நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

6.12.10

ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளி
அண்ணல் அம்பேத்கர்
நினைவு நாள்: டிச. 6

ஆயிரம் ஆண்டுகாலம் அடிமைப்பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சில் தன்னம்பிக்கையும், துணிவும் தந்த மகத்தான தலைவர், அண்ணல் அம்பேத்கர் என்று அனைவராலும் புகழப்படும் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர். சுதந்திர பாரதத்தின் வடிவமைப்பில் பேரிடம் வகிக்கும் சிந்தனைகளில்  அம்பேத்கரின் தத்துவங்களுக்கு தலையாய  இடமுண்டு.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப். 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார்.

பீமாராவ்  தனது இளம்வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்துவிட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது. அனைவரும் நீர் எடுக்கும் குளத்தில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாததையும் அவர் கண்டார். அந்த சம்பவங்கள் பீமராவின் உள்ளத்தில் அநீதிக்கு எதிராகப் போராடும் குணத்தை விதைத்தன.

ஆரம்பப் பள்ளியில் பயின்றபோது தன்னை மிகவும் ஊக்குவித்து உதவிய மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியரின் மீது ஏற்பட்ட பற்றால், தன் பெயரை பீமாராவ் அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார். 1907 ல் தனது மெட்ரிக் படிப்பை முடித்த அம்பேத்கர், மும்பை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதல் 'தீண்டத் தகாத மாணவர்' அவர் தான் என்பது குறிப்பிடத் தக்கது.அதனைக் கொண்டாட நடந்த விழாவில், அவரது ஆசிரியர் கிருஷ்ணாஜி அர்ஜுன் கேலுஸ்கர் அம்பேத்கருக்கு புத்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தைப்  பரிசளித்தார். பின்னாளில் ஹிந்து மதத்தின் குருட்டுததனமான தீண்டாமைக்கு எதிராக புத்த மதத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் அம்பேத்கர் மதம் மாறுவதற்கு புத்த மதம் காட்டிய சமதர்ம நெறியே காரணமானது.

டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். மும்பை  பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம்,   அரசியல் அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்ற அவர்,  பரோடா மன்னர் ஷாயாஜி ராவ்  உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல்பண்டைய இந்தியாவின் வர்த்தகம்என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வுஎன்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சனைஎன்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார். பிறகு பாரிஸ்டர் பட்டமும் பயின்றார்.

தன்னைப் படிக்க வைத்த பரோடா மன்னரின் சமஸ்தானத்திலேயே அம்பேத்கர் ராணுவ செயலாளராக 18  மாதங்கள் பணிபுரிந்தார். எனினும் அங்கும் தீண்டாமையால் பாதிக்கப்பட்டார். மன்னர் அவர் மீது பெருமதிப்பு கொண்டிருந்தாலும், அங்கிருந்த ஊழியர்கள் அவரை தீண்டத் தகாதவராகவே பார்த்தனர். அதன் விளைவாக, அப்பதவியை உதறிவிட்டு வெளியேறினார். பிறகு ஆசிரியர், கணக்காளர், முதலீட்டு ஆலோசகர் போன்ற பணிகளில் ஈடுபட்டார். ஆனால், தீண்டாமை காரணமாக அவரால் எங்கும் சோபிக்க முடியவில்லை.

1918 ல் மும்பையிலுள்ள சைடன்ஹம் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்கு அவரது திறமை வெளிப்பட்டபோதும், சக ஆசிரியர்களால் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானார்அவற்றுக்கு எதிராக போராடினார்சிறந்த அறிஞர் என்ற முறையில், 1919 ல் சௌத்போரோ குழுவில் இந்திய அரசுக்கான முன்னோடிக் கருத்துகளை முன்வைக்குமாறு ஆங்கிலேய அரசு அம்பேத்கரை கேட்டுக் கொண்டது. அங்குதான், தாழ்த்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு என்ற கருதுகோளை அவர் முதன்முதலாக பரிந்துரைத்தார்.

1920 ல் கோலாப்பூர் சாஹு மகாராஜுடன் இணைந்து 'மூக் நாயக்' (அமைதியின் தலைவர்) என்ற பத்திரிகையை அம்பேத்கர் நிறுவினார். அதில் ஜாதி ஹிந்துக்களின் வன்கொடுமைகளை எதிர்த்து கடுமையான கட்டுரைகளை அவர் எழுதினார்பழமைவாத அரசியல் தலைவர்கள் பலர் அம்பேத்கரின் கண்டனங்களுக்கு ஆளாயினர். பேராசிரிய பணியிலிருந்து விலகிய அம்பேத்கர் லண்டன் சென்று சட்டம் பயின்று திரும்பினார். பிறகு, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் துவங்கினார்.

