நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

27.1.11

ஈசன் ஆணையைக் காக்க இன்பம் துறந்தவர்


திருநீலகண்ட நாயனார்
திருநட்சத்திரம்:
தை - 13 - விசாகம்
(ஜன. 27)

திருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். சிதம்பரத்தில்  மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த பெயரை உச்சரித்து சிவனை வணங்கிக் கொண்டிருப்பார். இதனால், அவருக்கு இப்பெயரே அமைந்துவிட்டது. இவரும், மனைவி ரத்னாசலையும் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி "என்னை இனி தொடக்கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை!' என்றாள். சிவன் மீது கொண்ட பக்தியால், அவர் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டார் நீலகண்டர். மனைவியைத் தொடாமலேயே பல்லாண்டுகள் வாழ்ந்தார்.

இவரது பக்தியை உலகறியச் செய்வதற்காக சிவன், ஒரு அடியவர் வடிவில் நீலகண்டரிடம் சென்று ஒரு திருவோடைக் கொடுத்தார். "இது விலைமதிப்பற்றது. நான் காசி சென்று திரும்பி வந்து வாங்கிக் கொள்கிறேன்!' என்று சொல்லிச் சென்றார். சிறிது நாள் கழித்து வந்து திருவோட்டை கேட்டார். நீலகண்டர் ஓடு இருந்த இடத்தில் பார்த்தபோது, காணவில்லை. வருந்திய பக்தர் தன்னை மன்னிக்கும்படி கேட்டும் சிவன் ஒப்புக்கொள்ளவில்லை.

மனைவியுடன் தீர்த்தக்குளத்தில் மூழ்கி "திருவோடு தொலைந்துவிட்டது!' என தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் சத்தியம் செய்து தரும்படி கேட்டார். மனைவியுடனான பிரச்னையை சொல்ல முடியாதவர், ஒரு குச்சியின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, மறு முனையை மனைவியைப் பிடிக்கச் சொல்லி குளத்தில் இறங்குவதாகச் சொன்னார். சபையினர் ஒப்புக்கொள்ளவே அவ்வாறு செய்தார்.

அப்போது, அடியாராக வந்த சிவன், ரிஷபத்தின் அம்பிகையுடன் காட்சி தந்தார். திருநீலகண்டர் தம்பதிக்கு முதுமை நீக்கி, இளமையைக் கொடுத்தார். நீலகண்டரை நாயன்மார்களில் ஒருவராக பதவி கொடுத்தார். இதனால், சுவாமிக்கும் இளமையாக்கினார் என்ற பெயர் ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடுத்து, இவரே முதல் நாயனாராக போற்றப்படுகிறார்.

இறைவன் மீதான பக்தியின் உச்சத்திற்கு நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஈசன் மீது ஆணையிட்டதற்காக இல்லற வாழ்வையே தியாகம் செய்த திருநீலகண்டர், பக்தி வைராக்கியத்தின் ஒரு வடிவம். அவரது புகழை உலகறியச் செய்ய ஈசன் நடத்திய திருவிளையாடல், பக்தன் மீதான இறைவனின் கருணையை வெளிப்படுத்துகிறது. இன்றும் ஆண்டுதோறும் திருநீலகண்டர் குருபூஜையின் போது, சிதம்பரம்  இளமையாக்கினார் கோயிலில் உள்ள குளத்தில் தம்பதியராக மூழ்கி எழும் வைபவம் நடத்தப்படுகிறது.


காண்க:
திருநீலகண்டர் (விக்கி)
திருத்தொண்டர் புராணம்
திருநீலகண்ட நாயனார் புராணம் (தமிழ்க் களஞ்சியம்)
திருநீலகண்டர் புராணம்- ஆறுமுக நாவலர்
THIRUNEELAKANDA NAYANAR
கல்லிலே கலைவண்ணம் (தாராசுரம்)
தேவாரச் சொற்பொழிவு
திருநீலகண்டர் (திண்ணை)
திருநீலகண்ட நாயனார் புராணம் (ஹோலி இந்தியா)
THIRUNEELAKANDAR (HINDU SOCIETY)
திருநீலகண்டர் தலம் -சிதம்பரம்
இளமையாக்கினார் கோயில் (தினமலர்)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக