நிலப்பரப்பில் உலகிலேயே மிகப் பெரிய நாடு ரஷ்யா; மக்கள் தொகையில் மிகப் பெரிய நாடு சீனா; வல்லரசு அமெரிக்கா. ஆனால், உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான். இந்தப் பெருமை நமக்கே உரித்தானது.
எத்தனை ஏமாற்றங்கள் இருந்தபோதும், சர்வாதிகாரிகளின் பிடியில் இந்திய ஜனநாயகம் சிக்கிக்கொள்ளவில்லை; ராணுவம் இந்திய அரசின் காவலனாக மட்டுமே இருக்கிறது; வாக்குச்சீட்டுகளால் ஆட்சிகளை சத்தமின்றி மாற்றுவது இந்தியாவின் பலம். இதை உலகம் வியப்புடன் பார்க்கிறது.
நமது நாடு விடுதலை பெற்று 64 ஆண்டுகள் முடிந்தபோதும், வறுமை, கல்லாமை, தீண்டாமை உள்ளிட்ட அரக்கர்களை அழிக்க முடியவில்லை என்பது உண்மையே. ஆனால், அதற்கான முயற்சியில் நாம் பல படிகள் முன்னேறி இருக்கிறோம்.
நமது அரசியல்வாதிகள் ஊழலில் திளைக்கிறார்கள்; பல லட்சம் கோடி ஊழல் இப்போது சாதாரணமாகிவிட்டது. உலக அளவில் ஊழலில் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இவை நமது ஜனநாயகத்தின் கரும்புள்ளிகள். ஆனால், இதே நாட்டில்தான் குஜராத்தின் நரேந்திர மோடியும் பிகாரின் நிதிஷ்குமாரும், ஒரிசாவின் நவீன் பட்நாயக்கும் ஊழலற்ற மக்கள்நல ஆட்சி செய்கிறார்கள்.
எந்த ஒரு அரசியல் தத்துவத்துக்கும் இருக்கும் நன்மை, தீமைகள் ஜனநாயகத்திற்கும் உண்டு. அதே சமயம், அதிகபட்ச நன்மைகளும் குறைந்தபட்ச தீமைகளும் கொண்டது ஜனநாயகம் மட்டுமே. மக்களின் விழிப்புணர்வு அதிகரிக்கும்போது நன்மைகள் கூடுதலாகும்; மக்களின் விழிப்புணர்வு குறையும்போது தீமைகள் அதிகரிக்கும்.
ஆக, நமது ஜனநாயகத்தின் குறைபாட்டிற்கு காரணம் அமைப்பு அல்ல; அதை கடைபிடிக்கும் மக்களே என்பது தெளிவாகிறது. 'மக்கள் எவ்வழி; மன்னன் அவ்வழி' என்பதுதானே குடியாட்சிக் காலத் தத்துவமாக இருக்க முடியும்?
மக்கள் தூய்மையும் ஒழுக்கமும் நேர்மையும் மிகுந்தவர்களாக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளும் அவ்வாறே தேர்வாவார்கள். அந்தப் பிரதிநிதிகளால் அமையும் ஆட்சி உண்மையான மக்கள்நல ஆட்சியாக விளங்கும். தமிழகமும் ஆந்திரமும் கர்நாடகமும் கேரளமும் ஊழல், வன்முறை, ஜாதி அரசியல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் அரசியல் கட்சிகள் அல்ல; மக்களே.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி சிறையில் இருக்கும் ஆண்டிப்பட்டி ராசா பிறந்த இதே தமிழகத்தில் தான் தியாகி கக்கன் வாழ்ந்திருக்கிறார். அதிகார அத்துமீறல்களுக்கு உதாரணமாகக் கூறப்படும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆண்ட இதே மாநிலத்தில் தான் ஓமந்தூர் ராமசாமியும் காமராஜரும் ராஜாஜியும் ஆண்டனர். இன்றும் கூட, பொதுநலனே உயிர்மூச்சாகக் கொண்ட தலைவர்கள் பல கட்சிகளில் இருக்கின்றனர். ஆனால் ஊடக வெளிச்சம் அவர்கள் மீது விழாததால், நாம் நம்பிக்கை இழந்திருக்கிறோம்.
இன்று தமிழகத்தின் 14 வது சட்டசபைத் தேர்தல். ஆட்சி மாற்றம் நிகழுமா. அதே ஆட்சி தொடருமா, தொங்கு சபை அமையுமா, புதிய கட்சிகள் வெல்லுமா போன்ற பல கேள்விகளுக்கு மக்கள் இன்று தங்கள் வாக்குப்பதிவில் விடை அளிக்க இருக்கிறார்கள். அவர்களை விலைபேச முக்கிய கட்சிகள் முண்டி அடிக்கின்றன. இலவச வாக்குறுதிகளால் மக்களை கட்சிகள் பிச்சைக்காரகள் ஆக்குகின்றன. சாதிரீதியாகவும் மதரீதியாகவும் மக்களைப் பிளவுபடுத்தி வாக்கு சேர்க்கவும் முயற்சிகள் நடக்கின்றன.
இந்நிலையில் மதிப்பிற்குரிய வாக்காளர் என்ன செய்ய வேண்டும்?
முதலில், நமது மக்களாட்சிமுறையின் சிறப்பை உணர்ந்து கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்களுக்கு '49 - ஓ' ஏற்பாடும் இருக்கிறது. யாருக்கு வாக்களிப்பது என்பது வாக்காளரின் உரிமை; வாக்களிப்பது கடமை.
இன்றைய நிலையில் நாட்டு ஒற்றுமை, பொருளாதார நிலை, வேட்பாளரின் பண்புநிலை, போட்டியிடும் கட்சிகளின் தராதரம் ஆகியவற்றை ஒப்பிட்டு, விலைவாசி, ஊழல், மக்கள்நலத் திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றை பரிசீலித்து, வாக்களிக்க வேண்டும்.
இது வாக்காளரின் கடமை. நமது ஜனநாயகக் கோயிலில் தேர்தலே பூஜை. இந்த தேர்தல் நல்லவர்களை கோயிலில் கொண்டுவந்து இருத்தட்டும்!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!
-குழலேந்தி
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக