நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

3.1.11

வெள்ளையரை மிரட்டிய வீரச்சிங்கம்

வீரபாண்டிய

கட்டபொம்மன்

பிறப்பு:  ஜன. 3

உலகம் தோன்றியது முதல் இன்றைய காலகட்டம் வரை பிறந்து மறைந்தவர்கள் எல்லோரும் நம் நினைவில் நிற்கமுடியாத நிலை. ஆனால் காலத்தால் மறைக்க முடியாத மனிதர்கள் இன்றும் நினைவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அத்தகைய சிறப்பை அவர்கள் பெற்றதற்கு காரணம் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த அவர்களின் குணாதியங்கள்கள்தான். அப்படி வாழ்ந்து மறைந்த மாவீரனாக நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

03-01-1760 ல் அழகிய வீரபாண்டியபுரத்தில் (இன்றைய ஒட்டப்பிடாரம்) பிறந்தார். இவருடைய தந்தை ஜெகவீரபாண்டியன். தாய் ஆறுமுகத்தம்மாள். கட்டபொம்மனின் முன்னோர்கள் தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்கள. விஜயநகர பேரரசால் புலம் பெயர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. .இவர்களின் மூன்று புதல்வர்கள்தான் கருத்தையா என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்,  தளவாய் குமாரசாமி என்ற துரைசிங்கம் மற்றும் செவத்தையா என்ற ஊமைத்துரை.

இவர்களின் முன்னோர் தெலுங்கு நாட்டின் பிரசித்திபெற்றவர்கள். 'கெட்டி பொம்முலு' என வீரத்துக்கு அடையாளமாக சொல்லப்படும் சாஸ்தா அய்யணசாமி என்ற தெய்வத்தின் பெயரால் அழைக்கப்பெற்றவர்கள். அந்த வீரத்துக் காவல் தெய்வமாகக் கருதப்பட்டதனால் என்னவோ, பிழைக்க வந்த வெள்ளையர்களுக்கு கட்டபொம்மன் ஒரு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனின் மூதாதையர்களில் ஒருவரது  காலத்தில் நடந்ததாகக் கருதப்படும் கதைகளில் ஒன்று இன்றும் பேசப்படுகிறது. ஒரு நாள் வேட்டையாடும் நேரத்தில், வேட்டை நாய்களினால் துரத்தப்பட்டு வந்த முயலொன்று குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் வேட்டை நாய்களை நோக்கி சீறிப் பாய்ந்ததாகவும் அதைக் கண்ணுற்ற அன்றைய கட்டபொம்மர் அதுவே தாம் கோட்டை கட்டுவதற்கு உகந்த இடம் எனத் தீர்மானித்து அவ்விடத்திலேயே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நிறுவியதாகவும் கூறப்படுகிறது.

கருத்தையா என்ற வீரபாண்டியன் 02.02.1790ல் கட்டபொம்மர்களின் வாரிசாக கருதப்பட்டு, ஆட்சி அமைக்க அன்றைய மதுரைப்பாளையக்காரர்களால் அனுமதிக்கப்பட்டார். கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னனாகப் பொறுப்பேற்றார்.

1736 க்கு முன் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் மதுரை, நாயக்கர் வம்ச அரசர்களால் பரிபாலனம் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு சந்தாப் சாகேப் ஆர்கோட் என்பவரால் மதுரை அங்கு கடைசியாக ஆண்ட ராணியிடமிருந்து பறிக்கப்பட்டு நவாப் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் பெருமளவில் சுரண்டப்பட்டதன் காரணமாக மக்கள் மிக்க அதிருப்தி கொண்டிருந்தனர்.

அத்துடன் இஸ்லாமிய ஆட்சிமுறையை பெரும்பாலான பாளையக்காரர்கள் எதிர்க்கத் துணிந்தனர். இத்தகைய போக்குகள் இறுதியில் ஆர்க்காடு அரசினை வெள்ளையர்களிடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. சரியான தருணம் பார்த்திருந்த ஆங்கிலேயர்கள் ஆர்க்காடு நவாப் அரசுக்கு கொடுத்துள்ள கடனுக்காக நவாப்பிடமிருந்து வரிவசூலிக்கும் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களிடமிருந்து தாறுமாறாக வரி என்ற பெயரில் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்.

வரியை மக்களிடமிருந்து வாங்கிக் கொடுக்காத பாளையக்காரர்கள் கொடுமைக்காளானார்கள்.   இத்தகைய நிலை ஏறத்தாழ 40, 50 ஆண்டுகள் நீடித்த நிலையில்தான், பாஞ்சாலஞ்குறிச்சியில் கட்டபொம்மன் ஆட்சிக்கு வந்தார்.  மக்களின் வரிப்பணம் பாழாக்கப்பட்டு நிர்வாகம் தறிகெட்டுக் கிடந்த ஒரு காலகட்டத்தில், மக்களை புரட்சியிலிருந்து ஒடுக்குவதற்கு ஆங்கிலேயர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இத்தகைய போக்கு பிரச்னைகளை மேலும் மோசமாக்குவதாக அமைந்தது.

இத்தகைய குழப்பமான நிலையில் ஆங்கிலேயர்கள் தங்களுக்கே உரித்தான பிரித்தாளும் சதிவேலைகளை மேற்கொண்டு மக்களிடம் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தினார்கள்.
 இக்காலகட்டத்தில் ஆஙகிலேயரின் ஒடுக்குமுறைக்கு சற்றும் சளைக்காமல் கட்டபொம்மன் அவர்களுக்கு வரி சேகரித்துக் கொடுப்பதை நிறுத்தினார். அச்சுறுத்தலுக்களுக்கும் பணியாமல் கட்டபொம்மன் தன் நிலையில் உறுதியாக இருந்தார். இதனால் கட்டபொம்மனை வஞ்சக வலைவிரித்து கவிழ்க்கத் தருணம் பார்த்திருந்தார்கள்.

கட்டபொம்மனின் மந்திரியாக செயல்பட்டு வந்தவர் தானாதிப்பிள்ளை அவர்கள்.
பிரதான தளபதியாக அமைந்தவர் சுந்தரலிங்கம் என்று அறியப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்காக தன் இன்னுயிரைத் தியாகமாக்கியவர். மதுரை பாளையக்காரர்களால் அனைவரிடமிருந்தும் கப்பம் பெற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களால் கட்டபொம்மனிடம் தங்கள் கொட்டம் பலிக்காமல் அவமானம் அடைந்தனர். அதனால் சமாதானம் பேசுவது என்ற போர்வையில் கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினார்கள்.

பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடம் ராமநாதபுரம் சேதுபதி ராஜா மாளிகை. பேச்சுவார்த்தைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் ஜாக்ஸன் துரை. கட்டபொம்மன்,  தானாதிபிள்ளை மற்றும் தன் குழுவினருடன் ராமநாதபுரம் சென்றார். அங்கே நடந்த பேச்சுவார்தை தோல்வியாகி கைகலப்பில் முடிந்தது. ஆங்கிலேயரின் இந்த திட்டமிட்ட வஞ்சக வலையில் சிக்காமல் தன் வீரத்திறமையால் அங்கிருந்து தப்பினார். ஆனால் தானாதிப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கைக்காக ஜாக்ஸன் துரை பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி ஆலோசனையின்பேரில், திருநெல்வேலி கலெக்டர், கட்டபொம்மனுக்கு வரி கொடாமைக்கு காரணம் கேட்டு கடிதம் 16..03.1799ல் அனுப்பினார். இதற்கு கட்டபொம்மன் வரி செலுத்த வேண்டிய பணம், தானியங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டதாக பதில் அனுப்பினார்.

கட்டபொம்மனின் தலைவணங்காத்தன்மை வெள்ளையர்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கியது.  கட்டபொம்மனை நாட்டின் பொது எதிரியாக்கி தீர்மானம் நிறைவேற்றினர். தங்கள் நயவஞ்சக திட்டத்துக்கு கட்டபொம்மனுக்கு எதிராக எட்டப்பனை தேர்ந்தெடுத்து கட்டபொம்மனின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆராய்ந்து சரியான தருணம் பார்த்து ராணுவத்தளபதி பாணர்மேன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தகர்க்கும் திட்டமத்தை உருவாக்கி, கர்னல் கொலினிஸ் தலைமையில் கோட்டையின் நாலாபக்கமும் தாக்குதல் நடத்தினார்கள்.

வெகு சுலபம் என எதிர்பார்த்த கொலின்ஸ், தாக்குதலை சமாளிக்கமுடியாமல் பின்வாங்கி மேலும் ஆயுதங்கள் தேவை என செய்தி அனுப்பினார். இதைப் பயன்படுத்தி கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிச் சென்றார். பெருத்த ஏமாற்றத்துக்குள்ளான வெள்ளையர் கட்டபொம்மன் தலைக்கு விலை வைத்தார்கள். தானாதிப்பிள்ளை முதலிய 16 பேரை கைது செய்து அழைத்துச் சென்றார்கள். கைது செய்யப்பட்ட தானாதிபிள்ளையின் தலையை வெட்டி மக்கள் பார்வைக்கென பொது இடத்தில் வைத்தார்கள்.

கட்டபொம்மன் புதுக்கோட்டை ராஜாவிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால் வெள்ளையரின் வஞ்சனை காரணமாக கட்டபொம்மன் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு,  16.10.1799  ல் இன்றைய தூத்துக்குடி மாவட்டம்,  கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார் கட்டபொம்மன். அவருடன் சேர்ந்து தங்கள் இன்னுயிரைத் தந்த வீர மறவர்கள் என்றென்றும் போற்றுதற்கு உரியவர்கள்.

கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்கிய எட்டப்பன், எட்டயபுர ராஜாவாக ஆக்கப்பட்டு அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கொள்ளையடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற மாமனிதனின் பெயர் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்த அவரது தியாகத்தை போற்றுவோமாக.

-இரா.ராமசந்திரன், திருச்சி

குறிப்பு:  
இந்த ஆண்டு,  வீரபாண்டிய கட்டபொம்மனின் 250 வது பிறந்த ஆண்டு. 


காண்க:
வீரபாண்டிய கட்டபொம்மன் (விக்கி)
Veerapandiya Kattabomman
வீரபாண்டி கோட்டையிலே
கட்டபொம்மன் நினைவுச்சின்னம்
விடுதலைவீரனாகிறான் ஒரு பாளையக்காரன் (வினவு)
விடுலைப்போரின் வீரமரபு
கட்டபொம்மன் (கீற்று)
கட்டபொம்மன் வாழ்க்கை (அந்தரி)
நல்ல சேதி 2
கயத்தாறு (தமிழ் மரபு அறக்கட்டளை)
கட்டபொம்மனும் கும்பினியாரும்
கட்டபொம்மன் பெருமை
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக