நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

16.6.11

நாடகக் கலைஞர்களுக்கு வழிகாட்டி



விஸ்வநாத தாஸ் 
(பிறப்பு: ஜூன் 16) 


...நாடக மேதை விசுவநாததாஸின் அரசியல் தீவிரம், அவருடைய சொந்த வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. முருகனாக வந்தாலும், அரிச்சந்திரனாக வந்தாலும், தாஸ் சுதந்திரப் போராட்டப் பாடல்களைப் பாடிச் சுதந்திர உணர்ச்சியூட்டுவதை ஒரு கடமையாகவே செய்து கொண்டிருந்தார். வெள்ளை நிர்வாகக் காவல்துறை அவரைக் கைது செய்யக் காத்துக் கொண்டிருக்கும், அவர் மேடைக்கு வந்ததுமே மக்கள், ‘வெள்ளை கொக்கு பாடுங்க’ என்பார்கள். பாடிய உடனே தான் கைது செய்யப்படுவோம் என்பதை தாஸ் அறிவார் என்றாலும் பாடுவார். உடனே கைது செய்யப்படுவார். சிறைக்குப் போவார். ஒரு நாள் நாடகம். ஆறு மாதம் அல்லது ஓராண்டு சிறை. இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்த தாஸ், தன் குடும்பச் சொத்தும் அழிந்தும், குடும்பம் வறுமைப்பட்டுக் கடன்காரராக தாஸ் மாறிக் கொண்டிருப்பதை அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது. என்றாலும், லட்சியம் தேசத்தையே முன்நிறுத்தியது. அக்காலத்திய தலைவர்கள் மேற்கொண்ட சுதந்திரப் பிரசாரத்துக்குச் சற்றும் குறையாத அளவுக்கு தாஸும், சுதந்திரக் கிளர்ச்சி செய்திருக்கிறார்.

தாஸை வைத்து நாடகம் நடத்தும் நாடக கான்ட்ராக்ட்காரர்களை போலீஸ் மிரட்டியதன் காரணமாக, அவருக்கு நாடகங்கள் குறைந்தன. அதோடு ‘நாவிதர்’ சமுதாயத்தைச் சேர்ந்த தாஸோடு நடிக்க மாட்டோம் என்று நடிகைகள் பின்வாங்கினார்கள். இது தாஸை வெகுவாகப் பாதித்தது. மனதளவில் நொந்துபோனார். ஒவ்வொரு நாடகத்திலும், மறக்காமல்,“தாழ்த்தப்பட்ட சோதரைத் தாங்குவோர் உண்டோ, மண்ணில் ஏங்குவோர் உண்டோ” என்ற பாடலைப் பாடிக் கொண்டுதான் இருந்தார். நடிகைகளில், கே.பி.ஜானகி அத்தடையை மீறி அவருடன் நடிக்க முன்வந்தார். பிறகு முத்துலட்சுமி என்ற பிராமண நடிகை. பிறகு மற்றவர்களும் முன் வந்தார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டன் குதித்தது. பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களை கலந்து கொள்ளாமலேயே இந்தியாவை யுத்தத்தில் ஈடுபடச் செய்த ஜனநாயக மீறல் போக்கை விமர்சித்த காங்கிரஸ் பேரியக்கம், யுத்த நடவடிக்கையில் இந்தியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற முடிவை எடுத்தது. சென்னை ஆளுநர் எர்ஸ்கின், தாஸோடு தொடர்பு கொண்டார். யுத்தத்தை ஆதரித்து மேடையில் பாடினால், தாஸுக்கு ஆயுள் முழுவதும் ஆயிரம் ரூபாய் அரசு தரும் என்று பேரம் பேசினார். இது லட்சியத்துக்கும் மானத்துக்கும் இடப்பட்ட சவால் என்பதை உணர முடியாதவரா தாஸ்? கவர்னர் எர்ஸ்கினின் வேண்டுகோளைப் புறக்கணித்தார், விசுவநாததாஸ்.

அன்றைய மேயர் வாசுதேவ் (நீதிக் கட்சி), விசுவநாத தாஸைப் பார்க்க வந்தார். கடன் சுமையால் தாஸின் வீடு ஏலத்துக்கு வர இருந்தது. எல்லாவற்றையும் இழந்த தாஸின் கடைசிச் சொத்து அந்தப் பரம்பரை வீடு ஒன்றுதான். தாஸின் குடும்பம் அங்கேதான் வாழ்ந்தது. இதைத் தெரிந்து கொண்ட மேயர் வாசுதேவ், தாஸைச் சந்தித்தார். பணம் தருவதாகவும், வீட்டையும் மீட்டுத் தருவதாகவும், இழந்த சொத்துக்கள் அனைத்தையும் மீட்டுத் தருவதாகவும், அதற்குரிய பிரதிபலனாக, தாஸ் காங்கிரஸ் பேரியக்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

‘என்னால் புல்லைத் தின்ன முடியாது’ என்றார் தாஸ். 1940 டிசம்பர் 31-ம் நாள் இரவு, ‘வள்ளித் திருமணம்’ நாடகம், சாலக் கொட்டகை எனப்பட்ட ராயல் தியேட்டரில் நிகழ இருந்தது. ஒரு வார நாடக வருவாயில் கடனை ஓரளவு அடைத்து விடலாம் என்று நினைத்திருந்தார் தாஸ். முதல் மூன்று நாட்கள் மேடை ஏறும் உடல் நிலையில் அவர் இல்லை. அன்று இரவு மேடைக்கு முருகன் வேஷத்தில் வந்தார். முதல் காட்சி. முருகன், மயிலாசனத்தில் அமர்ந்து பாடத் தொடங்கினார்.

‘மாயா உலகம்-இம் மண் மீதே’ என்ற பல்லவி. தொடர்ந்து பாட முடியாமல் அவர் தலை சாய்ந்தது.  விசுவநாததாஸ் முருகன் வேஷத்தைக் கலைக்காமலேயே இறந்துபோனார். அதே வேஷத்தோடே அந்தக் கலைஞர்.  தாஸ் வாழ்ந்தது 54 ஆண்டுகள் மட்டுமே. இதில் 29 முறை சிறைக்குச் சென்றார் அந்த வீரத் தியாகி. தேசத்தைத் தவிர, விடுதலையைத் தவிர வேறு எதையும் நினைக்காத அந்தக் கலைஞனை, பின்னால் சுதந்திர இந்தியப் பதவிக்கு வந்தவர்கள் மறந்தே போனார்கள். 
 .
செய்யும் தொழில் எதுவாயினும் அதில் தேச சேவை செய்ய முடியும் என்று நிரூபித்த நாடக கலைஞர் விஸ்வநாத தாஸ். அவரை நெஞ்சில்  இருத்திப் போற்றுவதே, தடம்புரளும்  இந்நாளைய கலையுலகத்தை மீட்சிபெற வைக்கும்.
 
 
 
காண்க:
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக