பெரியசாமி தூரன்
(1908 செப். 26 - 1987, ஜன. 20) |
தூரன் என்ற பெயர் சொன்னாலே அது “கலைக்களஞ்சியம்” என்று சொல்லப்பட்ட “தமிழ் அபிதான சிந்தாமணி”யைத்தான் (தமிழ் என்ஸைக்ளோபீடியா) குறிக்கும். ஏனென்றால், கடுமையாக உழைத்து அதைப் பத்து தொகுதிகளாக தமிழுலகிற்கு அளித்த கொடை வள்ளல் அல்லவா அவர்? குழந்தை இலக்கியத்திற்குப் பங்காற்றியதன் மூலமும் நம்மால் நினைவுகூறத் தக்கவர் தூரன்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி என்ற ஊரில், பழனிவேலப்ப கவுண்டர் – பாவாத்தாள் தம்பதியருக்கு, 1908 செப்டம்பர் 26–ல் பிறந்த தூரன், சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர், ஆசிரியர் பயிற்சியும் (L.T. – Licentiate in Teaching) பெற்றார். தன்னுடைய இளைய பருவத்தில், தேசிய-மஹாகவி பாரதியான் பால் ஈர்க்கப்பட்டு, மஹாத்மா காந்தியினாலும் ஊக்கம் கொண்டார். சிறந்த தேசபக்தராக இருந்த காரணத்தால், ஆங்கிலேய அரசாங்கம் விடுதலை வீரர் பகத் சிங்கைத் தூக்கிலிட்டதைக் கண்டித்து, கல்லூரியில் இறுதியாண்டுத் தேர்வைப் புறக்கணித்தார்.
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அறிவியக்கத்திற்கு இவர் ஆற்றியுள்ள பங்கு ஒப்பிடலுக்கு அப்பாற்பட்டது. முக்கியமாக, ஐந்து கவிதை நூல்களும், ஏழு நாடக நூல்களும், ஐந்து கதைத் தொகுதிகளும், மூன்று கட்டுரைத் தொகுப்புகளும், ஆறு இசை நூல்களும், மூன்று மொழிபெயர்ப்பு நூல்களும், மற்றும் பல நூல்களும் படைத்து அளித்துள்ளார். உளவியல் துறையில் (Psychology) “குழந்தை உள்ளம்”, மரபணுவியல் துறையில் (Genetics) “பாரம்பரியம்”, கருத்தரித்தல் பற்றிய அறிவியல் துறையில் (Embryology) “கருவில் வளரும் குழந்தை” போன்ற அற்புத படைப்புகளும் வழங்கியுள்ளார் திரு தூரன். அவருடைய படைப்புகளில் இளந்தமிழன், மின்னல் பூ, தங்கச் சங்கிலி, பிள்ளை வரம், தேன் சிட்டு, பூவின் சிரிப்பு ஆகியவைக் குறிப்பிட்டுச் சொல்லும்படியானவை. பொன்னியின் தியாகம், அழகு மயக்கம் ஆகியவை அருமையாகப் படைக்கப்பட்ட நாடகங்கள். குழந்தைகளுக்காகப் பல பாடல்கள், மிருகங்கள் பற்றிய கதைகள், மற்றும் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.
பார்க்க:
பெ.தூரன் இயற்றிய கீர்த்தனைகள் (மின் நூல்)
திரு.தூரன் அவர்கள், நாட்டுபுறப் பாடல்களும், கர்னாடக இசைக் கீர்த்தனைகளும், ஸ்வரங்களும் இயற்றியுள்ளார். டி.கே.பட்டம்மாள், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், என்.சி.வசந்தகோகிலம், டி.வி.சங்கரநாராயணன், டைகர் வரதாச்சாரியார், முசிறி சுப்ரமணிய ஐயர், போன்ற இசையுலக ஜாம்பவான்கள், இவருடைய இசையறிவை மெச்சி, இவர் இயற்றிய பாடல்களுக்கு அடிமைகளாகவே இருந்து, தங்கள் கச்சேரிகளில் அவற்றைப் பாடாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம். ’சாரங்கா’ ராகத்தில் அமைந்த “ஞானநாதனே”, ‘பிருந்தாவன சாரங்கா’வில் அமைந்த “கலியுக வரதன்”, ‘மாண்ட்’ ராகத்தில் அமைந்த “முரளீதரா கோபாலா”, ‘சாவேரி’யில் அமைந்த “முருகா முருகா”, ‘காபி’யில் பாடிய “பழனி நின்ற”, ‘கீரவாணி’யில் அமைந்த “புண்ணியம் ஒரு கோடி”, ‘சுத்த சாவேரி’ ராகத்தில் அமைந்த “தாயே திரிபுரசுந்தரி” ஆகியவை இவர் இயற்றியுள்ள மயங்கவைக்கும் கீர்த்தனைகளில் சில.
