ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
பிறப்பு: பிப். 18
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பிப். 18, 1836 - ஆக. 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் கதாதர் சாட்டர்ஜி 19ம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனை துளிகள்
ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை.
இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையனுபூதி பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழ வேண்டும். உலக வாழ்க்கையில் இருப்பவர்கள் பலவிதமான கடமைகளால், ஆசைகளால், சூழப்பட்டிருக்கிறார்கள்; அதிலும் சாதனையின் ஆரம்ப காலத்தில் இருப்பவர்கள் பலவிதமான தடைகளைச் சந்திக்க
வேண்டியவர்களாகிறார்கள். அதனால் அவர்களின் கவனம் சிதறுகிறது
ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை ஒன்று
குரு ஒருவரை, அவருடைய சிஷ்யன் கேட்டான், "குருவே, இறைவனைக் காணும் வழியை எனக்குச் சொல்லுங்கள்", என்று.
அவரும், "என்னுடன் வா, காட்டுகிறேன்", என்று கூறி, அந்த சிஷ்யனை அருகிலிருந்த ஒரு ஏரிக்கு அழைத்துச் சென்றார்.
இருவரும் தண்ணீரில் இறங்கினர். திடீரென்று, குருவானவர், சிஷ்யனின்
தலையைப் பிடித்துத் தண்ணீருக்குள் அமிழ்த்தினார். சில நிமிடங்கள் கழித்துதான் அவனை விடுவித்தார். மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சிஷ்யன், ஒருவழியாக விடுபட்டு எழுந்து நின்றான்.
"எப்படி இருந்தது?", என்று குரு கேட்டார்.
"என்னால் மூச்சே விட முடியவில்லை. தவித்துப் போய் விட்டேன். செத்து விடுவேன் என்றே நினைத்தேன்", என்றான் சிஷ்யன்.
"இதைப் போலவே சுவாசத்தை இழந்தாற்போல இறைவனுக்காக எப்போது தவிக்கிறாயோ, அப்போது அவனைக் காண்பாய்", என்றார், குரு.
காண்க:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக