நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

7.7.12

இனம் காக்க வந்த மீட்பர்

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்
(ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945)

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945),   அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர், பத்திரிகையாளர்,  தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் எனப் பல முகங்களை உடையவர்.  பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, 'பறையன்' என்ற திங்கள் இதழையும் நடத்தியவர் இவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்திருக்கிறார்.  தான் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக உழைத்த பெருந்தகை இவர்.

செங்கல்பட்டு  மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். அம் மாவட்டத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமை தாங்கமாட்டாமல் தஞ்சைக்குக் குடிபெயர்ந்தது அக் குடும்பம். பின்னர் கோவை படிக்க தேர்ந்த போது படித்த 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் உயர்சாதியினர்.  சாதிகள் மிகத் கடினமாக கவனமாகக் கடைபிடிக்கப்பட்டதால், சாதி இந்து மாணவர்களுடன் பழகுவதால் சாதி, குடும்பம், இருப்பிடம் ஆகியவை தெரிந்துவிட்டால் என்ன நடக்குமோ என்று அஞ்சி படித்து வந்தார். இதை அவரே தனது சுயசரிதையில் எழுதி இருக்கிறார்.

படிப்பு முடித்தவுடன் நீலகிரியில் 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் வணிகப் பணிமனையில் வேலையில் சேர்ந்தார். பிளாவட்ஸ்கி அம்மையார் தியோசாபிகல் சொசைட்டி மூலம் வறுமையாலே வாடுகிற மக்களுக்கு வழி காட்டுகிறேன் என்று சொல்லி மதமாற்றம் செய்தார்கள். ஆனால் இரட்டை மலை சீனிவாசன், அதற்கு ‘நான் இந்துவாகப் பிறந்து விட்டதால் இந்து மதத்திலிருந்து கொண்டே உரிமைக்காகப் போராட வேண்டி கோருவேன்' என்றார்.

1884 ம் ஆண்டு சென்னை அடையாறில் தியோசோடிகல் சொசைட்டியின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் வங்காள பாபுகளும், பம்பாய் பார்சிகளும், பிராமணர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, இலங்கை முதலான தேசங்களிலிருந்து கலந்து கொண்டனர். அப்போது அரசியல் இயக்கம் தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவின் பிரச்சினைகள் இரண்டு. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து உரிமைக்காகவும், பூரண சுதந்திரமடைய வேண்டும். இந்தியாவில் பிறந்து வளர்ந்து பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் செட்யூல்டு இனமக்கள், இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை எதிர்த்து விடுதலை அடைய வேண்டும். இந்த இரண்டு பிரச்னைகளில் இரட்டைமலை சீனிவாசன் சமுதாய விடுதலைக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

சீனிவாசன் 1980 ம் ஆண்டு சென்னையில் குடியேறினார். ஒரு வாரப் பத்திரிக்கையை உருவாக்கினார். அதற்குப்  'பறையன்'  என்று பெயர் வைத்தார்.

'பறையன்', 15 ரூபாய்  மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1893 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் நான்கு பக்கங்கள் கொண்ட மாதாந்திரப் பத்திரிகையாக இரண்டு அணாவாக விலையில் வெளிவந்தது. இரண்டு நாட்களில் 400 பிரதிகள் விற்கப்பட்டன. ஈராண்டுகளுக்கு பிறகு அச்சு எந்திரசாலை நிறுவப்பட்டது. மூன்று மாதத்திற்குப் பின் வாரந்திரப் பத்திரிகையாக 7 ஆண்டுகள் வெளிவந்தது. 1891-ல்  'பறையர் மகாஜன சபை'யை  இரட்டை மலை சீனிவாசன் தோற்றுவித்தார். பி. ஆறுமுகம் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1895 ஆம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி சென்னைக்கு வருகை தந்த கவர்னர் ஜெனரல் எல்ஜின் பிரபுவுக்கு மிகப் பெரிய பந்தலிட்டுப் பறையர் மகாஜன சபை வரவேற்றது.  1898 ஆம் ஆண்டு மகாராணி விக்டோரியா சக்ரவர்த்தினியின் 60ஆவது ஆளுகை விழாவின் போது வாழ்த்துக் கூறி அனுப்பிய செய்தியைப் பார்த்து அகம் மகிழ்ந்து 1898 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி எழுதியிருக்கிறார்.

அக்காலத்தில் பெரும்பாலும் ஜாதி இந்துகளும், பிராமணர்களும் ஆசிரியர்களாக இருந்தனர். இந்த உயர் ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் செட்யூல்டு மக்களுக்குப் பாடம் சொல்லித்தர முன்வரமாட்டார்கள். இதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்க வாய்ப்பில்லை.

1898 அக்டோபர் 21-ம் தேதி இக்கொடுமையைத் தெளிவாக எழுதி ஆங்கில அரசுக்குத் தெரிவித்தார். இதன் விளைவாகச் சென்னை முனிசிபாலிடி பள்ளிக்கூடம் கட்ட வேண்டி ஆங்கில அரசு உத்தரவு அளித்தது. அதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 65 ஆண்டுக்காலம் கவனிக்க ஆட்கள் இல்லாமல் 1893-ம் ஆண்டு கல்வி கற்பிக்க அரசு முன்வந்தது. பலன் தரவில்லை. கிராம அதிகாரி, வருவாய்த்துறை தாசில்தார், துணை ஆட்சியாளர் போன்றவர்கள் முட்டுகட்டை போட்டனர்.

1893ஆம் ஆண்டு 'பறையன்' பத்திரிகையில் இக்கொடுமையை பற்றி விளக்கமாக எழுதிய காரணத்தால் வருடா வருடம்  30 லட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவு செய்ய அரசினர் தீர்மானித்தனர். அரசாங்கப் பள்ளிகளை சரிவர பராமரிக்க முடியாமல் சில பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் கிறித்துவ மிஷனரி பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. ஆனால் கல்வி வளர்ச்சி என்ற பெயரில் மதமாற்றமும் செய்யப்பட்டது.

1904-ல் தென் ஆப்பிரிக்காவின் நேட்டாலில் தங்கியிருந்தபோது பீட்டரின் உதவியால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு காந்திக்கு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். 1923ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது ‘ரெவின்யூ இன்ஸ்பெக்டர்’ பதவி ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டும் என்று கோரினார்.

கிராமங்களில் படித்த, பணம் படைத்தவர்கள் படிக்காத அப்பாவி மக்கள் மீது தங்களது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களையே ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நியமனம் செய்வது என்பது உரிமைக்காகக் குரல் கொடுக்காதவர்களாகத் தென்படுகிறது. எனவே தனி வாக்குரிமையின்படி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை அரசுக்குத் தெரிவிக்க ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையே தேர்ந்தெடுப்பது நலம் என்று கருதினார்.

1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி 'ராவ்சாகிப்' பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஜுன் மாதம் 6-ம் தேதி திவான்பகதூர் பட்டமும் திராவிடமணி என்ற பட்டமும் அளிக்கப்பட்டன. அதே ஆண்டு நவம்பர் 12-ம் தேதி லண்டன் மாநகரில் முதல் வட்டமேஜை மாநாடு கூடியது. இதில் இரட்டைமலை சீனிவாசன், ஜெயகர், அம்பேத்கர், ஆகாகான், ஹென்றிகிட்னி, க்யூபார்ட்கார், பன்னீர்செல்வம், ராமசாமி முதலியார், பாத்ரோ, முகமது அலி ஜின்னா, பிக்கானீர் மகாராஜா, சீனிவாச சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். காந்தி சிறையில் இருந்ததால் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. இரண்டு வட்டமேஜை மாநாடுகள் முடிந்து 1932-ல் ஆகஸ்ட் 17-ல் Communal award வெளியிடப்பட்டது.

''செட்யூல்டு இன மக்கள் அரசியல் சுதந்திரம் கிடைப்பது பலன் தராது. தனி வாக்குரிமை மூலம் செட்யூல்டு இன வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும். செட்யூல்டு மக்கள் இந்துக்கள் பட்டியலில் அடங்காது. பண்டிகை நாட்களில் சாராயக் கடைகளை மூட வேண்டும். வேலை செய்தால் தானியங்களுக்குப் பதிலாகப் பணமாகக் கொடுக்க வேண்டும்'' என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்தார்.

1939 செப்டம்பர் 17-ம் தேதி சென்னை சிந்தாதிரிப் பேட்டை, நேப்பியர் பூங்காவில் செட்யூல்டு மக்களைக் கூட்டி இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

“நாங்கள் கணக்கிட முடியாத வருடங்களாகக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாகவும், சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் குறுக்கிட்டால் நாங்கள் சகிக்கமாட்டோம். இனி மேலும் நாங்கள் எவ்விதக் கொடுமையையும் ஏற்கமாட்டோம். எங்களுடைய கீழான நிலைமைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும், அன்புக்குணமுமே காரணமாகும்” என 1895 அக்டோபர் 7-ல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சூளுரைத்தார்.

இத்தகைய பெருமகனார் 1945 செப்டம்பர் 18, சென்னை, பெரியமேடு பகுதியில் உயிர்நீத்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் தற்போதைய உயர்வுக்கு முன்னோடியாக இருந்து செயல்பட்டவர் இரட்டைமலை சீனிவாசன். அவரது நினைவுகள் தீண்டாமையை ஒழிக்கும் வேகத்தை சமூக நீதியை விரும்புவோருக்கு என்றும் வழங்கிக் கொண்டிருக்கும்.

காண்க:

சம உரிமைக்கான முதல்குரல் 

தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக