நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

1.1.15

கோவில்கள்- அன்றும் இன்றும்

-ஜெகதீஸ்வரன் நடராஜன்

.
சிந்தனைக்களம்
.

அந்தக் காலத்தில் கோவில்கள்


கோயில், வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல. அதன்மூலமாக இசை, கலை, மருத்துவம், சிறுவணிகம் என்பவையும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருக்கின்றன. போக்கிடம் இல்லாதவர்களுக்கான இடமாகவும், மக்கள் கூடும் வெளியாகவும் ஒரு காலத்தில் கோயில்கள் இருந்திருக்கின்றன. காலத்தின் சாட்சியாய், கோடிக் கணக்கான மனிதர்களின் ஆசைகளை சமர்ப்பிக்கும் இடமாக இருந்துள்ளன கோயில்கள்.


ஓதுவார்களின் தேவாரப் பாடல்களும், நடன மங்கைகளின் நாட்டியங்களும், நாதஸ்வர, மேளதாளங்களின் சங்கம இசையும், படப்படக்கும் புறாக் கூட்டங்களும், காணக் காணத் திகட்டாத சிற்பக் கலைகளும், பண்டாரங்களின் ஞானப்பாடல்களும் நிறைந்திருக்க, எண்ணெய் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் தெரியும் மயக்கமான தோற்றமும், மனதை நிறைக்கும் மணி ஓசையும், சந்தன விபூதி மணமும், வீதியில் அசைந்துபோகும் தேரும் , திருவிழாவும், மக்களோடு மக்களாய் ஒன்றி இருந்தன.

ஒவ்வொரு கோவிலுக்கும் சொந்தமாக பல ஆயிரக் கணக்கான ஏக்கரில் நிலம் உண்டு, நேந்து விடுபவர்களால் மாடுகளும், ஆடுகளும், கோல்களும் நிரம்பி வழிய அதை விவசாயிகளும், ஆடு மாடு மேய்ப்பவர்களும் பார்த்துக் கொண்டார்கள். அந்தக் கால வாழ்க்கை முறையில் ஒரு சிறந்த கணக்கியல் வல்லுனராகக் கூட கோவில் இருந்துள்ளது.

மாடுகளை மேய்ப்பவனுக்கு அதற்கான நிலமும் கோவிலில் கொடுக்கப்பட்டது. அந்த மனிதன் கடவுளுக்கு நைவேத்யம் செய்ய வேண்டிய பாலை மட்டும் கொடுத்துவிட்டு, மாட்டையும், நிலத்தையும் அனுபவிக்கலாம். அவன் சரியாக பாலைக் கொடுக்காத பட்சத்தில் அந்த நிலமும், மாடுகளும் பறிக்கப்படும். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டும் தான். இப்படி ஏகப்பட்ட நுட்பமான கோட்பாடுகள் உண்டு.

ஓதுவார்கள், பண்டாரங்கள், நாட்டியக் கலைஞர்கள், சிற்பிகள், ஓவியர்கள், இசை மேதைகள், புலவர்கள், சுத்தம் செய்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள், விவசாயிகள், பூ வியாபாரிகள் என கோடி, கோடியான மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கியுள்ளன அந்தக் கால கோவில்கள். 

இங்கு வியாபாரிகளில் பூ வியாபாரிகள் என குறிப்பிட்டுச் சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் நம்முடைய பூஜை முறையே பூவினை கடவுள் மீது அர்ச்சித்து வணங்குவது தான்.

ஒட்டுமொத்தமாக சமூகம் முழுமைக்கும் பயன்பட்டுவந்த இந்தக் கோயில்களி்ன் இன்றைய நிலையைப் பற்றி அடுத்து காண்போம்.

இந்தக் காலத்தில் கோவில்கள்



பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அந்தக் கால கோயில்களைப் பற்றி பார்த்தோம். மேலே இருக்கும் இந்தப்படத்தைப் பார்த்தாலே இன்றைய கோயில்களின் நிலைமை பலருக்கும் புரியும். மிகப் பெரிய கோயில்களைப் பராமரிக்க இப்போது நம்மால் முடிவதில்லை. அதனால் நமக்கு ஏற்றவாறு கோயில்களை மாற்றிக் கொண்டோம்.

அந்த மாறுதல்களில் பழமையான விஷயங்கள் அனைத்தையுமே நாம் மறந்து விட்டோம். கடவுள் இருக்கும் இடமாக மட்டும் அந்தக் காலத்தில் கோயில்கள் உருவாக்கப்படவில்லை. மக்களுக்கு வாழ்வாதாரம் தரவும், பொழுது போக்கிற்கிற்காவும், நம்பிக்கை ஊட்டுவதற்காகவும் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

 பழங்காலக் கோயில்களைப் பராமரிக்க இயலாமல் போனாலும், இந்த அடிப்படை விஷயங்களையாவது நாம் பாதுகாத்து இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் நாம் தவறவிட்டுவிட்டோம்.


