நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

14.4.11

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


ஸ்ரீ விக்ருதி ஆண்டு கழிந்தது;  கர ஆண்டு பிறந்திருக்கிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே வாழ்க்கை?

தமிழ் ஆண்டுக் கணக்கிற்கு பழமையான பாரம்பரியம் உண்டு. 60  ஆண்டுகள் கொண்ட ஒரு சுற்று முடிந்து அதே ஆண்டுகள் மீண்டும் சுழன்று வரும். அதற்குள் இரண்டு தலைமுறைகள் பிறந்திருக்கும்.

இயற்கையின் அடிப்படையில்  வசந்தத்தை வரவேற்பதாக அமைந்தது தமிழ் நாள்காட்டி. தொன்மையான தமிழகத்தில் இந்நாளை வசந்த விழாவாகக் கொண்டாடி  மகிழ்ந்திருக்கின்றனர்.   நாடு முழுவதும் இதே நாளை 'பைசாகி விழாவாகவும்'  கொண்டாடுகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதுமான ஒருமைப்பாட்டிற்கு உதாரணமாக இருப்பது தமிழ்ப் புத்தாண்டு.

எனினும் நமது மாநில அரசு தமிழ்ப்புத்தாண்டு தினத்தை தை மாதத்திற்கு மாற்றி அறிவித்தது. சமஸ்கிருதப் பெயர்களுடன் தமிழ் ஆண்டுகள் இருப்பது கூடாது என்ற குறுகிய பார்வையின் விளைவாக எடுக்கப்பட்ட மோசமான நடவடிக்கை அது.

தை முதல் நாளை நாம் 'மகர சங்கராந்தியாகவும்' அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடுகிறோம். அதனை புத்தாண்டாக ஏற்குமாறு அரசு ஓர் ஆணையின் மூலம் நிர்பந்தம் செய்தது. எனினும் தமிழ மக்கள், அரசு ஆணைக்கு அடிபணியாமல், இன்றும் சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக பாரம்பரிய வழக்கப்படி கொண்டாடி வருகின்றனர்.

மக்களின் பாரம்பரிய வழக்கங்களையும் மத நம்பிக்கைகளையும் மக்களால் தேர்வு செய்யப்பட அரசில் இருப்பவர்கள் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக மாற்றிடக் கூடாது. அரசு ஆதிக்கங்களை மீறியே  நமது தர்மமும் தொன்றுதொட்ட பண்பாடும் காக்கப்பட்டு வந்துள்ளன. அதை யாரும் மறந்துவிடக் கூடாது.

இன்று தமிழ்ப் புத்தாண்டு தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த மகிழ்ச்சியில் நமது வலைப்பூவும் பங்கேற்கிறது. இந்த சித்திரைக் கனி அனைவருக்கும் உவப்பாகவும் இனிப்பாகவும் அமையட்டும்!

-குழலேந்தி

காண்க:



.

1 கருத்து:

Unknown சொன்னது…

வாழ்துக்கள்!!!

கருத்துரையிடுக