நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

16.3.11

அரசியலிலிருந்து விடைபெறும் ஆன்மிகத் துறவி

14  வது  தலாய் லாமா
(டென்சிங் கியாட்சோ)
பிறப்பு: ஜூலை 6


சீன ஆக்கிரப்பிலிருந்து தனது தாயகத்தை மீட்க அஹிம்சை முறையில் தொடர்ந்து போராடி வருபவர் தலாய் லாமா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் டென்சிங் கியாட்சோ. இவர் திபெத்தியர்களால் புத்தரின் அவதாரமாகவே வணங்கப்படுகிறார்.

இவர் 60  லட்சம் திபெத் மக்களின் அரசியல் தலைவராகவும், திபெத் புத்த மத தலைவராகவும் விளங்கி வருகிறார். சீன ராணுவம் ஆக்கிரமித்த (1958)திபெத்தை மீட்க, இந்தியாவின் தர்மசாலாவில் இருந்தபடி போராடிவரும்  தலாய் லாமா,  1935, ஜூலை 6  ல்  பிறந்தவர்.  இவரது தந்தையார் பெயர்: சோக்கியோங் செரிங் ; தாயின் பெயர்: திக்கி செரிங். கிங்காய் மாகாணத்தில்  பிறந்த டென்சிங் கியாட்சோ, புத்தமதத் தலைவராக (14 வது தலாய் லாமா- 1950, நவ. 17 முதல்) சிறு வயதிலேயே தேர்வானார்.

திபெத்தியர்கள் அமைதியான சுபாவம் உடையவர்கள். புத்த மத்தைப் பின்பற்றுபவர்கள். இமயத்தின் சிகரத்தில் உள்ள திபெத் பகுதியின் ராணுவ முக்கியத்துவம் கருதி சீனா ஆக்கிரமித்துள்ளது. அங்கு மத சுதந்திரமும் தடை செய்யப்பட்டது. அதன் விளைவாக, 1958  ல் இந்தியாவுக்கு தப்பிவந்த லாமா,  உலகம் முழுவதும் சிதறி அகதிகளாக வாழும் திபெத்தியர்களின் நாடு  கடந்த இடைக்கால அரசை, இமாச்சலில் உள்ள  தர்மசாலாவில் அமைத்தார்.  சீனாவின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தனது நாட்டு மக்களின் உரிமையை மீட்க உலக நாடுகளிடையே பிரசாரம் செய்கிறார்.

பல்வேறு சிக்கல்களினிடையே, போராட்டமயமான வாழ்க்கையினூடே, திபெத் மக்களின் நம்பிக்கை ஒளிக்கீற்றாய் வாழும் தலாய் லாமா, தற்போது தனது அரசியல் பொறுப்புகளிலிருந்து விடுபட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளார். தனக்கு அடுத்து திபெத் விடுதலை இயக்கத்தையும் நாடு கடந்த திபெத் அரசியும் நடத்த அடுத்த தலைமுறையை பொறுப்பேற்குமாறும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார். எனினும் அவர் மதத் தலைவராக தொடர்வார். இவரது விலகலை திபெத்திய நாடாளுமன்றம் ஏற்க மறுத்த போதும், புதிய தலைமையே எதிர்காலத்திற்கு நல்லது என்று உறுதியுடன் அறிவித்திருக்கிறார் (மார்ச் 16) தலாய் லாமா.

தலாய் லாமாவின் அமைதிவழி போராட்டத்திற்காக, அவருக்கு  அமைதிக்கான நோபல் பரிசு (1989) வழங்கப்பட்டுள்ளது. ஆன்மிக, அரசியல் தலைவராக  விளங்கும் தலாய் லாமா இந்தியாவின் நலம் விரும்பியாக உள்ளதாலேயே சீனாவின் அடக்குமுறையை எதிர்கொள்ள நேர்ந்தது.

இவர் ஆன்மீகம் அரசியல் துறைகளில் மட்டுமல்லாமல் அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர். ஆன்மீகத்தை அறிவியல் எங்கு பிழை என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கிறதோ அதை ஆன்மீகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று The Universe in a Single Atom என்ற அவரது ஆங்கில நூலில் குறிப்பிடுகிறார். இவர் தியானம் குறித்த பரிசோதனைக்கூட ஆராய்ச்சிகளிலும் தமது ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார். தனது மொழி ஆளுமையாலும், சர்வதேச சிந்தனைகளாலும் உலகம் முழுவதையும் திபெத் நோக்கி பார்க்கச் செய்தவர் லாமா.

நமது காலத்தில், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அஹிம்சை வழியில் போராடும் மதத் தலைவராக தலாய் லாமா விளங்குகிறார். அவர் தனது அரசியல் வழிகாட்டுதல்களை நிறுத்திக் கொண்டாலும், மதத் தலைவராக திபெத் மக்களின் நெஞ்சங்களில் வீற்றிருப்பார்.


காண்க:






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக