சாக்கிய நாயனார்
திருநட்சத்திரம்:
மார்கழி - 20 - பூராடம்
(ஜன. 4 )
காஞ்சிபுரம் அருகே திருச்சங்க மங்கையில், மார்கழி மாதம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கிய நாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். புத்த நெறியைக் கடைபிடித்தவராக இருந்தபோதிலும், பிறவிப்பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார்.
எப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்ற போது வழியில் ஒரு சிவலிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். லிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்ட அவருக்கு அந்த இடத்தில் பூஜைக்குரிய பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது. சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து "நமசிவாய" மந்திரத்தை உச்சரித்து லிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், அவர் விசியெறிந்த கல்லை மலராக ஏற்றுக்கொண்டார்.
இதே போல் தினமும் லிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என்று நினைத்தார்கள். ஆனால் இறைவன் ஒருவருக்குத் தான் இவர் உணமையான பக்தியால் இவ்வாறு செய்கிறார் என்பது புரியும்.
இந்நிலையில் ஒருநாள் சாக்கிய நாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று கல் எறிந்து சிவபூஜை செய்தார். சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார்.
அளவற்ற அன்பால் பக்தன் எறிந்த கல்லையும் இறைவன் மலராக ஏற்றுக்கொண்டதை சாக்கிய நாயனார் சரிதம் நமக்கு காட்டுகிறது. இறைவனை நோக்கி நாம் ஓரடி முன்வைத்தல் இறைவன் பல அடிகள் நம்மை நோக்கி முன்வருவார் என்பதற்கும் இவரது வாழ்க்கை நமக்கு சான்று.
நன்றி: சைவ கோயில்கள் (சாக்கோட்டை)
காண்க:
சாக்கிய நாயனார் (விக்கி)
சாக்கிய நாயனார் புராணம் (சைவம்.ORG)
பெரிய புராணச் சொற்பொழிவு
திருச்சங்க மங்கை
CHAKKIYA NAYANAR
திருத்தொண்டர் புராணம்
சாக்கியர் புராணம் (திண்ணை)
தேவாரத் திருமுறை பாடல்கள்
பௌத்த திருப்பதிகள் (தமிழ் ஹிந்து)
அமிர்தகடேஸ்வரர் கோயில்- சாக்கோட்டை (தினமலர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக