நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

6.6.11

சைவப்பயிர் வளர்த்த சீலர்


சேக்கிழார்
திருநட்சத்திரம்: வைகாசி - 23 - பூசம்
(ஜூன் 6)

சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தின் தொண்டை நாட்டில், புலியூர்க் கோட்டம்,  குன்றத்தூரில், சைவம் தழைத்தோங்க அவதரித்தவர் சேக்கிழார் பெருமான்.

சோழ மன்னன் கரிகாலனால் குன்றத்தூரில் குடியேற்றப்பட்ட  வேளாளர் குடும்பங்களில்  சேக்கிழார் குடுமபமும் ஒன்று.   அந்தக் குடும்பத்தில் வெள்ளியங்கிரி முதலியார்- அழகாம்பிகை தம்பதியருக்கு தலைமகனாக அவதரித்தவர் அருன்மொழிதேவர் இவரே பின்னாளில் குடும்பப்பெயரான 'சேக்கிழார்' என்ற பெயரால் பிரபலமானார்.

இளமையிலேயே பலநூல் கற்று அறிவாளராக விளங்கிய சேக்கிழார், இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதலமைச்சராக விளங்கினார். இவரது திறமையை மெச்சி 'உத்தம சோழ பல்லவராயர்' என்ற பட்டம் சூட்டினார் மன்னர். தனது அதிகாரத்தைக் கொண்டு சிவத்தலங்கள் பல புதுப்பிக்கப்படவும் சேக்கிழார் பணிபுரிந்தார்.

ஆட்சி அதிகாரம் கையில் இருந்தபோதும் சிவசேவையே பிரதானமாகக் கொண்டவர் சேக்கிழார். சைவ மதத்தின் பிரதான பரப்புனர்களான நாயன்மார்கள் சரிதம் அக்காலத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக வழங்கி வந்தது. அதனை முறைப்படி நூலாகத் தொகுக்க திருவுள்ளம் கொண்ட சேக்கிழார், அதற்காக சிதம்பரம் சென்று ஈசனை வேண்டினார். அப்போது, அம்பலத்தாடும் ஈசனே, 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுத்ததாக ஐதீகம்.  அதையொட்டி சேக்கிழார் இயற்றிய 'பெரிய புராணம்' தமிழின் ஆகச் சிறந்த சமூக ஒற்றுமைக்கான சமய நூலாக விளங்கி வருகிறது.

சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டர் தொகை, நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய நூல்களை முதல்நூலாகக் கொண்டு சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் தேசிய காப்பியம் என்று கூறுவார் அ.ச.ஞானசம்பந்தனார். அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் இறையன்பில் ஒருவருக்கொருவர் போட்டியிடுவதையும், பக்தியின் முன்னால் எந்த ஏற்றத் தாழ்வுக்கும் இடமில்லை என்பதையும் உறுதிப்படுத்துவது பெரிய புராணத்தின் சிறப்பு. பெரிய புராணம் தில்லையில் அரங்கேறிய நாள் 20. 4. 1140 என்று கூறுவார் ஆய்வறிஞர்  குடந்தை நா. சேதுராமன். 

பெரிய புராணத்தின் மகிமை உணர்ந்த சோழ மன்னன் அநபாயன், யானை மீது சேக்கிழாரை இருத்தி, அவருக்கு தானே கவரி வீசி சிதமபரத்தில் திருவீதி உலாவரச் செய்தான். அவருக்கு 'தொண்டர்சீர் பரவுவார்' என்ற புகழ்ப்பெயரும் சூட்டப்பட்டது. சேக்கிழாரின் இளைய சகோதரர் பாலறாவாயர் தானும் சிவத்தொண்டில் மகிழ்ந்தவர். அவரையும் தனது அமைச்சராக்கி மகிழ்ந்தான் மன்னன். பெரிய புராணம் முழுவதையும் செப்பேடுகளில் பொறித்து, அதனை 'பன்னிரண்டாம் திருமுறை' என்று அறிவித்தான் சோழ மன்னன்.

63  நாயன்மார்களையும் குறித்து ஏற்கனவே தமிழகத்தில் நூல்கள் இருந்திருப்பினும், சேக்கிழாரின் காவியச் சிறப்பால் பெரிய புராணம் தமிழின் முதன்மையான சைவத் தமிழ்  நூலாக விளங்குகிறது. அன்னார், சிவனடியார் திருக்கூட்டத்துடன் தில்லையில் திருத்தொண்டர் பெருமைகளைப் புகன்ற வண்ணமே, வைகாசி பூசத்தில் சிவனடி சேர்ந்தார்.

இறைவனை முன்னிறுத்தி அடியார்களை சமமாகக் கருதும் பக்திப் பண்பாட்டை தமிழகத்தில் உறுதிப்படுத்தியவர் சேக்கிழார். அதுவே அவர்தம் பெருமை. சிவனடியாரில்  அந்தணர்-  சண்டாளர்,  மேற்குலத்தோர்- தாழ்த்தப்பட்டோர் என்ற பேதமில்லை. சிவனுக்காக உயிர்த்தியாகமும் செய்யத் துணிந்த எளிய மக்களை நாயகராக்குவது பெரிய புராணம். தமிழ் உள்ளவரை பெரிய புராணமும் அதை இயற்றிய சேக்கிழார் தம் புகழும் வாழும்.

-குழலேந்தி


காண்க:


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக