நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

19.12.14

தே.சி.க. மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்



 மாநில  துணைத்தலைவர்  .திரு.சா.சிவானந்தம்,அகில பாரத அமைப்பாளர் திரு. பேரா.சதானந்த சப்ரே, மாநிலத் தலைவர்  திரு ம.வே.பசுபதி, மாநில துணைத் தலைவர் திரு.தஞ்சை வெ.கோபாலன்   ஆகியோர் அமர்ந்திருக்கும் காட்சி .

தமிழத்தில் தேசிய, தெய்வீக சிந்தனைகளைப் பரப்பும் பணியில் சங்க குடும்ப அமைப்புகளில் ஒன்றான 'தேசிய சிந்தனை கழகம்' செயல்பட்டு வருகிறது. தேசிய சிந்தனைக்  கழகத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் கடந்த கார்த்திகை மாதம் 28-ம் தேதி (2014, டிசம்பர் 14) ஞாயிற்றுக் கிழமை அன்று  சென்னை, சேத்துப்பட்டு, மகரிஷி வித்யாமந்திர் பள்ளி அரங்கில் நடைபெற்றது.


காலை 10.00 மணியளவில் துவங்கிய நிகழ்ச்சிக்கு சென்னையைக் சேர்ந்த தமிழறிஞர் பேரா. ம.வே.பசுபதி தலைமை வகித்தார். எழுத்தாளர் தஞ்சை வே.கோபாலன், ஈரோடு செங்குந்தர் கல்வி அறக்கட்டளையின்   செயலாளர்  சா.சிவானந்தன்  ஆகியோர்   முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக 'பிரக்ஞா பிரவாஹ்'   அமைப்பின் அகில பாரத அமைப்பாளர் முனைவர்  பேரா. சதானந்த சப்ரே அவர்கள் கலந்துகொண்டார்.

 திருப்பனந்தாள் கல்லூரி  முன்னாள் முதல்வரும், டாக்டர் உ.வே.சா. நூலகத்தின் முன்னாள் நிர்வாகியும்  மூத்த தமிழறிஞருமான பேரா. ம.வே.பசுபதி அவர்கள் தனது தலைமையுரையில் ,  "தமிழகம் என்றும் தேசியத்தின் வலுவான வேராக இருந்துள்ளது. இதனை மேலும் வலுப்படுத்த மாதம் ஒருமுறை சந்திப்புகளை நடத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறிஞர்களை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார் .

மேலும் அவர் பேசுகையில், "இந்த ஆண்டு தமிழின் மிகச் சிறந்த அறிஞரும், புலவருமான திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் 200-வது பிறந்த ஆண்டான 2014-15ஐ தேசிய சிந்தனை கழகம் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது. இதை அறிந்த திருவாவடுதுறை ஆதீனம் தனது மடத்திலேயே அவருக்கு விழா எடுக்கத் தீர்மானித்துள்ளது" என்றார். தேசிய சிந்தனைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரான புலவர் ராமமூர்த்தி, தேசிய சிந்தனைக் கழகத்தின் தோற்றம் குறித்தும்,  இதுவரை  எவ்வாறு தேசிய சிந்தனைக் கழகம் இயங்கி வந்தது என்பதையும்  சுருக்கமாக எடுத்துரைத்தார். இதையடுத்து தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில, கோட்ட, மாவட்ட  பொறுப்பாளர்களை  பேரா. சதானந்த சப்ரே, பேரா. ம.வே.பசுபதி ஆகியோர் அறிவித்தனர்.  (காண்க: பட்டியல்)  

கலந்துகொண்டோரில் ஒரு பகுதி

நிறைவாக  'பிரக்ஞா பிரவாஹ்' அமைப்பின் அகில பாரத அமைப்பாளர் மா.ஸ்ரீ பேரா.சதானந்த சப்ரே அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர தனது உரையில்  கூறியதாவது:

"எந்த ஒரு சமுதாயத்திலும் அறிவுலகினர் எனப்படும் சிந்தனையாளர்கள் முதன்மை பெறுகிறார்கள். அவர்கள் தங்கள் அறிவுத் திறத்தை சமுதாய மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். அதிலும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதவும் வகையில் அவர்கள் பணிபுரிய வேண்டும். தேசம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் ஆலோசனைகளை அளிக்கவும் அறிவுலகினர் முன்வர வேண்டும்."அறிவுலகினர் மத்தியில் இக்கருத்துக்களைப் பரப்பவும், அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கவும் 'பிரக்ஞா பிரவாஹ்' செயல்புரிந்து வருகிறது. பிரக்ஞா பாரதி, மந்தனா, பாரதீய விசார் மன்ச் என, இது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரில் இயங்குகிறது. தமிழகத்தில் 'தேசிய சிந்தனைக் கழகம்''என்ற பெயரில் நாம் இயங்கி வருகிறோம். அறிவுலகினர் பேசுவதற்கு மட்டுமே தயாராக உள்ளனர்; அவர்கள் பிறர் கூறுவதை செவிகொடுக்க  வருவது கடினம்  என்ற பொதுவான கருத்து உண்டு. அது முன்னேற்றத்துக்கு உதவாது. அதற்கு மாறாக நமது நாட்டின் இயல்பான தன்மைக்கு ஏற்றதாக அறிவுலகினர் சிந்திக்க வேண்டும்.

"தேசிய சிந்தனைக் கழகம் மூன்று விதமான பணிகளில் கவனம் கொடுக்க வேண்டும். முதலாவதாக, சமூக, தேசிய அம்சங்களில் பொதுமக்களின் சிந்தனைகளை தரம் உயர்த்த வேண்டும். அடுத்ததாக தேசிய சிந்தனைக் கழகத்தில் உள்ளவர்கள் பல துறைகளிலும் நிபுணர்களாக மாற வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பிரச்னை குறித்தும் ஆழ்ந்த அறிவுள்ள குழுக்கள் உருவாக வேண்டும். மூன்றாவதாக, கல்வித்துறையிலும் அவர்களின் சுவடுகள் பதிக்கப்பட வேண்டும்.

கல்வித்துறையில் தற்போதுள்ள தேர்ச்சி மனநிலை மாற்றப்பட வேண்டும். மாணவர்கள் படிப்பது வகுப்புத் தேர்ச்சிக்காக மட்டுமல்ல, அவர்களின் ஞானம் விரிவடைய வேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் தாங்களும் சமுதாயத்தின் அங்கமே என்ற எண்ணம் ஏற்படும். நமது பெருமிதம் மிக்க பாரம்பரியச்  சிறப்பு குறித்து மாணவ்ர்கள் அறிந்திருக்க வேண்டும். அதற்காக நமது தேசத்தின் சிறப்புகளையும் தேசிய சிந்தனையையும் அறிவுலகினர் மத்தியிலும் கல்வித் துறையிலும்  பரப்ப வேண்டும்.
கலந்துகொண்டோரில் இன்னொரு  பகுதி
கல்வித்துறையில் மூன்று படிநிலைகளில் நாம் செயல்பட வேண்டும். முதலில் கல்வித் திட்டத்தில் இடம் பெறாத நல்ல அம்சங்கங்களை  மாணவர்களுக்கு தனிப்பட்ட முயற்சியால் அளிக்க வேண்டும். அடுத்து கல்வித் திட்டத் தயாரிப்புக் குழுவில் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இறுதியாக, மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் கல்வித் திட்டம் மாற்றப்பட வேண்டும்.

முதலாளித்துவமும், பொதுவுடைமை தத்துவமும் சமுதாய நலனுக்கு முழுமையாக ஏற்றவையல்ல என்பதை உலகம் உணர்ந்துவிட்டது. இந்த வெற்றிடத்தை பாரதீய சிந்தனைகளைக் கொண்டு நிரப்ப நாம் தயாராக வேண்டும்" என்றார் பேரா. சதானந்த சாப்ரே.இந்நிகழ்ச்சியில்,  சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் விவேகானந்தா இளைஞர் அமைப்பு துவக்கப்பட்டது. அதன்  நிர்வாகிகளாக  ஆசிரியர்கள் ராஜேந்திரன், அருண்குமார், பள்ளியின் துணை  முதல்வர் ஞானப்பிரியா இளங்கோவன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர் . நிறைவில்  மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது .

-முத்துவிஜயன்

தேசிய சிந்தனைக் கழகம், தமிழ்நாடு

மாநில நிர்வாகிகள் பட்டியல்:


மாநிலத் தலைவர்:

திரு. முனைவர் ம.வே.பசுபதி, சென்னை

மாநில துணைத் தலைவர்கள்:

1. திரு. சா.சிவானந்தன், ஈரோடு.

2. திரு. தஞ்சை வெ. கோபாலன், தஞ்சாவூர்.

மாநில அமைப்புச் செயலாளர்:

திரு. ம.கொ.சி.இராஜேந்திரன்.

மாநில பொதுச் செயலாளர்:

திரு. கவிஞர் குழலேந்தி, திருப்பூர்.

மாநிலச் செயலாளர்கள்:

1. திரு. இரா. சத்தியப்பிரியன், சேலம்.

2. திரு. ஆதலையூர் த.சூரியகுமார், மதுரை.

3. திரு. பொன். பாண்டியன், குடியாத்தம்.

மாநிலப் பொருளாளர்:

திரு. முனைவர் தா. இராஜகுமார், சென்னை.

இவர்களைத் தவிர, மாநிலக் குழு உறுப்பினர்கள் 25 பேரும், கோட்ட, மாவட்ட  நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக