறுதியில் சிவபெருமான் திருவடிநிழலை அடைந்தார். அன்று முதல், தண்டியடிகள் நாயனார் என்று இவர் அழைக்கப்படுகிறார்.

தனது ஊனக்கண்கள் இருண்டிருந்தபோதும், சிவபக்தியால் பார்வை பெற்ற தண்டியார், சமணரின் ஞானக் கண்களைத் திறந்தவராக வணங்கப்படுகிறார். அந்தக் காலத்திலேயே மதப் பிரசாரத்திற்கு எதிரான குரலாக தண்டியரின் குரல் ஒலிப்பதைக் காண்கிறோம். ஒவ்வொருவரும் தமது பாரம்பரியத்தைக் காப்பதில் தண்டியார் வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதே பெரிய புராணம் கூறும் நீதி.

- அம்பைசிவன்   
 
 
காண்க:
 
 
 
 
 
 
 
 
 
 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக