நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

2.2.13

மனித ஆன்ம உணர்வே சக்திவாய்ந்தது

-டாக்டர்  ராதாகிருஷ்ணன்


காந்திஜியின் பெயரை நாம் உதட்டில் கொண்டிருக்கிறோம், ஆனால் உள்ளத்தில் கொள்ளவில்லை. எந்தக் காரியத்திற்கும் அவர் பெயரைப் பயன்படுத்த நாம் தவறுவதில்லை. ஆனால் குறிப்பிட்ட நிலைமைகளில், சூழ்நிலையில், அவர் எப்படி நடந்திருப்பார் என்பது பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

  அவர் தம் நாட்டின் மீது மட்டும் பற்றுக் கொண்டிருக்கவில்லை. ஒட்டுமொத்த மனித இனத்திடமே அன்புகொண்டிருந்தார் என்பது தான் அவர் வாழ்வின் சிறப்பான அம்சம்.

  இருள் சூழ்ந்த உலகில், சத்தியம், அன்பு ஆகிய குறிக்கோள்களைப் போற்றி ஒளி வீசிய உயிர்ச் சோதியாய் அவர் விளங்கினார்.

 தம்மைச் சுற்றியிருந்த சூழ்நிலைச் சார்புகளை எதிர்த்து, தாம் வாழ்ந்த கால நிலையை எதிர்த்துப் போராடிய மனிதரை -அப்போராட்டத்தில் புண்பட்ட போதிலும் முறிந்து வீழ்ந்துவிடாமல், தோல்வியுற்ற போதிலும் தம் போராட்டத்தின் இறுதி நேர்மையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த வீரரை - காந்திஜியிடம் நாம் காண்கிறோம்.

  வருங்கால உலக மனித சமுதாயத்தின் முன்னோடி காந்திஜி. அவர் விஸ்வமானுஷ்யர்; உலகக் குடிமகனார்.   அவர் வாழ்க்கை, புதியதோர் உலகுக்கான போராட்டம். அவரது இலட்சியத்தின் அடிப்படை, தேசிய அரசு அன்று; அனைத்துலகுதான் அடிப்படை.

 எல்லா நாடுகளும் மனித சமுதாய நலன் என்ற அடிப்படையில் சிந்திக்க முன்வந்தால் ஒழிய, இன்று ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றங்கள் ஆபத்தாகவும் மனித முயற்சியின் விரயமாகவும் முடியும். உலகப் போரை நாம் தடுக்க விரும்பினால், நமக்கு உலக நாடுகளின் கூட்டுறவும் ஒத்துழைப்பும் தேவை.

 நம்மை எதிர்நோக்கி நிற்கும் புதிய உலகில் வாழ்வதற்கு, நாம் நம்மை ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும். பூகோள அமைப்பில் இன்று ஒற்றுமை உருவாகிவருகிறது. அறிவுத்துறையில் ஒருமித்த கருத்து வளர்ந்து வருகிறது.

 பொருளாதார கூட்டுறவு மூலமாக, மக்கள் அனைவருக்கும் உணவும் உடையும் குடியிருக்க இடமும் அளிக்க முடியும். ஆன்ம உறவையும், ஒருமையையும் நாம் மக்களிடையே பயன்படுத்த வேண்டும்.

 அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட சமுதாய அமைப்பை நம் நாட்டில் நிலைநாட்டி, அதன் மூலம் உலகுக்குத் தொண்டாற்ற முடியும் என்ற நம்பிக்கையில்தான் காந்திஜி நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார். போர் மூளாத ஓர் உலகை நிலைநாட்ட அவர் பாடுபட்டார்.  நம் நாட்டை அவர் சரியான பாதைக்கு அழைத்துச் சென்றார் என்பதற்கு, ஆயுதக்களைவு பற்றி ஐ.நா.வில் ஏகமனதாய் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சான்றாகும்.

  நம் இதயத்தில் உள்ள வெறிகளால்தான், நம்முடைய கண்மூடித்தனமான, கட்டுக்கடங்காத, கண்ணியமற்ற பேராசையினால்தான் போர்கள் மூளுகின்றன. நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளாகவே போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

 குருக்ஷேத்திரம் நம் அகத்தில் உள்ளது. உலகைக் காக்கும் அன்புநெறி, அதை அழிக்கும் பகைமைப் பாதை ஆகிய இந்த இரண்டில் ஒன்றை நாம் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.  இந்தப் போராட்டத்தில், நாம் நம்முடைய முயற்சியால் நம்மைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, நம் செயல்களால் பிறரையும் காக்க வேண்டும்.

 உபவாசம், வழிபாடு, நோன்புகள் ஆகியவற்றைக் கடைப்பிடித்து சத்தியத்தை வழிபடுவோர் பெறும் இணையற்ற தூய்மையையும் வலிமையையும் காந்திஜி பெற்றார்.  மனித சமுதாயத்தின் ஆன்ம வளர்ச்சிப் பரிணாமத்தில் காந்திஜி மிக முக்கியதொரு இடத்தைப் பெற்றுள்ளார்.

  இரட்சிப்பு பெற்றவர்களுக்குக் கிடைக்கும் லட்சிய பூமி பற்றி, சத்யசோதனையின் இறுதிக் குறிக்கோள் பற்றி அவர் பேசுகிறார். அப்பூமியில் அடிவைக்க நம்முள் சிலருக்கு வாய்ப்பில்லாது போகலாம்; ஆயினும், அதை எய்த, நாம் உழைத்துப் பாடுபட வேண்டும். தொலைவில் இருந்தாவது அதைப் போற்றி வணங்க வேண்டும்.

 காந்திஜியை நாம் எண்ணும்போதெல்லாம், சக்திமிக்க குண்டைக் காட்டிலும் மனித ஆன்ம உணர்வே அதிக சக்தி வாய்ந்தது என்ற உண்மையை நாம் நினைவில் போற்றுவோமாக!

மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிக்கானீர் நகரில் 1959 அக்டோபர் 31-ஆம் தேதி, காந்தி சிலையைத் திறந்து வைத்து நிகழ்த்திய உரையின் தமிழாக்கம் இது.

பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள 'டாக்டர் இராதாகிருஷ்ணன் பேருரை (தமிழாக்கம்: கா. திரவியம்) தொகுதி-2'இல் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.

நன்றி: தினமணி (01.02.2013)