வெற்றிகரமான வழக்கறிஞராக விளங்கிய அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக, 'பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா' என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலமாக, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றம், உரிமைகள் மீட்புப் பணிகளில் அவர் ஈடுபட்டார். 1927 ல் அவரது போராட்டங்கள் கூர்மை அடைந்தனபொதுக் கிணறுகளில் தாழ்த்தப்பட்டோரும் நீரிறைக்கும் உரிமை, ஹிந்து ஆலயங்களில் வழிபாட்டுரிமை ஆகியவற்றிற்காக மக்களைத் திரட்டிப் போராடினார். மகாத் என்ற இடத்தில் அம்பேத்கர் நிகழ்த்திய சத்யாக்கிரகம் அவரது புகழை நாடறியச் செய்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்என்று கூறிச் சென்றார்.

இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும்இரட்டை வாக்குரிமைதாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'புனா ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒப்புக் கொள்ளப்பட்டன.

வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல்  கருத்துக்களை முன்வைத்த அம்பேத்கர், சுதந்திர தொழிலாளர்  கட்சியை 1936  ல் நிறுவினார். அந்தக் கட்சி மறு ஆண்டே தேர்தலில் போட்டியிட்டு, மும்பை மாகாண சட்டசபைக்கு  15 உறுப்பினர்களை அனுப்பியது அதே ஆண்டு 'ஜாதி முறையை ஒழிப்பது எப்படி?' என்ற நூலை அவர் எழுதினார். பின்னாளில் அவர் இந்திய குடியரசுக் கட்சியை நிறுவினார்.

தனது 'யார் சூத்திரர்கள்?' என்ற நூலின் மூலம், ஹிந்து சமயத்தின் வருணாசிரமக் கொள்கைகளைக் கண்டித்த அவர், 'தாழ்த்தப்பட்டவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?' என்ற நூலின் வாயிலாக காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்தார். 1941 முதல் 1945 வரை அவர் பல அற்புதமான நூல்களை  எழுதினார். 'பாகிஸ்தான் குறித்த சிந்தனைகள்' என்ற நூலில், முஸ்லிம் லீகின் பிரிவினை கோஷத்தை அவர் வன்மையாகக் கண்டித்தார். தேசப்பிரிவினைக்கு எதிராக அவர் தொடர்ந்து வாதிட்டு வந்தார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின்  தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். தனது அர்ப்பண மயமான முயற்சியால் அரிய சமூக ஆவணமாக இந்திய அரசியல் சாசனத்தை அவர் உருவாக்கினார்.  1951-ம் ஆண்டுஇந்து சட்டத் தொகுப்பு மசோதாஅறிமுகப்படுத்தப்பட்டபொழுது, பிரதமர் நேருவுடன் கொண்ட கருத்து வேறுபாட்டால்,  அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.

தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போராடி களைத்த நிலையில், இந்து மதத்தின் பழமைவாதிகளுக்கு எதிராக, புத்த மதத்தைத் தழுவப்போவதாக அவர் அறிவித்தார். இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்தவர்கள் அவருக்கு அழைப்பு விடுத்தபோதிலும், 'பாரத பாரம்பரியத்துடன் கூடிய புத்த மதத்தில் சேரவே  விரும்புவதாக' அவர் அறிவித்தார். அதன்படி, நாகபுரியில் 1956 , அக். 14 ல் நடந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதரவாளர்களுடன் புத்த மதத்திற்கு மாறினார். அவர் எழுதிய 'புத்தரும் அவரது தர்மமும்' நூல் அவரது மறைவுக்குப் பின் வெளியானது.
 
சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர்,  பாபா சாகேப் என்று போற்றப்படுகிறார். அவர்  1956 டிச. 6-ல் காலமானார். அவருக்கு 1990 ல் பாரத  ரத்னா விருது வழங்கி இந்திய அரசு பெருமை பெற்றது.   ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளியாக விளங்கிய அம்பேத்கர், சிறந்த சமூக சீர்திருத்தச் செம்மலாகப் போற்றப்படுகிறார். இந்திய அரசியலில் 'தலித்' எனப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கு வித்திட்டவர் அம்பேத்கர். அவரை நாடு என்றும் நன்றியுடன் நினைவில் இருத்தி வாழ்த்தும்.

-குழலேந்தி

.
காண்க:
அம்பேத்கர்
சுதந்திர மனிதன் யார்?
வரலாறாய் வாழ்பவர்
அம்பேத்கர் படைப்புகளில் சில (கீற்று)
சரியான பார்வையில் அம்பேத்கர்
B.R.Ambedkar 
Free India 
Freedom fighters 
Ambedkar Foundation
India Together
.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

arumaiyaana pathivu.....

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

அய்யா மிக அருமை. மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. வீரமும் விவேகமும் நீதியும் தர்மமும் நிறைந்த பணி. வாழ்க வளர்க. பணிகிறேன்.

கருத்துரையிடுக