சிந்தனைக்களம்
பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள 9 மாணவ, மாணவியரும் நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிகளில் பயின்றவர்கள். இது நாமக்கல் மாவட்டத்துக்கு நிச்சயமாகப் பெருமை சேர்க்கும்.
இந்த வெற்றிக்காக அந்தக் கல்வி நிறுவனங்களின் உழைப்பு கொஞ்சமல்ல என்பதும், இதற்காக சிறந்த ஆசிரியர்களை அமர்த்தி, கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை அவர்கள் தயக்கம் இல்லாமல் தருகிறார்கள் என்பதையும், இலக்கு மட்டுமே குறியாகக் கொண்டு மாணவர்களுடன் தாங்களும் சேர்ந்து நடக்கிறார்கள் என்பதும்தான் நாமக்கல் மாவட்டக் கல்வி நிறுவனங்களின் வெற்றி ரகசியம்.
தேர்வை எப்படி அணுகுவது, எப்படி பதில் எழுதுவது, எந்த அளவுக்கு எழுத வேண்டும் என்பதையெல்லாம் மிகச் சரியாகத் திட்டமிட்டு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, திரும்பத் திரும்ப அவர்களை எழுத வைத்து, அதைத் திருத்திக் கொடுத்து, கேள்விக்கான விடை எழுதுதலை ஓர் அனிச்சைச் செயலாக மாற்றிவிடும் கல்விமுறையின் வெற்றியாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பள்ளிகளில் படித்தால் நிச்சயம் 90% மதிப்பெண் கிடைக்கும், கட்-ஆப் அதிகமாகும், நிச்சயமாக நல்ல பொறியியல் கல்லூரியில் அல்லது மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் பெற்றோர் பலரும், தமிழகத்தின் பல திசைகளிலிருந்தும் நாமக்கல் நோக்கி வருகின்றார்கள். இனி மேலதிகமாகப் படையெடுப்பார்கள்.
ஒரு சிறந்த மருத்துவக் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் தனது குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.10 லட்சம் செலவிட்டாக வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர் என்றால், ரூ.30 லட்சம் செலவாகும். இது போன்ற பள்ளிக்கூடங்களில் சில லட்சம் ரூபாய் செலவில் தனது குழந்தைக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்துக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால், பல லட்சம் மிச்சம்தானே? சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் வாழ்க்கையின் உத்திகளில் பெற்றோர் சிக்கித் தவிக்கும் காலத்தில், இதைச் சரி என்று சொல்லவும் முடியவில்லை, தவறு என்று மறுக்கவும் முடியவில்லை.
இந்த வெற்றிக்காக நாமக்கல் மாவட்டத்தின் தனியார் பள்ளிகளைப் பாராட்டும் அதே வேளையில், இவர்களது வெற்றி ஒரு சிறந்த ஓட்டலின் எல்லாக் கிளைகளிலும் உணவில் ஒரே சுவை கிடைக்கச் செய்யும் செய்நேர்த்திக்கு ஒப்பானது என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதே நாமக்கல் பார்முலா-வை எல்லா மாவட்டங்களிலும் உள்ள தனியார் பள்ளிகள் நடைமுறைப்படுத்தும். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களை அதிக விலைக்கு வாங்கிவந்து பள்ளியை நடத்தும். படிப்படியாக உருவாக இருக்கும் நடைமுறை அதுவாகத்தான் இருக்கும். அதற்குப் பெற்றோர்களின் வரவேற்பும் இருக்கும்.
பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 134 மாணவர்களின் பட்டியலைக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் படித்துள்ள பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகள். இந்தப் பள்ளிகளில் சில ஏழைகள் படிக்கக்கூடும். ஆனால் இவை ஏழைகளுக்கான பள்ளிகள் அல்ல.
இந்த 134 பேரில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 91 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 13 பேர், ஆதிதிராவிடர் 5 பேர், சீர்மரபினர் 2 பேர், பொதுப்பிரிவினர் 23 பேர். கிரிமீ லேயர் என்ற பாகுபாடு இல்லாத நிலையில், ஏழை மாணவர்கள் குறைந்த மதிப்பெண்ணுடன் இடஒதுக்கீட்டில் சேர்வதுகூட இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பிறப்பால் முன்னுரிமை என்பது போய்ப் பணத்தால் முன்னுரிமை என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதன் அடையாளம்தான் இது. அது தவறு என்றால் இது அதைவிடத் தவறு.
தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு மூலம் கிடைக்கும் கட்-ஆப் மதிப்பெண், தேர்வு மதிப்பெண் மூலம் கிடைக்கும் கட்ஆப் இரண்டையும் கூட்டி, கலந்தாய்வு நடத்தப்பட்டபோது, மதிப்பெண் பந்தய ஓட்டம் இல்லை. பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற முடியவில்லை என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த மதிப்பெண் பந்தயத்தில், எந்தவொரு ஏழை கிராமப்புற மாணவனும் நல்ல கல்லூரியில் இடம்பெற முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளதே, இதை எப்படி சரி செய்யப்போகிறோம்?
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான அரசுப் பள்ளிகள் மிக மோசமாக செயல்பட்டுள்ளன என்பது வெளிப்படை. சென்ற ஆண்டை விட 0.8% தேர்ச்சி விகிதம் அதிகம் என்று கல்வித்துறை சொல்லிக் கொள்ளலாம். 60% மதிப்பெண் பெற்றவர்கள் சென்ற ஆண்டைக் காட்டிலும் 29,417 பேர் அதிகம் என்று ஆசிரியர்கள் சொல்லிக்கொள்ளலாம். இவை யாவும் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி இரண்டுக்கும் சேர்த்துப்போட்ட கணக்கு என்பதை மறந்துவிடக்கூடாது.
ஆண்டுதோறும், தனியார், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் குறித்துத் தனித்தனியாகப் புள்ளிவிவரம் தரும் நடைமுறையைக் கல்வித்துறை இந்த ஆண்டு செய்யவில்லையே, ஏன்?
அரசுப் பள்ளிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் அந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளதா?
அதற்காக வெட்கப்பட்டுத்தான் இதை மறைத்தார்களா?
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு சவால்விட்டுக் களத்தில் இறங்குவார்கள் என்கிற நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து நிற்கிறோம். அதிக சம்பளம், அதிக சலுகை கேட்கும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கும் நிலையில் அரசுப் பள்ளிகள் தரமான கல்வியை சாமானியக் குடிமகனுக்கு வழங்கும் என்கிற நம்பிக்கை தகர்கிறதே, இதைப்பற்றி யாராவது கவலைப்படுகிறோமா?
தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும், மேலாகவும் கற்றுக்கொடுக்க முயலாதவர்கள் மக்கள் வரிப்பணத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக ஏன் தொடரவேண்டும் என்று யாராவது கேள்வி எழுப்புகிறோமா?
இந்த மதிப்பெண் ஓட்டம் இருப்பவன், இல்லாதவனுக்கு இடையில் மிகப்பெரிய, மோசமான இடைவெளியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இதைப்பற்றி அரசும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும், பொதுஜனங்களான நாமும் கவலையே படாமல் சுரணை கெட்டவர்களாக இருக்கிறோம் என்பதுதான் வேதனை!
- தினமணி தலையங்கம் (24.05.2011)
.