நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

4.4.11

தேசமே தெய்வம் என்றவர்

டாக்டர் ஹெட்கேவார்
பிறப்பு: யுகாதி
(ஏப். 4)
                                              
            "கோயிலைப் போலே  உடல்கள் புனிதம்
             மாந்தர் அனைவரும் உபகாரி !
             சிங்கத்துடனே விளையாடிடுவோம்
             ஆவினம் எங்கள் அன்புத்தாய்....''
.
              - என்ற அற்புதமான, அர்த்தமுள்ள வரிகளை சுமந்துகொண்டு வந்தது அந்தப் பாட்டு. இனிமையான குரலுடன் மனதையும் அறிவையும் கிறங்க வைத்த பாடல் வந்த திசை நோக்கி தானாக நடந்தது எனது கால்கள்.
               
                  பதினைந்து முதல் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சுமார் 20 இளைஞர்கள் வட்டமாக அமர்ந்திருந்தனர்;  ஒருவர் பாட, மற்றவர்கள் திருப்பிப்  பாடும் இந்த கூட்டுப் பாடலில் தான் எத்தனை ஆழமான பொருள்! தொடர்ந்தது பாடல்.....

                  "சிறுமியரெல்லாம் தேவியின் வடிவம்
                  சிறுவர் அனைவரும் ராமனே
                  சிறுவர் அனைவரும் ராமனே!....

                   சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி;
                   கிராமம் அனைத்தும் தவ பூமி!...'' 
                    எனும் பாடல் வரிகளில் இழைந்தோடிய, தேசபக்தியும் தெளிந்த நீரோடையாய் விளங்கிய நம் மண்ணின் ஞானசக்தியும் என்னுள் ஒரு பரவச உணர்வை ஏற்படுத்தியது.

                  யார் இந்த இளைஞர்கள்?  எதற்காக இங்கு அமர்ந்து, இப்படியொரு அருமையான பொருள் பொதிந்த பாடலைப் படுகிறார்கள் ? பொறுத்திருந்தேன் விடை காண.

                 பாடல் முடிந்தது . சான்றோர் ஒருவரின் பொன்மொழியும், திருக்குறளிலிருந்து "அருமை உடைத்தென்று ..." என்ற குரலும் வாசிக்கப்பட்டது.  பின் வரலாற்றிலிருந்து சாணக்கியரின் வாழ்க்கைச் சம்பவம் ஒன்று சுவையான கதை போல்    சொல்லப்பட்டது.  பின் அனைவரும் எழுந்தனர்; மூன்று வருஷங்களில் அணிவகுத்து நின்றனர்;  பிரார்த்தனைப் பாடல் பாடப்பட்டது.

                " கட்டுப்பாட்டுடன் கூடிய செயல்திறன், கட்டளைக்கு கீழ்ப்படியும் கடமையுணர்வு, ஏற்றுக் கொண்ட லட்சியத்துக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் தியாக மனப்பான்மை.. இத்தகைய வீரம் செறிந்த இளைஞர்களை உருவாக்குகின்ற பணிவினை செய்யும் 'ஆர்.எஸ்.எஸ்' என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஒருகிளையினை தான் நீங்கள் இப்பொழுது பார்த்தீர்கள்!"  என்றார், அந்தக் கிளையின் பொறுப்பாளர் ஒருவர்.

                 தொலைக்காட்சிகளிலும், பாலியல் விவகாரங்களிலும், போதை,  கிரிக்கெட்,  திரைப்பட கனவுகளில் தங்கள் சக்தியை கரைத்துக் கொண்டிருக்கும் இன்றைய இந்திய தேசத்தின் இளைஞர்களிடையே இப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின்  தலைவர் யார் ? தெரிந்துகொள்ள ஆவல் தோன்றியது.

                 பிரகாசமாய் எரிந்து வெளிச்சத்தை தரும் அகல்விளக்குக்கு கீழே நிழல் இருப்பது போல ஆர்.எஸ்.எஸ். ஐ துவக்கிய டாக்டர்  கேசவ பலிராம் ஹெட்கேவார் தன்னை முன்னிறுத்தவில்லை; தனது புகழைப் பாடவும் விரும்பவில்லை.

                1925, விஜயதசமியில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். - உலகமெங்கும் தேசபக்திக்காகவும் தன்னலமற்ற தொண்டுகளுக்காகவும் அறியப்பட்ட இயக்கம்; " உலகமெங்கும் உள்ள தன்னார்வுத் தொண்டு அமைப்புகளில் மிகப் பெரிய அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்-ஐ லண்டனில் உள்ள பிபிசி  அங்கீகாரம் செய்தது அதிசயம் ஒன்றுமில்லை ஆனால் அதைத் துவைக்கிய டாக்டர்  ஹெட்கேவரைப் பற்றி சிலர் மட்டுமே அறிந்திருப்பது அதிசயம் தானே!

               லட்சியத்துக்காக லட்சியமாகவே வாழ்ந்த பெருமகனார்; நோய் தீர்க்கும் மருத்துவப் படிப்பு முடித்த  ஹெட்கேவார், தேசத்தின் நோய்களைப் போக்கவும், ஒற்றுமை உணர்வினை மக்களிடையே வளர்க்கும் மருத்துவராகவே வாழும் வாழ்வென்னும் வேள்வியில் தன்னை ஆகுதி ஆக்கினார்.

               தன்னை முன்னிலைப்படுத்தாது தேசநலனையே முன்னிலைப்படுத்தி அதற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களை உருவாக்குவதில் வெற்றி கண்டவர் 'டாக்டர்ஜி' என்று பல கோடி மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஹெட்கேவார். இவர் விடுதலைப் போராட்ட வீரர்; சமுதாய சீர்திருத்தச் செம்மல்; இயக்க நிறுவனர் என பல பரிமாணங்களை உடையவர்.

                 புது வருடப்  பிறப்பாம் யுகாதியில் (ஆங்கிலத் தேதி: 01.04.1889) பிறந்து,  இந்த தேசத்து மக்களுக்கு தேசியத்தையும்  தெய்வீகத்தையும்  வலுப்படுத்திட  அருமருந்தாய் ஆர்.எஸ்.எஸ்-ஐ உருவாக்கினார்.
.
                தனது மறைவுக்குள் (21.06.1940) ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நாடு முழுவதும் பரவலாக்கி,  அதற்கென  அர்ப்பணமயமான    நிர்வாகிகளையும் தொண்டர்களையும்  உருவாக்கிச் சென்ற, தேசபக்தி கொண்டோருக்கு   'வையத்துள் வாழ்வாங்கு வாழும் வீர புருஷனாய்' வழிகாட்டும் டாக்டர் ஹெட்கேவாரை இன்றைய நாளில் நினைவில் கொண்டு அவர்தம் பணியைத்  தொடர்வோமாக!

                    வந்தே மாதரம்!    
- ம.கொ.சி.ராஜேந்திரன்
காண்க:
.
.

1 கருத்து:

thiyagarajan.s சொன்னது…

பாரதம் பாரதீயர்களுக்கே.....!!!

கருத்துரையிடுக