நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

21.1.11

நேதாஜிக்கு வழிகாட்டியவர்





ராஷ் பிஹாரி போஸ்
பலிதானம்:  ஜன. 21

நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட உத்தமர்களில் நாம் என்றும் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும் ஆவர். இவர்களில் மூத்தவரான ராஷ் பிஹாரி போசின் வீரமயமான வாழ்க்கை பலரும் அறியாதது. உண்மையில் நேதாஜிக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்த வாழ்க்கை ராஷ் பிஹாரி போஸின் அர்ப்பண மயமான  வாழ்க்கை.

வங்கத்தின் பர்த்வான் மாவட்டத்தில், சுபல்தஹா கிராமத்தில், அரசு ஊழியர் வினோத் பிஹாரி போஸின் மகனாக 25.05.1886 ல் பிறந்தவர் ராஷ் பிஹாரி போஸ். சந்தன் நகரில் படிப்பு முடித்த ராஷ், இளமையிலேயே புரட்சி இயக்கத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். வங்கத்தின் புரட்சி இயல்புக்கேற்ப, ராஷ் பிஹாரி போஸும்   விடுதலைப் போரில் ரகசியமாக இணைந்தார். அரவிந்தர் உள்ளிட்ட புரட்சி இயக்கத்தினருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

குதிராம் போஸ் நடத்திய குண்டுவீச்சால் ஆங்கிலேய அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை அடுத்துஅலிப்பூர் சதி வழக்கு (1908) தொடரப்பட்டதுஅதில்  அரவிந்தர் கைது செய்யப்பட்டார். ராஷ் பிஹாரி போஸும் அந்த வழக்கில் தேடப்பட்டார். அதிலிருந்து தப்ப வங்கத்தை விட்டு வெளியேறிய ராஷ், டேராடூனில் வனவியல் ஆய்வு மையத்தில் தலைமை எழுத்தராகச் சேர்ந்து பணி புரிந்தார். அப்போது புரட்சியாளர் அமரேந்திர சட்டர்ஜியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன் விளைவாக யுகாந்தர் புரட்சிக் குழு உறுப்பினர் ஆனார்.

25.12.1912  ல் டில்லியில் ஆங்கிலேயரை உலுக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அன்றைய வைஸ்ராய் ஹார்டின்ச் பிரபு வின் பதவியேற்பு விழாவை ஒட்டி நிகழ்ந்த அணிவகுப்பில், யானை மீது அம்பாரியில் அமர்ந்து  வந்த வைஸ்ராய் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்; யானையின் மாவுத்தன் கொல்லப்பட்டார். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக வசந்த் குமார் பிஸ்வாஸ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்ஆனால்குண்டுவீச்சுக்கு  மூலகாரணமான புரட்சிக்காரரைப் பிடிக்க முடியவில்லை.  ராஷ் பிஹாரி போஸ் தான் இந்த கொலை முயற்சியின் பிதாமகர் என்பதை பிரிட்டீஷார் அறிய மூன்றாண்டுகள் ஆயின.

டில்லியில் குண்டுவீச்சுக்கு காரணமாக இருந்துவிட்டு இரவு ரயிலிலேயே டேராடூன் திரும்பிய ராஷ், எதுவும் அறியாதவர் போல மறுநாள் பணியில் ஈடுபட்டார். அதைவிட வேடிக்கை, வைஸ்ராய் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்கு கண்டனம் தெரிவித்து அங்கு அவர் நடத்திய கூட்டம் தான். குண்டுவீச்சுக்கு காரணமானவரே அதை எதிர்த்து கூட்டம் நடத்தி நாடகமாடினார் என்றால் அவரது புரட்சி நடவடிக்கையின் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியும்.

இது குறித்து வைஸ்ராய் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் ஹார்டின்ச் பிரபு எழுதிய 'MY INDIAN YEARS' என்ற நூலில் சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். குண்டுவீச்சில் கைதானவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆனால், தில்லி சதி வழக்கு என்று குறிப்பிடப்படும் அவ்வழக்கின் முதன்மைக் குற்றவாளியான ராஷ் பிஹாரி போஸை அவரது ஆயுள் மட்டும் பிரிட்டீஷ் போலீசாரால்  கைது செய்ய முடியவே இல்லை.

1913  ல் யுகாந்தர் இயக்கத்தின் தலைவர் ஜிதின் முகர்ஜியுடன் ராஷுக்கு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அவரது தலைமைப் பண்பை உணர்ந்த ஜடின், அவருக்கு மேலும் பொறுப்புகளை அளித்து அவரை மெருகேற்றினார்.

1914  முதல் 1918  வரை முதல் உலகப் போர் நடைபெற்றது. அதனைப் பயன்படுத்தி, இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட புரட்சியாளர்கள் திட்டம் தீட்டினர். ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட கடல் கடந்த நாடுகளில் இருந்த தீவிர வலதுசாரிகளின் ஆதரவுடன், அமெரிக்காவில் இயங்கிய கதர் கட்சி உதவியுடன், இந்தியாவிலிருந்த ஆங்கிலேயப் படைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கு பிரதான மூளையாக ராஷ் இருந்தார்.

ஆனால், ரகசிய ஒற்றர்கள் உதவியுடன் கதர் புரட்சியை கண்டுகொண்ட ஆங்கிலேய அரசு, புரட்சிக்கு முன்னதாகவே கடும் நடவடிக்கை எடுத்து, ஊடுருவலை நசுக்கியது. நாடு முழுவதும் புரட்சியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கடல் கடந்தும் அதன் தாக்கம் இருந்தது. சில இடங்களில் புரட்சியாளர்களின் கலகம் நடந்தாலும்,   ஆங்கிலேய அரசு பல இடங்களில் கொடூரமான நடவடிக்கைகளால் புரட்சியை அழித்தொழித்தது. இதில் ஈடுபட்ட பல முன்னணி தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பினர். ராஷ் பிஹாரி போஸும் ஜப்பானுக்கு தப்பினார்.

ஜப்பான் சென்ற ராஷ் அங்கு அரசியல் அடைக்கலம் பெற்றார். ஜப்பானிலிருந்து ராஷை நாடு கடத்துமாறு பிரிட்டன் ஜப்பான் அரசை நிர்பந்தித்து வந்தது. எனவே வெவ்வேறு பெயர்களில் அங்கு அவர் அலைந்து திரிந்தார். அப்போது , ஜப்பானில்  செயல்பட்ட ஆசிய வலதுசாரி (பான் ஆசியன்தீவிரவாதிகளுடன் ராஷுக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர்களுள் ஒருவரான சொமோ ஐசோ என்பவரது மகளைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு (1923)  ஜப்பானின் அதிகாரப்பூர்வ குடிமகனாக மாறிய ராஷ், பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் பணிபுரிந்து வந்தார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டபோதும், ராஷ் பிஹாரி போசின் புரட்சி எண்ணம் கனன்றுகொண்டே இருந்தது. ஜப்பானில் இருந்த மற்றொரு விடுதலைவீரரான ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயருடன் இணைந்துஜப்பான் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். அவர்களை வசீகரித்துஇந்திய விடுதலை  வீரர்களுக்கு  ஜப்பானின்  கடல் கடந்த ஆதரவு கிடைக்கச் செய்தார்.  

1942 , மார்ச், 29  - 30  ல், டோக்கியோவில் ஒரு மாநாட்டை  நடத்திய ராஷ், இந்தியா விடுதலைப் போராட்டத்திற்கு கடல் கடந்த ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இந்திய சுதந்திர லீக் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

1942, ஜூன், 22  ல் பாங்காக்கில் இரண்டாவது மாநாட்டை ராஷ் கூட்டினார். அதில்தான், காங்கிரசிலிருந்து வெளியேறி புரட்சி வீரராக உருவான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு, ராஷ் பிஹாரி போஸ் அறைகூவல் விடுத்தார். ''போரினால் மட்டுமே இந்தியாவுக்கு விடுதலை சாத்தியமாகும்அதற்கான போர்ப்படைக்கு தலைமை தாங்க நேதாஜி முன்வர வேண்டும்'' என்று வரவேற்று,  அம்மாநாட்டில்  தீர்மானம் நிறைவேற்றினார் ராஷ்!

இந்திய போர்க்கைதிகள் பல்லாயிரம் பேர் பர்மாவிலும் மலேயாவிலும் ஜப்பான் படையால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஜப்பான் ராணுவ அதிகாரிகளை அணுகிய ராஷ், அவர்களை தனது முயற்சியால் கவர்ந்து, இந்திய வீரர்களை விடுவிக்கச் செய்தார். அந்த வீரர்களைக் கொண்டு, இந்திய தேசிய ராணுவத்தை (INA) மோகன் சிங் என்ற தளபதியின் தலைமையில் 1942, செப். 1  ல்  அமைத்தார் ராஷ். இதுவே முதல் இந்திய தேசிய ராணுவம் என்று அழைக்கப்படுகிறது.

ஜப்பான் ராணுவ உதவியுடன், இந்திய சுதந்திர லீகின் படையாக அது அமைந்தது. ஆனால், ராஷுடன் செய்துகொண்ட  உடன்பாட்டின்படி ஜப்பான் படை நடந்துகொள்ளவில்லை. தங்களை மீறி INA செயல்படுவதாகக் கருதிய அவர்கள் அதனைக் கலைக்கச் செய்தனர். ஆயினும், INA வீரர்கள் கட்டுக் குலையாமல் இருந்தனர்.

இந்திய அரசின் வீட்டு சிறைவாசத்திலிருந்து தப்பிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானுக்கு சென்றபோது, அவரை வரவேற்று, இந்திய சுதந்திர லீகின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு கூறினார் ராஷ். ‘ஆசாத் (இதன் பொருள் சுதந்திரம்என்ற கொடியையும் அவர் அறிமுகம் செய்தார்.

அதன்பிறகு ஜப்பான் அதிகாரிகளுடன் பேசிய நேதாஜி, முடக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தை மீண்டும் கட்டமைத்தார். ராஷ், மோகன் சிங் உள்ளிட்டவர்கள் அதன் துடிப்புள்ள இயக்கத்திற்கு காரணமாயினர். இரண்டாம் உலகப்போர் நடந்தபோது, இந்தியா மீது போர் தொடுத்த INA வின் சாகசங்கள் தனி வீர காவியமாக எழுதப்பட வேண்டியவை. துரதிர்ஷ்ட வசமாக, உலகப்போரில் ஜப்பான் வீழ்ச்சி அடையவே, நமது விடுதலைக் கனவு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு தள்ளிப்போனதுஇப்போரில் நேதாஜி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறதுராஷ் பிஹாரி போஸும்  21.01.1945 ல் போரில் கொல்லப்பட்டார்.

ஜப்பான் அரசு ராஷ் பிஹாரி போஸின் வீரத்தை மெச்சிஅவருக்கு மறைவுக்குப் பிந்தைய 'ORDER OF RISING SUNஎன்ற உயர் விருதை வழங்கி  கௌரவித்தது.

நாட்டு விடுதலைக்குப் போராடிய ஒரே காரணத்திற்காக, சொந்த நாட்டைவிட்டு நீங்க வேண்டிய நிலை ஏற்பட்டபோதும்சென்ற இடத்திலும் தாயக  விடுதலைக்காக பாடுபட்ட மாபெரும் வீரர்   ராஷ் பிஹாரி போஸ்.

''டில்லி சலோ'' என்ற முழக்கத்துடன் ஆசாத் ஹிந்த் அரசு அமைத்து போர்ப்படை நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடியும் ராஷ் பிஹாரி போஸ் தான்.
இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக அரும்பெரும் தியாகமும், அதிதீரச் செயல்களும் புரிந்த ராஷை மறந்ததால் தானோ, இன்று நமது நாடு சுயநல அரசியல்வாதிகளின் கரங்களில் சிக்கி சின்னாபின்னமாகிறது?

-குழலேந்தி

காண்க:

Rash Bihari Bose (I Love India)
Scholar without border 
RASH Biography
An Ultimate Fighter
A Revolutionary That Never Was
A Revolutionary  Leader 
INDIAN NATIONAL ARMY
குதிராம் போஸ்
நேதாஜி

1 கருத்து:

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

அருமையானப் பதிவு. நன்றி!

கருத்துரையிடுக