ஸ்ரீ சத்ய பாபா
மறைவு: ஏப். 24
ஷீரடி சத்ய சாய்பாபாவின் மறு அவதாரமாக வணங்கப்படுபவரும், மானுட சேவையால் இறைவனைக் காட்டியவருமான பகவான் சத்ய சாய்பாபா, புட்டபர்த்தியில் இன்று (ஏப். 24) இறைவனடி சேர்ந்தார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், புட்டபர்த்தியில், பெத்தவெங்கமராஜு ரத்னாகரம்- ஈச்வரம்மா தம்பதியினரின் எட்டாவது குழந்தையாக, 1926 , நவம்பர் 23 ல் அவதரித்தார், பாபா. இயற்பெயர்: சத்யநாராயண ராஜு.
சிறு வயதிலேயே தனது அருளிச் செயல்களால் தனது அவதார மகிமையை வெளிப்படுத்திய சத்யநாராயண ராஜு, தான் ஷீரடியில் வாழ்ந்து மறைந்த பாபாவின் மறுபிறப்பே என்று அறிவித்தார். பிறகு தனது 14 வது வயதில் (1940) சன்யாசம் பூண்டார். தனது சித்து விளையாட்டுகளால் பக்தர்களின் கவனத்தை ஈர்த்த பாபா, சத்ய சாய்பாபா என்று பெயர் பெற்றார். பாபா சிறந்த கவிஞராகவும் இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
வெறும் கைகளில் விபூதி, கற்கண்டு, குங்குமம், லிங்கம், ஸ்படிக மாலை, மோதிரம் போன்றவற்றை வரவழைத்து பக்தர்களுக்கு அளிப்பதன் மூலமாக பாபாவின் அற்புதங்கள் பரவின. அவரது புகழ் பரவப் பரவ, பக்தர்கள் வட்டம் பெருகியது. பக்தர்களின் நோய்களைப் போக்கியது, குறைகளைக் களைந்தது உள்ளிட்ட அற்புதங்களால் அவரை கடவுள் அவதாரமாகவே சாயி பக்தர்கள் கொண்டாடத் துவங்கினர். 1944 ல் புட்டபர்த்தியில் சாயி பக்தர்கள் அவருக்கு கோயில் எழுப்பினர். பாபாவின் தலைமையகமான பிரசாந்தி நிலையம் 1948 ல் கட்டப்பட்டு 1950 ல் நிறைவடைந்தது. அந்த இடம் நூறு ஏக்கர் பரப்பளவில் சாயி பக்தர்களின் தலைமையகமாக விளங்கி வருகிறது.
தேசம் முழுவதும் தீர்த்தாடனம் செய்த பாபா, உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று ஆன்மிகத்தை பரப்பினார். ஆன்மிக உபதேசங்கள் மட்டுமல்லாது, பக்தர்கள் கொடுத்த காணிக்கை மூலமாக மக்கள் சேவையிலும் பாபா ஈடுபட்டார். அதன்மூலமாக அரசு செய்ய இயலாத உள்கட்டமைப்பு வசதிகளையும் கூட பல பகுதிகளில் செய்து கொடுத்தார். பாபாவால் மேன்மையுற்ற அவரது பக்தர்கள் தாமாக முன்வந்து பல சேவைப்பணிகளைத் துவங்கினர்.
அன்பே சிவம் என்பதே பாபாவின் பிரதான கொள்கை. மானுட சேவையே இறைவனை அடையும் மார்க்கம் என்று அவர் உபதேசித்தார். இன்று பாபாவும் அவரது பக்தகோடிகளும் பலநூறு சேவைப்பணிகளை ஆரவாரமின்றி நடத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் 137 நாடுகளில், கோடிக் கணக்கான பக்தர்கள் உள்ளனர். 114 நாடுகளில் சத்யசாயி சேவை நிறுவனம் இயங்குகிறது.
உலகெங்கும் இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போதெல்லாம் சாயி பக்தர்கள் துயர் துடைப்புப் பணிகளில் முன்னிற்கின்றனர். தன் மீதான பக்தியை மானுட சேவைக்கான வாய்ப்பாக உருமாற்றியவர் சாய்பாபா.
கல்வி, மருத்துவம், சேவை, சமூக மறுமலர்ச்சி, ஆன்மிகம், வளர்ச்சி பணிகள் என்று பாபாவின் சேவைப்பணிகள் விரிந்து பரந்தவை. கீழ் ஆந்திராவின் அனந்தப்பூர், வடக்கு- கிழக்கு கோதாவரி மாவட்டங்களிலுள்ள 500 க்கு மேற்பட்ட கிராமங்களுக்கும் (1996 - எல் அண்ட் டி திட்டம்) , தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கும் (2004 - தெலுங்கு கங்கை திட்டம்) குடிநீர் வழங்கும் பிரமாண்ட திட்டங்களை நிறைவேற்றியது பாபாவின் சாதனையாகப் போற்றப்படுகிறது. புட்டபர்த்தியிலுள்ள பாபா நிறுவிய அதிநவீன மருத்துமனை ஏழை மக்களின் உயிர் காக்கும் மையமாகத் திகழ்கிறது. அரிய அறுவை சிகிச்சைகள் இங்கு இலவசமாக அளிக்கப்படுகின்றன.
பாபாவின் அருள்மொழிகள் எண்ணற்ற மொழிகளில் பலநூறு தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அத்வைதமே பாபாவின் அடிப்படி ஆன்மிகம் ஆகும். அனைத்து மதங்களும் இறைவனை அடைபவையே என்பதும் பாபாவின் அருள்மொழி.
சத்யசாயி சேவா சமிதியின் இலச்சினையில் உலக மதங்கள் அனைத்தின் சின்னமும் இடம் பெற்றுள்ளன. ''அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய்; எல்லோருக்கும் உதவு; யாரையும் வெறுக்காதே'' - இதுவே பகவான் சத்ய சாய்பாபாவின் தாரக மந்திரம்.
அனைத்து அரசியல் தலைவர்களும் சாய்பாபாவின் அருளாசி வேண்டி புட்டபர்த்தி படை எடுத்தனர். உலகப் புகழ் பெற்ற தலைவர்களும் பிரபலங்களும் அவர் காலடியில் கண்ணீர் மல்க தவம் கிடந்தனர். ஆனால் அவரோ, ஏழை மக்களின் நல்வாழ்விற்கான சேவைப்பணிகளில் தனது பக்தர்களை அமைதியாக ஈடுபடுத்தியவாறு கர்மயோகியாக வாழ்ந்தார்.
எனினும் மானிட அவதாரத்திற்கே உரித்த இறுதிநாள் பாபாவிற்கும் வந்துவிட்டது. உடல்நலக் குறைவால் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த பகவான் சத்ய சாய்பாபா, இன்று (2011, ஏப். 24) காலப்பெருவெளியில் ஐக்கியமானார்.
இன்று நம்முடன் சத்ய சாய்பாபா உயிருடன் இல்லை. ஆயினும் அவர் அருளிய பொன்மொழிகள் நமக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும். அவரது சேவைப்பணிகள் உலகம் உள்ளவரை மானுட உயர்வுக்கு உதவும். அவரது வாழ்வு என்றும் நமக்கு உந்துசக்தியாக இருந்து நம்மை ஊக்குவிக்கும். பாபாவின் சித்து ஆற்றல் அவரது பக்தர்களுக்கு மன தைரியத்தையும், இழப்பிலிருந்து முன்னேறும் ஆற்றலையும் அளிக்கட்டும்.
பாபாவின் ஆன்மா எல்லையற்ற பரம்பொருளில் ஒன்றட்டும். அவரது அருளாசி உலகை வழிநடத்த தேசிய சிந்தனைக் கழகம் பிரார்த்திக்கிறது.
-குழலேந்தி
காண்க:
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக