நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

16.10.13

'பெண்கள் பங்குபெறாத சட்டசபையை பகிஷ்கரிப்பேன்'

சிந்தனைக்களம்                     -லா.சு.ரங்கராஜன்


"பெண்களுக்குப் போதிய பங்கு இல்லாத சட்டசபைகளை நான் பகிஷ்கரிப்பேன்' என்று 1931-இல் நடைபெற்ற இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் காந்திஜி பகிரங்கமாக அறிவித்தார்.

இந்தியாவின் வருங்கால அரசியல் அமைப்பு பற்றி விவாதித்து முடிவு காண்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் 1931 செப்டம்பர் மாதம் லண்டனில் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டைக் கூட்டியது. மாநாட்டில் மொத்தம் 112 பிரதிநிதிகள். அதில் கலந்துகொள்ள இந்திய தேசிய காங்கிரஸின் ஒரே பிரதிநிதியாக மகாத்மா காந்தி லண்டன் சென்றார்.

காந்திஜியைத் தவிர்த்து இந்திய தரப்பில் சென்ற மற்ற அனைவரும் வைஸ்ராயால் நியமனம் பெற்றவர்கள். சுமார் மூன்று மாத காலம் (1931 செப்டம்பர் 7 முதல் 1931 டிசம்பர் முதல் தேதி வரை) நடைபெற்ற அம் மாநாட்டிலும் அதன் தனிக் குழுக்களின் கூட்டங்களிலும் இழுபறி நிலைதான் மிஞ்சியது. இந்தியப் பிரதிநிதிகளிடையே சமரச முடிவுக்கோ, சமாதானப் பேச்சுவார்த்தைக்கோ இடமில்லாமற் போயிற்று. இந்தியப் பிரதிநிதிகள் அவரவர் சிறுபான்மையினரின் உரிமைக் கோரிக்கைகளை முன்வைப்பதிலேயே காலம் கடத்தினர்.

வட்டமேஜை மாநாட்டில் கூட்டாட்சி முறை பற்றி சாங்கி பிரபுவின் தலைமையில் நடந்த கமிட்டி விவாதத்தின்போது பேசிய காந்திஜி, "காங்கிரûஸப் பொறுத்தவரை அதன் வேட்பாளர் பட்டியலில் மாதர் உள்பட எல்லாப் பிரிவினருக்கும் கூடியவரை பிரதிநிதித்துவம் வழங்கப்படும்' என்று கூறினார். அதனைக் குறிப்பிட்டு, மாதர் பிரதிநிதிகளுள் ஒருவராக வந்திருந்த ராதாபாய் சுப்புராயன் (டாக்டர் பி. சுப்புராயனின் மனைவி) சில கேள்விகளை எழுப்பினார். மாநாட்டு நடவடிக்கை அறிக்கையில் அது பற்றிக் கண்டுள்ள அதிகாரபூர்வமான வாசகத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:

ராதாபாய் சுப்புராயன்: மகாத்மா காந்தியிடம் வினயத்தோடு ஒரு கேள்வி எழுப்பட்டுமா? மாதர்களின் நிலைபற்றி நீங்கள் குறிப்பிடுகையில், மத்திய சட்டசபையில் பெண் உறுப்பினர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்கிற நிலை ஏற்பட்டால் அப்போது தகுதி வாய்ந்த சில பெண்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவதற்கான ஷரத்து வருங்கால சட்டமன்ற விதிப்பட்டியலில் இடம்பெறுமா?

காந்திஜி: மகளிர் யாருமே தேர்ந்தெடுக்கப்படாத அல்லது அவர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அற்ற சட்டசபையை நான் நிச்சயம் பகிஷ்கரிப்பேன். இந்திய தேசிய காங்கிரஸின் சார்பில் நான் இதை அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறேன். வருங்கால சட்டமன்றங்களில் மகளிருக்கு போதிய இடமளிக்க முழு ஆதரவும் காப்புறுதியும் தர தயங்க மாட்டோம். அதனை அமல் செய்வது மிக மிக எளிது. ஆனால் அதன் பொருட்டு மகளிர்க்காக ஒரு தனித் தேர்தல் தொகுதி அமைப்பதற்கு நான் ஒப்ப மாட்டேன்.

ராதாபாய் சுப்புராயன்: தனித் தொகுதி தேவையில்லைதான். ஆனாலும் பொதுத் தேர்தலில் ஓரளவுகூட பெண்கள் தேர்ந்தெடுக்கப்படாத நிலை ஏற்பட்டால், மத்திய சட்டமன்றமே சில மாதர்களைத் தேர்ந்தெடுத்து, கூட்டு உறுப்பினர்களாக நியமிக்க வழி வகுப்பீர்களா?

காந்திஜி: அப்படியேதான்! தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அந்த சட்டமன்றமே போதிய மாதர் பிரதிநிதிகளை வெளியிலிருந்து தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான தனி அந்தஸ்தை மகளிர் பெறுவர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படாத வரையில் சட்டமன்ற நடவடிக்கைகளை தொடர முடியாது என்கிற நிலை ஏற்பட வேண்டும்.

***

இந்தியா சுதந்திரம் பெறுவது நிச்சயமான 1946 இறுதியில் அண்ணல் காந்தி தமது வாராந்தர ’அரிஜன்' (7-4-1946) இதழின் கேள்வி - பதில் பகுதியில் மாதரின் சட்டமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி இவ்வாறு விளக்கியுள்ளார்:

வாசகர் கேள்வி: "தேர்தல் அமைப்புகளில் பெண்களை அதிக அளவில் தேர்வு செய்ய காங்கிரஸ் தயக்கம் காட்டுவதைக் காண்கிறேன். பல்வேறு அமைப்புகளிலும் பெண்கள் பங்கு பெறுவது மிக அவசியமும் நியாயமானதும் ஆகும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். இந்தப் பிரச்னையை நீங்கள் எவ்வாறு கையாளப் போகிறீர்கள்?''

பதில் (காந்திஜி): "சரிசமமான பிரதிநிதித்துவத்திலோ விகிதாசார நிர்ணயத்திலோ எனக்கு எவ்வித மோகமும் இல்லை. தகுதி ஒன்றே தேர்வின் உரைகல்லாக இருத்தல் வேண்டும். இருப்பினும், மாதரை இகழ்ச்சிக்கு உள்ளாக்கும் வழக்கம் இருந்துவருவதால் அதற்கு நேர்எதிர்மறையான வழக்கத்தைப் பழக்கத்தில் புகுத்த வேண்டியது அவசியமாகிறது. அதாவது, ஆண்களுக்கு நிகராகத் தகுதி படைத்த பெண்களுக்கே எந்த ஒரு தேர்தலிலும் காங்கிரஸ் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பேன். அதன் விளைவாக ஆண்களே இல்லாமல் முழுக்க முழுக்கப் பெண்களே சட்டமன்ற அமைப்புகளில் இடம்பெறுவதானாலும் கூட ஒன்றும் பாதகமில்லை. இருப்பினும், பெண் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஒரு அமைப்பின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஒரு பெண் வலியுறுத்துவது ஆபத்தான சமாசாரம்.

பெண்களாகட்டும், அல்லது வேறு எந்தப் பிரிவினராகட்டும், தனிச்சலுகைகள் பெறுவதை அவர்களே ஏளனமாகக் கருதி மறுக்க வேண்டும். அவர்கள் நியாயத்தை நாட வேண்டுமே தவிர, அனுகூலச் சலுகைகளை அல்ல. ஆகவே, பெண்கள் எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை - ஏன்? ஆண்கள் கூடத் தான் - மகளிரிடையே அவரவர் தாய்மொழி வாயிலாய்ப் பொதுக் கல்வியறிவைப் புகட்டிப் பரப்பி, குடிமகளிருக்கான பல்வேறு கடமைகளை உணர்த்தி, பொதுவாழ்வில் பெண்கள் போதிய தகுதி பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

அத்தியாவசியமான இந்த பெண் நலச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் ஆண்களே முதன்மை வகிக்க வேண்டும் என்று நான் கூறுவேன். அது ஆண்கள் பெண்களுக்கு அளிக்கும் ஆதரவுச் செயல் என்ற வகையில் நான் இவ்வாறு கூறவில்லை; மாறாக, பெண்களுக்கு என்றோ சேர்ந்திருக்க வேண்டிய நியாயத்தை இப்போது காலங்கடந்த நிலையிலாவது வழங்க ஆண்கள் முன்வர வேண்டும் என்பதே ஆகும்''.

***

இந்திய மாதரின் நிலைமையை உயர்த்துவதில் மகாத்மா காந்தியின் மகத்தான பங்களிப்பைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? தேசிய போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்பது காந்திய சத்தியாக்கிரக இயக்கத்தின் ஓர் அம்சம். 1930 மார்ச் 12 அன்று தொடக்கம் பெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின்போது சட்டமீறல் நடவடிக்கையின் பெயரில் சுமார் 30,000 பேர்கள் கைது செய்யப்பட்டு வெவ்வேறு தண்டனைகளுக்கு உள்ளாகினர். அவர்களுள் 17,000 பேர்கள் பெண்கள் என்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

சென்னையில் 1946 ஜனவரி 27 அன்று நடைபெற்ற நிர்மாணத்திட்ட ஊழியர் மாநாட்டில் காந்திஜி பேசியபோது ஒரு புதிய கருத்தை வெளியிட்டார். அதாவது, பஞ்சாயத்துத் தேர்தல்களிலோ சட்டமன்றத் தேர்தலிலோ நிற்கும் பெண் வேட்பாளர்கள், மக்களின் பொது நலனையே பொதுக் குறிக்கோளாக ஒருமித்து ஏற்று இணைந்து, கட்சி வேறுபாடுகளைத்  தவிர்த்து, மக்கள் நலனையே கருத்தில் இறுத்தி சட்டமன்றங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

’பெண்களின் நிலை' என்ற தலைப்பில் அண்ணல் காந்தி 1929-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில், "பெண்கள் தியாகத்தின் வடிவம்; பொறுமையின் பெட்டகம். அவர்கள் அரசியல் வாழ்வில் ஈடுபடுகையில், தூய்மை மேலோங்கும். சொத்துக் குவிப்புப் பேராசையும், வரம்பு கடந்த புகழார்வத்தையும் கட்டுப்படுத்தும்'' என்றார்.

இறுதியாக, 1947 ஏப்ரல் 7 அன்று புது தில்லியில் அவரைச் சந்தித்த சாந்திநிகேதன் மாணவியருடன் உரையாடியபோது காந்திஜி கூறினார்: நமது சாத்திரங்கள் மாதரை ’அர்த்தாங்கினி’ (மானிடனின் சரிபாதி அங்கம்) என்று அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்தில் குறிப்பிடுகின்றன. ஆனால் ஆண்களோ பெண்ணை ஏதோ விளையாட்டுக் கருவியாகப் பாவிக்கின்றனர்; அடிமை போல நடத்த முற்படுகின்றனர். பெண் குழந்தை பிறந்தால் குடும்பம் சோகத்தில் ஆழ்கிறது; ஆண் மகவு பிறந்தாலோ வீடு பூராவும் விழாக் குதூகலிப்புத்தான்! இந்தத் தீங்கான மனப்பான்மை ஓயும்வரை முன்னேற்றம் ஏதும் காண்பது அரிது'' என்று சாடினார்.

அந்த உரையாடலின்போது காந்திஜி மேலும் கூறினார்: "பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்வது, அவர்களை அவமானப்படுத்துவது போன்ற சம்பவங்களை நாள்தோறும் கேள்விப்படுகிறோம். அத்தகைய இழிவான நிகழ்வுகள், நாம் எவ்வளவு தூரம் வெட்கங்கெட்டு, கயமை தோய்ந்து, மிருகத்தினும் கேடு கெட்டவர்களாகிறோம் என்பதையே எடுத்துக் காட்டுகின்றன'' என்று கடிந்துரைத்தார்
(’கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி', நூல் 87 - பக். 229-230).

சுயராஜ்யம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை காந்திஜி 1921-ஆம் ஆண்டிலேயே தமது ’நவஜீவன்' கட்டுரையொன்றில் பட்டியலிட்டுள்ளார். சுயராஜ்யத்திற்கான இரு முக்கிய நிபந்தனைகளாவன: "சுயராஜ்யம் என்றால் ஒவ்வொரு மாதரையும் தமது அன்னையாகவோ, சகோதரியாகவோ பாவித்துப் போற்றி மதிப்பளிக்க வேண்டும்; மேலும், என்றைக்கு ஓர் இளம் பெண் நள்ளிரவில் அச்சமேதுமின்றி தன்னந்தனியாக எங்கும் நடமாட முடிகிறதோ அன்றே பூரண சுயராஜ்யம் பெற்றவர்களாவோம்'', என்றும் விளக்கம் அளித்துள்ளார்..
(நவஜீவன்'; 14-8-1921).

