நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

3.2.11

மேடைத் தமிழில் மேவிய தலைவர்




அறிஞர் அண்ணாதுரை

நினைவுதினம்: பிப். 3

தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சராகவும், காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியவருமான, அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை மேடைப் பேச்சிலும் சட்டசபை பேசுகளிலும் வல்லவர். அவரது மேடைப் பேச்சுத் திறனே திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தின் அரசியல் களத்தில் முன்னணியில் கொண்டுவந்து நிறுத்தியது. இன்று அவரது நினைவுதினம். அவரது பேச்சாற்றல் குறித்த சில நினைவுகளை பகிர்ந்து கொள்வோமே...

அண்ணா அவர்கள் மேடைப் பேச்சாக இருந்தாலும், சட்டமன்ற உரையானாலும், நாடாளுமன்ற உரையானாலும் எங்கும் நகைச்சுவையுடன் பேசி எல்லோருடைய உள்ளங்களையும் கவர்ந்தார்.

சிலுவையும் சீடர்களும்:

ஒரு முறை சட்டமன்றத்தில் - அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். கழக உறுப்பினர் ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார்.

குறுக்கிட்ட சுப்ரமணியம் இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல் இருந்ததால் சரி என்றார். இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார் என்று உடனே எழுந்துக் கூறினார் அண்ணா. அவையில் சிரிப்பொலி எழுந்தது.

உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல என்பதை இவ்வளவு அழகாக நகைச்சுவையுடன் அண்ணா குறிப்பிட்டார்.

சம்பந்தி சண்டையா?

மற்றொரு முறை திரு.வினாயகம் (காங்) எழுந்து, நான் கொடுத்த ஆன் புலிக்குட்டியை மிருகக்காட்சி சாலையில் சரியாகக் கண்காணிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறதே! என்று புகார் கூறினார்.

உடனே அண்ணா அவர்கள் சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று பதில் கூறினார்.  புகார் கூறியவர் உட்பட அனைவரும் சிரித்தனர்.


எதிர்கட்சியும் ஆளும் கட்சியும்:

1957-க்கு முன்பு காமராசரும்,  காங்கிரசாரும் அண்ணாவையும், கழகத்தினரையும், வெட்டவெளியில் பேசி என்ன பயன் - முடிந்தால் சட்ட சபைக்கு வாருங்கள் என்றனர். அதன் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் 1957-குப் பின்) இடம் பெற்ற போதும், 1962-ல் 50 பேராகச் சென்ற பிறகும் காங்சிரசார் - அதன் அமைச்சர்கள் சரியான எதிர்கட்சியில்லை, நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று குறை கூறி கழகத்தை கேலியும்  கிண்டலும் செய்தனர்.

அப்போது அண்ணா, நீங்கள் எதிர்கட்சி சரியில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரையில் நீங்களே அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.

அண்ணாவின் வாதத்திறமைக்கும், சமயோசிதமான கூர்த்த மதியுடன் பதில் கூறும் தன்மைக்கும் எடுத்துக்காட்டாக இதைப்போலவே ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்.

யாருக்காக இந்தக் குறள்?

நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் பேருந்துகளிலெல்லாம் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெறச் செய்தார் அண்ணா.  திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பேருந்தில் இடம்பெற்றதைக் கேலி செய்து எதிர்க்கட்சியினர் பேசியபோதெல்லாம் அண்ணா தகுந்தவாறு பதிலளித்தார்.

ஒரு முறை எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் தந்திரமாக ஒரு கேள்வியைக் கேட்டார். பேருந்தில் யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவா?

இக்கட்டான நிலையில் அண்ணா அகப்பட்டுத் தவிக்க வேண்டும் என்று எண்ணி எழுப்பப்பட்டக் கேள்வி இது!  டிரைவர் . . . கண்டக்டருக்காக என்றால் தொழிளாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும். பொதுமக்களுக்காக என்றால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும்.

இந்த கேள்விக்கு அண்ணா கொடுத்த பதில் சாதுர்யமானது மட்டுமல்ல - மிகவும் நுணுக்கமானதுமாகும்.

நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்.

இந்த உடனடியான பதில் கேள்வி கேட்டவரை மட்டுமல்ல, அனைவரையுமே அதிர வைத்துவிட்டது. இதைப் போல பொருத்தமாகத் தெளிவுடன் உடனே பதில் சொல்லும் அறிவாற்றல் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. இது அவரிடம் மிகுதியாக அமைந்திருந்தது.

திரும்பும் சொல்லம்பு!

ஒரு முறை சட்டமன்றத்தில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த வினாயகம் அவர்கள் அண்ணாவைப் பார்த்து,  ''யுவர் டேஸ் ஆர் நம்பர்ட்'' (உங்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன) என்று கூறினார்.

அண்ணா அவர்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் அமைதியாக எழுந்து, ''மை ஸ்டெப்ஸ் ஆர் மெஷர்ட்'' (என்னுடைய காலடிகளை எடுத்து வைக்கிறேன்) என்றார்.

இப்படி தன்னை நோக்கி வீசப்படுகின்ற கணையை, வீசியவர்களை நோக்கியே உடனடியாகத் திருப்பி வீசுகின்ற சாமர்த்தியம் அண்ணாவிடம் மிகுந்திருந்தது.

***

அரசியல்ரீதியாக அண்ணாதுரையின் கருத்துகளில் மாறுபாடு உள்ளவர்களும் கூட, அவரது இனிய பேச்சாற்றலால் வசீகரிக்கப்பட்டனர். சமயோசிதமான பதில் கூறும் முறையால் எத்தகைய சிரமத்திலிருந்தும்  எளிதாகத் தப்புவதில் அண்ணாதுரை வல்லுனராக இருந்தார்.

அவரது திராவிட அரசியல்,  பிரிவினைவாதம்,  பகுத்தறிவு என்ற பெயரிலான இந்துமத விரோதம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, மொழிப்பற்று, மக்கள்நலன்  மீதான கவனம், தலைமை தாங்கும் பண்பு, சமூக சீர்திருத்த சிந்தனை   போன்றவற்றின் அடிப்படையில் பார்த்தால், அண்ணாதுரை மகத்தான தலைவரே.

எந்த ஒரு மனிதரிடமும் உள்ள நல்ல அம்சங்களை மட்டும் கவனம் கொண்டால், அவற்றை மட்டும் கிரகித்துக்கொள்ள முடியுமானால், நாம் ஒவ்வொருவரும் அறிஞர் அண்ணா போல உயர்வடைய முடியும்.

அண்ணாதுரை பிறந்த நாள்: 15.09.1909
அண்ணாதுரை நினைவுநாள்: 03.02.1969

காண்க:

கா.ந.அண்ணாதுரை (விக்கி)
C.N.ANNADURAI
அண்ணாவின் நகைச்சுவை
அண்ணாவின் கண்ணியம்
அண்ணாவின் நாடகநடை
அண்ணா சகாப்தம்
Anna and  Periyar - Cho .Ramaswamy
தாய்க்கு பெயர் சூட்டிய தனையன்
.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக