நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

6.12.17

நாம் கண்ட தெய்வம்


-இசைக்கவி ரமணன்


காஞ்சி பரமாச்சாரியார்


காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018)
அறமொன்றே தன்கடனாய் அன்பொன்றே தன்னியல்பாய்
பிறர்நலமே தினம்விழையும் பெரும்பண்பே தன்மூச்சாய்
இறையொன்றே தன்நினைப்பாய் இகத்தினிலே பரவிளக்காய்
கறையகற்றிக் கலமேற்றிக் கரையேற்றும் அருட்கரமாய்

நம்மிடையே தோன்றி நம்மோடே வாழ்ந்து
நாளெல்லாம் இரவெல்லாம் நம்நலமே நாடி
இம்மையில் மறுமையை இறக்கி நமைக்காக்க
எங்கிருந்தோ இங்குற்ற ஏழைப் பங்காளனை

காஞ்சியில் சுடர்வீசும் கயிலைத் திருவிளக்கை
காலால் நடந்துவந்த கண்கண்ட கடவுளை
தீஞ்சுவைத் தமிழால் சித்தத்தில் வைத்தேற்றி
திசைவியக்கும் பெருமுனியின் திறம்பேச வந்துநின்றேன்!


***

உலகம் நலமாய் வாழ வேண்டும் என்றால், பாரதம் வாழ வேண்டும். பாரதம் வாழ வேண்டும் என்றால் அதன் தர்மமும் அது சார்ந்த மரபுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். தர்மத்திற்கு வேதமே வேர். அந்த வேரில் நீரூற்றி, பணமே பெரிதென அலையும் உலகில் எளிமையே ஏற்றமென வாழ்ந்துகாட்டி வழிசொல்ல வந்த அவதாரமூர்த்திதான் நாம் ‘மஹா பெரியவா’ என்று அன்புடன் அழைக்கும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

விழுப்புரம் அருகிலுள்ள நவாப்தோப்புக்கு அருகில் 1894 ஆம் ஆண்டு திருமதி மகாலட்சுமி- திரு. சுப்ரமண்ய சாஸ்திரிகள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் மகான். மூத்த மகனுக்கு கணபதி என்று பெயரிட்டிருந்ததால், இவருக்கு சுவாமிநாதன் என்று பெயர்சூட்டினர் பெற்றோர். அவர்களுடைய குலதெய்வத்தின் பெயரை ஏற்ற அந்தப் பிள்ளை மனிதகுலத்துக்கே தெய்வமாக விளங்கப்போகிறது என்பதை அப்போது யாரேனும் அறிந்திருப்பார்களோ?

அமெரிக்கன் மிஷன் பள்ளியில் (திண்டிவனம்) படித்தார். கல்வியில் மிகச் சிறந்து விளங்கினார். அனைத்துப் பாடங்களிலும் முதன்மையாக நின்றார். பரிசுகளை அள்ளிக்கொண்டு சென்றார். ஏன், பைபிள் தேர்விலும் முதல்பரிசைத் தட்டிச்சென்றார். 12 வயதில் பள்ளியில் மாணவர்களே ஷேக்ஸ்பியரின் நாடகமொன்றை மேடையேறி நடித்தார்கள். அதில் இளவரசராக மிகச் சிறப்பாக நடித்து அதிலும் பரிசை வென்றார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 66-ஆவது பீடாதிபதியாய் இருந்தவர், சுவாமிநாதனின் வயதுக்கு மீறிய அறிவைக் கண்டு வியந்து அவரை 67 ஆவது பீடாதிபதியாக்க விரும்பினார். ஆனால், அவர் சித்தியடைந்தார், அவரைத் தொடர்ந்த ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஏழே நாட்கள் பீடத்தை அலங்கரித்து, திடீரென சித்தியடைந்தார். இவர் சுவாமிநாதனின் ஒன்றுவிட்ட சகோதரர். ஆறுதல் சொல்லச் சென்ற வேளையில், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் அடுத்த பீடாதிபதி சுவாமிநாதன் என்று தீர்மானமாகிறது! இது இறைவனின் சித்தமன்றோ!

1907 ஆம் ஆண்டு, பிப்ரவரி 13 ஆம் நாள், சுவாமிநாதன் காஞ்சி மடத்தின் 68 ஆவது பீடாதிபதியாகி, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்னும் திருநாமம் பெற்றார். அன்றிலிருந்து 87 ஆண்டுகள் இந்த நாடெங்கும் காலார நடந்து அவர் நம்முடைய தர்மம் தழைக்கவும் நாம் தர்மத்தை விட்டுவிடாமல் இருக்கவும் வேண்டிச்செய்த தொண்டை ஒரு சிறிய கட்டுரையில் சொல்வதற்கு வழியே இல்லை.