சுதந்திர இந்தியாவின் சட்டசபைகளில் பெண்களுக்குப் போதிய இடம் அளிக்கப்பட வேண்டும். பெண்கள் தன்னந்தனியாக பயமின்றி நள்ளிரவிலும் செல்லும் நிலை ஏற்பட வேண்டும் என்கிற அண்ணல் காந்தியின் எதிர்பார்ப்புகள், இன்றைய இந்திய மகளிர் அனைவரின் அபிலாஷையும்கூட. அவை நிறைவுபெறும் பொன்நாள் எந்நாளோ?

நன்றி: தினமணி 

2.10.13

தேவர்கள் திரளில் கலந்த பிசாசுகள்


சிந்தனைக்களம்                 -தெ.ஞானசுந்தரம்அண்மையில் செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காஞ்சிபுரத்தை அடுத்த ஒருபள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் சங்கிலிப்பறிப்புத் திருட்டில் ஈடுபட்டுப் பிடிபட்டார் என்பதே அச்செய்தி.

  இதற்குச் சில நாட்களுக்கு முன்பு வகுப்பில் படிக்கும் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்தார் என்று ஆசிரியர் ஒருவருக்கு எதிராக ஊர்மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினார்கள் என்னும் செய்தி நாளிதழில் வந்திருந்தது.

 இப்படி வரும் செய்திகள் ஆசிரியர்கள் எந்த அளவு தரம்தாழ்ந்து மதிப்பிழந்து நிற்கிறார்கள் என்பதனைக் காட்டுகின்றன. ஆசிரியர்களை உயர்வாகப் போற்றும் இந்த மண்ணிலா இந்த நிலை என்று மனம் துணுக்குறுகிறது.

  ஆசிரியரைத் தோழராகவும், சிந்தனையாளராகவும் வழிகாட்டியாகவும் கருதுவது மேலைநாட்டுப் போக்கு. தெய்வமாகப் போற்றுவது இந்திய மண்ணின் இயல்பு. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்கிறார் அதிவீரராம பாண்டியர்.

    1955 -57இல் மயிலாடுதுறை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த எனக்கு வகுப்பு ஆசிரியர் எம்.ஏ. பி.டி. என்று அழைக்கப்பட்ட சுந்தரராம அய்யர். மாலையில் என் வீட்டின் வழியாக நடைப்பயிற்சிக்குப் போகும்போது சில நாள் என்னையும் கூட்டிச் செல்வார். மாயூரம் - தரங்கம்பாடி ரயில் பாதை ஓரமாக நடந்து செல்வோம். வழியில் எல்லாம் ஆங்கில இலக்கணம் சொல்லிக் கொடுத்துக்கொண்டே வருவார்.

  ஒருநாள் கீழ்வகுப்பு விடைத்தாள்களைத் திருத்தும்போது மதிப்பெண்களைக் கூட்டிப் போடுவதற்காக தன் வீட்டிற்கு வரும்படி சொன்னார். 1957ஆம் ஆண்டில் ஆப்பிள்பழம் மயிலாடுதுறையில் இருந்தவர்கள் அறியாத ஒன்று. சென்னையிலிருந்து யாரோ சில பழங்களை அவருக்கு அனுப்பியிருந்தனர். அதில் ஒன்றை எடுத்துவந்து சீவி எனக்கு ஒரு துண்டு தந்துவிட்டுத் தன் சின்னஞ்சிறு மகளுக்கும் ஊட்டினார். நான் ஆப்பிள்பழத்தைப் பார்த்ததும் சுவைத்ததும் அன்றுதான். இன்றும் எப்பொழுது ஆப்பிள்பழம் சாப்பிட்டாலும் என் ஆசிரியரின் செயல் நினைவுக்கு வரும். ஒரு சாதாரண செயல்தான். அதில்தான் எத்தனை அன்பு!

  1958ஆம் ஆண்டு குடந்தை அரசினர் கல்லூரியில் இளங்கலை பயின்றபோது எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர்களுள் ஒருவர் கோவை ஆசான் அமரர் ப.சு.மணியம். மேனியில் தூய கதராடை, நெற்றியில் திருநீறு, புருவ நடுவில் சந்தனம், அதன்மேலே சிவப்பு பொட்டு வைத்த முகம். இந்தக் கோலத்தில்தான் வகுப்புக்கு வருவார். கையில் மறைமலையடிகள் வாழ்க என்று பச்சை குத்தி இருப்பது தெரியும். அமுதும் கன்னலும் பாலும் தேனும் கலந்து ஓடுவது போன்று வாயிலிருந்து சொற்கள் வெள்ளமிட்டு ஓடும். சங்க இலக்கியமும் திருக்குறளும் பரிமேலழகர் உரையும் திருவாசகமும் அவ்வெள்ளத்தில் புரண்டு ஓடிவரும். அவர் வகுப்பு எப்பொழுது வரும் என்று காத்துக்கிடந்தார்கள் மாணவர்கள்.

  அந்நாளில், கல்லூரியில் தி.மு.க மாணவர்களும் அவர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் தி.க. மாணவர்களும் இருந்தார்கள். கடவுள் மறுப்பினரும் அவரது புலமைக்கு மயங்கி ஐயா என்று வாய்மணக்க அழைத்து வணங்கிப் போற்றினர். அப்போது அங்கு பணியாற்றிய மற்றொருவர் செ. கந்தப்பன். அவர் பின்னாளில் திருச்செங்கோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்து மறைந்தவர். அவரும் மாணவர்களிடம் செல்வாக்கோடு இருந்தார். அவர் கட்சிச்சார்பை மாணவர்கள் அறிவர். அவரும் அதனை மறைத்துக்கொள்ளவில்லை.

  இருகட்சி மாணவர்களினிடையே கடும்பகை நிலவிவந்தது. அதனால் அவரைத் தாக்குவதற்கு தி.க. மாணவர்கள் சிலர் முடிவுசெய்தனர். காவிரியின் வடகரையில் வரிசையாக உள்ள ஆசிரியர் அறைகளில் ஒன்று தமிழ்த்துறை அறை. அதில் அவர் அமர்ந்திருக்கிறார். காவிரி நடைபாலத்தைக் கடந்து வரட்டும்  இன்று அவரை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்று கறுவிக்கொண்டு தி.க. மாணவர்கள் ஆயுதங்களோடு காவிரியின் தென்கரையில் காத்திருந்தார்கள்.

 செய்தி அறிந்த ப.சு மணியம் ஐயா கந்தப்பனைத் தம்மோடு அழைத்துக்கொண்டு பாலத்தின் வழியாக நடந்தார். ப.சு. ஐயாவோடு அவர் வந்ததைப் பார்த்த அந்த மாணவர்கள் திகைத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஒதுங்கி நின்றனர். "ஏன் நிற்கிறீர்கள்?' என்றார் ஐயா. "ஒன்றுமில்லை,  ஐயா' என்றவாறு கலைந்து சென்றனர். எங்களுக்கு அன்று அவர் கோவூர்கிழாராகக் காட்சி அளித்தார். ஆசிரியர்களுக்கு இருந்த அந்த ஆளுமை இன்று எங்கே போயிற்று?

    இப்படி எண்ணிப்பார்த்து மனம் நெகிழ்வதற்குரிய ஆசிரியர் பலர் அன்று இருந்தனர். அவர்களில் பாடம் நடத்துவதில் முன்பின்னாக இருந்த ஆசிரியர் சிலர் உண்டு. ஆனால் எல்லோரும் பண்பில், ஒழுக்கத்தில் பத்தரை மாற்றுத் தங்கம். இன்று அத்தகைய ஆசிரியர் தொகை அருகிவிட்டது. ஒருசிலர் இருக்கலாம். ஆனால், பங்குனிமாதப் பனியால் பாசன ஏரி நிரம்பிவிடுமா?

  இத்தகைய ஆசிரியர் கூட்டத்திலா தெருவில் செல்லும் பெண்களின் கழுத்துச் சங்கிலியை அறுக்கும் கீழ்கள்? மகள் போலக் கருத வேண்டிய மாணவியிடம் தகாத முறையில் நடக்கும் வக்கிரங்கள்? நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது.

  இதற்கு என்ன காரணம்? முன்பு ஆசிரியர்களுக்குத் தாங்கள் மற்றவர்களைப் போன்று தொழிலாளிகள் அல்லர், சமுதாயத்திற்கு வழிகாட்டிகள் என்ற எண்ணம் இருந்தது.

  அன்று தெருவில் இறங்கிப் போராடுவது ஆசிரியர்கள் தகுதிக்குக் குறைவானது என்று கருதினார்கள். காலத்தின் கட்டாயம் ஆசிரியர்கள் தெருவில் இறங்கும்  நிலை உருவாயிற்று. சங்கங்கள் வலுவடைந்தன. விளைவு? ஆசிரியர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது, கல்வித்தரம் தாழ்ந்தது. சங்கங்கள் வலுப்பெற வலுப்பெறச் சங்கங்களே கல்வி நிறுவனங்களைப் பின்னால் இருந்துகொண்டு இயக்கத் தொடங்கிவிட்டன. தலைமையாசிரியர்களும் கல்லூரி முதல்வர்களும் அவற்றோடு சமரசம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. யாரையும் தட்டிக் கேட்க முடியாத நிலை உருவாகிவிட்டது.

  ஆசிரியர்கள் தரம் மேன்பட அரசு என்ன செய்ய வேண்டும்? ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போது அவர்கள் கல்வித்தகுதியோடு ஒழுக்கம் குறித்த புலனாய்வு அறிக்கையையும் பெற்று தகுதியானவரை நியமிக்க வேண்டும். அவ்வப்பொழுது முதன்மையான மாணவர்கள் சிலரிடமிருந்து ஆசிரியர்களைப் பற்றிய கருத்துரைகளைக் கேட்டறிந்து  அதற்கேற்ப கல்வித்துறை  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

  தனியார் கல்வி நிறுவனங்கள் பலவற்றில் ஆசிரியப்பணி பல இலட்சம் கையூட்டுப் பெற்று நிரப்பப்படுவதாகச் சொல்கிறார்கள். பணம்கொடுத்து  பதவியை விலைக்கு வாங்கும் ஆசிரியர்களிடம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும்? அப்படி வருபவர்களிலும் எத்தனை பேர் நல்லவர்களாக இருப்பார்கள்? ஒளிவு மறைவின்றி நேர்மையான முறையில் தேர்வுசெய்து தகுதியானவர்களை நியமனம் செய்தால்தான் களைகள் புகாமல் தடுக்கலாம்.

  அரசின் செயற்பாட்டால் இன்று ஆசிரியர்களிடையே நிரந்தரப் பணியில் இருப்பவர், தொகுப்பூதியம் பெற்றுப் பணிபுரிபவர் என்று இருபிரிவுகள் ஏற்பட்டுள்ளன. முன்னவர் சுதந்திரமாகத் தம் விருப்பம்போல் இயங்குகின்றனர். பின்னவர் வருத்தி வேலை வாங்கப்படுகின்றனர். ஒரே பணிக்கு இருவேறு வகை ஊதியம் வழங்குவது என்ன முறை? ஒரு பக்கம் பல்லாயிரம் ஊதியம் மறுபக்கம் பற்றாக்குறை ஊதியம். வாழ்க்கை நிலைப்படாத நிலையில் அவர்களால் எவ்வாறு செம்மையாகப் பணியாற்ற முடியும்? சிக்கன நடவடிக்கை கல்வித்துறையைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆளில்லா இடங்களை உடனே நிரப்பி தொகுப்பூதியப் பிரிவினை அறவே அகற்றினால்தான் கல்விச்சூழல் ஏற்றம் பெறும்.

  முன்பெல்லாம் காலை பத்துமணிமுதல் மதியம் ஒருமணிவரையிலும், பிற்பகல் இரண்டு முதல் ஐந்துமணிவரையிலும் வகுப்புகள் நடந்தன. இதனால் ஆசிரியர்களிடத்தும் மாணவர்களிடத்தும் கட்டுப்பாடு இருந்தது. இன்று பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் பணி முற்பகல் பன்னிரண்டு மணிக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. போதிய ஆசிரியர்கள் இருக்கும்போதுதான் வகுப்புகள் முழுமையாக நடைபெறும். ஆசிரியர் இன்மையால் வகுப்பு நடத்தப்படாமல் விடப்படுவது தவிர்க்கப்பட்டால் மாணவர்கள் வெளியில் சுற்றுவதும் வீண் செயல்களில் ஈடுபடுவதும் குறையும்.

  ஆசிரிய சங்கங்கள் தங்கள் எல்லையை அறிந்து நடந்துகொள்ள வேண்டும். கல்லூரி நிர்வாகத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது.

  வயலுக்குப் போதிய உரம் போடாமலும் கவனிக்காமலும் விட்டுவிட்டு  பின்பு களைமண்டி விட்டதே என்று கவலை கொள்வதால் என்ன பயன்? நிலைமை இப்படியே போனால், தேவர்கள் கூட்டத்தில் அவர்கள் வேடத்தில் கலக்கும் பிசாசுகள் எண்ணிக்கை மிகுந்துவிடும்.


குறிப்பு: கட்டுரையாளர், தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு) பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

----------------------------

நன்றி: தினமணி (01.10.2013)