பெ.தூரன் இயற்றிய “எங்கு நான் செல்வேன் ஐயா” என்ற துவிஜாவந்தி ராகக் கீர்த்தனை, பாம்பே ஜெஸ்ரீ குரலில் (பாடலைக் கேட்க மேலே உள்ள பெட்டியில் அழுத்தவும்)
பெரியசாமி தூரன் அவர்கள் செய்துள்ள மொழியாக்கங்களில், ஜாக் லண்டன் அவர்களின் “Call of the Wild” (கானகத்தின் குரல்), நாவோமி மிட்சின்ஸனின் “Judy and Lakshmi” (காதல் கடந்த நட்பு) ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லப்படுபவை. இவர், “பாரதி தமிழ்” மற்றும் “தாகூரின் ஐம்பெரும் கட்டுரைகள்” ஆகிய நூல்களுக்கு தொகுப்பாசிரியராக (Editor) இருந்து வெளியிட்டுள்ளார். மேலும் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்த சில கவிதைகள் மற்றும் நாடகங்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். மஹாகவி பாரதியாரின் பன்முகத் தோற்றத்தையும் ஆளுமையையும், அருமையான முறையில் அலசி ஆராய்ந்து, இவர் வெளிக் கொணர்ந்த பத்து தொகுதிகள், நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றியுள்ள தொண்டுகளில் மிகச்சிறந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
1948-லிருந்து 1978 வரை தலைமைத் தொகுப்பாசிரியர் பொறுப்பில் கடுமையாக ஓய்வின்றி உழைத்து பத்து தொகுதிகள் கொண்ட தமிழ்க் கலைக் களஞ்சியத்தை இவர் தயாரித்தது மிகச் சீரிய பணியாகும். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான ஒரு கலைக் களஞ்சியத்தையும் பத்து தொகுதிகளுடன் படைத்தார்.
டி.அவினாசிலிங்கம் செட்டியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது, செட்டியார் மனமுவந்து அளித்த முப்பது ரூபாய் மாதச் சம்பளத்தை அதிகம் என்று மறுத்து வெரும் பதினைந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு பணியாற்றினார். இந்திய அரசு இவருக்கு 1968-ல் பத்ம பூஷண் விருதளித்துக் கௌரவித்தது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 1970-ல் கலைமாமனி விருதும், 1972-ல் தமிழ் இசை சங்கம் இசைப்பேறறிஞர் பட்டமும், 1978-ல் எம்.எ.சி.அறக்கட்டளைகள் அண்ணாமலை செட்டியார் விருதும் அளித்து கௌரவித்தன. பாரதீய வித்யா பவனும், சாகித்ய அகாதமியும் இணைந்து தொண்டில் கனிந்த தூரன் என்ற பெயரில் அவரின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை அவருடைய நூற்றாண்டான சென்ற வருடத்தில் வெளியிட்டு கௌரவித்தன.
“தூரனும் அவருடைய குடும்பத்தாரும், திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பக்தர்களாவர். யோகியைப் போற்றி திரு.தூரன் அவர்கள் எழுதியுள்ள பாடல்கள் பல வித்வான்களால் பாடப் பெற்றுள்ளன. அப்பாடல்கள் புத்தகங்களாகவும் வந்துள்ளன. யோகி ராம்சுரத்குமார் அவர்கள் முன்னிலையில் தூரன் அவர்களிடமிருந்து பாடல்கள் மடை திறந்த வெள்ளம் போல் பெருகி வரும்” என்று பெங்களூரைச் சேர்ந்த துறவியும், சமூக சேவகருமான சாது ரங்கராஜன் நெகிழ்ந்து கூறுகிறார்.
அன்னார் 1987 , ஜனவரி 20 ல் மறைந்தார். இவரது நூற்றாண்டு விழா 2008 ல் கொண்டாடப்பட்டது.
- பி.ஆர்.ஹரன்
காண்க:
தேமதுர தமிழிசை தெருவெங்கும் ஒலித்திட...
பெரியசாமி தூரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக