நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

16.5.13

சமமான கல்வி அல்ல; தரமான கல்வி

-செ.மாதவன்
சிந்தனைக்களம்



இந்தியத் திருநாட்டில் பல்வேறு மொழிகளைத் தாய் மொழிகளாகக் கொண்டவர்கள் வாழ்கின்றனர். பல்வேறு மொழிகள் மாநில ஆட்சி மொழிகளாக உள்ளன. உலகம் முழுவதும் பரவி வாழ்கின்ற தமிழர்கள் உள்ளனர். பல்வேறு நாடுகளுக்குச் சென்று உழைப்பால் ஊதியம் தேடி வாழ்வை வளமாக்கிக்கொள்ள விரும்புவார்கள் நமது நாட்டு மக்கள்.

அறிவியல் துறை வளர்ச்சி பெற்ற தொழில் வளம் மிகுந்த நாடுகளுக்குச் சென்று அறிவியல் துறையில் முன்னேற்றமடைய விரும்பும் இளைய தலைமுறையினர் நிறைந்தது நமது நாடு.

மேற்கண்ட சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் கல்விக்கூடங்கள் தொடங்கி நடத்திட ஏற்றவாறு கல்விக் கொள்கைகளை வகுத்திட வேண்டும். மாணவர்கள் விரும்பும் பாடத் திட்டங்களைப் படித்திட வாய்ப்புத் தர வேண்டும். மாணவர்கள் விரும்பும் பயிற்சி மொழியில் படித்திடத் தேவையான வழிமுறைகளை வகுத்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் பல்வேறு மொழிகளைத் தங்கள் தாய் மொழிகளாகக் கொண்டவர்கள் வாழ்கின்றார்கள். அவரவர் தாய் மொழிகளில் கல்வி கற்றிட வாய்ப்புகள் தமிழகத்தில் தரப்படுகின்றன. ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் தொடரப்பட்டு இன்றும் நடத்தப்படுகின்றன.

மத்திய அரசின் கல்வித் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த, அதற்குத் தேவையான புத்தகங்களை அச்சிட்டு வெளியிட "என்.சி.இ.ஆர்.டி' என்ற அமைப்பு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் வழிமுறைகளைப் பின்பற்றி "சி.பி.எஸ்.இ.' என்ற மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டு மாணவர்களும் ஆர்வத்தோடு கல்வி பயின்று வருகிறார்கள்.

ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைப்போல் ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்ட "மெட்ரிகுலேஷன்' பள்ளிகளும் தொடங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நகரங்களிலும், கிராமங்களிலும் பரவி வளர்ந்து வருகின்றன.

தமிழ் மொழிப் பற்றுள்ள மக்களும் ஆங்கிலத்தில் கல்வி பயின்றால்தான், கல்லூரிகளில் அறிவியல் துறையில் பட்டங்களைப் பெற்று உலகம் முழுவதும் சென்று வாழ்வாதாரங்களைப் பெருக்கி வாழ்ந்திட முடியும் என்று தமிழக இளைஞர் சமுதாயம் நம்புகிறது. அறிவியல் பாடங்களை ஆங்கிலத்திலேயே படித்தால்தான் கல்லூரிகளில் மேல்படிப்புக்குச் சென்று கல்வி கற்றிட எளிதாக இருக்கும் என்று மாணவர்கள் கருதுகிறார்கள். இதனால் தமிழ்ப் பற்று இல்லை என்றோ, ஆங்கில மோகம் என்றோ கூறுவதில் பயனில்லை.

மாநில அரசின் கொள்கைகளால் பயிற்சி மொழியும், பாடத் திட்டங்களும் மாற்றப்பட்டு கல்வித்தரம் குறைந்துவிடுமோ என்ற அச்சமும் பரவி வருகின்றது. இதனால் மத்திய அரசின் பாடத் திட்டத்தைப் பின்பற்றி ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழ்நாட்டில் ஏராளமாகப் பெருகி வருகின்றன.

தாய்மொழியாம் தமிழ் மொழியில் கல்வி கற்றிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, தமிழக அரசு கொள்கைகளை வகுத்து, "அரசுப் பள்ளிகள்' என்றும், "அரசு உதவிபெறும் பள்ளிகள்' என்றும் தொடங்கச் செய்து, கல்வித் துறையில் பெரும் முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆங்கில வழிப் பள்ளிகளான "மெட்ரிகுலேஷன்' பள்ளிகளையும் தொடங்கிட தமிழக அரசு விதிமுறைகள் வகுத்துள்ளது.

உலகத்தில் அறிவியல் துறையில், தொழில் துறையில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளில் பின்பற்றப்படும் கல்விப் பயிற்சி முறைகளில் தமிழ்நாட்டிலும் பயின்றிட வேண்டும் என்று ஆர்வமுள்ள மாணவர்கள் பெருகி வருகின்றனர். இதன் விளைவாக, "இன்டர்நேஷனல்' பள்ளிகள், "சி.பி.எஸ்.இ. பள்ளிகள்' மத்திய அரசின் அனுமதிபெற்று தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

கிராமங்கள்தோறும் அரசின் சார்பில் தொடக்கக் கல்வி வழங்கும் பள்ளிகள் தொடங்கப்பட்டு, அனைத்து மக்களும் கல்வி அறிவுபெறத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

1969-ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை 500 கோடி ரூபாயில் தாக்கல் செய்யப்பட்டது. கல்வித் துறைக்கு 70 கோடியில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. இன்று பல்லாயிரம் கோடிகளில் நிதிநிலை அறிக்கை வெளிவருகிறது. ஆனால், இன்னும் மாணவர்கள் விரும்பும் வசதிகள் நிறைந்த, தரமான கல்வியை வழங்கும் கல்விக்கூடங்கள் அரசின் சார்பில் நடக்கவில்லையே என்ற ஆதங்கம் மக்களிடையே நிலவுகின்றது.

மக்கள் அனைவரும் கல்விபெற வேண்டும் என்று எண்ணிய வள்ளல் அழகப்ப செட்டியார் போன்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள். அழகப்ப செட்டியார் தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் அவர் காரைக்குடியில் நிறுவிய கல்விக் கூடங்களுக்கே அர்ப்பணித்தார்.

அவர் நாள்தோறும் மாணவர்களைச் சந்தித்துப்பேசி, கற்பதில் ஆர்வம் ஊட்டிய காட்சிகள் என் நினைவில் நிற்கின்றன. அவர் மறைந்த பிறகு அவருடைய மகள் உமையாள் ஆச்சி, அழகப்ப செட்டியாரின் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கூறினார்கள். எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காது கல்லூரிகளை அரசிடம் ஒப்படைக்க முன்வந்த பெருந்தன்மை மகிழ்ச்சி அளித்தது. அந்தச் செய்தியை நான் படித்த அழகப்பா கலைக் கல்லூரி விழாவில் பேசும்போது நான் அறிவித்தவுடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்த காட்சிகள் நினைவில் நிற்கின்றன. இன்று அழகப்பா பல்கலைக் கழகமாக வளர்ந்து வள்ளலின் பெருந்தன்மையை நிலைநாட்டியுள்ளது.

ஆனால், இன்று லாப நோக்கத்தோடு பள்ளிகளை, கல்லூரிகளைத் தொடங்கும் நிலை தோன்றி வளர்கிறது. ஆங்கிலத்தில் கல்வி கற்றிட வேண்டும் என்ற விருப்பம், வசதிகள் உள்ள கல்விக் கூடங்கள், கல்வி கற்பிப்பதில் நவீனமான முறைகள் பின்பற்றப்படும் பள்ளிகள், அதிக மதிப்பெண்கள் பெறத் தேவையான வழிமுறைகளைப் பின்பற்றும் பள்ளிகளை மாணவர்கள், பெற்றோர்கள் விரும்பும் நிலை வளர்கிறது.

ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்ட பள்ளிகள் பெருகி வருகின்றன. பெற்றோர்களும், மாணவர்களும் இப்பள்ளிகளை விரும்புகின்றனர். சிறிய கிராமங்களிலும் இப்பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. இப்பள்ளிகளை நடத்திட நிதி ஆதாரங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. கல்விக் கூடங்களை வியாபார நோக்கத்தில் லாபம் பெற நடத்திட முதலீட்டாளர்கள் முன் வருகின்றனர்.

பள்ளிகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களைப் பள்ளிகளுக்கு வாங்கிட அரசு அங்கீகாரம் வழங்கும் முறை இருந்தது. 1969-ஆம் ஆண்டு இந்த முறையில் அரசு அனுமதியைப் பெற்றிட புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் செல்வாக்குள்ளவர்களின் பரிந்துரைகளோடு அரசை அணுகும் நிலையைக் கண்டேன். இத்தகைய வியாபார நோக்கத்தைத் தடுத்திட பாடப் புத்தகங்களை தமிழக அரசே தயாரித்து வழங்கிட தமிழ்நாடு பாடப் புத்தகங்கள் நிறுவனத்தைத் தொடங்கிய சரித்திர நிகழ்ச்சி நினைவில் நிற்கிறது. இன்று இந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்படுவது கண்டு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

வியாபார நோக்கம் இல்லாத, வசதிகள் நிறைந்த, உலகத் தரம் வாய்ந்த கல்வி கற்பிக்கும் கல்வி நிலையங்கள் எதிர்கால மாணவர் சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக நடந்திட வேண்டும். கல்விக் கட்டணக் கட்டுப்பாடு தவறுகளைத்தான் ஊக்குவிக்கும். மாறாக மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை அளித்திட, ஆசிரியர்களுக்குத் தேவையான சம்பளத்தை வழங்கிடத் தேவையான கட்டணங்கள் மட்டும் வசூலித்திட விதிமுறைகளை வகுத்திட வேண்டும். மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத் தொகை பள்ளியின் தேவைகளுக்கே செலவிடப்படுகிறதா என்று அரசின் தணிக்கைத் துறை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட விதிமுறைகள் வகுத்திட வேண்டும்.

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகளை ஊக்குவித்தால் கல்வி வியாபாரத்தைத் தவிர்த்திட முடியும்.

பெற்றோர்களும், மாணவர்களும் விரும்பும் கல்வித் தரம் மிகுந்த கல்விக்கூடங்களை அரசே நடத்தினால் யாரும் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கிச் செல்ல மாட்டார்கள். அனைவருக்கும் சமமான கல்வி என்பதைவிட, அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்திட வேண்டும் என்பதுதான் ஒரு அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்.


(கட்டுரையாளர், தமிழக முன்னாள் அமைச்சர்)
நன்றி: தினமணி (16.05.2013)


1 கருத்து:

karai ks vijayan சொன்னது…

மிகச்சரியான கட்டுரை கருணாநிதி இன்னமும் கல்வி என்னும் குட்டையைக்குழப்பி ஆதாய மீன் பிடிக்கப் பார்கிறார்.

கருத்துரையிடுக