தீரர் சத்தியமூர்த்தி
நினைவு: மார்ச் 28
இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க எண்ணிய ஆங்கிலேய அரசு மசோதா ஒன்றைக் கொண்டு வந்தது. ஜேம்ஸ் என்ற ஆங்கிலேயர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பார்த்து “இங்கிலாந்துப் பேரரசின் அதிகாரத்தின் கீழ் இருக்க விரும்பவில்லையென்றால், யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்க விரும்புகிறீர்கள்?” என்று ஏளனமாகக் கேட்டார்.
“யாருடைய அதிகாரத்தின் கீழும் நாங்கள் வாழ விரும்பவில்லை. நாங்கள் சுதந்திரமாகவே வாழ விரும்புகிறோம். அதுமட்டுமல்ல. அந்நியர்களாகிய உங்களை உதைத்து வெளியே தள்ளவும் விரும்புகிறோம்” என்றார் அந்த சுதந்திரப் போராட்ட வீரர். இந்த பதிலைக் கேட்டு ஜேம்ஸ் அதிர்ந்து விட்டார். இவ்வாறு துணிச்சலாக கூறியவர் சத்தியமூர்த்தி. இப்படி பல வகையிலும் துணிச்சலாக அவர் நடந்து கொண்டதால், அவர் ‘தீரர் சத்தியமூர்த்தி’ என்று புகழ்ந்து பாராட்டப்பட்டார்.
அந்த வீரர் பிறந்தது, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருமயம் ஆகும். 1887, ஆக. 18ம் நாள் பிறந்தார். தந்தை சுந்தரேச சாஸ்திரி. திருமயத்தில் பள்ளிப் படிப்பை முடித்த சத்தியமூர்த்தி சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பும், சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார்.
படிக்கும்போதே, எந்தத் தலைப்பாக இருந்தாலும், சிறப்பான முறையில் சொற்பொழிவாற்றும் பேராற்றலைப் பெற்றிருந்தார். இவரது சொற்பொழிவு கேட்போரை மெய்மறந்து கேட்கச் செய்திடும் வல்லமை உடையது. ஒருமுறை வடமொழி மாநாட்டில் பாரதத்தின் தலைசிறந்த இதிகாசமான ராமாயணம் பற்றி உரையாற்றச் சென்றிருந்தார். வழக்கமாக ஆங்கிலம் அல்து தமிழில் சொற்பொழிவாற்றும் இவர், அனைவரும் வியக்கும்படி வடமொழியில் ஆற்றினார். இந்நிகழ்வு வடமொழியிலும் இவருக்கு புலமை இருந்ததைத் தெளிவுபடுத்தியது.
நாடகத்தில் நடிப்பது, இயக்குவது ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார்; பம்மல் சம்மந்த முதலியார் அவர்களின் நாடகத்தில் நடித்துள்ளார்; திரைப்படத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; தென்னிந்திய திரைப்பட வர்த்தகக் கழகத்தின் பொறுப்பில் இருந்துள்ளார்.
வழக்கறிஞரான இவர் நாட்டுப்பற்று கொண்டிருந்ததால், நாட்டு விடுதலைக்காப் போராடி வந்தார். 'ஹோம் ரூல்' இயக்கத்தில் பங்கேற்றிருந்தபோது அவ்வியக்கத்துடன் உண்டான கருத்து வேறுபாட்டினால், அதிலிருந்து விலகினார். பின் காங்கிரஸ் பேரியக்கத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்.
1919ல் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு நவீன அரசியல் கோட்பாடுகளை கற்றார். அவற்றை நம் நாட்டிற்கு எடுத்துக் கூறி வழிநடத்தவும் செய்தார். காங்கிரஸ் பேரியக்கம் 1992ல் பிளவுபட்டு 'சுயராஜ்யக் கட்சி' உதயமான போது, காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.
1923ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினரானார். சென்னை மாநகராட்சியிலும் உறுப்பினரானார். சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறைத் தண்டனை பெற்றார். 1936ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார்.
1942ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் சத்தியமூர்த்தி கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறைவாசத்தின் போது அவரது உடல்நிலை பாதிக்கப்ட்டது. தண்டனைக் காலம் முடிந்து வெளிவந்த அவரால் முன்பு போல் பொதுவாழ்வில் ஈடுபட முடியாமல் போனது. 1943, மார்ச் 28ம் நாள் சத்தியமூர்த்தி இயற்கை எய்தினார்.
இவரைப் போன்ற பலரின் தியாகமே நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. கர்மவீரர் காமராஜரின் அரசியல் குருவாக தீரர் சத்தியமூர்த்தி போற்றப்படுகிறார்.
தீரர் சத்தியமூர்த்தி, இலக்கியம், நாடகம், திரைப்படம், அரசியல் என பல துறைகளில் ஈடுபட்டு முழுமை பெற்ற மனிதராக வாழ்ந்ததை நினைப்போம். அவரது பல்துறை ஆர்வத்தையும் தேச நேசத்தையும் நாமும் நம்முள் காண்போம்.
-என்.டி.என்.பிரபு
காண்க:
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக