அண்ணா ஹசாரே
பிறப்பு: ஜன. 15 (1940)
ஊழலை ஒழிப்பதற்காக லோக்பால் மசோதா கொண்டுவர பாடுபட்டு வருபவர்; தகவல் அறியும் உரிமைச் சட்டம் வர காரணமாய் இருந்தவர்; ராலேகான் சிந்தி என்ற வறண்ட கிராமத்தைச் செழிக்கச் செய்தவர்... இப்படி பல சாதனைகளை செய்தும், செய்துகொண்டும் இருப்பவர், 72 வயதான அண்ணா ஹசாரே.
இவர் பிறந்தது ஒரு சிறு கிராமம், ராலேகான் சிந்தி; இது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ளது. ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் 7 குழந்தைகளுடன் ஒருவராய் 1940ல் பிறந்தார் அண்ணா ஹசாரே; 7ம் வகுப்புவரையே படித்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக மும்பை செய்றார்.
அங்கு ஒரு சிறுதொழில் செய்ய ஆரம்பித்தார். சற்று பணம் வர ஆரம்பிக்கவே, சில தீய நண்பர்களும் வந்து சேர்ந்தனர். அதனால் இவர் தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் அவர்களுக்கும் சேர்த்து செலவு செய்யவேண்டிய நிலை இருந்தது. தானும் சில கெட்ட பழக்கங்களை பழகினார்.
1961ல் அத் தீயப் பழக்கங்களிலிருந்து மீண்டார். ராணுவத்தில் சேர்ந்தார். தான் அந்த தீய பழக்கங்களிலிருந்து விடுபட உதவியது தன்னிடம் இருந்த பிரம்மச்சரிய விரதமே என்று குறிப்பிடும் இவர், தான் அதிலிருந்து விடுபட்டது கடவுளின் கிருபை என்றும் குறிப்பிட்டார்.
ராணுவத்தில் இவருக்கு வழங்கப்பட்ட கடும் பயிற்சி, இவர் இந்த பழக்கத்திலிருந்து வெளிவர பெரிதும் உதவியது. அப்போது இவரது மனம் மனித வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது. இவரது சிந்தனைக்கு ஒரு தெளிவும், வழியும், பிடிமானமும் கிடைக்கவில்லை, அதனால் ‘மனிதனாய்ப் பிறந்து வாழ்வதில் ஒரு மகத்துவமும் இல்லை’ என்ற முடிவுக்கு வந்தார்.
அதன்படி “இந்த அர்த்தமற்ற வாழ்க்கையை சுமப்பதைவிட முடித்துக் கொள்கிறேன், நான் என் சுய இச்சையோடு என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல” என்று எழுதினார். ஆனால் அந்த சமயத்தில் இவரின் தங்கைக்கு திருமணம் நடப்பதாக இருந்ததால் தனது தற்கொலை எண்ணத்தை ஒரு மாதம் தள்ளிப்போட்டார்.
இந்த சமயத்தில் ஹசாரே தில்லி ரயில்வே ஸ்டேஷனில் சுவாமி விவேகானந்தரின் படத்துடன் கூடிய புத்தகத்தைக் பார்த்தார். அப்புத்தகம் அவரைக் கவர்ந்தது. அதில் “மனிதப் பிறவியின் மகத்தான லட்சியம், இப் பிறப்பிலேயே ஜீவன் முக்தி அடைவதுதான்” என்ற சுவாமி விவேகானந்தரின் சொற்கள் ஹசாரேவுக்கு மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது; தன் தற்கொலை எண்ணத்தை கைவிட்டார்.
“அர்த்தமில்லாத தேவதைகளின் பின்னால் ஓடாதே. நோயாளி, ஆதரவற்றவன், ஏழை, துன்பத்தில் பீடிக்கப்பட்டவன், இவர்கள் தான் உனது கடவுள். அவர்களுக்குச் சேவை செய். இதுதான் முக்தியடைய உண்மையான வழி” என்ற விவேகானந்தரின் வரிகள், ஹசாரேவின் உடம்பெங்கும் பரவி, தான் செய்ய வேண்டிய வேலைக்கு வழிகாட்டியதாகவே உணர்ந்தார். தொடர்ந்து ஆன்மீக இலக்கியங்கள் பலவற்றைப் படிக்கலானார்.
1965 யுத்தத்தில் உடன் பணியாற்றிய பல நண்பர்களை குண்டு மழையில் இழந்தார். சில நண்பர்கள் ஊனமானார்கள். இவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இது கடவுளின் கருணையே என்று நினைத்தார், தான் கடவுள் சேவையில் ஈடுபடவேண்டும் என்று விரும்பினார்.
1975 போருக்குப் பின் ஹசாரே வேலையை விட்டு கடவுள் தொண்டிலும், கிராம சேவையிலும் ஈடுபடத் தீர்மானித்து ஊர் திரும்பினார். அப்போது ராலேகான் சிந்தி வறண்ட பூமி. பிரதான தொழில் சாராயம் காய்ச்சுவது. மழை குறைவு; சுகாதாரமான குடிநீர் கிடையாது; மக்கள் பல நோய்களில் அவதிபட்டு வந்தனர்.
ஹசாரே தனது கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களை அழைத்து, கிராமத்தை முன்னேற்ற தான் வைத்துள்ள திட்டங்களைச் சொல்லி அந்த இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டி இளைஞர்களின் மனதில் எழுச்சியை ஏற்படச் செய்தார்.
முதலில் அங்கிருந்த மக்களிடம் ஈடுபாட்டை ஏற்படுத்த அங்கிருந்த கோயிலை புனர் நிர்மாணம் செய்வது என முடிவெடுத்து, மக்களுடன் இணைந்து வேலையைத் தொடங்கினார். இதற்காக தான் ஓய்வு பெற்றபோது வந்த பணம் ரூ. 19,000த்தை செலவு செய்தார். இதன் பின் மக்களே முன்வந்து மரமாகவும், பணமாகவும், உடல் உழைப்பாகவும் செய்ய, கிராம மக்களிடையே உற்சாகம் ஏற்பட்டு கூட்டு முயற்சியில் நம்பிக்கை ஏற்பட்டது.
மக்களின் உற்சாகத்தையும் அவர்களின் ஆதரவையும் கொண்டு, கள்ளச்சாராயத்தின் தீமைகளை மக்களிடம் விளக்கினார். அவர்கள் முழுமனதுடன் மது அரக்கனை ஒழிக்க சங்கல்பம் செய்தனர். பல்வேறு வழிவகைகளைக் கையாண்டு அந்த ஊரிலிருந்து கள்ளச் சாராயத்தை ஒழித்தனர். அதில் நேரிட்ட இடைஞ்சல்களை மக்களின் அன்பால் வென்றார் ஹசாரே.
அதன் பின் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டது. தினசரி மக்கள் கோயில் வேலைகளிலும் பூஜையிலும் ஈடுபட்டு, பஜனை போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டர். 'கிராமம் முழுவதும் ஒரு குடும்பம்' என்ற உணர்வு அவர்களிடம் ஏற்பட்டது. மக்களின் ஒற்றுமையும் இளைஞர்களின் சக்தியையும் கொண்டு தீண்டாமை அரக்கனை ஒழித்துக் கட்டினார்.
கிராமே கூடி விவசாயம் செய்தனர்; கிணறுகள் வெட்டினர். பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவினர். அவர்களுக்கு ஏற்பட்ட கடன்களை அடைத்தனர். மாணவர் விடுதி ஏற்படுத்தினர். ராலேகான் சிந்தி, தீண்டாமை ஒழிப்பில் மாவட்டத்தின் முதல் பரிசு பெற்றது.
மழைநீரை சேமிக்க குளங்கள் வெட்டினர். அங்கு இப்போது விவசாயம் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. சாண எரிவாயு இயந்திரங்கள் மூலம் எரிவாயுவும், உரங்களும் பெறுகின்றனர். மரங்கள் நட்டனர்; பசு வளர்ப்பில் கவனம் கொடுத்தனர். கோழிவளர்ப்பு, தையல் வேலை என்று அனைத்துத் துறைகளிலும் கவனம் கொடுத்தனர்.
கிராம மக்களின் தானத்தின் மூலமும் உழைப்பின் மூலமும் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு பின்பு அரசு உதவி கிடைத்தது. தற்போது மற்ற ஊர்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உற்பத்தியைப் பெருக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் ராலேகான் சிந்தி கிராம மக்கள். இவர்களின் வெற்றி மற்ற கிராமங்களையும் தொற்றி அவர்களுக்கும் உற்சாகம் பெற்றுள்ளனர்.
ராலேகான் சிந்தி ஒரு முன்மாதிரியான கிராமம். இப்படிப்பட்ட நிலையை நாட்டுக்கும் கொண்டுவர தற்போது அண்ணா ஹசாரே பாடுபட்டு வருகிறார். இவருக்கு பத்மஸ்ரீ (1990), பத்மபூஷன் (1992) விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அண்மையில் ஏப். 5 முதல் ஏப், 8 வரை தில்லியில் இவர் நடத்திய தொடர் உண்ணாவிரதத்திற்கு மத்திய அரசு பணிந்தது. லோக்பால் சட்டம் குறித்து ஹசாரே கூறுவதை ஏற்க அரசு முன்வந்தது. இப்போது அதற்கான வரைவுக் குழுவில் ஹசாரே உள்பட பொதுநல விரும்பிகள் ஐவரும் அரசு பிரதிகள் ஐவருடன் இணையாக இடம் பெற்றுள்ளனர். இதன் வெற்றி இனிமேல் தான் தெரிய வரும்.
முன்பு எப்படி மாலேகான் சிந்தியில் கள்ளச்சாராயத்தை ஒழித்தாரோ அதேபோல, நாட்டில் ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவுக்காக இப்போது போராடி வருகிறார், ஹசாரே.
இவரே இன்றைய மகாத்மா.
- என்.டி.என்.பிரபு
காண்க:
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக