டாக்டர் ஹோமி ஜகாங்கீர் பாபா
(பிறந்த நாள்: அக். 30 )
இந்தியாவில் அணுவியல் துறை ஆராய்ச்சியைத் துவக்கவும், ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தவும் அடித்தளமிட்டவர் டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபா. ஹோமி பாபா ஒரு பார்ஸி குடும்பத்தில் 1909ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி மும்பையில் பிறந்தார். தனது கல்வித் திறனால் உலக விஞ்ஞானிகள் மதிக்கும் அளவுக்கு உயர்ந்தார். இயற்பியலில், குறிப்பாக அணுக்கருவியலில் பல புதிய தேற்றங்களை உருவாக்கினார்.
சுதந்திர இந்தியாவில், இவரது மேதமையை உணர்ந்த பிரதமர் நேரு, இவரைப் பயன்படுத்தி அணுவியல் துறையில் பாரதம் வளர வித்திட்டார். இவர் 1954ல் மும்பையில் அணுசக்தி நிலைப்பகத்தைத் [Atomic Energy Establishment, Trombay] துவக்கினார். 1958 மார்ச் 14 ல் துவங்கிய இந்திய அணுசக்தி ஆணையகத்தின் [Indian Atomic Energy Commission] தலைவர் ஆனார்.
நாடு முழுவதும் பல இடங்களில் அணுவியல் ஆய்வுக் கூடங்கள் நிறுவவும், அற்புதமான இளம் விஞ்ஞானிகள் உருவாகவும் இவரது தலைமை தான் காரணமானது. இன்று உலகின் ஆறாவது அணு வல்லமை பெற்ற நாடாக பாரதம் உள்ளதென்றால் அதற்கான பெருமை அனைத்தும் ஹோமி பாபாவையே சாரும்.
டாக்டர் பாபா திருமணம் செய்து கொள்ள வில்லை. அவரது அன்பு இல்லத்தரசி விஞ்ஞானம் ஒன்றுதான்! விமான விபத்தில் 1966 ஜனவரி 24ல் ஹோமி பாபா காலமானார். இந்திய அணுஆயுத திட்டத்தைக் குலைக்கவே அமெரிக்க உளவு அமைப்பு நடத்திய விபத்தில் இவர் பலியானதாக சந்தேகிக்கப் படுகிறது. நேரடிப் பார்வையில் இவர் பம்பாயில் உருவாக்கிய டிராம்பே அணுசக்தி நிலைப்பகம் [Atomic Energy Establishment, Trombay], பாபா அணுவியல் ஆராய்ச்சி மையம் [Bhabha Atomic Research Centre] எனப் பெயர் பெற்று, அவரது நினைவை நிரந்தரமாக்கி விட்டது.
மேலும் அறிய:
1 கருத்து:
//நேரடிப் பார்வையில் இவர் பம்பாயில் உருவாக்கிய டிராம்பே அணுசக்தி நிலைப்பகம் [Atomic Energy Establishment, Trombay], பாபா அணுவியல் ஆராய்ச்சி மையம் [Bhabha Atomic Research Centre] எனப் பெயர் பெற்று, அவரது நினைவை நிரந்தரமாக்கி விட்டது.
//
nalla thakavalkal. vaalththukkal.
கருத்துரையிடுக