தொண்டரடிப்பொடி ஆழ்வார்
திருநட்சத்திரம்:
மார்கழி - 17 - கேட்டை
(ஜன. 1)
தொண்டரடிப் பொடியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பிரபந்தத்தில் திருப்பாணாழ்வாரை அடுத்து குறைந்த எண்ணிக்கைப் பாசுரங்களில் இடம் பெற்றிருப்பவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் முதல் ஆயிரத்தில் திருமாலை 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி 11-ம் பாடியுள்ளார். மிகவும் உருக்கமான நேரடியான எளிய தமிழில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாசுரங்கள் தொண்டரடிப் பொடியுடையவை.
இவர் பாடிய தலங்களில் இவ்வுலகில் உள்ளவை திருவரங்கமும் வேங்கடமும்தான். மற்ற தலம் பரமபதம். தொண்டரடிப் பொடி என்பது ஒரு வகையான புனைபெயர். வைணவ மரபில் பகவானின் அடியார்களின் திருவடிகளின் தூசுகூட புனிதமானது என்கிற நம்பிக்கையின் அதீத வடிவமாக தொண்டரடிப்பொடி என வைத்துக் கொண்டார்.
இவரது இயற்பெயர் விப்ர நாராயணன். சோழ நாட்டில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் புள்ளம்பூதங்குடிக்கருகில் உள்ள மண்டங்குடி என்னும் ஊரில் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில். கிருஷ்ணபட்சம் சதுர்தசியில். பூர்வசிக வைணவ அந்தணர் குலத்தில் பிறந்தவர். திருவரங்கத்துக்கு வந்து அந்தப் பெருமானால் வசீகரிக்கப்பட்டு அரங்கத்திலேயே அவருக்கு மாலை கட்டிக்கொண்டு வாழத் தீர்மானித்தார். ஓர் அழகிய நந்தவனம் அமைத்துப் பல மலர்களைப் பயிரிட்டு மாலை தொடுத்து திருமாலுக்கு மாலாகாரராக விளங்கினார்.
கணிகை ஒருவர் மீது பித்தாகத் திரிந்த இவரை அரங்கனே திருவிளையாடல் நிகழ்த்தி திருத்தியதாக கதையுண்டு. ''இந்திர பதவியை விட, அரங்கன் பெயரைச் சொல்லும் சுவை வேறெதிலும் இல்லை' என்பது இவரது முடிவு. வைணவ மதத்தின் வைராக்கிய குணத்திற்கு உதாரண புருஷராக விளங்கும் தொண்டரடிப் பொடி ஆழ்வார், குறைந்த பாடல்களே பாடியிருப்பினும், அத்தனையும் தீந்தமிழ் வளர்க்கும் மந்திரங்கள்.
காண்க:
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக