நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

16.2.11

ஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்




குலசேகர ஆழ்வார்

திருநட்சத்திரம்:  
மாசி - 4  - புனர்பூசம்
(பிப். 16)


சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் பெரும் சிறப்பும் புகழும் உடையவர்கள். சேரமன்னர் மரபில் அன்புக்கும் அருளுக்கும் இருப்பிடமாகத் திகழ்ந்தான் திடவிரதன் என்னும் மன்னன். அவன் கல்வியறிவில் சிறந்தவன். செங்கோல் வழுவாமல், அறநெறி பிறழாமல் ஆட்சி செலுத்தும் தன்மையில் தேர்ந்தவன். மக்களுக்கு நன்மையே செய்பவன். திருமாலின் மீது நீங்காத பக்தி கொண்டிருந்தான். அவன் பகைவர்களைப் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் வீரன். தன்னிடம் பரிசு வேண்டி வருபவர்க்கு வேண்டிய பொருட்களைக் கொடுத்தனுப்பும் ஈகை குணம் கொண்டவன்.

இப்படி சிறப்பு பொருந்திய அந்த அரசனுக்கு அவன் செய்த தவத்தின் பயனாக திருமாலின் அருங்கருணையால் ஒரு குழந்தை (பொது யுகத்திற்குப் பின்  8-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) மாசி மாதம்,  சுக்ல பட்ச துவாதசியில்  புனர்பூச  நட்சத்திரம் கூடிய திருநாளில், விஷ்ணுவின் ஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தது. அக்குழந்தையைக் கண்டு மன்னன் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தான். தலைநகர் மங்கல விழாக்கோலம் பூண்டது. வறியவர்க்கு வேண்டுவன வாரி வாரி வழங்கினான். புலவர் பெருமக்களுக்கு வேண்டிய அளவு பொன்னும் பொருளுமாகப் பரிசுகள் தந்து மகிழச் செய்தான். நகரக் கோயில்கள் அனைத்திலும் பூஜைகள் களை கட்டின.

உலகம் உய்யும் பொருட்டு திருமாலின் அருளால் வந்து பிறந்த அந்தக் குழந்தைக்கு ஊர்கூடி பெயர்சூட்டு விழா நடந்தது. முதியவர்கள் ஒன்று கூடி சேரர் குலம் செழிக்கப் பிறந்த செம்மல் என்பதால் குலசேகரன் என்று பெயர் சூட்டினர்.  குலசேகரரின் மீது பெற்றோர் அளவற்ற பாசத்தைக் கொட்டி வளர்த்தார்கள். தங்களின் ஆருயிர் போன்று அவரை சிறிது நேரமும் விட்டுப் பிரியாது கவனமாக வளர்த்தார்கள்.

குலசேகரருக்கு ஐந்து வயதாயிற்று. அவருக்கு கற்க வேண்டிய நூல்களைக் கற்பித்தனர். செந்தமிழிலும் வடமொழியிலும் நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவி பாடவும் ஆற்றல் பெற்றார். யானையேற்றம், குதிரையேற்றம், தேர் ஓட்டுதல், வாள் சண்டை, குத்துச் சண்டை, ஈட்டி எய்தல் ஆகிய படைக்கலப் பயிற்சி பெற்று பெரும் வீரராகவும் விளங்கினார். அவரின் வீரத்தையும் கல்வியறிவையும், கலைப் பற்றையும் தெய்வ பக்தியையும் கண்டு சான்றோர்கள் போற்றிப் புகழ்தார்கள்.

குலசேகரருக்கு தக்க பருவம் வந்ததும் அவருடைய தந்தை அவரை இளவரசராக்கி மகிழ்ந்தார். தந்தையாரின் காலத்துக்குப் பிறகு குலசேகரருக்கு நல்லதொரு மங்கல நாளில் முடிசூட்டப்பெற்றது. அதன்பின் அவர் சேர நாட்டைத் திறம்பட ஆண்டு வரலானார். அறநெறி வழுவாத அவருடைய ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

அவருடைய திறமையையும் அறிவையும் ஆட்சி செய்யும் ஆற்றலையும் கண்ட சோழ மன்னனும் பாண்டிய மன்னனும் அவர் மீது பொறாமை கொண்டனர். அவரைப் போரிலே வென்று அவமானப்படுத்தி, சேர நாட்டை தங்கள் ஆட்சிக்குள் கைப்பற்றிக் கொள்ள பேராசைப்பட்டார்கள்.

அதனால் குலசேகரரைப் போரில் வெல்லக் கருதி அவரை எதிர்த்தார்கள். ஆனால் அந்தப் போரிலே சோழ, பாண்டிய வேந்தர்களை குலசேகரர் வென்று, வெற்றிவாகை சூடினார். சேர சோழ பாண்டிய நாடுகளுடைய தமிழகத்தை ஒரு குடைக்கீழ் ஆண்டு, பெரும் சக்கரவர்த்தியென புகழ்பெற்றுத் திகழ்ந்தார். பாண்டிய மன்னன் அவருடைய வீரம் கண்டு, தன் அருத்தவப் புதல்வியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.

குலசேகரர் இப்படி வீரப்போர் நிகழ்த்தும் விருப்பம் உடையவராகவும், இல்லற வாழ்க்கையில் பெரும் இச்சை கொண்டவராகவும் வாழ்ந்து வந்தார். அப்போது பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமன் அவர் மனத்திலே புகுந்து அவரிடம் உறவாடிய நான் என்ற அகங்காரத்தையும் எனது என்ற மமகாரத்தையும் நீக்கி, தன் மீது நேசம் உடையவராக மாற்றியருளினான்.

அன்று முதல் குலசேகரர், நாராயணன் அடியார்க்கு எளியவராக விளங்குவதையும், உலகத்து உயிர்களைத் தன்னுயிர்போல் காத்தருளும் தன்மையையும், அவருடைய பெருமைகளையும் உணரத்  தொடங்கினார். தாம் இதுவரை செய்த போர்களின் தன்மையை எண்ணி மனம் வருந்தினார். உலகப் பற்றில் அவருக்கு வெறுப்பு உண்டாயிற்று. பவளவாய் கமலச் செங்கண் அருளை எண்ணி மகிழ்ந்தார்.

குலசேகர ஆழ்வாருக்கு நாளாக நாளாகத் திருவரங்கப் பெருமான் மீதுள்ள பக்தி அதிகரித்தது. அவருக்கு திருமால் அடியார்களிடத்தும் திருமாலின் அவதாரக் கதைகளைக் கேட்பதிலும் ஈடுபாடு அதிகரித்தது. எப்போதும் திருமால் அடியார்களுடன் காலம் கழிப்பதிலேயே கண்ணாக இருந்தார்.

அப்படியே அவர் மனம், பெருமானின் லீலைகளில் அதிகமாக ஈடுபடலாயிற்று. கண்ணன் அருகில் இருந்தவாறான அனுபவத்தை அவர் மனத்தில் சிந்திக்கத் தொடங்கினார். கண்ணணைப் பெற்றெடுத்த தாயாகிய தேவகி அவனுடைய பால லீலைகளைப் பார்த்து மகிழும் பேற்றைப் பெறவில்லையே என்று தனக்குள் வருந்துவார். அவர் தன்னை தேவகியாகவே பாவித்துக்கொண்டு, தானே தேவகியாகவே இருந்து தன் மகன் கண்ணனைப் பற்றி உள்ளம் உருகப் பாடி மகிழ்வார். தன்னையே காதலியாக வைத்தும் பாடி மகிழ்ந்தார்.

இவ்வாறு திருமால் மீதே அன்பு பூண்டு, அடிமையாகி வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் கண்ணனின் தொண்டர்கள் பலரை வரவழைத்து அவர்களுக்கு அறுசுவை உணவளித்து அவர்களுடைய சேவடிகளைப் போற்றினார்.

குலசேகரர் இவ்வாறு வாழ்ந்து வரும் காலத்தே, அவருக்கு புராணக் கதைகளைக் கேட்பதில் ஆர்வம் பெருகியது. அதிலும் குறிப்பாக ராமாயணக் கதை கேட்பதில் பெருவிருப்பம் உண்டானது. அதனால், அவர் நற்குண சீலரும் ராமபக்தருமான ஒரு வைணவப் பெரியவரைக் கொண்டு வால்மீகி மகரிஷி இயற்றிய ராமகதையைக் கூறக் கேட்டு வந்தார்.

குலசேகரர் ராமாயணம் கேட்கும்போது அவருடைய நெஞ்சம் நெகிழ்ந்து போகும்; கண்களில் ஆனந்தக் கண்ணீர் கங்கையெனப் பெருகி வழிந்தோடும். கதை கூறும் சூழ்நிலைகளிலே அவருடைய உள்ளமெல்லாம் கரைந்துவிடும். அப்படியே அவர் பக்திப் பரவசமாகித் தம்மையும் தம் சுற்றுப்புறச் சூழ்நிலைகளையும் மறந்து, அதிலேயே லயித்துவிடுவார்.

மன்னரின் வைணவ பக்தி அதிகமாகிவிட்டதை அறிந்த அமைச்சர்கள் ஒன்றுகூடி விவாதித்தார்கள். நிலைமை இப்படியே போனால் மன்னர் நாட்டை பரிபாலிப்பதை மறந்து விடுவார் என்று எண்ணினார்கள். வைணவர்களின் கூட்டுறவாலேயே மன்னர் இவ்வாறு பைத்தியமானார். அதனால் அவர்களின் கூட்டுறவை விட்டு மன்னரை விலகச் செய்ய வேண்டும். அதற்கு என்ன வழி? என்று ஆராய்ந்தார்கள். கடைசியில் ஒருவழி அவர்களுக்குப் புலப்பட்டது. வைணவர்கள் மீது ஏதாவது பழி சுமத்தி, அவர்களை மன்னரிடமிருந்து விலக்க வேண்டும் என்று யோசித்தார்கள். ஓர் உபாயத்தை செயல்படுத்தினார்கள்.

மன்னர் ஆராதிக்கும் பெருமானுடைய அணிகலப் பேழையிலிருந்து ஒரு நவமணி மாலையை யாரும் அறியாதவாறு எடுத்து மறைத்து விட்டார்கள். மறுநாள் வழக்கம்போல் குலசேரர் எம்பெருமானை ஆராதிப்பதற்காகப் பேழையைத் திறந்தார். அதிலே நவமணிமாலை இல்லாதிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். செய்வதறியாது கலங்கினார். பிறகு அமைச்சர்களை அழைத்து செய்தியைக் கூறினார்.

அமைச்சர்கள் ''வேந்தே! இந்த அரண்மனையில் இவ்விடத்தில் வருவதற்கு வைணவர்களுக்கு மட்டுமே உரிமை  உள்ளது. எனவே அவர்களில் யாரேனும் அதை திருடிச் சென்றிருக்க வேண்டும். வேறு யாரும் எடுத்திருக்க வாய்ப்பு இல்லை'' என்றார்கள்.

''அமைச்சர்களே! அவ்வாறு கூறாதீர்கள். மாலவனின் அடியார் எவரும் இப் பாவத்தைப் புரிய மாட்டார்கள். அவர்கள் நான், எனது என்ற அக, புறப் பற்றை நீக்கிய உத்தமர்கள். பேரழகுப் பெண்களாலும் அவர்களை மயக்க முடியாது. அப்படியிருக்க அவர்கள் கேவலம் இந்த மணி மாலைக்கா மயங்குவார்கள்? நிச்சயமாக இக்கீழான செயலை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை எடுத்திருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் உணரும்படி செய்கிறேன் பாருங்கள். ஒரு குடத்தில் நல்ல பாம்பையிட்டு என்னிடத்தில் கொண்டு வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்.

மன்னரின் கட்டளையாயிற்றே! அவர்களும் அவ்வாறே நல்ல பாம்பை ஒரு குடத்தில் வைத்து, அதைக் கொண்டு வந்தார்கள். ஆயினும் அவர்களுடைய உள்ளம் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது.

குலசேகரர் அவர்களையெல்லாம் ஒருமுறை பார்த்துவிட்டு, ''எம்பெருமான் அடியவர்கள் அம்மாலையை எடுத்திருப்பார்களானால், இந்தப் பாம்பு என்னை தீண்டட்டும்; இல்லாவிடின் அது அப்படியே வாளாவிருக்கட்டும்''  என்று கூறி, தன்னுடைய கையை அந்தக் குடத்தினுள் நுழைத்தார்.

குடத்தினுள் இருந்த நல்ல பாம்போ, அவர் கையைத் தீண்டாது, மடங்கி ஒடுங்கி முடங்கிப்போனது. வெகுநேரம் கழித்து கையை அதனுள்ளிருந்து வெளியே எடுத்தார். பாம்பும் வெளியே வந்து, படம் எடுத்தாடி அவரை வணங்கியது. அதைக் கண்ட குலசேகரர், ''இந்தப் பாம்புக்கு தீங்கு ஏதும் நேராமல் பத்திரமான இடத்தில் விட்டு வாருங்கள்'' என்று பணியாளனுக்கு ஆணை பிறப்பித்தார்.

நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அமைச்சர்கள், மனம் நடுங்கினார்கள். மன்னரிடம் தங்கள் தவறைச் சொல்லி, நவரத்தின மாலையைத் திருப்பித் தந்து, தங்களை மன்னித்திடுமாறு வேண்டினார்கள். குலசேகரர் அவர்கள் அறியாமல் செய்த பிழையை மன்னித்தார்.

பின்னர் அவர்களை நோக்கி, ''அமைச்சர்களே! நீங்கள் இவ்வுலகத்து இன்பம் ஒன்றையே கருதி இப்படி எல்லாம் செய்தீர்கள். நீங்கள் இத்தகு மாயையில் இருக்கிறீர்கள். உலகப் பற்றை நீக்கி, எம்பெருமானின் திருவடிகளில் சரண் புகுந்து பாருங்கள். அதுதான் நித்திய இன்பத்தை அளிக்க வல்லது. பேரின்பப் பெருவாழ்வுக்கு வாழ வழிகாட்ட வல்லது. பெருமானின் திருவடி ஒன்றே பிறப்பறுக்கும்; எல்லாம் அறுக்கும். இவ்வளவு நடந்துவிட்ட பிறகு இனி எனக்கு இந்த அரசில் மனம் ஈடுபடாது. நான் இந்த அரசை வேண்டேன். மண்ணை வேண்டேன். திருவரங்கனின் திருவடிநிழலையே பெரிதெனப் போற்றுகிறேன். எனவே இந்த அரசை என் மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டு நான் திருவரங்கம் செல்லப் போகிறேன். நீங்கள் அவனுக்கு உறுதுணையாக இருந்து பார்த்துக் கொள்ளுங்கள். நான் இனி எம்பெருமானின் திருத்தொண்டில் ஈடுபடப் போகிறேன்'' என்று உறுதிபடக் கூறினார் குலசேகரர்.

மன்னரின் உள்ளத்தை இனி மாற்றமுடியாது என்பதை நன்குணர்ந்த அமைச்சர்கள் அவ்வாறே செய்ய எண்ணம் கொண்டார்கள். நல்லதொரு நாளில் குலசேகரரின் மைந்தருக்கு முடிசூட்டினார்கள். குலசேகரர் தம் மைந்தருக்கு அரசியல் திறமைகளைக் குறைவறச் சொல்லி நாட்டை ஆளும் பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார். பிறகு அமைச்சர்களிடமும் மக்களிடமும் விடை பெற்று, அரங்கனின் அடியாரோடு திருவரங்கப் பெரு நகரை நோக்கிச் சென்றார். அவர்களோடு பல திருத்தலங்களுக்கும் யாத்திரை செய்தார்.

அவர் ராமபிரானிடம் அதிக பக்தி கொண்டு, ராம கதையைக் கேட்பதிலேயே அதிக விருப்பு கொண்டிருந்ததால் அவரை பெருமாள் என்றே குறிப்பிட்டனர். அதனால்தான் குலசேகரப் பெருமாள் என்ற பெயர் அவருக்கு வழங்கப்படலாயிற்று.

பல திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக மன்னார்கோயில் திருத்தலம் வந்தார் குலசேகரர். அங்கே பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்வெய்தி அங்கேயே முக்தியடைந்தார். அங்கே அவருக்கு தனி சந்நிதியும் இருக்கிறது. இந்தத் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

குலசேகர ஆழ்வாரின் பிரபந்தப் பாசுரங்கள் இனியவை. இவர் 'பெருமாள் திருமொழி' என்று 105 பாடல்களைப் பாடியுள்ளார். ராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள் அதிகம் உண்டு.

தொடர்ந்து அரங்கன் அடியாரின் அடிமைத் திறத்தில் ஈடுபட்டும், அரங்கன் அடியாராய் உலகத்தாரொடும் பொருந்தாமல் தனித்திருக்கும் தன்மையுமாய் பத்துப் பத்துப் பாசுரங்கள் பாடுகிறார். இப்படி முப்பது பாசுரங்கள் அரங்கனைப் பாடிவிட்டு, பின்னர் திருவேங்கடமுடையான் பக்கலுக்குச் செல்கிறார் குலசேகராழ்வார்.

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான்ஆளும் செல்வமும் மண்ணரசும் நான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே!

- நான் தேவலோகத்திலே அரசனாக இந்திரனாக வாழ்ந்து அனுபவிக்கும் இந்திரபோகத்தை விரும்பவில்லை.  இவ்வுலகம் முழுவதையும் ஆண்டு இன்பமடையும் அரசபோகத்தையும் விரும்பவில்லை.  இத்தகைய இன்பங்கள் எல்லாவற்றையும்விட திருவேங்கடமலையில் உள்ள நீர்ச்சுனையில் ஒரு மீனாகப் பிறந்து திருவேங்கடமலையை விட்டுப் பிரியாமல் வாழவே விரும்புகிறேன் என்று வேண்டுகிறார்.

இன்றைக்கு இறைவனைத் தொழும் அடியார்கள் சிலர், தமக்கு ஒரு கஷ்டம் என்று வந்தவுடனே, இறைவன்மீது கோபம் கொண்டு அவன் மீதான பக்தியைக் கைவிட்டுப் புலம்புவதைப் பார்க்கிறோம்.  ஆனால் உண்மையான பக்தி என்பது, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதை குலசேகராழ்வாரின் அடுத்த பத்து பிரபந்தப் பாசுரங்களில் இருந்து நாம் உணர்ந்து தெளியலாம்.

எல்லோருக்கும் கஷ்டங்கள் வரலாம். ஆனால் அதற்கான காரணமாக நாம் வணங்கும் கடவுளை எண்ணினால், அது எதையும் எதிர்பார்த்துச் செய்யும் பக்தியாகவே இருக்கும், அதற்குப் பெயர் வியாபாரம் என்பதை நாம் உணரவேண்டும். அந்த மனவுறுதியை நமக்கு அளிக்கத்தான் குலசேகராழ்வார் இந்தப் பத்துப் பாசுரத்தில் நமக்கு ஒரு வழியைச் சொல்கிறார்.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!

- என்பது இவர்தம் பாடல்.  மருத்துவன் கத்தியால் அறுத்து சூடு போட்டாலும், அவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றுகிறவன் என்பதால், நோயாளி அந்த மருத்துவனை விரும்புகிறான். அதுபோல், வித்துவக்கோட்டம்மானே, நீ மாயத்தால் மீளமுடியாத துயரினைத் தந்தாலும், அது எனக்குச் செய்யும் நன்மையே எனக் கருதி, உன் அருளையே எதிர் நோக்கிக் காத்திருப்பேன் என்கிறார்.

மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்இலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்
கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே
என்னுடைய இன்னமுதே! ராகவனே! தாலேலோ!

இதுவும் குலசீகரரின் பாடலே. ராமபிரான் அணை கட்டி, லங்கையை அடைந்த கதையை நம் நாட்டின் பல மொழிகளில் வந்துள்ள ராமாயணங்களும் பறைசாற்றும். அந்த வகையில் ராமபிரானின் பக்தராகவே வாழ்ந்த குலசேகரப் பெருமாளும் ராமபிரான் கடலில் அணை கட்டி லங்கையை அடைந்து போர் புரிந்த வரலாற்றைத் தம் பாசுரத்தில் தெளிவுறக் காட்டுகிறார். மலைப் பாறைகளால் அந்த அணை அமைந்தது என்பது குலசேகரப் பெருமான் காட்டும் காட்சி.

மன்னராக இருக்கும்போது ஒரு வைணவப் பெரியவர் மூலம் ராமகதை கேட்டுக்கேட்டுப் பழகி ராமபிரானின் மேல் ஆறாக் காதல் கொண்டிருந்த குலசேகராழ்வார், தம் பாசுரங்களில் ராமபிரானின் சரிதத்தையும் அழகுறப் பாடியிருக்கிறார். அது கேட்பதற்கு மிக உருக்கமாக இருக்கும். இந்த வகையில், குலசேகரப் பெருமாளை கம்பநாட்டாழ்வானின் முன்னோடி என்று சொல்லலாம்.  குலசேகர ஆழ்வார் முகுந்தமாலை என்னும் சம்ஸ்க்ருத நூலையும் எழுதினார் என்று சொல்பவர்களும் உண்டு.

குலசேகராழ்வார் வாழி திருநாமம்!

-செங்கோட்டை ஸ்ரீராம்
காண்க:











.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக