கவியரசு கண்ணதாசன்
(பிறப்பு: ஜூன் 24)
முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகிப்பவர், திரையிசையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்த கவியரசர் கண்ணதாசன்.
செட்டிநாடு பகுதியில் சிறுகூடல்பட்டியில் 1927, ஜூன் 24 ல் பிறந்த முத்தையா, பின்னாளில் கண்ணதாசன் ஆனது சுவாரசியமான கதை. அதை அவரது 'வனவாசம்' நூலைப் படித்தால் உணர முடியும்.
ஆரம்ப காலத்தில் பகுத்தறிவு என்ற போர்வையில் நடந்த நாத்திக பிரசாரத்தில் மூழ்கிய கண்ணதாசன், அதிலுள்ள ஏமாற்றுவித்தையை உணர்ந்து ஆத்திகப் பாதைக்கு திரும்பினார். ஆரம்ப காலத்து திமுக தலைவர்களுள் ஒருவராக விளங்கிய கண்ணதாசன், அரசியலில் துரோகமும் சுயநலமும் கோலோச்சுவது கண்டு விரக்தியுற்று அதிலிருந்து விலகினார். சில காலம் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த (காண்க: மனவாசம்) அவர் அரசியல் தனக்கு ஒத்துவராது என்று முற்றிலும் விலகினார்.
கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில் தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்கள், அற்புதமான துள்ளுதமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறு காப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை. தமிழில் புதிய மறுமலர்ச்சியை பாரதிக்குப் பிறகு ஏற்படுத்தியவர் கண்ணதாசனே.
இவரது 'சேரமான் காதலி' என்ற புதினம் 1980 ல் சாஹித்ய அகாதெமி விருது பெற்றது. 'குழந்தைக்காக' என்ற திரைப்படத்திற்கு எழுதிய திரைவசனத்திற்காக (1961) இவருக்கு தேசிய விருது கிடைத்தது. திரைப்படல்களிலும் செந்தமிழ் துள்ளி விளையாடுவது கண்ணதாசனின் சிறப்பு. பண்டைய இலக்கியங்களில் அவருக்கு இருந்த தேர்ச்சி திரைப்பாடல்களில் வெளிப்பட்டது. சந்தமும், செந்தமிழும் எந்த சிரமும் இன்றி கைகொரத்தன, கண்ணதாசனின் பாடல்களில். அவர் ஆசுகவியாகவே திகழ்ந்தார்.
அரசியல்வாதி, திரையிசைக் கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பன்முகங்களுடன், பத்திரிகையாசிரியராகவும் கண்ணதாசன் விளங்கினார். அவர் நடத்திய சண்டமாருதம், திருமகள், முல்லை, திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, கண்ணதாசன் ஆகிய இதழ்கள் தமிழ் இதழ்களின் வரலாற்றில் குறிப்பிடத் தக்கவையாக இன்றும் பேசப்படுகின்றன. குறிப்பாக தென்றலில் அவர் தீட்டிய கூர்மையான அரசியல் நையாண்டியுன கூடிய உருவக கட்டுரைகள் அக்காலத்தில் பெரும் விழிப்புணர்வையும் பரபரப்பையும் உருவாக்கின.
அவரது அர்த்தமுள்ள இந்து மதம் (பத்து பாகங்கள்), வனவாசம், மாங்கனி, ஏசு காவியம் ஆகியவை கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய நூல்களாகும். பகவத் கீதைக்கும் அபிராமி அந்தாதிக்கும் சௌந்தர்யா லகரிக்கும் (பொன்மழை) கண்ணதாசன் விளக்கம் எழுதி இருக்கிறார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக பெருமைப்படுத்தப்பட்டவர் கண்ணதாசன்.
அமேரிக்கா சென்றிரும்த கவிஞர் உடல்நலக் குறைபாட்டால், சிகாகோவில் 1981, அக்டோபர் 17 ல் மறைந்தார். எனினும் அவர் படைத்த சாகாவரம் பெற்ற நூல்களில் கண்ணதாசன் என்றும் வாழ்வார்.
கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார். '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம்.
தமிழகத்தில் நாத்திகவாதமும் பிரிவினைவாதமும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதே பிரசாரக் காலத்திலிருந்து விடுபட்டு, தேசியத்தையும் தெய்வீகத்தையும் உயர்த்திப் பிடித்த குரல் கவிஞர் கண்ணதாசனுடையது. மக்களிடம் வெகுவாகப் புழங்கிய திரையிசைப்பாடல்களில் தனது கருத்துக்களை ஆர்ப்பாட்டமின்றி புகட்டிய கண்ணதாசனின் தேசிய சேவையை குறைத்து மதிப்பிட முடியாது.
-குழலேந்தி
கண்ணதாசனின் நூல்கள்:
பிரதானமானவை
- இயேசு காவியம்
- அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
- திரைப்படப் பாடல்கள்
- மாங்கனி
கவிதை நூல்கள்
- கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்
- பாடிக்கொடுத்த மங்களங்கள்
- கவிதாஞ்சலி
- தாய்ப்பாவை
- ஸ்ரீகிருஷ்ண கவசம்
- அவளுக்கு ஒரு பாடல்
- சுருதி சேராத ராகங்கள்
- முற்றுப்பெறாத காவியங்கள்
- பஜகோவிந்தம்
- கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்
புதினங்கள்
- அவள் ஒரு இந்துப் பெண்
- சிவப்புக்கல் மூக்குத்தி
- ரத்த புஷ்பங்கள்
- சுவர்ணா சரஸ்வதி
- நடந்த கதை
- மிசா
- சுருதி சேராத ராகங்கள்
- முப்பது நாளும் பவுர்ணமி
- அரங்கமும் அந்தரங்கமும்
- ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
- தெய்வத் திருமணங்கள்
- ஆயிரங்கால் மண்டபம்
- காதல் கொண்ட தென்னாடு
- அதைவிட ரகசியம்
- ஒரு கவிஞனின் கதை
- சிங்காரி பார்த்த சென்னை
- வேலங்காட்டியூர் விழா
- விளக்கு மட்டுமா சிவப்பு
- வனவாசம்
- அத்வைத ரகசியம்
- பிருந்தாவனம்
வாழ்க்கைச்சரிதம்
- எனது வசந்த காலங்கள்
- எனது சுயசரிதம்
- வனவாசம்
கட்டுரைகள்
- கடைசிப்பக்கம்
- போய் வருகிறேன்
- அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
- நான் பார்த்த அரசியல்
- எண்ணங்கள்
- தாயகங்கள்
- வாழ்க்கை என்னும் சோலையிலே
- குடும்பசுகம்
- ஞானாம்பிகா
- ராகமாலிகா
- இலக்கியத்தில் காதல்
- தோட்டத்து மலர்கள்
- இலக்கிய யுத்தங்கள்
- போய் வருகிறேன்
நாடகங்கள்
- அனார்கலி
- சிவகங்கைச்சீமை
- ராஜ தண்டனை
காண்க:
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக