நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

13.2.11

ஆங்கிலத்தில் முழங்கிய கவிக்குயில்
சரோஜினி நாயுடு
பிறப்பு: பிப். 13

சரோஜினி நாயுடு  எனப்படும்  சரோஜினி சட்டோபத்யாயா "பாரதிய கோகிலா''  (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுபவர்.  இவர் ஒரு பிரபலமான குழந்தை ஞானி, சுதந்திரப்  போராளி மற்றும் கவிஞர் ஆவார்.  இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆனவர்  இவர். 
 
ஹைதாராபாத் மாநிலத்தில் (ஆந்திரா)  ஒரு வங்காளக்  குடும்பத்தில் மூத்த மகளாக சரோஜினி நாயுடு (பிப். 13, 1879) பிறந்தார்.  இவரது தந்தை விஞ்ஞானியாகவும்  தத்துவவியலாளராகவும் கல்வியாளராகவும் விளங்கிய அகோர்நாத் சடோபத்யாயா; தாய் பரத சுந்தரி. இவரது தாய் ஒரு பெண் கவிஞர் ஆவார். இவரது தந்தை நிஸாம் கல்லூரியின் நிறுவனர். மேலும் இவரது நண்பர் முல்லா அப்துல் காமுடன் இந்திய தேசிய காங்கிரசின் முதல் உறுப்பினராக விளங்கினார். அவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டதற்காக அவரது தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு  உறவுகளிலிருந்து விலகிநின்றார்.
 
12 வயதில் சரோஜினி நாயுடு தனது மெட்ரிக் பரீட்சையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். 1891 முதல் 1894 வரை அவர் தன்னுடைய படிப்பில் சிறு இடைவெளி விட்டு, பல்வேறு புத்தகங்களைப் படித்தார். 1895 ம் ஆண்டு, பதினாறு வயதில் முதன்முதலாக லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் படிப்பதற்காகச் சென்றார்.  உருது,  தெலுங்கு, ஆங்கிலம்,  பெர்சியம் மற்றும்  பெங்காலி ஆகிய மொழிகளைப் பேச சரோஜினி நாயுடு அவர்கள் கற்றுக்கொண்டார்.
 
1905 ம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். 1903-17 காலகட்டத்தில் சரோஜினி அவர்கள் கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர், முஹம்மது அலி ஜின்னா, அன்னி பெசண்ட், சி.பி.ராமஸ்வாமி ஐயர்,  மகாத்மா  காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார்.
 
1915 முதல் 1918 ஆண்டுகளுக்கிடையில் அவர் நாடு முழுவதும் இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை மற்றும் தேசியப் பற்று குறித்து பல்வேறு சொற்பொழிவுகளை மேற்கொண்டார். ஜவகர்லால் நேருவை 1916ம் ஆண்டு சந்தித்ததற்குப் பின் அவர் 'சம்பரன் இன்டிகோ' பணியாளர்கள் பிரச்னையைக் கையில் எடுத்தார். 1925 ம் ஆண்டில் அவர் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே.
 
1919 ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ரௌலட் சட்டத்தினைப் பிறப்பித்தது. இதன் வழியாக விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதப்பட்டது; இதனை எதிர்க்க மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார்.  இதில் முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு.
 
ஜுலை 1919ம் ஆண்டு சரோஜினி அவர்கள் இங்கிலாந்திற்கான ஹோம்ரூல் லீக்கின் தூதர் ஆனார். ஜுலை 1920 ல் அவர் இந்தியாவிற்கு திரும்பினார். ஆக.1 அன்று மகாத்மா காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். 1924 ம் ஆண்டு, கிழக்கு ஆப்ரிக்க இந்திய காங்கிரஸில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் ஒருவராக சரோஜினி  திகழ்ந்தார்.

ஜன.26, 1930 இல் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் கோரியது. மே 5, அன்று காந்தி கைது செய்யப்பட்டார். அதன் பின் சில நாட்களிலேயே நாயுடு அவர்களும் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தி அவர்களுடன் ஜனவரி 31, 1931 இல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மோசமான உடல்நிலை காரணமாக நாயுடு  உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.
 
1931 ம் ஆண்டு அவர் காந்திஜி மற்றும் பண்டிட் மாளவியா ஆகியோருடன் இணைந்து வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார். அக். 2, 1942 ல் அவர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவர் காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். மகாத்மா  காந்தி அவரை செல்லமாக "மிக்கி மவுஸ்" என்று அழைப்பார். 1947,  மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய உறவுகள் மாநாட்டில் நாயுடு பங்கேற்றார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அவர் யுனைடட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) மாகாணத்தின்  ஆளுனராக பதவியேற்றார். இதன்மூலமாக நாட்டின்  முதல் பெண் ஆளுனரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தர்.
 
சொந்த வாழ்க்கையும் கவிதை சாதனைகளும்:  17 வயதில் சரோஜினி அவர்கள் டாக்டர்.முத்யாலா கோவிந்தராஜுலு அவர்களை சந்தித்து அவர் மீது காதல் வயப்பட்டார். 19 வயதில் தனது படிப்பினை முடித்த பின்னர், ஜாதி விட்டு ஜாதி மேற்கொள்ளப்படும் திருமணங்கள் செல்லாத காலகட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். அவருடைய திருமண வாழ்வு மிகவும் மகிழ்ச்சிகரமானதாகக் கழிந்தது.  ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர் மற்றும் லீலாமணி என அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னர் அவரது மகள் பத்மஜா மேற்கு வங்காளத்தின் ஆளுனர் ஆனார்.
 
சரோஜினி நாயுடு அவர்கள் கவிதைத் துறைக்காக பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவரது கவிதைகளில் அழகான வார்த்தைகள் இருக்கும். அதன் காரணமாக அதை பாடவும் முடியும். 1905 ம் ஆண்டு அவரது முதல் பாடல்கள் தொகுப்பு தி கோல்டன் த்ரெஷோல்டு என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. மேலும் இரண்டு பகுதிகள் வெளியிடப்பட்டன.  தி பேர்ட் ஆஃப் டைம்  (1912) மற்றும் தி புரோக்கன் விங்  (1917) பின்னர் அவரது தி விஸார்டு மாஸ்க் மற்றும் எ டிரஷரி ஆஃப் போயம்ஸ் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1961 ம் ஆண்டு அவரது மகள் பத்மஜா, வெளியிடப்படாத தனது தாயின் கவிதைகளை தி ஃபெதர் ஆஃப் டான் என்னும் தலைப்பில் வெளியிட்டார்.
 
இந்தியாவின் கவிக்குயில் என்று புகழப்படும் சரோஜினி  நாயுடு, ஆங்கில மொழியிலேயே கவிதை எழுதி ஆங்கிலேயரைச் சிந்திக்க வைத்தவர். நாட்டின் மகளிர் முன்னேற்றத்தில் இவருக்கு முக்கிய இடமுண்டு.
 
காண்க:
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக