நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
எழுத்தாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுத்தாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.12.16

சோவுக்கு அஞ்சலி

 
சோ ராமசாமி  (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016)


பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான ‘சோ’ ராமசாமி (Cho Ramaswamy) கடந்த டிச. 7-ம் தேதி காலை காலமானார். அவருக்கு வயது 82.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சோ, சுவாசக் கோளாறு காரணமாக ஒரு சில முறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த வாரம் சுவாசப் பிரச்சினையினாலும், உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதாலும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

*சென்னை மயிலாப்பூரில் (1934) பிறந்தவர். பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகா னந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். இளம் வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆட்ட நுணுக்கங் கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சனங்களும் எழுதியுள்ளார்.

*சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பல நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

*20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. முதன்முதலாக ‘கல்யாணி’ என்ற நாடகத்தில் நடித்தார். ‘தேன்மொழியாள்’ என்ற நாடகத்தில் ‘சோ’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.

*நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’, ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார்.

*திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். நாகேஷ், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ‘நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது’ என்று பெருமையுடன் கூறுவார்.

*‘துக்ளக்’ வார இதழை 1970-ம் ஆண்டும், ‘பிக்விக்’ என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் தொடங்கினார். அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.

*தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார்.

*20-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள் எழுதியுள்ளார். இவரது ‘இந்து மகா சமுத்திரம்’ நூல் 6 தொகுதிகளாக வெளிவந்தது. நாடகம், நாவல், அரசியல், கலை, சமூகம் என பல்வேறு துறைகள் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

*பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ‘யாருக் கும் வெட்கமில்லை’, ‘உண்மையே உன் விலை என்ன’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். 4 தொலைக்காட்சிப் படங்களுக்கு கதை எழுதி, இயக்கி, நடித்துள்ளார். பேச்சிலும் எழுத்திலும், நையாண்டியும், நகைச்சுவையும் இரண்டறக் கலந்திருப்பது இவரது தனிச்சிறப்பு.

*மாநிலங்களவை உறுப்பினராக 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர் ‘சோ’ ராமசாமி.

தகவல்: தி இந்து

***

திரு. வண்ண நிலவனின் அஞ்சலி:

 ‘சோ’-கூர்மதியாளர்; ஆழ்ந்த மனிதாபிமானி


 சோவுடன் 1976-ம் ஆண்டு, ஜூன் மாதம் அவரது துக்ளக் பத்திரிகையில் பணிக்குச் சேர்ந்தேன். ஒரு பத்திரிகையாளனின் பணிகள் மற்றும் பொறுப்புகளை சோவுடன் பணியாற்றும்போதுதான் புரிந்து கொண்டேன்.

துக்ளக்கில் 1990-ம் ஆண்டு வரை நிரந்தரப் பணியாளனாக இருந்தேன். அதற்குப் பிறகு விலகி, வெளியிலிருந்து துக்ளக் பத்திரி கைக்கு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சோ, முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி உள்ளார். சினி மாவில் முன்னணி கலைஞர்களுடன் நடித்தவர். எழுத்தாளர், விமர்சகர், சட்ட நிபுணர், சினிமா இயக்குநர் என பலப் பரிமாணங்கள் கொண்டவர். அபாரமான நகைச்சுவைத்திறன் உள்ளவர். சோவின் நகைச்சுவை யாரையும் புண்படுத்தாது. எந்த அரசியல் தலைவர்களை அவர் கிண்டல் செய்தாலும், அவர்களே அதை ரசிப்பதாக அவரது எழுத்து இருக்கும்.

துக்ளக்கில் வெளிவரும் கேள்வி- பதில் தொடங்கி ஒவ்வொரு கட்டு ரையையும் கண்ணில் விளக்கெண் ணெய் விட்டுப் பார்ப்பார்கள். அந்த மாதிரியான காலகட்டத்தில் அபாரமான துணிச்சலுடன் செயல் பட்டவராக சோ இருந்தார். ஏனெ னில் எந்த அரசியல்வாதியின் தய வையும் நாடாதவராக இருந்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல்

1970-களின் ஆரம்பத்தில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அதையொட்டி சென்ற ஊர்வலத் தில், இந்துக்கள் வணங்கும் ராமன், கிருஷ்ணன் போன்ற தெய்வங்களை கேலிச்சித்திரங்களாக வரைந்து எடுத்துச் சென்றனர். அந்த ஊர் வலத்தைப் பற்றிய செய்தியுடன் புகைப்படங்களையும் துக்ளக் பத்திரிகையில் சோ விமர்சித்து வெளியிட்டிருந்தார்.

அப்போது கருணாநிதி தலைமையிலான அரசால், துக்ளக் பத்திரிகைப் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் அவசரநிலைக் காலகட்டத்தில் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சித்திர வதைக்கு உள்ளாக்கப்பட்டபோது நேரடியாக போய் பார்த்து ஆறுதல் சொன்னவரும் அவர்தான். அந்த சமயத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டதையும் அவர் எதிர்த்தார்.

கருணாநிதிக்கு பேச்சுரிமை யும் எழுத்துரிமையும் மறுக்கப் பட்டதால், அவரை இனி விமர்சிக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

காமராஜர், மொரார்ஜி தேசாய், கருணாநிதி தொடங்கி ஜெயலலிதா வரை அவருக்கு நல்ல நட்பு இருந்தது. அவர்களது செயல்பாடு களில் ஏதாவது குறைபாடோ விமர்சனமோ இருந்தால் அதை காட்டமாக விமர்சிப்பார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவர் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்த ஒரே நேர்காணல் துக்ளக் பத்திரிகைக்குத்தான். மொரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, ஜெயவர்த் தனே என பல அரசியல் தலைவர் களின் விரிவான நேர்காணலைச் செய்தவர்.

தனிப்பட்ட முறையில் அவருக்கு எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி இருந்த தில்லை. அரசியல் தலைவர்களின் குடும்ப விவகாரங்களையோ, தனிப் பட்ட விஷயங்களைப் பற்றியோ இதுவரை ஒரு செய்திகூட வெளி யிட்டதில்லை.

தடைகளைத் தகர்த்த படம்

துக்ளக் வந்த காலகட்டத்தில் புலனாய்வு பத்திரிகைகள் இல்லை. சமூக அரசியல் இதழாக வெளி வந்த ஒரே இதழ் அப்போது துக்ளக் தான். கூவத்தைச் சீரமைக்கப் போவதாக திமுக அரசு அறிவித்த போது, அதுதொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையெல்லாம் முதல் முதலாக வெளியிட்ட இதழ் துக்ளக் தான்.

சோ எழுதிய ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை சினிமாவாக எடுத்தனர். அந்தச் செய்தி தெரிந்த வுடன், திமுக ஆட்சியாளர்களால் படத்தில் வேலைசெய்த தொழில் நுட்பக் கலைஞர்கள் அச்சுறுத்தப் பட்டனர். அத்தனை இடைஞ்சல் களையும் மீறி படம் வெளியானது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை உட்பட பல்வேறு அரசியல் விவ காரங்களில் அவர் சொன்ன வார்த் தைகள் தீர்க்கதரிசனமானவை.

1977-ல் அவசரநிலைக் காலகட்டத்துக்குப் பிறகு ஜனதா ஆட்சி மத்தியில் வந்தபோது, அந்த ஆட்சி நிலைப்பட வேண்டுமென்று மிகவும் உழைத்தவர்களில் ஒருவர் சோ. ஆனால் சரண்சிங் போன்ற வர்களின் செயல்பாடுகளைப் பார்த்து சீக்கிரமே இந்த அரசு கவிழ்ந்துவிடும் என்பதைக் கணித்த வரும் அவர்தான்.

கர்னாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அருமையான புகைப்படக்கலைஞர் அவர். துக்ளக் கில் வெளிவரும் கார்ட்டூன் களுக்காக அவர் ஓவியர்களுக்கு கொடுக்கும் ஐடியாக்கள் வெவ் வேறு கோணத்தில் ஆச்சரியப் படும்படியாக இருக்கும்.

அரசியல் தலைவர்கள் குறித்து எத்தனையோ விமர்சனங்களை வைத்திருந்தாலும் அவர்களுடன் தனிப்பட்ட நட்பையும் அக்கறை யையும் பேணி வந்தவர். எல்லா வற்றையும்விட அவர் பெரிய மனிதாபிமானி. அதனால் தான் அவரது விமர்சனங்களை யாரும் தவறாக எண்ணியதே இல்லை.

***

 திரு. வ.ரங்காச்சாரியின் கட்டுரை:
 
தமிழ் இதழியலின் அங்கதக் குரல்! 


தமிழ்ப் பத்திரிகையுலகில் ஒரு நபர் ராணுவம்போல ஆசிரியர்கள் செயல்பட்டு, நடத்தப்பட்ட பத்திரிகைகள் குறைவு. அதில் வெற்றிகரமான வெகுஜனப் பத்திரிகை 'துக்ளக்' மட்டுமே. அரசியல் என்றால் வெறும் அரசியல் மட்டுமே. நடுப்பக்கத்திலே, கடைசிப் பக்கத்திலே என்றுகூட சினிமா கவர்ச்சியைத் தொடாமல் பத்திரிகையைக் கொண்டுவர முடியும் என்று நிரூபித்தவர் சோ. லட்சக்கணக்கில் விற்பனையாகவில்லை என்றாலும், விசுவாசமான வாசகர்களை ஆயிரக்கணக்கில் தக்கவைத்துக் கொண்டது 'துக்ளக்'.

அங்கதச் சுவையைக் குழைத்து அவர் எழுதிய கட்டுரைகளை ஏற்காதவர்கள்கூட, நமட்டுச் சிரிப்போடு படித்துக் கடப்பதுண்டு. சோ இப்படித்தான் எழுதுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அதை எப்படித் தர்க்கரீதியாகச் சொல்கிறார் என்று பார்ப்பதற்காகவே படிப்பார்கள். அவருடைய வாசகர்களில் சரிபாதிக்கும் மேல் அவர் கருத்தை ஏற்றவர்கள் அல்ல; என்றாலும் அந்நாட்களில் 'ஜெலுசில்', 'கேஸக்ஸ்', 'பைலக்ஸ்', 'டயானில்' மாத்திரைகளோடு பல பெரியவர்களுக்கு வாரந்தோறும் தேவைப்பட்டது 'துக்ளக்'.

தேர்தல் நடப்பதற்கு முன்னால், சோவின் கணிப்பு என்ன என்று அறிய வாங்கிப் படிப்பார்கள். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தேர்தல் முடிவுகளுக்கு அவர் என்ன வியாக்கியானம் சொல்கிறார் என்று படிப்பார்கள். ஜெயேந்திரர் கைதா, ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கா, நரேந்திர மோடியை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டமா சோ இதில் கூறும் அரசியல் வாதம் என்ன, சட்டப்பூர்வமான கணிப்பு என்ன என்று ஆர்வமாகப் படிப்பார்கள்.

தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் வளர வேண்டும், அதிமுக தவிர மற்றவை செல்வாக் கிழக்க வேண்டும் என்று சோ மனதார விரும்பினார் என்றே தோன்றுகிறது. அதை அவர் மறைத்ததே இல்லை. காமராஜரின் பெருந்தன்மையை, நிர்வாகத் திறமையைக் காங்கிரஸ்காரர்களைவிட அதிகம் எழுதிக் குவித்தார். நேரு, காந்தி மீது மரியாதை கொண்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் மீது நன்மதிப்பை வாசகர்களிடையே ஏற்படுத்தினார். கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தனிப்பட்ட வகையில் பாராட்டிக்கொண்டே கம்யூனிஸக் கொள்கைகளைத் தாக்கி எழுதினார்.

எப்பேர்ப்பட்ட தலைவரையும் கேலிசெய்ய 'துக்ளக்' தயங்கியதே இல்லை. தலையங்கம், கட்டுரைகளில் சொல்ல முடியாதவற்றைக் கேள்வி - பதிலில் அல்லது எச்சரிக்கையில் தெரிவித்துவிடுவார். 'துக்ளக்' விலை உயர்கிறது என்று அறிவிக்காமல், நல்ல தரத்துக்கேற்ப மதிப்பை அதிகம் பெறுகிறது என்று ஊசியைச் செருகுவார். 'துக்ளக்' வாசகர்கள் விழாவில் எல்லோரையும் கேள்வி கேட்க அனுமதிப்பார். ஆனால், தருமசங்கடமான கேள்விகள் என்றால் தொடங்கும்போதே, 'கடைசியில் பதில் சொல்கிறேன்' என்பார் அல்லது அந்தக் கேள்வி கேட்கும் வாசகரையே பகடித்து காலிசெய்துவிடுவார்.

அவருடைய கேள்வி பதில் பகுதி 'துக்ளக்' பத்திரிகையில் பிரசித்தி பெற்றது. "சிக்கு மங்கு, சிக்கு மங்கு செச்ச பப்பா என்றால் என்ன?" என்று ஒரு கேள்வி. "சிக்கு என்ற அம்மாவுக்கும் மங்கு என்ற அப்பாவுக்கும் பிறந்த குழந்தை" என்று பதில் எழுதினார் சோ. "இந்த நேரத்தில் ராஜாஜி இருந்திருந்தால் என்ன கூறியிருப்பார்?" என்று ஒருவர் கேட்க, "குசே பசே தசே" என்று அர்த்தமற்ற கேள்விக்கு அர்த்தமற்ற பதிலைப் பொருத்தமாகத் தந்திருப்பார். "சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்?" என்று ஒரு கேள்வி. "அதுவும் கொஞ்சம் சாயும்" என்பது பதில்.

ஆளும்கட்சியின் வட்ட, மாவட்டச் செயலர்கள் அதிகார மையங்களாக அரசு நிர்வாகத்தை ஆட்டிப்படைத்தபோது அவர் களுடைய அரசியல், பொருளாதார அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் வட்டமும் மாவட்டமும் பேசிக் கொள்கிறார்போல குறுங்கட்டுரைகளை வெளி யிட்டார். "பணவீக்கத்தைப் போக்க என்ன செய்யலாம்?" என்று வட்டம் கேட்க, "அமிர் தாஞ்சனம் தடவலாம்" என்று பதில் தருவார் மாவட்டம். "ஏன் தவிட்டு ஒத்தடம் கொடுக்கக் கூடாதா?" என்று வட்டம் கேட்டதும், "நல்ல யோசனை தவிட்டு ஒத்தட வாரியம் தொடங்கலாம்" என்று பரபரப்பார் மாவட்டம்.

வெறும் அரசியல் மட்டுமல்லாமல் உலக நடப்புகளையும் சுருக்கமான செய்திகளாகத் தந்தது 'துக்ளக்'. உலக சினிமாவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையோ நல்ல திரைப்படங்கள் எது என்றோ அடையாளம் காட்டாவிட்டாலும் தமிழ்த் திரைப்படங்களை 'போஸ்ட்மார்ட்டம்' என்ற தலைப்பில் அலசினார். கூடவே இயக்குநரின் பதிலையும் வாங்கிப்போட்டார். ஒரு இயக்குநர் அவருடைய விமர்சனத்துக்குப் பதிலாக, "உங்களுடைய போஸ்ட்மார்ட்டம் என்ற பிணப் பரிசோதனைக்கு நான் பதில் தர விரும்பவில்லை" என்று தன்னுடைய ஆங்கிலப் புலமையை அப்பட்டமாக வெளிப்படுத்த, அதையும் ரசித்து அடுத்த வாரம் செய்தியாக்கினார் சோ.

வழக்கமான நகைச்சுவை போதாது என்று கருதியபோது சிறப்பு நிகழ்வாக 'ஒண்ணரை பக்க நாளேடு, ஓசியில் படிக்க வேண்டிய ஒரே பத்திரிகை டூப் … கப்சா…' என்று போட்டுக் கலக்கினார். 'ஆனந்த விகடன்' அலுவலகத்திலிருந்துதான் 'துக்ளக்' வெளிவந்தது என்றாலும் 'ஆனந்த விகட'னையே கேலிசெய்து ஒண்ணரைப் பக்க நாளேட்டை வெளியிட்டு கலாய்த்தார். 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலிருந்து சம்ஸ்கிருத சுலோகங்கள்' என்று தொடர்ந்து வெளியிட்டுவிட்டு, கடைசியில், "அதெல்லாம் உண்மையல்ல" என்ற குண்டு போட்டார். எழுதுவது யார் என்று தெரிவிக்காமல் உலக நடப்புகளை எழுத வைத்து, அவற்றை எழுதியது ஜெயலலிதா என்று பிறகு அறிவித்தார். விளையாட்டாக பத்திரிகையைத் தொடங்கியிருந்தாலும் எந்தவிதச் சமரசங்களையும் செய்துகொள்ளாமல் அதைத் தொடர்ந்ததுடன் மாதம் இரு முறை என்பதை வாராந்தரியாக மாற்றினார். 'பிக்விக் பேப்பர்ஸ்' என்ற ஆங்கில சஞ்சிகையைத் தொடங்கினாலும் அது கையைக் கடிக்கும் என்று தெரிந்ததுடன் நிறுத்திக்கொண்டார்.

தன்னுடைய வலிமை, வலிமையின்மை இரண்டையும் உணர்ந்து செயல்பட்டதும் அவருடைய வெற்றிக்கு ஒரு காரணம். அதிகம் அலட்டிக்கொள்ளாத வாழ்க்கைபோலத் தோன்றினாலும், அலட்டிக்கொள்ளாத மனம் அது என்று அவருடைய பணிகளைச் செய்யும் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்களுக்குப் புரியும். தமிழ்ப் பத்திரிகையுலகில் மிகுந்த செல்வாக்கு மிக்க குரல் அது. சம்பிரதாயமான சொற் களாக இருக்கலாம்; உண்மையாகவே சோவின் குரல் யாராலும் பூர்த்திசெய்ய இயலாதது!

***

திரு. அரவிந்தனின் கட்டுரை:

சோ என்னும் ஒற்றைச் சொல்லின் இரட்டை அடையாளம்!



 சோ 'வந்தே மாதரம்' என்ற தொடர்கதையை 'துக்ளக்'கில் எழுதிவந்தார். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதில் 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலிருந்து' என்று குறிப்பிடப்பட்டு ஒரு மேற்கோள் சம்ஸ்கிருதத்தில் தரப்பட்டு, அதன் தமிழாக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வாரத்தின் கதையோட்டத்தில் இந்த மேற்கோள் தகுந்த இடத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும். வாசகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்த மேற்கோள்களை எழுதியவர் சாணக்கியர் அல்ல என்பதையும் அவர் பெயரில் தானே எழுதியதையும் தொடர் முடிந்த பிறகு தெரிவித்து, வாசகர்களை அசடுகளாக்கி அழகு பார்த்தார் சோ.

வேடிக்கையைத் தாண்டி, இந்தச் சம்பவத்தில் முக்கியமான ஒரு செய்தி உண்டு. சாணக்கியர், அரிஸ்டாட்டில், காந்தி என்று பிரபலமானவர்களின் பெயர்களைப் பார்க்கும்போது, மக்கள் அவற்றைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள். அதே சமயம், ஒரு சாதாரண மனிதர் எவ்வளவுதான் முக்கியமான விஷயங்களைச் சொன்னாலும் மக்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதை இதன் மூலம் அம்பலப்படுத்தினார் சோ.

தனித்துவமான சாதனைகள்

இப்படிக் கூர்மையும் விளையாட்டுத் தனமும் கொண்ட தண்டவாளங்களின் மீது தனது கருத்துலக இயக்கம் என்னும் வாகனத்தை வெற்றிகரமாக ஓட்டியவர் சோ. அவருடைய நாடகங்கள், திரைப்படங்கள், 'துக்ளக்' என எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த இரட்டை அடையாளமே அவரது ஆளுமை என்றுகூடச் சொல்லலாம்.

விளையாட்டுத்தனமான சாகசமாகத் தொடங்கப்பட்ட 'துக்ளக்' பத்திரிகையின் மூலம் சோ செய்த சாதனைகள் தனித்து வமானவை. அவரது அரசியல் விமர்சனங்கள் எள்ளலும் கூர்மையும் நிறைந்தவை. அரசியல்வாதிகளின் விவரங்கெட்ட தன்மை யையும் நேர்மையின்மையையும் அவரைப் போல அம்பலப்படுத்தியவர் யாருமில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக்கொள்வது பற்றிய கவலையே அவருக்கு இருந்ததில்லை. நெருக்கடிநிலைக் காலத்தில் 'துக்ளக்' செயல்பட்ட விதம் தமிழ் இதழியலில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.

கருத்துலகின் மையம்

கருத்தளவில் மட்டுமல்லாது, இதழியலின் பிற பரிமாணங்களிலும் சோ கவனம் செலுத்தினார். நேரடியாகக் கள ஆய்வுசெய்து நிகழ்வுகளை அலசும் கட்டுரைகளை வெளியிட்டுவந்தார். கி.வீரமணி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட ஆளுமைகளுடனான விரிவான நேர்காணல்கள் ஒரு காலத்திய 'துக்ளக்' இதழின் சிறப்பம்சங்களில் ஒன்று. கறாரான திரை விமர்சனங்களை வெளியிட்டு, அந்த விமர்சனங்களுக்கு இயக்குநர்களின் பதில்களையும் கேட்டு வாங்கிப் பிரசுரித்தார். அதன் மூலம் ஆரோக்கியமான விவாதம் உருவாக வழி வகுத்தார். தீவிர இலக்கியப் பரப்பைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும் அவருடைய பத்திரிகையில் இடம் இருந்தது. அரசியல் பத்திரிகையாகவே அறியப்பட்டாலும் உடல் நலம், சட்டச் சிக்கல்கள் குறித்த கட்டுரைகளுக்கும் அதில் இடமுண்டு.

வெகுஜனச் சிந்தனைகளுக்கு முரணாக இருப்பதுபோலத் தோன்றினாலும் மைய நீரோட்டச் சிந்தனைகளை அடியொற்றியே சோவின் கருத்துலகம் அமைந்திருந்தது. பொது வாழ்வில் நேர்மை, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, தார்மிக உணர்வு ஆகியவையே அவரது கருத்துலகின் மையம். அவருடைய கருத்துக்களின் அடிப்படையை அனைவரும் அறிந்திருந்தாலும், அதை முன்வைக்க அவர் பயன்படுத்தும் வாதங்கள், ஆதாரங்கள் ஆகியவை வாசகர்களிடத்தில் அவருக்குத் தனி மதிப்பை ஏற்படுத்தித் தந்தன.

விமர்சனப் பார்வை

விமர்சனங்களில் சமரசமற்ற கடுமையும் யாருக்கும் சலுகை அளிக்காத போக்கும் அவரது கருத்துக்களுக்கு நம்பகத்தன்மையை அளித்தன. தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிப்பதை முற்றாகத் தவிர்த்துவந்தார். பலருடன் நட்புப் பேணிவந்த அவர், விமர்சனம் என்று வரும்போது நட்பைக் குறுக்கே வர அனுமதிக்க மாட்டார். அதேசமயம், நட்பையும் அவர் இழந்ததாகத் தெரியவில்லை. அவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான நட்பை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

சோ மரபுவாதி. தேசியவாதி. இந்திய மரபைப் போற்றியவர். அவரது சிந்தனைகள் என்று புதிதாக எதையும் சொல்லிவிட முடியாது. தொடக்கத்தில் மனித உரிமைக் குழுவில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த சோ, பின்னாளில் காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் கொலைகள், ராணுவ, காவல் துறைகளின் அத்துமீறல்கள் ஆகிய பிரச்சினைகளில் மனித உரிமைகளின் பக்கம் நிற்காமல், அமைப்பின் சார்பில் நின்று வாதிடு பவராக மாறினார். அவரது மைய நீரோட்டச் சிந்தனை, நடுத்தர வர்க்கச் சார்பு ஆகியவற் றின் பின்னணியில் வைத்துத்தான் இந்தப் போக்கினைப் புரிந்துகொள்ள முடியும். இந்திய மரபைப் போற்றிய அவர் அதன் ஞான மரபை முன்னிறுத்தாமல், அதன் சமூகக் கட்டமைப்பு, சமயச் சடங்குகள், வாழ்வியல் அணுகுமுறை முதலானவற்றுக்கே அதிக முக்கியத்துவம் அளித்தார்.

பாதை மாறிய பார்வை

தொண்ணூறுகளிலும் அதற்குப் பின்னும் அவரது விமர்சனக் கத்தியின் கூர்மை மழுங்கத் தொடங்கியது. விமர்சனங்களில் சார்பு நிலைகள் முளைத்துவிட்டன. பொது வாழ்வில் நேர்மை என்பதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்த அவர், மைய நீரோட்ட தேசியவாதத்தை அந்த இடத்தில் வைத்து ஆராதிக்கத் தொடங்கினார். மாநில உணர்வுகள், உரிமைகள் ஆகியவற்றின் நியாயங்களை அவர் பேசவில்லை. விளிம்பு நிலைகளின் நியாயங்களைப் பேசவில்லை. திராவிட இயக்கத்தின் நாத்திகவாதத்தோடு, அவ்வியக்கம் முன்னிறுத்திய மாநில உரிமைக் குரலையும் புறமொதுக்கினார். மார்க்ஸியச் சித்தாந்தங்களைக் கொள்கை அளவில் எதிர்த்த அவர், மார்க்ஸிய இயக்கங்களின் மக்கள் சார்பு அரசியலுக்கான மரியாதையைக் கொடுக்கத் தவறினார். ஒரு கட்டத்துக்குப் பிறகு, தேசியவாதத்தை ஒரு மதமாகவே முன்னிறுத்தினார், பிற விழுமியங்களில் சமரசம் செய்துகொள்ளவும் தலைப்பட்டார். கறாரான அரசியல் விமர்சக ராக இந்திய அளவில் புகழ்பெற்ற அவர், ஒரு கட்டத்தில் அரசியல் பேரங்களை நடத்தித் தருவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

எனினும் தமிழ் இதழியலில் சோ ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது. பொழுதுபோக் கையே முதன்மைப்படுத்திய வெகுஜன இதழியலில் மாற்றுப் போக்குகளுக்கும் இடமுண்டு என்பதை நிரூபித்தவர் சோ. எம்.ஜி.ஆர்., கருணாநிதி முதலான சில ஆளுமைகளைப் பற்றி நடுத்தர வர்க்கத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் சில பிம்பங்களைக் கட்டமைத்ததில் அவரது எழுத்துகளுக்கு முக்கியமான பங்கு உண்டு. லட்சங்களில் விற்கும் பல இதழ் களுக்குச் சாத்தியமாகாத சாதனை இது. புதிய சிந்தனைகளை முன்வைத்ததன் மூலம் அவர் இதைச் சாதிக்கவில்லை. நடுத்தர வர்க்கத்தினரின் ஆழ்மன அபிலாஷைகளையும் கருத்துக்களையும் அழுத்தமான மொழியில் தர்க்கபூர்வமாக முன்வைத்ததன் மூலம் சாதித்தார். ஒரு தலைமுறையின் அறிவார்த்த அடையாளமாக 'துக்ளக்' பத்திரிகையை வளர்த்தெடுத்தார். தன் கருத்துக்களுக்கு அழுத்தம் தந்த அதே வேளையில், பல்வேறு விதங்களில் இதழியலின் வரையறைகளை விரிவுபடுத்தினார். விமர்சனங்களைத் தாண்டி அவரை வரலாற்றில் நிலைபெறச் செய்யும் அம்சமாக இது இருக்கும்!

***
 திரு. மணாவின் கட்டுரை:

 சோ என்கிற மனிதர்


 "எந்த ஒரு மனிதரையும் நான் பார்த்ததும் நம்பிவிட மாட்டேன். அவரைத் தொடர்ந்து கவனிப்பேன். எந்தெந்தச் சமயங்களில் எப்படி நடந்துகொண்டிருக்கிறார் என்பதையெல்லாம் பார்த்து, அவரைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வருவேன். அப்படியொரு முடிவுக்கு நான் வர ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடங்களோகூட ஆகலாம். ஆனால், அவரைப் பற்றி நானே சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்த பிறகு, அதை மாற்றிக்கொள்ள மாட்டேன். யார் வந்து அவரைப் பற்றி என்ன சொன்னாலும், சட்டென்று என்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன். பெரும்பாலும் என்னுடைய இந்தக் கணிப்பு பொய்த்ததில்லை" - இது அவருடைய நண்பர்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது துக்ளக் ஆசிரியரான சோ சொன்னவை.

அவருடைய உலகத்தில் நண்பர்களுக்குத் தனியிடம் இருப்பதைப் பார்க்க முடியும். சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்தபோது, அவருக்குப் பழக்கமான நண்பர்கள் அவருடைய இறுதிக்காலம் வரை அதே நெருக்கம் மாறாமல் அவரைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். நண்பர்கள் ஒன்றுசேர்ந்தால் போதும் கேலி, கிண்டல் ரகளைதான்!

நண்பர்களுக்கு முதலிடம்

துக்ளக் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, அதில் பப்ளிஷராக இருந்தவர் சோவுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான ரெங்காச்சாரி. ஒளிவு மறைவில்லாத அன்பான மனிதர்.

ஒருமுறை துக்ளக் ஆண்டு விழா சென்னையில் நடந்தபோது, அதன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தவர் சோவுக்கு நெருக்கமானவரான பிரதமர் சந்திரசேகர். மேடையில் விழா முடிந்து தேசியகீதம் இசைக்கப்பட்ட பிறகு, சந்திரசேகர் மேடையைவிட்டு இறங்கிக்கொண்டிருந்த சமயத்தில், உரத்த குரலில் சத்தம் போட்டுக் கூப்பிட்டார் ரெங்காச்சாரி.

"டேய் சோ.. இங்கே பார்றா.."

அவர் கவனிக்காததால் திரும்பவும் கூடுதல் சத்தத்துடன் கத்தினார்.

அருகில் இருந்த நான் ரெங்காச்சாரியிடம் சொன்னேன்.. "என்னதான் பழக்கமாக இருந்தாலும், பொது இடத்தில் 'வாடா.. போடா' என்று கூப்பிடுவது நன்றாக இருக்கிறதா? அதிலும் சத்தம் போட்டு இப்படிக் கத்துகிறீர்களே?"

கேட்டவுடன் 'சுருக்'கென்று கோபம் வந்துவிட்டது ரெங்காச்சாரிக்கு. மடமடவென்று என்னுடைய கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துப்போனார். அதற்குள் மேடையைவிட்டுக் கீழே இறங்கிச் சென்றிருந்தார் பிரதமர் சந்திரசேகர்.

போனவுடன் "நான் உன்னை 'வாடா'ன்னு கூப்பிடுறதை, அதிலும் பொது இடத்தில் கூப்பிடுறதை 'அப்ஜெக்ட்' பண்றதை என்னால் தாங்க முடியலை. உன்னை எந்த இடத்திலும் அப்படிக் கூப்பிட எனக்கு உரிமை இருக்கா.. இல்லையா? நீ சொல்லு" என்று சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு ரெங்காச்சாரி சொன்னதும்... வழக்கமான குபீர் சிரிப்புடன் என்னைப் பார்த்துச் சொன்னார் சோ.

"இவன்கிட்ட போய் ஏன் அப்படிக் கேட்டீங்க? இவனால் தாங்கிக்க முடியுமா? இங்கே மட்டுமில்லை.. எந்த இடத்தில், எங்கே இருந்தாலும் என்னோட ஃப்ரெண்ட்ஸ் 'வாடா.. போடா'ன்னு கூப்பிடுறதுக்கு அவங்களுக்கு முழு உரிமை இருக்கு. என்னப்பா.. போதுமா? இன்னும் ஏதாவது சொல்லணுமா?" என்று சொன்னபடி உதட்டைச் சுழித்ததும் ரெங்காச்சாரி முகத்தில் அப்படியொரு ஆனந்தம்!

சோவின் குரு

"உங்க குருன்னு யாரையாவது சொல்வீங்களா?"

"இருக்கான். அவன் பெயர் நானி. பெங்களூர்ல இருக் கான். அவனோட முழுப் பெயர் நாராயணசாமி" - இப்படி சோவால் குருபக்தியுடன் வர்ணிக்கப்பட்ட நானியை.. குமுதம் இதழில் நான் தொகுத்து எழுதிவந்த 'ஒசாமஅசா' தொடருக்காக பெங்களூரிலிருந்து வரவழைத்திருந்தார் சோ.

நானியைப் பார்த்ததும் ஏக சந்தோஷம் அவருக்கு. மருத்துவமனையில் இருந்து திரும்பிய நிலையிலும், குஷியாகத் தானே காரை ஓட்டிக்கொண்டு வந்தார் சோ. பின் ஸீட்டில் நானியும் நானும். கடலோரத்தில் இருக்கிற வீட்டுக்கு நகர்ந்தது கார்.

"டேய்.. நிஜமாவா சொல்றே. உன்னைப் பற்றி என் மனசில் இருக்கிறதெல்லாம் சொல்லிறவா? இவர் வேற டேப்ரெக்கார்டைக் கையில் வெச்சிருக்கார். அப்புறம் எல்லாம் ரெக்கார்டு ஆயிடும். சொல்லிறவா?" என்றார் நானி.

அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த சில குறியீட்டுச் சொற்களைச் சொல்லி, "எல்லாத்தையும் சொல்லிறவா?" என்று பீடிகையும் போட்டார்.

"நீ என்ன சொல்வேன்னு எனக்குத் தெரியாதா? எல்லாத்தையும் சொல்லிட்டு வா. இவர் ரெக்கார்டு பண்ணிப்பார். அப்புறம் அதை எடிட் பண்ணிக்கலாம். சரி.. ஆரம்பிப்பா" என்று சிரிப்பு பொங்க காரை ஓட்டியபடி சொன்னார் சோ.

தேன் பாய்ந்த அனுபவம்

சோவின் குசும்புகள், சேட்டைகள் எல்லாவற்றையும் அவிழ்த்துவிட்டு, "இவன் அப்படி.. இப்படி" என்று அமர்க்களமாகப் போட்டுக் காய்ச்ச, காதில் தேன் பாய்ந்த அனுபவத்துடன் ஏகானந்தமாக அதை ரசித்துக்கொண்டே வந்தார் சோ.

அப்புறம் அதை ஒருவழியாக 'எடிட்' பண்ணி, அந்த அனுபவங்கள் இரண்டு வாரங்கள் வெளியானது.

இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்தது அவருக்குப் பெரும் பாக்கியம்! கிண்டலும், குத்தலும் அவருக்கு இயல்பின் ஒரு பகுதியைப் போலவே மாறிவிட்டிருந்தன. அலுவலகத்தில் வேலை பார்க்கிறவர்களிடமும் அது அடிக்கடி பீறிட்டபடி இருக்கும்.

இலவச இணைப்பும் சோவும்

ஒரு சமயம், துக்ளக் ஆபீஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், ஒரு வாரத் தாடியுடன் சோகமாக உட்கார்ந்திருந்தார். மதிய நேரத்தில் அவருக்குச் சின்ன பேப்பர். அதனுடன் ஓர் இலவச இணைப்பு.

இணைப்பைப் பிரித்துப் பார்த்தால், பாதியாக ஒடிக்கப்பட்ட துண்டு பிளேடு. அந்த ஊழியர் பரபரப்புடன் பேப்பரைப் பிரித்தபோது, சிறு கோடுகள் ஒடிந்த மாதிரியான கையெழுத்தில் இப்படி எழுதியிருந்தார் சோ.

'முகம் பார்க்கச் சகிக்கவில்லை. இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிற பிளேடால் நாளைக்கு மழுங்கச் சிரைத்துக்கொண்டு வரவும்.'

ஜூவுக்குப் போனா விதவிதமாப் பார்க்கலாம்

துக்ளக் ஆபீஸில் ஒரு சமயம் பத்திரிகை வேலைகளில் சோ மும்முரமாக இருந்த சமயம் பார்த்து, யாரோ ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்.

எழுதிக்கொண்டிருந்த சோ நிமிர்ந்து பார்த்திருக்கிறார். உட்காரச் சொல்லியிருக்கிறார்.

"என்ன விஷயம்?"

"மெட்ராஸுக்கு வேலையா வந்தேன். அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்" என்று இழுத்ததும்… சோவிடமிருந்து சுள்ளென்று பதில் வந்திருக்கிறது.

"மெட்ராஸுக்கு வந்து என்னைப் பார்க்கிறதைவிட இங்கே உள்ள ஜூவுக்குப் போனீங்கன்னா விதவிதமாகப் பார்க்கலாம். உங்களுக்கும் நல்லாப் பொழுதுபோகும். சரி.. நான் என் வேலையைப் பார்க்கட்டுமா?"

வந்தவருக்கு முகம் எந்தக் கோணத்தில் போயிருக்கும்?

எல்லாம் ஒரே கப்சா

துக்ளக்கில் வெளியான என்னுடைய கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட நான் முடிவெடுத்ததும் சோவிடம் சொன்னேன்.

"அதுக்கென்று தனியாக விழா நடத்திச் செலவழிக்காதீங்க. பேசாம துக்ளக் ஆண்டு விழாவிலேயே அதை வெளியிட லாம். நம்ம நாராயணன் சார் (பரந்தாமன் என்கிற பெயரில் நிறையக் கட்டுரைகள் எழுதியிருக்கிற இவர், கலைவாணருக்கு உதவியாளராகவும் இருந்தவர்) முதல் காப்பியை வாங்கிக்கட்டும்" - இப்படிச் சொல்லிவிட்டு, அந்தப் புத்தகத்துக்கு ஒரு முன்னுரையையும் கைப்பட எழுதித் தந்தார். முன்னுரையில் கட்டுரைகளுக்குப் பின்னால் இருக்கிற உழைப்பைப் பாராட்டியிருந்தவர், அந்தக் காகிதத்தை மடித்து மேலே சிறு பேப்பரை பேஸ்ட் பண்ணியிருந்தார்.

அதில் இப்படி எழுதியிருந்தார், 'உள்ளே எழுதியிருப்பதெல்லாம் ஒரே கப்சா.'

சோ பாடிய பாடல்

சீரியஸாக அவர் இருந்ததில்லையா என்கிற கேள்வி இந்த நேரத்தில் எழலாம். இருந்தாலும், அவர் அந்த நிலையிலேயே தொடர்ந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

துக்ளக்குக்கு ஒரு கட்டுரையை மதுரையிலிருந்து கூரியரில் அனுப்பியிருந்தேன். அது கிடைக்கச் சற்றுத் தாமதமாகியிருக்கிறது. போனில் அழைத்தவர் வழக்கத்தைவிட உரத்த குரலில் கத்தியபோது மனதுக்கு நெருடலாக இருந்தது.

மறுநாள் காலை நேரம். வீட்டுத் தொலைபேசி அடித்தது. எடுத்தால் கர்னாடக இசையில் ஒரு பாடல். சோ சார்தான் பாடிக்கொண்டிருந்தார்.

கொஞ்சம் கேட்டதும் பாடல் நின்றது.

"நேத்து கூரியர் லேட்டா கிடைச்சது. ஆனா, அதுக்கு முன்னாடி உங்களைக் கூப்பிட்டு டோஸ் விட்டுட்டேன். மனசுல வெச்சுக்காதீங்க.. என்ன?"

திரும்பவும் அந்தப் பாடலைத் தொடர்ச்சியாகப் பாடி முடித்தபோது காது குறுகுறுத்தது.

கட்டுரைகளுக்காக 


வேறுவேறு ஊர்களுக்குப் போய், அதற்கான பில் தொகையை அனுப்பியபோது ஒருசமயம் பார்த்தவர் போனில் கூப்பிட்டார்.

"என்ன.. இப்படிப் பில் அனுப்பியிருக்கீங்க?"

"ஏன்.. என்ன சார்?"

"ஊருக்குப் போறப்போ நீங்க தங்கின ஹோட்டல் பில்லைப் பார்த்தேன். இவ்வளவு கம்மியான ரேட்டில் இருக்கிற ஹோட்டல்களில் இனி தங்காதீங்க. நல்ல ஹோட்டல்களில் தங்குங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது, நம்ம நிறுவனத்துக்கும் நல்லது. பணத்தை நான்தாங்க கொடுக்கப்போறேன்" - போனை வைத்துவிட்டார்.

நம்பிக்கையின் பெருமிதம்


ராஜீவ் காந்தி கொலை நடந்த சமயம்.. மதுரையிலிருந்து சென்னை வந்திருந்த நான் ஸ்ரீபெரும்புதூருக்கு துக்ளக் கவரேஜுக்காகப் போனேன்.

சென்னை துவங்கி, தமிழகத்தின் பல பகுதிகளில் கலவரச் சூழல், "கார்ல போனாலும் பார்த்துப் போங்க" - சொல்லியனுப்பினார் சோ.

ராஜீவ் கொலையில், கைது செய்யப்பட்ட போட்டோகிராபர் சுபா சுந்தரத்தின் அலுவலகத்திலிருந்துதான் ஒரு போட்டோகிராபர் என்னுடன் காரில் வந்தார். சுபா சுந்தரம் தாங்கள் சென்ற காரில் 'பிரஸ்' ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பிவைத்தார்.

நான் ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று திரும்பியவுடன், கட்டுரை எழுதிவிட்டு மதுரைக்குச் சென்ற இரண்டு நாட்களில், சுபா சுந்தரம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

துக்ளக் இதழில் கட்டுரை வெளியானதும் ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்தி வந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் உள்ள ஒரு அதிகாரி துக்ளக் அலுவலகம் வந்திருக்கிறார்.

துக்ளக் இதழில் வெளியான என்னுடைய கட்டுரையில் 'படங்கள்: சுபா' என்று வெளியானது குறித்த விசாரணைக்கு அந்தக் கட்டுரையை எழுதியவரை விசாரிக்க வேண்டும் என்று கேட்டபோது, அதற்குப் பதில் சொல்லி யிருக்கிறார் சோ.

"நான்தான் அவரைக் கட்டுரைக்காக அனுப்பினேன். முடித்துக் கொடுத்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார். தேவையில்லாமல் அவரை விசாரணைக்கு அழைத்து பீதி ஏற்படுத்துவது சரியில்லை. அவரை அனுப்பியவன் என்கிற முறையில் அவரிடம் என்ன கேட்க வேண்டுமோ, அதை என்னிடம் கேளுங்கள். நானே பதில் சொல்கிறேன்" என்று ஆசிரியரான சோ பதில் அளித்திருப்பதை துக்ளக் அலுவலகப் பொறுப்பில் இருந்தவர் சொன்னபோது, அவருடைய நம்பிக்கையின்மீது பெருமிதம் ஏற்பட்டது.

ஒசாமஅசா…

மிகவும் தயங்கித் தயங்கித் தொடர்ந்து முயற்சித்து, அவருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து குமுதம் இதழில் வெளியான 'ஒசாமஅசா' தொடரைத் துவக்குவதற்கு சோ ஒப்புக்கொண்டதும் அவர் போட்ட கண்டிஷன், "நான் சொல்றேன்.. நீங்க எழுதுங்க. ஆனால், 'எழுத்தும் தொகுப்பும்' என்று உங்க பெயர்தான் வரணும்."

அதன்படியே 76 வாரங்கள் வரை குமுதத்தில் வெளியான தொடருக்குப் பெரும் வரவேற்பு. அதற்காகவே அவரை நூறு தடவைக்கு மேல் சந்தித்தேன்.

துக்ளக்கில் ஏற்கெனவே பதினான்கு ஆண்டுகள் நான் பணியாற்றியிருந்தாலும் அவருடைய அந்திமக் காலத்தில் நிகழ்ந்த இந்தச் சந்திப்புகள் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தின. கேலியும் கிண்டலுமாகப் பல்வேறு இடங்களில் நகர்ந்த அந்தச் சந்திப்புகள், அவருடைய மனதில் உறைந்திருந்த பல நினைவுகளை அந்தரங்க சுத்தியுடன் வெளிப்படுத்தின.

"இதுதான் கடைசியாகக் கொடுக்கிற தொடர்னு வெச்சுக்குங்க. நான் எல்லாத்தையும் கொட்டிடுறேன். எது தேவையோ அதைப் பிறகு எடிட் பண்ணிக்கலாம். சில சென்ஸிட்டிவ்வான விஷயங்களை நான் பேசி நீங்க டேப் பண்ணியிருந்தாலும், அவை இந்தச் சமயத்தில் வெளியாவதை நான் விரும்பலை. ஒருவேளை, நான் இல்லாமல் போனபிறகு, அதை நீங்க வெளியிடணும்னு நினைச்சா வெளியிடலாம்" என்று மிகுந்த உரிமையுடனும் நம்பிக்கையுடனும் அவர் குரல் பிசிறச் சொன்னார். மிகுந்த நெகிழ்வுடன் நான் மென்மையாக அவர் காதோரம் பதில் சொன்னபோது, என்னுடைய குரலும் தாழ்ந்திருந்தது.

"ரொம்பவும் நம்பிக்கையோடு என்கிட்டே பகிர்ந்திருக்கீங்க.. நீங்க விரும்பாத எதையும் நான் எப்போதும் வெளியிட மாட்டேன் சார்.."

சொன்னதும் சாய்வான படுக்கைக்கு அருகில் அழைத்து, மிகவும் மெலிந்து போயிருந்த உறைந்த மெழுகைப் போன்ற கை விரல்களால் என்னுடைய கையை அழுத்தியபோது, அவருடைய கண்களிலும் உதட்டோரத்திலும் சிறு புன்னகை ஒட்டியிருந்தது.

அந்த அழுத்தமான நம்பிக்கை வெளிப்பட்ட தொடுதல் என்றைக்கும் உயிர்ப்புடன் உடனிருக்கும்!

- மணா, முப்பத்தாறு நூல்களை எழுதியிருக்கிறார். 'துக்ளக்'கில் பதினான்கு வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். சோவின் வாழ்வனுபவங்களைத் தொகுத்துத் தொடராகவும் எழுதியிருக்கிறார்.

நன்றி: தி இந்து




16.7.12

தமிழகத்தின் உண்மையான பெரியார்

பெரியசாமி தூரன்

(1908 செப். 26 - 1987, ஜன.  20)

இசை மற்றும் இலக்கிய உலகில் பெரிதும் போற்றப்பட்ட திரு. பெரியசாமி தூரன்,  அவ்விரண்டின் வளர்ச்சிக்கும் மாபெரும் சேவை செய்துள்ளார். தன்னுடைய காலத்தை வென்ற படைப்புகளின் மூலம் இசை மற்றும் இலக்கியங்களுக்கு மெருகூட்டியிருக்கிறார்.  ''தூரன் என்றால் தமிழ்; தமிழ் என்றால் தூரன்'' என்று சொன்னால் அது மிகையாகாது.

தூரன் என்ற பெயர் சொன்னாலே அது “கலைக்களஞ்சியம்” என்று சொல்லப்பட்ட “தமிழ் அபிதான சிந்தாமணி”யைத்தான் (தமிழ் என்ஸைக்ளோபீடியா)  குறிக்கும். ஏனென்றால், கடுமையாக உழைத்து அதைப் பத்து தொகுதிகளாக தமிழுலகிற்கு அளித்த கொடை வள்ளல் அல்லவா அவர்? குழந்தை இலக்கியத்திற்குப் பங்காற்றியதன் மூலமும் நம்மால் நினைவுகூறத் தக்கவர் தூரன்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி என்ற ஊரில், பழனிவேலப்ப கவுண்டர் – பாவாத்தாள் தம்பதியருக்கு, 1908 செப்டம்பர் 26–ல் பிறந்த தூரன், சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர், ஆசிரியர் பயிற்சியும் (L.T. – Licentiate in Teaching)  பெற்றார். தன்னுடைய இளைய பருவத்தில், தேசிய-மஹாகவி பாரதியான் பால் ஈர்க்கப்பட்டு, மஹாத்மா காந்தியினாலும் ஊக்கம் கொண்டார். சிறந்த தேசபக்தராக இருந்த காரணத்தால், ஆங்கிலேய அரசாங்கம் விடுதலை வீரர் பகத் சிங்கைத் தூக்கிலிட்டதைக் கண்டித்து, கல்லூரியில் இறுதியாண்டுத் தேர்வைப் புறக்கணித்தார்.

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அறிவியக்கத்திற்கு இவர் ஆற்றியுள்ள பங்கு ஒப்பிடலுக்கு அப்பாற்பட்டது. முக்கியமாக, ஐந்து கவிதை நூல்களும், ஏழு நாடக நூல்களும், ஐந்து கதைத் தொகுதிகளும், மூன்று கட்டுரைத் தொகுப்புகளும், ஆறு இசை நூல்களும், மூன்று மொழிபெயர்ப்பு நூல்களும், மற்றும் பல நூல்களும் படைத்து அளித்துள்ளார். உளவியல் துறையில் (Psychology) “குழந்தை உள்ளம்”, மரபணுவியல் துறையில் (Genetics) “பாரம்பரியம்”, கருத்தரித்தல் பற்றிய அறிவியல் துறையில் (Embryology) “கருவில் வளரும் குழந்தை” போன்ற அற்புத படைப்புகளும் வழங்கியுள்ளார் திரு தூரன். அவருடைய படைப்புகளில் இளந்தமிழன், மின்னல் பூ, தங்கச் சங்கிலி, பிள்ளை வரம், தேன் சிட்டு, பூவின் சிரிப்பு ஆகியவைக் குறிப்பிட்டுச் சொல்லும்படியானவை. பொன்னியின் தியாகம், அழகு மயக்கம் ஆகியவை அருமையாகப் படைக்கப்பட்ட நாடகங்கள். குழந்தைகளுக்காகப் பல பாடல்கள், மிருகங்கள் பற்றிய கதைகள், மற்றும் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.

பார்க்க:
பெ.தூரன் இயற்றிய கீர்த்தனைகள் (மின் நூல்)

திரு.தூரன் அவர்கள், நாட்டுபுறப் பாடல்களும், கர்னாடக இசைக் கீர்த்தனைகளும், ஸ்வரங்களும் இயற்றியுள்ளார். டி.கே.பட்டம்மாள், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், என்.சி.வசந்தகோகிலம், டி.வி.சங்கரநாராயணன், டைகர் வரதாச்சாரியார், முசிறி சுப்ரமணிய ஐயர், போன்ற இசையுலக ஜாம்பவான்கள், இவருடைய இசையறிவை மெச்சி, இவர் இயற்றிய பாடல்களுக்கு அடிமைகளாகவே இருந்து, தங்கள் கச்சேரிகளில் அவற்றைப் பாடாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம். ’சாரங்கா’ ராகத்தில் அமைந்த “ஞானநாதனே”, ‘பிருந்தாவன சாரங்கா’வில் அமைந்த “கலியுக வரதன்”, ‘மாண்ட்’ ராகத்தில் அமைந்த “முரளீதரா கோபாலா”, ‘சாவேரி’யில் அமைந்த “முருகா முருகா”, ‘காபி’யில் பாடிய “பழனி நின்ற”, ‘கீரவாணி’யில் அமைந்த “புண்ணியம் ஒரு கோடி”, ‘சுத்த சாவேரி’ ராகத்தில் அமைந்த “தாயே திரிபுரசுந்தரி” ஆகியவை இவர் இயற்றியுள்ள மயங்கவைக்கும் கீர்த்தனைகளில் சில.

பெ.தூரன் இயற்றிய “எங்கு நான் செல்வேன் ஐயா” என்ற துவிஜாவந்தி ராகக் கீர்த்தனை, பாம்பே ஜெஸ்ரீ குரலில் (பாடலைக் கேட்க மேலே உள்ள பெட்டியில் அழுத்தவும்)

பெரியசாமி தூரன் அவர்கள் செய்துள்ள மொழியாக்கங்களில், ஜாக் லண்டன் அவர்களின் “Call of the Wild” (கானகத்தின் குரல்), நாவோமி மிட்சின்ஸனின் “Judy and Lakshmi” (காதல் கடந்த நட்பு) ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லப்படுபவை. இவர், “பாரதி தமிழ்” மற்றும் “தாகூரின் ஐம்பெரும் கட்டுரைகள்” ஆகிய நூல்களுக்கு தொகுப்பாசிரியராக (Editor)  இருந்து வெளியிட்டுள்ளார். மேலும் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்த சில கவிதைகள் மற்றும் நாடகங்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். மஹாகவி பாரதியாரின் பன்முகத் தோற்றத்தையும் ஆளுமையையும், அருமையான முறையில் அலசி ஆராய்ந்து, இவர் வெளிக் கொணர்ந்த பத்து தொகுதிகள், நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றியுள்ள தொண்டுகளில் மிகச்சிறந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

1948-லிருந்து 1978 வரை தலைமைத் தொகுப்பாசிரியர் பொறுப்பில் கடுமையாக ஓய்வின்றி உழைத்து பத்து தொகுதிகள் கொண்ட தமிழ்க் கலைக் களஞ்சியத்தை இவர் தயாரித்தது மிகச் சீரிய பணியாகும். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான ஒரு கலைக் களஞ்சியத்தையும் பத்து தொகுதிகளுடன் படைத்தார்.

டி.அவினாசிலிங்கம் செட்டியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது, செட்டியார் மனமுவந்து அளித்த முப்பது ரூபாய் மாதச் சம்பளத்தை அதிகம் என்று மறுத்து வெரும் பதினைந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு பணியாற்றினார். இந்திய அரசு இவருக்கு 1968-ல் பத்ம பூஷண் விருதளித்துக் கௌரவித்தது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 1970-ல் கலைமாமனி விருதும், 1972-ல் தமிழ் இசை சங்கம் இசைப்பேறறிஞர் பட்டமும், 1978-ல் எம்.எ.சி.அறக்கட்டளைகள் அண்ணாமலை செட்டியார் விருதும் அளித்து கௌரவித்தன. பாரதீய வித்யா பவனும், சாகித்ய அகாதமியும் இணைந்து தொண்டில் கனிந்த தூரன் என்ற பெயரில் அவரின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை அவருடைய நூற்றாண்டான சென்ற வருடத்தில் வெளியிட்டு கௌரவித்தன.

“தூரனும் அவருடைய குடும்பத்தாரும், திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பக்தர்களாவர். யோகியைப் போற்றி திரு.தூரன் அவர்கள் எழுதியுள்ள பாடல்கள் பல வித்வான்களால் பாடப் பெற்றுள்ளன. அப்பாடல்கள் புத்தகங்களாகவும் வந்துள்ளன. யோகி ராம்சுரத்குமார் அவர்கள் முன்னிலையில் தூரன் அவர்களிடமிருந்து பாடல்கள் மடை திறந்த வெள்ளம் போல் பெருகி வரும்” என்று பெங்களூரைச் சேர்ந்த  துறவியும், சமூக சேவகருமான சாது ரங்கராஜன் நெகிழ்ந்து கூறுகிறார்.

அன்னார் 1987 , ஜனவரி 20 ல் மறைந்தார். இவரது நூற்றாண்டு விழா 2008 ல் கொண்டாடப்பட்டது.

- பி.ஆர்.ஹரன்


காண்க:


தேமதுர தமிழிசை தெருவெங்கும் ஒலித்திட...

பெரியசாமி தூரன்

Periyasaamy Thooran (Wiki)

பெரியசாமி தூரன் - ஜெயமோகன் 

பெரியசாமி தூரன் - சிலிகான் ஷெல்ப்

.

24.6.12

இவன் நிரந்தரமானவன்

கண்ணதாசன்
(பிறந்த தினம்: ஜூன் 24)

காரைக்குடி அருகிலுள்ள சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24 இல் பிறந்தான் முத்தையா. நாட்டுக் கோட்டை நகரத்தார் சமுதாய வழக்கத்தின்படி, உடலெங்கும் திருநீறு பூசி சைவ நெறியில் வளர்ந்தான். எட்டாவது வரை மட்டுமே படித்த முத்தையாவை காலம் கவிஞனாக்கியது. சைவத்தில் வாழ்ந்த முத்தையா, பகவான் கண்ணனிடம் மனதை பறிகொடுத்ததால் கண்ணதாசனானார்.

ஸ்ரீ கிருஷ்ண கவசம், கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம் என கவிதை நூல்களை படைத்தார். கடைசிப் பக்கம், போய் வருகிறேன், வனவாசம், மனவாசம் என தன் வாழ்க்கையை வரைந்தார். பகவத்கீதையையும் அபிராமி அந்தாதியையும் எளிய தமிழில் விளக்கினார்.

திரையிசைப் பாடல்கள் அள்ளிக் கொடுத்தார். இவரை தமிழக அரசின் ஆஸ்தான கவிஞனாக அமரவைத்தார் எம்.ஜி.ஆர். சாகித்ய அகாடமி விருது இவரை அலங்கரித்தது. அமெரிக்க சிகாகோ நகர மருத்துவமனையில் 17-10-1981இல் மறைந்தார்.
இவன் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் இவனுக்கு மரணமில்லை.

அர்த்தமுள்ள வாழ்க்கை


சேலம் நகரில் திராவிட கழகத்தினர் ஸ்ரீராமன் படத்திற்கு செருப்புமாலை அணிவித்தும், வினாயகர் சிலைகளை செருப்பால் அடித்தும், உடைத்தும் நடத்திய ஊர்வலம் ஹிந்துக்களின் மனதை நோகடித்தது. நாத்திக கண்ணதாசன் இந்த ஆபாச ஊர்வலத்தை அறிந்து துடித்தார். துக்ளக் பத்திரிகையில் ‘நமது மூதாதையர் முட்டாள்களல்லர்’ என்ற தலைப்பில், ஹிந்து மத எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்தார். மீண்டும் அதே பத்திரிகையில் ‘நான் ஒரு ஹிந்து’ என்று தலைப்பிட்டு தன்னிலை விளக்கக் கட்டுரை வடித்தார்.

அப்போது, தினமணிக் கதிர் ஆசிரியர் ‘சாவி’ அவர்கள், எங்கள் பத்திரிகைக்கெல்லாம் எழுத மாட்டீர்களா" என்று கேட்க, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ உருவானது. உலகெங்கும் வாழும் தமிழர் உள்ளமெல்லாம் குளிர்ந்தது. நாத்திக நாற்றத்தை விரட்டியடித்தது கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம். இப்புத்தகத்தின் வெளிச்சத்தில் பாமர மக்களை கும்பல்களின் இருட்டுச் சிந்தனைகள் சிதறிப் போயின.

எரித்ததும் எறிந்ததும்

தி.மு.க. கம்ப ராமாயணம் எரிப்புப் போராட்டம் நடத்தியபோது ஓரிடத்தில் கவிஞரும் கலந்து கொண்டார். பகவான் கண்ணன் தன் தாசன் மனதில் புகுந்து என்ன லீலை செய்தானோ தெரியவில்லை. திடீரென கவிஞர் தன் போராட்டத்தை ரத்து செய்துவிட்டு கம்ப ராமாயணத்தை கட்டியணைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அதனை முழுவதுமாக படித்து முடித்தார். கம்பனின் கவிச்சொற்கள் கவிஞரின் நாத்திக அறிவை எரித்தது; அப்பொழுதே தி.மு.கவை தூக்கி எறிந்தார்.

கவிஞனின் கனிவு


ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் கவிஞர் வாலி. கண்ணதாசன் இரவு பதினோரு மணியாகியும் வரவில்லை. நள்ளிரவு நேரத்தில் அரங்கில் நுழைந்தார் கண்ணதாசன். கோபத்திலிருந்த வாலி, அவரை வரவேற்றார். செய்தித்தாள் ஒன்றை வாலியிடம் நீட்டிய கண்ணதாசன் ‘நாளைக்கு வாலிக்கு பிறந்தநாள், அதனால் வாலி பற்றி கவிதை எழுதி பேப்பரில் போடச்சொல்லி அச்சானதும் எடுத்து வந்தேன்’ என்று அறிவித்தார். வாலி தேம்பித் தேம்பி அழுதார்.


நன்றி: விஜயபாரதம்
.
காண்க:

காவியத்தாயின் இளைய மகன்

.



25.4.12

ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் அகல்விளக்கு



மு.வரதராசனார்
(பிறப்பு: 25 .04.1912  மறைவு: 10.10.1974 )

சென்ற நூற்றாண்டில் எத்தனையோ பேராசிரியர்கள் பணிபுரிந்தார்கள்; ஓய்வு பெற்றார்கள்; மறைந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் இன்று நினைவுகூரப்பட்டுப் போற்றப்படவில்லை. ஒரு சிலரே மறைந்தும் மறையாமல் வாழ்கிறார்கள். அவர்களில் சிலரை மாணவர்கள் மட்டும் நினைவுகூர்கிறார்கள்; மிகச் சிலரையே எல்லோரும் நினைந்து போற்றுகிறார்கள். அத்தகைய மிகச் சிலருள் ஒருவரே பேராசிரியர் மு.வ.

இருபதாம் நூற்றாண்டு கண்ட நிகரற்ற பேராசிரியர் டாக்டர் மு.வ. என்பது வரலாற்று உண்மை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மு.வ. என்னும் இரண்டெழுத்து, தமிழ் மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே ஒலித்த இரண்டெழுத்து மந்திரம் ஆகும். வட ஆர்க்காடு மாவட்டத் திருப்பத்தூரில் பிறந்த மு.வ. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அங்கேயே வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியைத் தொடங்கினார். தனியே படித்துப் புலவர் தேர்வில் மாநிலத்தில் முதல்வராகத் தேர்ச்சி பெற்று, அவ்வூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகி, பின் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து, பேராசிரியராக உயர்ந்து, சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியராகத் திகழ்ந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒளிர்ந்து புகழின் உச்சியில் மறைந்தார். அவரது வாழ்வு எளிய குடும்பத்தில் பிறந்து ஆர்வத்தாலும் உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து முன்னேற்றம் கண்ட பெருவாழ்வு நேரிய வாழ்வு.

ஆசிரியர்கள் மூன்று வகை. சிலர் மாணவர்களைப் பகைவர்களைப்போல் நினைப்பார்கள். இவர்கள் மாணவர்கள் செய்யும் சிறு தவறுகளைக்கூடத் தாங்கிக்கொள்ளாமல் தண்டிப்பார்கள். சிலர், மாணவர்களைத் தங்களிடம் பாடம் கற்க வந்தவர்களாக மட்டும் கருதுவார்கள். இவர்கள் பாடத்தை மட்டும் கற்பித்து மாணவர்களைத் தேர்வுக்கு ஆயத்தம் செய்வார்கள். சிலர் மாணவர்களைத் தங்கள் மக்களாகக் கருதி, எல்லா வகையிலும் துணை நிற்பார்கள். இவர்களே மாணவர்களை வாழ்வாங்கு வாழத்தக்கவர்களாக உருவாக்குபவர்கள். இவற்றில் இறுதிவகையைச் சேர்ந்தவர் பெருந்தகை மு.வ.

அவர் மாணவர்களுக்குப் பாடம்சொல்லும் ஆசிரியராக மட்டுமன்றி ஆதரவு நல்கும் தந்தையாகவும் திகழ்ந்துள்ளார். அவர்கள் குடும்பச் சூழல்நிலையை அறிந்து அதற்கேற்ப அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் புரிந்துள்ளார். மறைந்த பேராசிரியர் பொன். செüரிராசன் போன்ற எளிய மாணவர்களைத் தம் வீட்டிலேயே தங்கச்செய்து உணவும் தந்து படிக்க வைத்துள்ளார். மறைந்த பேராசிரியர் ப. இராமன் போன்ற சிலருக்கு விடுதிக்கட்டணமும் வேறு சிலருக்குக் கல்லூரிக் கட்டணமும் கட்டி உதவி புரிந்துள்ளார். இவ்வுதவிகளை எல்லாம் அடுத்தவருக்குத் தெரியாமலே செய்துள்ளார். மாணவர்கள் நல்வாழ்வுக்காகப் பல்கலைக்கழகத்தோடு போராடியுள்ளார். அவர் ஆசிரியப் பணியைத் தாம் வாழ்வதற்கான பணியாக மட்டும் கருதாமல் மாணவர்களை வாழ்விக்கும் பணியாகக் கருதி அரும்பாடுபட்டுள்ளார்.

பெரும்பாலும் கல்லூரி முடிந்ததோடு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே இருந்த தொடர்பு அறுந்து போய்விடுகிறது. அதன்பின்பு அவர்கள் யாரோ, இவர்கள் யாரோ. ஆனால் மு.வ. மாணவர்களோடு கொண்டிருந்த தொடர்பு கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பும் வளர்ந்து, வாழ்நாள் உறவாக நிலைபெற்றுள்ளது. அவர் பலருக்கு வேலை தேடும் முயற்சியில் உதவியுள்ளார்; வீடு கட்டுவதற்குப் பணம் கொடுத்து உதவியுள்ளார்; பலரை நூல்கள் எழுதச் செய்து, அவற்றைப் பாடநூல்களாக வைத்து வருவாய்க்கு வழிசெய்துள்ளார். வாழ்க்கைச் சிக்கல்களுக்குக் கடிதங்கள் எழுதி வழிகாட்டியுள்ளார். அவர் அளவுக்குத் தம் மாணவர்களுக்குக் கடிதம் எழுதிய பேராசிரியர் மற்றொருவர் இல்லை என்றே சொல்லலாம்.

அவர் மாணவர்களை மதிப்போடு நடத்தியவர். தம் நாவல்கள் குறித்து மாணவர்கள் சிலரிடம் விவாதம் செய்துள்ளார். படிக்கக் கொடுத்துக் கருத்துக் கேட்டுள்ளார். தம் முதலணி மாணவர் ம.ரா.போ. குருசாமியின் கருத்தை ஏற்று, நாவலுக்கு வைத்திருந்த முருங்கைமரம் என்ற பெயரைச் "செந்தாமரை' என்று மாற்றிக்கொண்டார். ஒரு சிறுகதைக்கு அவர் தெரிவித்த "விடுதலை' என்னும் தலைப்பையொட்டி "விடுதலையா?' என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும், நான்கு நாவல்களுக்குத் தம் முதல்அணி மாணவர்கள் நால்வரையும் ஒவ்வொரு நாவலுக்கு அணிந்துரை எழுதச் சொல்லி அவர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.

மற்றப் பேராசிரியர்களெல்லாம் தமிழைப்பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டிருந்தபோது அவர் ஒரு படி மேலே சென்று தமிழர்களைப் பற்றியும் சிந்தித்தார். அதன் விளைவே அவர் எழுதிய நண்பர்க்கு, தம்பிக்கு, தங்கைக்கு, அன்னைக்கு ஆகிய கடித இலக்கியங்கள். தமிழர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது அவற்றின் உள்ளடக்கமாக அமைந்தது. இந்தச் சமுதாய அக்கறை அவரை ஏனைய தமிழாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.

மாணவர்கள் மட்டுமன்றிப் பிறரும் அவர் அறிவுரைகளால் வாழ்ந்துள்ளார்கள். தங்கள் குடும்பச் சிக்கலைத் தெரிவித்து வழிகேட்டுக் கடிதம் எழுதியவர்கள் பலர். ஒருமுறை சூழ்நிலையால் வாழ்க்கையில் தவறிவிட்ட தன் மனைவியைக் கொன்றுவிடலாமா என்று தோன்றுவதாக ஒருவர் கடிதம் எழுதி அவருடைய அறிவுரையை நாடினாராம். அதற்கு மு.வ., அப் பெண்ணை மனைவியாக ஏற்க முடியாவிட்டாலும், இரக்கங்காட்டி வீட்டு வேலைக்காரி போலவாவது இருந்துவிட்டுப்போக அனுமதிக்கலாம் என்று பதில் எழுதினாராம். மு.வ.வின் எழுத்து வாழ்விக்கும் எழுத்து என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

அவருடைய தமிழ்ப்பணிகள் எல்லாம் காலத்திற்கு ஏற்பத் தமிழை வளர்க்கும் பணிகளாக அமைந்தன. திரு.வி.க.வால் எளிமைக் கோலம் பூண்ட தமிழ்நடையை எளிமையின் எல்லைக்குக் கொண்டுசென்றவர் மு.வ. எளிதில் புரியும் திருக்குறளுக்கு விளங்காத நடையில் உரைகண்டு பொதுமக்களுக்கு எட்டாத உயரத்தில் உரையாசிரியர்கள் அதனை ஏற்றி வைத்திருந்தார்கள். அவர் குறளுக்கு எளிய உரைகண்டு கையடக்கப் பதிப்பாக வெளியிட்டு அதனை எளியவரும் கற்கும்படி ஆக்கினார். சராசரித் தமிழ் மக்களுக்குப் புரியாமல் இருந்த சங்கப்பாடல்களை விளக்கிப் புரியும் தமிழில் கட்டுரைகளாக வடித்து, விருந்து என்ற பெயரிலும், செல்வம் என்ற பெயரிலும் வழங்கினார். அவர் காலத்தில் வளர்நிலையில் இருந்த இலக்கியத் திறனாய்வுப் போக்கில் சிலப்பதிகாரம் குறித்து, இளங்கோவடிகள், கண்ணகி, மாதவி ஆகிய நூல்களை எழுதினார். இவை பண்டை இலக்கியங்களைப் பரப்புதற்கு மேற்கொண்ட ஆக்கப் பணிகள்.

இலக்கியத் திறனாய்வும் மொழியியலும் அவர் காலத்தில்தான் தமிழில் புதிய துறைகளாகத் தோற்றம் கொண்டன. அவற்றின் வளர்ச்சிக்காக. இலக்கியத் திறன், இலக்கிய மரபு, இலக்கிய ஆராய்ச்சி, எழுத்தின் கதை, மொழியின் கதை, மொழி வரலாறு, மொழிநூல், மொழியியற் கட்டுரைகள் முதலியவற்றை எழுதினார். இவை புதிய துறைகளில் தமிழ் வளர்வதற்கு ஆற்றிய அரும்பணிகள்.

இலக்கிய உலகில் மு.வ. பெற்ற தனிச் சிறப்புக்குக் காரணம் அவரது படைப்பிலக்கியத் திறனே. ஆங்கில இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர் மு.வ. அதன் பயனாக ஆங்கில இலக்கியப் போக்குகளைத் தமிழில் புகுத்தும் முயற்சியிலும் தலைப்பட்டார். நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய வகைகளில் தம் படைப்பாற்றலைச் செலுத்தினார். சிறுகதையில் பெரிய வெற்றியைப் பெறமுடியவில்லை. நாடகத்தில் ஓரளவே வெற்றி கண்டார். ஆனால், நாவல் இலக்கியத்தில் தனித்தடம் பதித்தார்.

அவரைத் தமிழ் வகுப்பறைகளிலிருந்து தமிழர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவை அவருடைய நாவல்களே. பொதுவாக ஆசிரியர் கூற்றாகவே நாவல்கள் அமையும். ஆங்கில நாவல்களில் பாத்திரங்களே கதை சொல்லுவதாக அமைந்திருப்பது கண்ட மு.வ., "கள்ளோ காவியமோ' என்னும் நாவலை மங்கையும் அருளப்பரும் மாறி மாறிச் சொல்வதாகப் படைத்தார். கதைத் தலைவனின் நண்பன் வேலய்யன் கதையைச் சொல்வதாக அகல்விளக்கினைப் படைத்தார். ஆசிரியர் கூற்றாகக் "கயமை' நாவலை அமைத்தார். கள்ளோ காவியமோ, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, வாடா மலர், அல்லி, கயமை, கரித்துண்டு முதலிய நாவல்களைப் படிக்காத தமிழ் மாணவர்களோ, சுவைஞர்களோ சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இல்லை என்றே சொல்லலாம். அந்த நாளில் இந்த நாவல்களைப் பலர் திருமணங்களில் பரிசாக வழங்கி வந்தனர்.

சிலர் சொல்வதுபோல் அவருடைய படைப்புகள் நாவல் இலக்கணத்திற்கு முற்றிலும் பொருந்தாமல் இருக்கலாம். ஆனால் அவை நன்னெறி காட்டி இளைஞர்களைத் திருத்துவன; சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வுகாட்டுவன. இல்லறத்தைத் தொடங்கும் காதலர்கள் பிறர் என்ன கருதுவார்களோ என்று எண்ணாமல், ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்தல் வேண்டும், இல்லையென்றால் பிரிந்து தொல்லைப்பட நேரிடும் என்னும் அறிவுரையை வழங்குவது கள்ளோ காவியமோ. உணர்ச்சிக்கு முதன்மை தாராமல் அறிவு வழி வாழ்ந்தால் வாழ்க்கை முற்றும் துளசியைப்போல் மணமுடையதாக அமையும், உணர்ச்சி வயப்பட்டு வாழ்ந்தால் ஒருபகுதி அழகாக அமைய, ஏனைய பகுதிகள் வெறுக்கத்தக்கனவாய் அரளிச் செடிபோல் ஆகிவிடும் என்று இளைஞர்களுக்கு எச்சரிக்கையூட்டுவது அகல்விளக்கு. முறையற்ற வேகம் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் என்னும் உண்மையை உணர்த்துவது வாடாமலர். ஒருவனோடு வாழும்போது மற்றொருவனை எண்ணாமல் அவனுக்கு நேர்மையாக நடந்துகொண்டால் அதுவே "கற்பு' என்று வாழ்க்கையை இழந்தவர்களுக்கும் வாழ வழி காட்டுவது கரித்துண்டு. அவர் நாவல்கள் பொழுதுபோக்கு நாவல்கள் மட்டுமல்ல பழுதுபார்க்கும் நாவல்கள். அவர் கலை கலைக்காகவே என்று கருதாமல் கலை வாழ்க்கைக்காகவே என்னும் கருத்தில் வேரூன்றி நின்றவர். அவர் எழுத்துகளில் உருவான அல்லி, மங்கை, பாவை, தேன்மொழி, வளவன், எழில், நம்பி போன்ற பெயர்களை அன்றைய பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததே அவர் நாவல்கள் பெற்ற வெற்றிக்குச் சான்றாகும்.

அவர் நாவல்களின் சிறப்பை விளக்கும் நிகழ்ச்சி ஒன்று. மு.வ., மயிலை மாணிக்கஞ்செட்டியார், அவர் மைந்தர் மா. சம்பந்தம் போன்றவர்களோடு வடநாட்டுச் சுற்றுலா மேற்கொண்டார். அப்போது காஷ்மீரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவரும் மா. சம்பந்தமும் அறியாமல் ராணுவப் பாதுகாப்பு எல்லைக்குள் சென்றுவிட்டனர். உடனே காவலர்கள் இருவரையும் ராணுவ அதிகாரிமுன் அழைத்துச் சென்று நிறுத்திவிட்டார்கள்.

தமிழரான ராணுவ அதிகாரி பெயரைக் கேட்டுள்ளார். மு.வரதராசன் என்று தெரிவித்தவுடன் இருக்கையிலிருந்து எழுந்து, நாவல்கள் எழுதும் மு.வ.வா? என்றவாறு வணங்கினாராம். பின்னர் சிற்றுண்டி அளித்து வண்டியில் ஏற்றி அவர்கள் இருந்த இடத்திற்கு அனுப்பிவைத்தாராம். அவர் எழுத்து அவரைக் காத்ததோடு சில நாள்களாய்த் தமிழ்நாட்டு இட்லியைக் காணாமல் இளைத்துப் போயிருந்த வாய்க்கு இனிய உணவையும் ஈட்டித் தந்துவிட்டது.

வள்ளுவமும் காந்தியமும் அவர் கைக்கொண்ட நெறிகள். அவர் பகவத் கீதையை தூற்றாமலே திருக்குறளைப் போற்றியவர். அவர் திருக்குறளை நடத்தியவர் மட்டுமல்லர், அதன்வழி நடந்தவர். அவரைக் குறை சொன்னவர்கள் உண்டு. அவர் யாரைப் பற்றியும் குறை சொன்னதே இல்லை. மாணிக்கவாசகரிடத்தும் தாயுமானவரிடத்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆழ்வார்கள் நாயன்மார்கள் அருளிய பாடல்களைப் பலகால் ஓதி ஓதி உள்ளத்தைப் பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்றவர். ஆனால், திருத்தலங்களுக்குச் செல்வதிலோ, சமயச் சின்னங்களை அணிந்துகொள்வதிலோ விருப்பம் இல்லாதவர். தேசியத்தை மறவாத தமிழ்ப்பற்றும், இறைப்பற்றை இகழாத சீர்திருத்தமும், பிறர் மனதைக் காயப்படுத்தாத எழுத்தாற்றலும் அவருடைய சிறப்பு இயல்புகள்.

தம் புகழ்கேட்க நாணிய சான்றோர் அவர். முனைவர் பட்டம் பெற்றபோது, திருப்பத்தூரில் பாராட்டு விழா எடுக்க முயன்றனர். தாம் அப் பட்டம் பெற்றது "நான்காம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புக்குப் போவது போன்ற ஒரு செயல்தான்' என்று தெரிவித்து அதனைத் தவிர்த்தார். தமிழக அரசு இயல்தமிழ் விருது வழங்கியபோது அவரிடம் மாணவர்கள் கூட்டமாகச் சென்று பாராட்டு விழா எடுக்க இசைவு கேட்க, "இத்தனை பேர் வந்து பாராட்டியதே போதும், காலத்தை வீணாக்க வேண்டா' என்று கூறி மறுத்துவிட்டார். அவ்வாறே மணிவிழா எடுக்க மாணவர்கள் முயன்றபோதும் கண்டிப்போடு கடிதம் எழுதித் தடுத்துவிட்டார்.

அவர் தூய வாழ்வு வாழ்ந்த கொள்கைவாதி. வாழ்நாள் முழுவதும் வெந்நீர் பருகாதவர். ரஷியா சென்றிருந்தபோது குளிர் தாங்காமல் வாடினார். அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்தவர்கள் குளிரைத் தாங்க மது அருந்துமாறு வற்புறுத்தினார்கள். மறுத்துவிட்டார். தேநீர் அருந்துமாறு வேண்டினார்கள். வேண்டா என்று ஒதுக்கிவிட்டார். வெந்நீராவது பருகுங்கள் என்றார்கள். தாம் வெந்நீர் அருந்துவதில்லை என்று தம் கொள்கையைத் தெரிவித்தார். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தபோது, ""எனக்கு உதவுவதாயின், இன்னும் ஒரு போர்வை கொடுங்கள்'' என்று கூறிப் பெற்று அதனைப் போர்த்திக்கொண்டு உறங்கினார். இந்தக் கொள்கை உறுதியோடு அவர் தம் வாழ்க்கை முடிவினை எதிர்கொண்டார். அவர் இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் தம் பிள்ளைகள் மூவரும் ஆங்கில மருத்துவம் பயின்றிருந்தும் அவர் அதனை ஏற்க மறுத்தார். அவர் அதனை ஏற்றிருந்தால் ஒருவேளை இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்பது பலரது கருத்து.

அவர் கால்கள் எந்த அரசியல் தலைவர் வீட்டையும் நோக்கி நடந்ததில்லை. ஆனால், அவரை நாடி அவர் வீட்டுக்கு எல்லாக் கட்சித் தலைவர்களும் வந்தார்கள். அவர் பெரும்பதவிகளை நாடிச் செல்லவில்லை. பதவிகளே அவரை நாடி வந்தன. அவர் இறுதிச் சடங்கில் காமராஜர், அன்பழகன், எம்.ஜி.ஆர். போன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர் என்பதே அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அறிஞர் என்பதனைக் காட்டும்.

வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் புகழையும் கொண்டாட்டத்தையும் வேண்டாத அவரை நாடிப் புகழ் குவிந்தது. உலகம் நூற்றாண்டு விழாக் கொண்டாடி அவரை நினைவுகூர்கிறது. இராமன் சொல்லையும் மீறி அவனுக்குத் தொண்டு செய்த இலக்குவன் செயல் அவன் அண்ணன்மீது கொண்ட அளவற்ற அன்பினைக் காட்டுவதுபோல், மு.வ.வின் கருத்துக்கு மாறாக எடுக்கப்படும் இந்த விழாக்கள் தங்கள் ஆசிரியர்மீது மாணவர்கள் கொண்ட அளவற்ற அன்பினை வெளிப்படுத்துகின்றன. அகல் விளக்கு எழுதிய மு.வ.வும் ஓர் அகல்விளக்கே. அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக உழைப்பே திரியாக ஒளி தந்த விளக்கு அது. அதன் ஒளி எங்கும் பரவட்டும்.


 
(இன்று மு.வ. நூற்றாண்டு நிறைவு தினம்)

- தெ.ஞானசுந்தரம் 

.
 நன்றி: தினமணி (25.04.2012)

காண்க: தமிழ் வளர்த்த பேராசிரியர்  


.


27.2.12

மறக்கக்கூடாத மாமனிதர்


வீர சாவர்க்கர் 
(மறைவு: பிப். 26)

இந்திய விடுதலைப்போரில் மகத்தான தியாகம் செய்தவர்களுள் தலையாயவர் 'வீர சாவர்க்கர்' எனப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர். புரட்சியாளர், சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், பேச்சாளர், கவிஞர், அரசியல் தலைவர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்,... எனப்  பன்முக ஆளுமை உடையவர் சாவர்க்கர். அபிநவ பாரத சங்கம் முதல் ஹிந்து மகா சபா வரை, அவரது அரசியல் பயணம் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்தது.

ஆங்கிலேயரின் சொந்த நாட்டிலேயே அவர்களுக்கு எதிராக முழங்கிய தீரர் சாவர்க்கர். மதன்லால் திங்ரா என்ற மாவீரன் லண்டனில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்று இந்தியர்களின் சுதந்திர தாகத்தை அந்நாட்டு மக்களுக்கு புரியச் செய்தார் (1, ஜூலை, 1909). அதற்கு பின்புலமாக இருந்த சாவர்க்கர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். அப்போது கப்பலில் இருந்து தப்பி பிரான்ஸ் கடற்கரையில் ஏறிய அவரை பிரிட்டீஷ் போலீசார் துரத்திவந்து கைது செய்தனர். அந்தக் கைது காரணமாக, இரு ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் சட்டப் போர் நடந்தது. இது உலக அளவில் அப்போது பலத்த வாத பிரதிவாதங்களை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசு அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது சகோதரர்கள் இருவரும் கூட விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதானார்கள். சாவர்க்கர் அந்தமான் சிறையில், செல்லுலர் அறையில் அடைக்கப்பட்டு  பயங்கர சித்ரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவித்தார் (1911 - 1924). பிறகு கடுமையான நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட அவர், வாழ்வின் பின்னாட்களை சமூக சீர்திருத்தத்தில் செலுத்தினார்.

தாழ்த்தப்பட்ட  மக்களுக்கான ஆலயம் அமைத்தல், தீண்டாமைக்கு எதிர்ப்பு, மதமாற்றத்துக்கு எதிர்ப்பு, சுய சரிதை, வரலாற்று ஆய்வு, என அவரது வாழ்க்கை அமைந்தது. பின்னாளில் ஹிந்து மகா சபா என்ற அரசியல் கட்சியை காங்கிரசுக்கு எதிராக அமைத்தார். மகாத்மா காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு, பிறகு குற்றமில்லை என்று விடுவிக்கப்பட்டார்.

ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டபோதெல்லாம் கலங்காத சாவர்க்கர், சுதந்திர பாரத அரசு தன்னை பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்துவிட்டதே என்று மனமுடைந்த நிலையில் இறுதிக்காலத்தைக் கழித்த சாவர்க்கர், அதற்காக சும்மாவும் இருக்கவில்லை. நாட்டின் அரசியலை வழிப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியபடியே இருந்தார்.

மே 28,  1883 ல் பிறந்த சாவர்க்கர், பிப். 26, 1966 ல் மறைந்தார். இங்கு கூறப்பட்டுள்ள  தகவல்கள் சாவர்க்கரை சிறிய அளவில் அறிமுகப்படுத்துபவை மட்டுமே. அவரது வாழ்வே ஒரு வேள்வி. அவரது வாழ்வை முழுமையாக அறிய, அவர் எழுதிய நூல்களையும் அவரைப் பற்றிய நூல்களையும் இளைய தலைமுறையினர் படிக்க வேண்டும்.

சாவர்க்கர் மிகத் தீவிரமான எழுத்தாளர். அந்தமான் சிறையில் இருந்தபோது தான் செய்த ஆராய்சிகளை மனதில் இருத்தி, அவர் எழுதிய இந்தியாவின் வரலாறு நமது மகோன்னதமான பெருமைகளை நமக்கு நினைவுபடுத்துவதாகும். எரிமலை அல்லது முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்ற அவரது நூலே, 1857 ல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போர் பற்றிய முழுமையான பதிவாகும். அவரது வரலாற்று மேதமை குறித்து திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரை 'தமிழ் ஹிந்து' இணையதளத்தில் உள்ளது.

காண்க: வரலாற்றாசிரியராக வீர சாவர்க்கர்.

நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக தங்கள் ரத்தம் சிந்திப் போராடிய மறவர்களுள் சாவர்க்கர் முதன்மையானவர். அவரது நினைவே நமக்கு நாட்டைக் காக்கும் துணிவையும் தேசபக்தியையும் நல்கும்.

-குழலேந்தி 



காண்க:

VEER SAVARKAR 




.

27.10.11

தமிழ் வளர்த்த பேராசிரியர்


மு.வரதராசனார்
(பிறப்பு: 24 .04.1912  மறைவு: 10.10.1974 )
இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும்,  தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனாருக்கு தனி இடமுண்டு என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். அன்னாரின் சீரிய தமிழ்த்தொண்டு போற்றத்தக்கதாகும்.
தமது ஈடு இணையற்ற எழுத்தினால் உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களில் குடி புகுந்தவர் 'மு.வ.' என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் மு.வரதராசன் எம்.ஏ.,எம்.ஓ.எல்., பி.எச்.டி.,டி.லிட்.

இவர் தமிழ் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரிலே 24 .04.1912 ல் பிறந்தார். தந்தையார் பெயர் முனுசாமி; தாயார் பெயர் கண்ணம்மாள்  மு.வ.வின் இயற்பெயர் திருவேங்கடம் என்பதாகும். எனினும் குடும்ப மரபுப்படி, 'தாத்தாவின் பெயரை இடுதல்' என்ற வழக்கப்படி இட்ட பெயரே 'வரதராசன்' என்பது. அப்பெயரே இறுதிவரை நிலைத்துப் புகழோங்கி நின்றது. 

தனது ஆரம்ப பள்ளிக் கல்வியை வேலத்திலும், வாலாசாவிலும் கற்றார். உயர்நிலைப் பள்ளிப்படிப்பை திருப்பத்தூரில் பயின்றார். அன்னாரின் முதல் ஆசான் முருகய்ய முதலியார் ஆவார். அவரிடம் கற்றுத்தான் புலவர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். வரதராசன் 1928 ம் ஆண்டு அதாவது தமது 16 ஆவது வயதில் முதன்முதலாக தாலூகா அலுவலகத்தில் எழுத்தாளராகப் பணி புரிந்தார். எனினும் 1935 ம் ஆண்டு தமிழ்ப் புலவர் தேர்வு எழுதி சென்னை மாநிலத்திலேயே முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பனந்தாள் பரிசான ரூ. 1000 பெற்றுக் கொண்டார். யோசித்துப் பாருங்கள்! அந்தக்காலத்தில் இந்தியப் பணம் ரூ. 1000!

விடா முயற்சியுடைய மு.வ. அவர்கள் 1939 ல் பி.ஓ.எல்.பட்டமும், 1944 ம் ஆண்டு எம்.ஓ.எல். பட்டமும் பெற்றார்.  இதற்கிடையில் 1935 ம் ஆண்டு தமது சொந்த மாமன் மகளான ராதாவை மணம் புரிந்தார்.  இல்லற வாழ்வின் பயனாக திருநாவுக்கரசு, நம்பி, பாரி என்ற மூன்று ஆண்மக்களைப் பெற்று பேருவகை அடைந்தார். மூவருமே மருத்துவத்துறையில் மேதைகளானார்கள். 

திருமணம் முடித்த போது அவர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகக் கடமையாற்றினார். அன்னாரின் திறமையை நன்கறிந்து கொண்ட டாக்டர் சு.லட்சுமணசாமி முதலியார் அவரை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியராக சேர்த்துக் கொண்டார். 1939 ம் ஆண்டு முதல் 1944 ம் ஆண்டுவரை அங்கு பேராசிரியராக இருந்தவர் 1945 ம் ஆண்டு அக்கல்லூரியிலேயே தமிழ்த்துறைத் தலைவர் ஆனார். 

தமிழ்த்துறைத் தலைவர் பதவி ஒருபுறம்,  எழுத்துத்துறை மறு புறமென எழுதிக் குவிக்கத் தொடங்கினார். தமிழ்த் தாயின் தலைமகன் மு.வ. அவர் எழுதிய முதல் நாவல் 'செந்தாமரை' ஆகும் இரண்டாவது நாவல் 'கள்ளோ? காவியமோ?' இந்த நாவல்தான் அவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. இந்த நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மிகவும் பிடித்த நாவலும் இதுவே!

தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகள் கற்றுப் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும் தமிழே அவரது உயிராக இருந்தது.  சொற்பகாலம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசியராகப் பணி புரிந்த வரதராசனார் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையின் மறைவுக்குப்பின் 1961 ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரானார். இப்பணி 1971 ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 1971 ம் ஆண்டு முதல் இந்தத் தமிழ்வேந்தர் காலமாகும்வரை அதாவது 10௦.10௦.1974 வரை மதுரைப் பல்கலைக்கழகத்தின் புகழ்பூத்த, இணையற்ற துணைவேந்தராகப் பணி புரிந்தார். 

1948 ல் சென்னைப் பல்கலைக்கழகத்திலே முதன்முதல் 'டாக்டர்' பட்டம் பெற்ற இவர் 1972 ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள ஊஸ்டர் கல்லூரி டி.லிட் (இலக்கியப் பேரறிஞர்) என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட் என்ற சிறப்புப்பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ.தான். 

அதுமட்டுமல்ல; ரஷ்யா, மலேசியா, இலங்கை, பாரிஸ், சிங்கப்பூர், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மன், கிரேக்கம், எகிப்து, அமெரிக்கா முதலான உலக நாடுகளை வலம் வந்த முதல் தமிழ்ப் பேராசிரியர் என்ற பெருமையும் அவருக்கே உரியது! அமரர் மு.வ.வாழுங் காலத்தில் பங்கு கொள்ளாத, தொண்டாற்றாத தமிழ்க் கழகங்களே இல்லை.  தமிழ்நாடு புத்தகக் கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிலையம், ஆட்சி மொழிக்குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ்வளர்ச்சிக்கழகம், தமிழிசைச் சங்கம்,
தமிழ்க்கலைமன்றம், என்பன அவற்றுள் சிலவாகும். 

டாக்டர் மு.வரதராசன் அவர்கள் பதின்மூன்று நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் 'அகல் விளக்கு' என்ற நாவல் இந்திய ஜனாதிபதியின் சாகித்திய அகாடெமி  விருதினைப் பெற்றது.  அன்னாரின் 'கள்ளோ? காவியமோ?' நாவலும்,  'அரசியல் அலைகள்' , 'மொழியியற் கட்டுரை' என்ற நூல்கள் சென்னை அரசாங்கத்தின் பரிசுகளைப் பெற்றன.

மேலும் 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்', 'ஓவச் செய்தி', 'மொழிநூல்',  'விடுதலையா?' போன்ற நூல்கள் உட்பட பல நூல்களுக்கு அவருக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுத்தன.
தவிர அன்னார்,  சிறுகதைகள் (2), நாடகங்கள் (6), சிந்தனைக் கதைகள் (2), கட்டுரை நூல்கள் (11), இலக்கிய நூல்கள் (24), கடிதஇலக்கியம் (4), இலக்கிய வரலாறு (1), மொழியியல் (6), பெரியவர்களின் வாழ்க்கை வரலாறு (4), ஆங்கிலநூல்கள் (2), சிறுவர் இலக்கியம் (4), சிறுவர் இலக்கணம் (3), மொழிபெயர்ப்பு நூல்கள் (2), 'யான்கண்ட இலங்கை' (1) என்ற பயண இலக்கியம் உட்பட எழுத்துத் துறையில் தொடாத துறையே இல்லை எனலாம். 
மேலும் டாக்டர் மு.வ.வின் உயிரோட்டமுள்ள புகழ்பூத்த பல நூல்கள் தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்னடம், சிங்களம் போன்ற பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றன. இந்திய சுதந்திரப் பேராட்ட நூற்றாண்டின் போது, 15.08.1957 அன்று அவருக்கு சென்னை அரசாங்கம் 'தமிழிலக்கியத் துறையில் தலையாய தொண்டாற்றியவர்' என்ற பாராட்டுப் பத்திரம் வழங்கி, அழகிய நடராஜர் உருவம் பொறித்த செப்புக்கேடயத்தை வழங்கிக் கௌரவித்தது. 

கலைகளுள் எழுத்துக் கலைக்குத் தனி ஆற்றல் உண்டு, என்று அறிஞர்கள் கூறுவார்கள். ஆண்டுகள் பல சென்றாலும், காலம் கடந்து வாழும் பண்பு எழுத்துக் கலைக்கே உண்டு. உயிரோவியங்கள் பலவற்றைப்படைத்து, ஆயிரம், ஆயிரம் தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்த டாக்டர் மு.வ.இறுதிவரை எழுதிக்கொண்டே இருந்தார். 

அதனால் தானே என்னவோ 10.10.1974 அன்று சென்னையில் அவர் காலமாகும் போது கூட அதே எடுப்பான எழில் மிகு தோற்றம், கூரிய மூக்கு, சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள், அவற்றின் மேல் மூக்குக் கண்ணாடி, அகன்றநெற்றி, புன்னகை பூத்தமுகம், நீண்ட மெல்லிய கைகள், அழகான பல்வரிசை, பண்பட்ட நெஞ்சம் உடையவராக இருந்தார். அவரது நூல்கள் எமக்கு வழிகாட்டும்!

- இணுவையூர் ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன்

காண்க:

11.9.11

உள்ளத்தில் உண்மைஒளி உண்டாகட்டும்!


மகாகவி பாரதி
(நினைவு தினம்: செப். 11)

"பொதுஜன நன்மையே நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டுவரும் நமது பத்திரிகைக்கு அனுப்பப்படும் நிருபங்கள், இதரவிதமான பத்திரிகைகளுக்கு அனுப்புகிற மாதிரியாய் இருக்கக் கூடாது. நிருபம் எழுதுவோர் ஒவ்வொரு விஷயத்தையும் சிரமப்பட்டு ஆராய்ந்தறிந்து எழுத வேண்டும். அது பொது நன்மைக்கேற்றதாயும், சாதாரண ஜனங்களின் அறிவை விருத்தி செய்வதாகவும் இருக்க வேண்டும்...''

“ இந்தியா (7.11.1908) நாளிதழில் "நிருபர்களுக்கு முக்கியமான அறிக்கை' என்ற தலைப்பில் மகாகவி பாரதி எழுதியுள்ள விதிமுறைகள் இவை.

அடிமைப்பட்டிருந்த காலத்தில் நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் எழுதுகோல் உதவியுடன் போராடிய ஒரு பத்திரிகையாளராக பாரதி ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. நமது துரதிர்ஷ்டம், அவரது கவிதைகள் பெற்ற கவனத்தை அவரது பத்திரிகையுலகப் பணிகள் பெறாமலே உள்ளன. அவற்றை நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டிய கட்டாயச் சூழல் தற்போது மிக அதிகமாகவே இருக்கிறது.

பாரதியின் பத்திரிகையுலகப் பணி 1904 நவம்பரில் "சுதேசமித்திரன்' பத்திரிகை வாயிலாகத் துவங்கியது. ஆரம்பத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவனச் செய்திகளை தமிழில் மொழி பெயர்க்கும் பணி பாரதிக்கு கொடுக்கப்பட்டது. வெளிநாட்டுச் செய்திகளை தமிழில் தரும்போதும், நமது நாட்டின் நிலையை ஒப்பிட்டு செய்திகளை வழங்கினார் பாரதி.

இதனிடையே மகளிருக்கென்று துவங்கப்பட்ட "சக்கரவர்த்தினி' மாத இதழின் ஆசிரியராகவும் பாரதி பொறுப்பேற்றார். அதில் பெண்கள் முன்னேற்றம் குறித்த முன்னோடிக் கருத்துக்களை அவர் எழுதினார். தனது பத்திரிகைப் பணி காரணமாக, நாட்டு விடுதலைப் போராட்டத்தில் அவர் ஈர்க்கப்பட்டார்.

தனது விடுதலை வேட்கையின் வேகத்திற்கு "சுதேசமித்திரன்' ஈடுகொடுக்காத காரணத்தால், நிரந்தர மாத சம்பளத்தைப் பொருட்படுத்தாமல் அதிலிருந்து விலகி, 1906ல் "இந்தியா' பத்திரிகையில் சேர்ந்தார் பாரதி. அதில் அவரது எழுத்தாவேசம் கரைபுரண்டது. சுதேசியக் கல்வி, அந்நியப்பொருள் பகிஷ்கரிப்பு, காங்கிரஸ் கட்சியின் நிலை, வெளிநாடுகளில் இந்தியர் நிலை, சமய மறுமலர்ச்சி, சமூக சீர்த்திருத்தம் உள்ளிட்ட பல முனைகளில் பாரதியின் எழுத்துக்கள் புதுவீறுடன் வெளிவந்தன.

இந்தியா பத்திரிகையில், வாசகர்களின் வசதிக்கேற்ப சந்தா நிர்ணயம், முதன்முதலாக கார்ட்டூன் வெளியீடு, பத்திரிகையுடன் இணைப்பாக சிறு புத்தக வெளியீடு, விவாதங்களில் வாசகர் பங்கேற்பு, தமிழ்த்தேதி குறிப்பிடுதல் உள்ளிட்ட பல புதுமைகளை நிகழ்த்திய பாரதி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்குவதிலும் ஈடுபட்டார். இதனால் அரசின் கெடுபிடிகளுக்கு ஆளாகி, பத்திரிகையை சென்னையில் நிறுத்த வேண்டியதாயிற்று.

அரசின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பி புதுவை சென்ற பாரதி, அங்கிருந்து மீண்டும் இந்தியா பத்திரிகையை புதிய வேகத்துடன் நடத்தினார். அங்கு "விஜயா' என்ற மாலை இதழையும் "பாலபாரதா' என்ற ஆங்கில இதழையும் பாரதி நடத்தினார். தவிர, கர்மயோகி, தர்மம், சூர்யோதயம், ஞானபானு ஆகிய பத்திரிகைகளிலும் அவரது எழுத்துக்கள் வெளிவந்தன.

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, புதுவையிலும் இந்தியா பத்திரிகையை நடத்த முடியாமல் போனது. அப்போதும், காளிதாசன், நித்யதீரர், உத்தம தேசாபிமானி என்ற புனைப்பெயர்களில் காமன்வீல், நியூஇண்டியா, விவேகபானு போன்ற பத்திரிகைகளில் தனது எழுத்து தவத்தைத் தொடர்ந்தார் பாரதி.

"லண்டன் டைம்ஸ்' முதல் கொல்கத்தாவிலிருந்து வெளியான "அமிர்தபஜார்' பத்திரிகை வரை 50க்கு மேற்பட்ட பிற பத்திரிகைகள் குறித்தும், பிற பத்திரிகையாளர்கள் குறித்தும் 100 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் தனது கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். இவை அனைத்தும், ஆங்கிலேய அரசு கொடுத்த தொல்லைகளுக்கு மத்தியில், பெரும் பொருளாதாரச் சிக்கல்களிடையே, உடல்நலிவுற்றபோதும், பாரதி நிகழ்த்திய சாதனைகள்.

வாழ்வின் இறுதிக்கட்டத்தில் (1921) மீண்டும் சுதேசமித்திரன் பத்திரிகையில் பணிபுரிந்த பாரதி, சிறந்த மொழிபெயர்ப்பாளர், கவிஞர், எழுத்தாளர், முற்போக்குச் சிந்தனையாளர் என பலமுகங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சாவதற்கு சில நாட்கள் முன்னரும், "சித்திராவளி' என்ற கார்ட்டூன் பத்திரிகையையும், "அமிர்தம்' என்ற வாரமிருமுறை இதழையும் வெளியிட அவர் முயன்றார். பத்திரிகைத்தொழில் மீதான பாரதியின் காதலையும், பத்திரிகை மூலம் சமூகத்தை மாற்ற அவர் துடித்த துடிப்பையும் இதன்மூலம் அறியமுடிகிறது.

பாரதி நினைத்திருந்தால், ஆங்கிலேய அரசுடன் சமரசம் செய்துகொண்டு பிரபல "பத்தி' எழுத்தாளராகப் பரிமளித்திருக்க முடியும். அரசுடன் குலாவியிருந்தால், 39 வயதிலேயே குடும்பத்தை நிர்கதியாக்கி, மருந்திற்கு காசின்றி இறந்திருக்க வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்காது.
உயரிய விருதுகளுடன் வாழ்வதைவிட, நாட்டு மக்களுக்காக வாழ்வதே பத்திரிகையாளனின் கடமை என்று, அவர் இறுதிவரை உறுதியுடன் வாழ்ந்தார்.

இந்நாளில் பத்திரிகையாளர்களுக்கு சமூகத்தில் தனி கெüரவம் உள்ளது. அரசு அஞ்சி மரியாதை செலுத்தும் பணியாக ஊடகத்துறை மாறிவிட்டது; ஊதியமும்கூட ஊக்கமளிப்பதாகவே இருக்கிறது. ஆனால், பத்திரிகைத்துறையின் தேசியப் பங்களிப்பு உற்சாகம் அளிப்பதாக இல்லை.

நாட்டைக் காக்க வேண்டிய பத்திரிகைத் துறையிலும் முறைகேடுகள் பெருகிவிட்டன. அதிகாரத் தரகர்களுடனும், பதவிப் பித்தர்களுடனும் கூடிக் குலாவும் பத்திரிகையாளர்களால், ஊடகத்துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதைக் காண்கிறோம். சுயபொருளாதார முன்னேற்றத்திற்காக தங்களை விற்கும் ஊடக அறிஞர்களைக் காணும்போது வேதனை மிகுகிறது.

இதற்கெல்லாம் ஒரே மருந்து, பாரதியின் பத்திரிகைப் பணிகளை இளம் தலைமுறையினருக்கு கொண்டுசேர்ப்பதுதான். இதழியல் பட்டப் படிப்பில் பாரதியின் பத்திரிகைப் பணிகள் பாடமாக வைக்கப்பட வேண்டும். பாரதியின் எழுத்துக்கள் அனைத்தும் ஆங்கிலம், ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் கொண்டுசெல்லப்பட வேண்டும். தற்போதைய தறிகெட்ட பத்திரிகை உலகிற்கு மருந்து பாரதி மட்டுமே.


நிறைவாக, இந்தியா பத்திரிகையில் "நமது விஞ்ஞாபனம்' எந்ற தலைப்பில் பாரதி எழுதிய மகத்தான வரிகள் இதோ...

“..இப்பத்திரிகை தமிழ்நாட்டு பொதுஜனங்களுக்கு சொந்தமானது. யாரேனும் தனிமனிதனுடைய உடைமையன்று. தமிழர்களில் ஒவ்வொருவரும் தத்தம் சொந்த உடைமையாகக் கருதி, இதைக் கூடிய விதங்களிலெல்லாம் விருத்தி செய்து ஆதரிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பொருள் அவர்கள் நன்மையின் பொருட்டு செலவிடப்பட்டு வருகிறது. நமக்கு இதுவிஷயத்தில் ஊழியத்திற்குள்ள உரிமையே அன்றி, உடைமைக்குள்ள உரிமை கிடையாது...''

-வ.மு.முரளி

காண்க: பாரதியைப் பார்!


7.8.11

விழித்தெழுக என் தேசம்!


ரவீந்திரநாத் தாகூர்
(மறைவு: ஆக. 7)
 
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,

எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,

சிறைவாசமின்றி அறிவு வளர்ச்சிக்கு

எங்கே பூரண விடுதலை உள்ளதோ,

குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்

வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே

உடைபட்டு துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ,

வாய்ச் சொற்கள் எங்கே

மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து

வெளிப்படையாய் வருகின்றனவோ,

விடாமுயற்சி எங்கே தளர்ச்சியின்றி

பூரணத்துவம் நோக்கி

தனது கரங்களை நீட்டுகிறதோ,

அடிப்படை தேடிச் செல்லும்

தெளிந்த அறிவோட்டம் எங்கே

பாழடைந்த பழக்கம் என்னும்

பாலை மணலில்

வழி தவறிப் போய்விட வில்லையோ,

நோக்கம் விரியவும்,

ஆக்கப் பணி புரியவும்

இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,

அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில்

எந்தன் பிதாவே!

விழித்தெழுக என் தேசம்!
 
- ரவீந்திரநாத் தாகூர் (கீதாஞ்சலி)

 
காண்க:

.

24.6.11

காவியத்தாயின் இளைய மகன்

கவியரசு கண்ணதாசன்
(பிறப்பு: ஜூன் 24)

முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகிப்பவர், திரையிசையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்த கவியரசர் கண்ணதாசன்.  

செட்டிநாடு பகுதியில் சிறுகூடல்பட்டியில் 1927, ஜூன் 24 ல் பிறந்த முத்தையா,  பின்னாளில்   கண்ணதாசன் ஆனது சுவாரசியமான கதை. அதை  அவரது 'வனவாசம்'  நூலைப் படித்தால்  உணர  முடியும்.

ஆரம்ப காலத்தில் பகுத்தறிவு என்ற போர்வையில் நடந்த நாத்திக பிரசாரத்தில் மூழ்கிய கண்ணதாசன், அதிலுள்ள ஏமாற்றுவித்தையை உணர்ந்து ஆத்திகப் பாதைக்கு திரும்பினார். ஆரம்ப காலத்து திமுக தலைவர்களுள் ஒருவராக விளங்கிய கண்ணதாசன், அரசியலில் துரோகமும் சுயநலமும் கோலோச்சுவது கண்டு விரக்தியுற்று அதிலிருந்து விலகினார். சில காலம் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த (காண்க: மனவாசம்) அவர் அரசியல் தனக்கு ஒத்துவராது என்று முற்றிலும் விலகினார்.

கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில் தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்கள், அற்புதமான துள்ளுதமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறு காப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை. தமிழில் புதிய மறுமலர்ச்சியை பாரதிக்குப் பிறகு ஏற்படுத்தியவர் கண்ணதாசனே.

இவரது 'சேரமான் காதலி' என்ற புதினம் 1980 ல் சாஹித்ய அகாதெமி விருது பெற்றது. 'குழந்தைக்காக' என்ற திரைப்படத்திற்கு எழுதிய  திரைவசனத்திற்காக (1961) இவருக்கு தேசிய விருது கிடைத்தது. திரைப்படல்களிலும் செந்தமிழ் துள்ளி விளையாடுவது கண்ணதாசனின் சிறப்பு. பண்டைய இலக்கியங்களில் அவருக்கு இருந்த தேர்ச்சி திரைப்பாடல்களில் வெளிப்பட்டது. சந்தமும், செந்தமிழும் எந்த சிரமும் இன்றி கைகொரத்தன, கண்ணதாசனின் பாடல்களில். அவர் ஆசுகவியாகவே திகழ்ந்தார்.

அரசியல்வாதி, திரையிசைக் கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பன்முகங்களுடன், பத்திரிகையாசிரியராகவும் கண்ணதாசன் விளங்கினார். அவர் நடத்திய சண்டமாருதம், திருமகள், முல்லை, திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, கண்ணதாசன் ஆகிய இதழ்கள் தமிழ் இதழ்களின் வரலாற்றில் குறிப்பிடத் தக்கவையாக இன்றும் பேசப்படுகின்றன. குறிப்பாக தென்றலில் அவர் தீட்டிய கூர்மையான அரசியல் நையாண்டியுன கூடிய  உருவக கட்டுரைகள் அக்காலத்தில் பெரும் விழிப்புணர்வையும் பரபரப்பையும் உருவாக்கின.

அவரது அர்த்தமுள்ள இந்து மதம் (பத்து பாகங்கள்), வனவாசம், மாங்கனி, ஏசு காவியம் ஆகியவை கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய நூல்களாகும். பகவத் கீதைக்கும் அபிராமி அந்தாதிக்கும்  சௌந்தர்யா லகரிக்கும் (பொன்மழை) கண்ணதாசன் விளக்கம் எழுதி இருக்கிறார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக பெருமைப்படுத்தப்பட்டவர் கண்ணதாசன்.

அமேரிக்கா சென்றிரும்த கவிஞர் உடல்நலக் குறைபாட்டால், சிகாகோவில் 1981, அக்டோபர் 17  ல் மறைந்தார். எனினும் அவர் படைத்த சாகாவரம் பெற்ற நூல்களில் கண்ணதாசன் என்றும் வாழ்வார்.

கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார். '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம்.

தமிழகத்தில் நாத்திகவாதமும் பிரிவினைவாதமும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதே பிரசாரக் காலத்திலிருந்து விடுபட்டு, தேசியத்தையும் தெய்வீகத்தையும்  உயர்த்திப் பிடித்த குரல் கவிஞர் கண்ணதாசனுடையது. மக்களிடம் வெகுவாகப் புழங்கிய திரையிசைப்பாடல்களில் தனது கருத்துக்களை ஆர்ப்பாட்டமின்றி புகட்டிய கண்ணதாசனின் தேசிய சேவையை குறைத்து மதிப்பிட முடியாது.

-குழலேந்தி

கண்ணதாசனின் நூல்கள்:

 பிரதானமானவை 
  • இயேசு காவியம்
  • அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
  • திரைப்படப் பாடல்கள்
  • மாங்கனி

கவிதை நூல்கள்

  • கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்
  • பாடிக்கொடுத்த மங்களங்கள்
  • கவிதாஞ்சலி
  • தாய்ப்பாவை
  • ஸ்ரீகிருஷ்ண கவசம்
  • அவளுக்கு ஒரு பாடல்
  • சுருதி சேராத ராகங்கள்
  • முற்றுப்பெறாத காவியங்கள்
  • பஜகோவிந்தம்
  • கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

புதினங்கள்

  • அவள் ஒரு இந்துப் பெண்
  • சிவப்புக்கல் மூக்குத்தி
  • ரத்த புஷ்பங்கள்
  • சுவர்ணா சரஸ்வதி
  • நடந்த கதை
  • மிசா
  • சுருதி சேராத ராகங்கள்
  • முப்பது நாளும் பவுர்ணமி
  • அரங்கமும் அந்தரங்கமும்
  • ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
  • தெய்வத் திருமணங்கள்
  • ஆயிரங்கால் மண்டபம்
  • காதல் கொண்ட தென்னாடு
  • அதைவிட ரகசியம்
  • ஒரு கவிஞனின் கதை
  • சிங்காரி பார்த்த சென்னை
  • வேலங்காட்டியூர் விழா
  • விளக்கு மட்டுமா சிவப்பு
  • வனவாசம்
  • அத்வைத ரகசியம்
  • பிருந்தாவனம்

வாழ்க்கைச்சரிதம்

  • எனது வசந்த காலங்கள்
  • எனது சுயசரிதம்
  • வனவாசம்

கட்டுரைகள்

  • கடைசிப்பக்கம்
  • போய் வருகிறேன்
  • அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
  • நான் பார்த்த அரசியல்
  • எண்ணங்கள்
  • தாயகங்கள்
  • வாழ்க்கை என்னும் சோலையிலே
  • குடும்பசுகம்
  • ஞானாம்பிகா
  • ராகமாலிகா
  • இலக்கியத்தில் காதல்
  • தோட்டத்து மலர்கள்
  • இலக்கிய யுத்தங்கள்
  • போய் வருகிறேன்

நாடகங்கள்

  • அனார்கலி
  • சிவகங்கைச்சீமை
  • ராஜ தண்டனை

காண்க:








.