ஒரு சிறிய அறை. அந்த அறையில் ஏதேனும் ஒரு கடவுள் உருவம். இது தான் இன்றைய நவீனக் கோயில்கள். அதுவும் அந்தக் கோயில்களுக்கென தனியான நிலம் ஒதுக்கி கட்டுவதில்லை. சாலைகளில் மக்கள் நடப்பதற்கென உள்ள பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படுகின்றது. மக்களுக்கு உதவுவதற்காக கட்டப்பட்டுகின்ற கோயில்களின் அடிப்படையே இங்கு சிதறிப் போய்க் காணப்படுகிறது.

பல ஆயிரம் மக்களுக்கு பயன்படுகின்ற இடமாக இருந்த கோயில்கள்,  இன்று மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கின்றன. அடிப்படையான விஷயமே பாதிக்கப்பட்டுவிட்டதால், கோயில்களில் வாழ்ந்த கலைகளும், அதனை நம்பி வந்த கலைஞர்களும் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

பழம்பெருமை வாய்ந்த கோயில்களேனும்  இன்றும் இயங்கிக் கொண்டு தானே இருக்கின்றன என்று எண்ணுகிறீர்களா?. அடுத்த பகுதி,  அந்தக் கோயில்களில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிதான்.

இன்றைய கோவில்களின் நிலைமை


இன்று பெரிய கோயில்கள் ஒரு வணிக நிறுவனம். வாசலில் செருப்பை அவிழ்த்துப் போடுவதில் துவங்கி, ஒவ்வொரு பத்தடிக்கும் ஏதோ காரணம் சொல்லிப் பணம் கறக்கும் வித்தையை ஒரு கூட்டமே தெரிந்து வைத்திருக்கிறது. அர்ச்சனை, அபிஷேகம் எனத் தொடங்கி, மாதம் முழுவதும் செய்ய, வருடம் முழுதும் செய்ய என பணம் பிடுங்குவதில் குறியாக இருக்கிறது.

மக்களிடமிருந்து காசுகளை வாங்கிக் கொண்டு அவர்களையே வேலி வைத்துக்கொண்டு வரிசைப்படுத்துன்றது அறநிலையத் துறை. விழாக் காலங்களில் எறும்புகளைப் போல வரிசையாக கோவில் வாசலிலிருந்து கருவறை வரையும், பின்பு கருவறையிலிருந்து வாசல் வரையிலும் வேலியில் நகர்கிறார்கள் மக்கள். தரிசனத்திற்கு முதல், இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள், சிபாரிக் கடிதங்கள், கையூட்டு, பல்லிளிப்பு என நடைமுறைத் தந்திரங்களின் கூடாரமாகி விட்டது கோவில்.


இப்போது பிரார்த்தனைகள் என்பவை வெறும் சடங்கு அவ்வளவு தான். எனவே தெய்வத்தைத் தவிர அங்கு கவனிப்பதற்கு ஏதுமில்லாமல் போய்விட்டது. கோயிலுக்குச் செல்லும் ஒரு சதவீத மக்கள் கூட சிற்பங்களையோ, ஓவியங்களையோ, பிரகாரச் சுவர் முழுக்க செதுக்கியிருக்கும் கல்வெட்டுகளையோ பார்ப்பதேயில்லை. சில இடங்களில் ஒழுங்கு வேலி அமைக்க நல்ல கலைப் படைப்புகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற சில இடங்களிலோ பாதுகாப்பு என்று பெயரில் இரும்புச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றன.

பலரும் பார்க்க வேண்டுமென எண்ணி எண்ணிச் செதுக்கிய அந்தச் சிற்பிக்கும், உயிர் கொடுத்த வரைந்த ஓவியனுக்கும் செய்யும் நன்றி இது தானோ? இது போதாதென சில வள்ளல்கள் செய்யும் கொடுமை அளவிடமுடியாது. எல்லா கோயில்களிலும் எரியும் டியூப் லைட்டிலிருந்து மின்சார மணி வரை உபயதாரர்களின் பெயர்கள் முழு முகவரியோடு, முடிந்தால் கைப்பேசி எண்களோடும் காணப்படுகின்றன. சில கோவில்களில் கருவறையில் இருக்கும் கடவுளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் உபயதாரர்களின் பெயர்களே இருக்கின்றன.

கலையும், மனிதர்களும் வாழ்ந்த இடமாக இருந்த கோயில்கள், இன்று பணம் பறிக்கும் சுயநலமிகளாலும்,  எதைக் கொடுத்தாவது தங்கள் பிராத்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் இரக்கமற்றவர்களாலும் நிரம்பிக் கிடக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் கோயிலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிக் கொண்டிருக்கின்றானோ எனத் தோன்றுகிறது.

காண்க:  இந்து மதம் ஒரு பொக்கிஷம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக